You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'14 மணிநேர வேலை, உடல் வலிக்கு ஊசி' - திருவள்ளூரில் மீட்கப்பட்ட ஒடிசா தொழிலாளர்கள்
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை உள்பட 7 பேரை, ஜூன் 17 அன்று வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
35 ஆயிரம் ரூபாய் முன்பணத்துக்காக ஆறு மாதங்களாக செங்கல் சூளை உரிமையாளரால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானதாக ஒடிசாவை சேர்ந்த ஷிபா மாலிக் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அரசின் அனுமதியின்றி சூளை செயல்பட்டதால், அதன் உரிமையாளர் எஸ். துளசி மீது கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர்.
ஒடிசா மாநில தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டது எப்படி?
ஒடிசா மாநிலம், பாலாங்கீர் (Balangir) மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இருந்து சுமார் 80 பேர், கடந்த ஜனவரி மாதம் திருவள்ளூருக்கு வந்துள்ளனர்.
அவர்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள சிவன்வாயல் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளை ஒன்றில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
"செங்கல் சூளைகளில் வேலை பார்ப்பதற்காக இவர்களை அழைத்து வந்துள்ளனர். இவர்களுக்குத் தலா 35 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செங்கல் சூளை உரிமையாளர் அளித்துள்ளார்" என்கிறார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன்.
"சொந்த ஊரில் வானம் பார்த்த பூமி என்பதால் வருடத்தில் சில மாதங்கள்தான் விவசாய வேலைகள் இருக்கும். மற்ற நாட்களில் வேறு வேலைகளுக்குச் சென்றுவிடுவோம். குடும்பத்தில் கஷ்டம் அதிகரித்ததால், முன்பணத்தை வாங்கிக் கொண்டு செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்தோம்" எனக் கூறுகிறார், ஒடிசாவின் சலேபாடி கிராமத்தைச் சேர்ந்த ஷிபா மாலிக்.
பாலாங்கீர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், திருவள்ளூரில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரிய வருவது வாடிக்கையாக உள்ளது.
'ஆறு மாதங்களாக அவஸ்தை' -
" கடந்த ஆறு மாதங்களாக குடிநீர், உணவு, இருப்பிடம் என முறையான அடிப்படை வசதிகள் எதுவும் நாங்கள் வேலை பார்த்த சூளையில் செய்து தரப்படவில்லை" என பிபிசி தமிழிடம் கூறினார் ஷிபா மாலிக்.
ஷிபாவிடம் ஒடியா மொழியில் உரையாடுவதற்காக அம்மாநிலத்தைச் சேர்ந்த சகில் எக்கா என்பவர் பிபிசி தமிழுக்கு உதவி செய்தார். இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
நாள் ஒன்றுக்கு 13 முதல் 14 மணிநேரம் தங்களிடம் வேலை வாங்கப்பட்டதாகக் கூறும் ஷிபா மாலிக், " நாங்கள் குடும்பமாக வந்து வேலை செய்தோம். வாரம் முழுக்க செங்கல்லை அறுத்தாலும் ரூ. 500 தான் உரிமையாளர் தருவார். எதிர்த்துக் கேள்வி கேட்டால், அட்வான்ஸ் தொகையை கொடுத்துவிட்டுச் செல்லுமாறு கூறுவார்," என்கிறார்.
தங்கள் வேலைக்கு உரிய சம்பளம் இல்லாததால், சூளை உரிமையாளரிடம் சில தொழிலாளர்கள் சண்டையிட்டுள்ளனர். கடந்த ஜூன் முதல் வாரத்தில் சுமார் 70 தொழிலாளர்கள் முன்பணத்தைக் கொடுத்துவிட்டு ஊருக்கு கிளம்பிவிட்டனர்.
"மீதமுள்ள மூன்று வயது குழந்தை உள்பட ஏழு பேருக்கு பணம் செலுத்துவதற்கு யாரும் இல்லை. இந்த தகவலை சூளையில் வேலை பார்த்த பெண்ணின் மகன், ஒடிசாவில் உள்ள அரசு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டனர்," எனக் கூறுகிறார், திருவள்ளூர் ஆர்.டி.ஓ.ரவிச்சந்திரன்.
இதன்பிறகு ஜூன் 17 அன்று சிவன்வாயலில் உள்ள தனியார் செங்கல் சூளையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது அதிர்ச்சியூட்டும் சில விஷயங்களை கண்டறிந்துள்ளனர்.
'உடல்வலியைப் போக்குவதற்கு ஊசி'
"குடும்பமாக தங்குவதற்கு சிறிய குடிசை மாதிரி அமைத்துத் தந்துள்ளனர். அதன் உள்ளே நுழைவதற்கு 2 அடி உயரம்தான் உள்ளது. மின்வசதி உள்பட எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை" எனக் கூறுகிறார், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன்.
தொடர்ந்து பேசிய அவர், "14 மணிநேரத்துக்கும் மேலாக வேலை பார்த்ததால் அவர்களுக்கு உடல் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கக் கூடாது என்பதற்காக ஊசி போட்டு மருந்து கொடுத்துள்ளனர். இதற்காக வாரம் ஒருமுறை போலி மருத்துவர் ஒருவரை வரவழைத்துள்ளனர்," எனக் கூறுகிறார்.
போலி மருத்துவர் மூலம் மருந்துகளைக் கையாண்டதாக சூளை உரிமையாளர் மீது வெங்கல் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது, பயன்படுத்திய ஊசிகள், ஏராளமான மருந்து அட்டைகளைக் கைப்பற்றியுள்ளனர்.
மருந்துகளின் தன்மை குறித்து சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் வீ.புகழேந்தியிடம் கேட்டபோது, "வலி நிவாரணத்துக்கான மருந்துகளாக இவை உள்ளன" என்று மட்டும் பதில் அளித்தார்.
" நாளொன்றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் செங்கற்களை அறுப்போம். ஆனால், மிகக் குறைவான கூலியே கொடுக்கப்பட்டதால், அது உணவு செலவுக்கே சரியாக இருக்கும். ஊருக்குள் சென்று ரேசன் அரிசியை வாங்கி பயன்படுத்துவோம்" எனக் கூறுகிறார் ஷிபா மாலிக்.
"ஆறு மாதங்களாக வேலை பார்த்தாலும் சூளை உரிமையாளரிடம் வாங்கிய முன்பணத்தைக் கழிக்க முடியவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.
'ஒடிசா தொழிலாளர்களை குறிவைக்கும் முகவர்கள்'
"திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் உரிமம் பெறாத சூளைகளும் உள்ளன. ஒடிசாவில் வறுமையால் வாடும் மக்களை குறிவைத்து சில முகவர்கள் இயங்கி வருகின்றனர்" எனக் கூறுகிறார், திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த கிராமப்புற சமூக மேம்பாட்டு அமைப்பின் (Integrated rural community development society) ஒருங்கிணைப்பாளரான பழனி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தற்போது மீட்கப்பட்ட தொழிலாளர்கள் முகவர் மூலமாக வந்துள்ளனர். பகலில் வெயில் அதிகமாக இருப்பதால் இரவு 10 மணிக்கு மேல் சூளைக்குச் செல்கின்றனர். அதிகாலை வரை வேலை பார்ப்பார்கள். பகலில் கற்கள் காய்வதற்கு எளிதாக இருக்கும். சிலர் மாலை 4 மணிக்கு சென்றுவிட்டு 12 மணி வரையில் வேலை பார்ப்பார்கள்," எனவும் அவர் குறிப்பிட்டார்.
"ஒருவர் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்தாலும் ஆய்வு நடத்தும்போது, தங்களின் உரிமையாளர் குறித்து தவறாக எதுவும் கூற மாட்டார்கள். அதனால் மீட்பதில் சில நேரங்களில் சிக்கல் ஏற்படும்," எனக் கூறுகிறார் ஒருங்கிணைந்த கிராமப்புற சமூக மேம்பாட்டு அமைப்பின் களப் பணியாளர் சூர்யா நடராஜன்.
ஒருவர் கொத்தடிமை எனக் கண்டறியப்பட்டால் அவருக்கு மாநில அரசு ஒரு லட்ச ரூபாயை வழங்குவதாகவும் பிபிசி தமிழிடம் அவர் குறிப்பிட்டார்.
"மீட்கப்பட்ட தொழிலாளிக்கு வங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டு உடனே முப்பதாயிரம் ரூபாயை அரசு வரவு வைக்கிறது. வழக்கு நடக்கும் காலங்களில் மீதமுள்ள தொகையை வரவு வைப்பது வழக்கம்" என்கிறார் சூர்யா நடராஜன்.
செங்கல் சூளையில் இருந்து மீட்கப்பட்ட ஷிபா மாலிக், தீபாஞ்சலி மாலிக், சாய்ரேந்திரி நாக், பகாரட் நாக், ஹடுபரிகா, ஜென்ஹி பரிஹா மற்றும் மூன்று வயது குழந்தை ஆகியோரை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவே ரயில் மூலம் ஒடிசாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
'2 மாதங்களில் மூன்றாவது சம்பவம்'
செங்கல் சூளையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, தொழிற்சாலைகள் சட்டம் 1948ன் கீழ் உரிமம் பெறவில்லை என்பதைக் கண்டறிந்தனர். ஊழியர்களுக்கான வருகைப் பதிவேடு, ஊதிய பதிவேடு ஆகியவற்றை பராமரிக்கவில்லை என்பதும் கூடுதல் நேரம் பணிபுரிந்ததற்கான ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதையும் ஆய்வில் கண்டறிந்தனர்.
சூளை உரிமையாளர் துளசி மீது வெங்கல் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூளை உரிமையாளர் மீதான நடவடிக்கை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆர்.டி.ஓ ரவிச்சந்திரன், "முன்தொகை கொடுத்து தொழிலாளர்களைக் கூட்டி வருவது என்பது கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டங்களை மீறி அதிக நேரம் வேலை பார்க்க வைத்தது உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
"ஆனால், அவரைக் கைது செய்ய முடியவில்லை. தற்போது சூளையின் உரிமையாளர் தலைமறைவாக இருக்கிறார்" என, ஆர்.டி.ஓ ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் மூன்று நிகழ்வுகளில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டுள்ளதாகக் கூறும் ரவிச்சந்திரன், மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக செங்கல் சூளை உரிமையாளர்களை அழைத்துக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும் கூறுகிறார்.
"கொத்தடிமைகளாக யாரையும் பயன்படுத்த மாட்டோம் என்பதை அவர்களிடம் எழுதி வாங்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
கொத்தடிமைகளாக மக்களை பணிக்கு அமர்த்துவது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டால், கொத்தடிமைத் தொழிலாளர் முறை (அழித்தல்) சட்டம், 1976-ன் கீழ், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 2000 வரை அபராதமும் விதிக்கப்படும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு