You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அப்பாராவை 20 ஆண்டுகள் கொத்தடிமையாக நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட அண்ணாதுரை சொல்வது என்ன?
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
சிவகங்கை மாவட்டத்தில் தேநீர் அருந்துவதற்காக ரயிலில் இருந்து இறங்கிய கொனேரு அப்பாராவ், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கொத்தடிமை நிலையில் இருந்து மீட்கப்பட்டார்.
பல்வேறு கட்ட தேடுதலுக்குப் பின்னர், அப்பாராவின் உறவினர் பற்றி சில துப்புகள் கிடைத்திருக்கும் போதிலும், தகவல்களைச் சரிபார்க்கும் பணி தொடர்வதால் அப்பாராவ் வீடு திரும்புவதில் இன்னும் சிக்கல் தொடர்கிறது.
கொனேரு அப்பாராவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் வழியாக பாண்டிச்சேரிக்கு வேலைக்காகப் பயணம் செய்தார். அப்போது 40 வயதாக இருந்த அவர், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையத்தில் தேநீர் அருந்துவதற்காக ரயிலில் இருந்து இறங்கிவிட்டு மீண்டும் ஏறுவதற்கு முன்பாக ரயில் புறப்பட்டது.
அண்ணாதுரை என்பவர், அவரை சம்பளமில்லாமல் 20 ஆண்டுகளாக வேலை வாங்கியது தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை நடத்திய கொத்தடிமை ஒழிப்பு நடவடிக்கையில் தெரிய வந்தது. அப்பாராவ் கொடுக்கும் தகவல்களை வைத்து அவரின் சொந்த கிராமத்தையும், குடும்பத்தையும் தேடும் பணி இப்போதும் தொடர்ந்து வருகிறது.
அடிமையாக நடத்தியவர் சொல்வது என்ன?
இருபது ஆண்டுகளுக்கும் மேல் அப்பா ராவ் ஆடு மேய்த்து வந்த சிவகங்கை மாவட்டம் கடம்பன்குளம் பகுதிக்கு பிபிசி தமிழ் நேரில் சென்றிருந்தது.
இந்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் அண்ணாதுரையைச் சந்தித்தபோது, அவர் அப்பாராவை வேண்டுமென்றே அடிமையாக நடத்தவில்லை என்றும், தனது குடும்பத்தில் ஒருவராகவே பார்த்துக் கொண்டதாகவும் கூறினார்.
அண்ணாதுரை பிபிசி தமிழிடம் பேசியபோது, "அவரை சொந்த மகனைப் போல், எனது குடும்பத்தில் ஒருவராக நினைத்து வந்தேன். இடையில் அவருக்கு உடல்நலம் குன்றியிருந்தது. பிறகு நல்ல சாப்பாடு கொடுத்தோம், உடல்நலம் தேறிவிட்டது. அவரது ஊர் தெரிந்திருந்தால், ஊருக்குச் செல்ல ஏற்பாடு செய்திருப்பேன்" என்று தெரிவித்தார்.
"ஊருக்குப் போக வேண்டுமா என்று நீங்கள் கேட்கவில்லையா?" என்று கேட்டபோது, அவர் "ஊருக்குப் போக வேண்டுமா என்று கேட்டுள்ளேன். ஆனால் அவர் காக்கிநாடா, கர்நாடகா என்று மாற்றி மாற்றிக் கூறுவார். போக வேண்டும் என்று நினைத்திருந்தால், அவர் போயிருக்கலாம். இப்போது அதிகாரிகளுடன் அவர் சென்றது தெரிந்து எனது மனைவி அழுதார்," என்று கூறினார்.
- தேநீர் அருந்த ரயிலில் இருந்து இறங்கியவர் 20 ஆண்டுகளுக்கு மேல் கொத்தடிமையாக இருந்த துயரம் - அதிகாரிகள் மீட்டது எப்படி?
- அப்பாராவ்: 20 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்தவரின் குடும்பத்தை தேடிச் சென்ற பிபிசி - தெரிந்தது என்ன?
- புத்தகயா: புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் உருவான மகாபோதி கோவில் யாருக்குச் சொந்தம்? இந்து - பெளத்தர் மோதல்
முதியோர் இல்லத்தில் அப்பாராவ்
சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், கொத்தடிமை தொழிலாளர் பற்றிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் கடம்பங்குளம் பகுதிக்கு ஆய்வுக்குச் சென்றார்கள். அப்போது அப்பாராவ் அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
"நாங்கள் அவரைச் சந்தித்தபோது, அவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடு மேய்த்து வருவதாகவும் அதற்கான கூலி அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்" என்று தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஆதி முத்து கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி அங்கிருந்து மீட்கப்பட்ட அப்பா ராவ் தனது தாய்மொழியை மறந்து, தமிழிலும் சில வார்த்தைகள் மட்டுமே கோர்வையற்றுப் பேசுகிறார்.
இப்போது அவர் அரசின் ஏற்பாட்டில் சிவகங்கை பைய்யூர் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஒரு மாத காலமாக அவரது குடும்பத்தைத் தேடும் பணி தொடர்கிறது.
பிபிசி நடத்திய தேடலில் தெரிய வந்தது என்ன?
"அப்பாராவ் தனது சொந்த ஊர் பார்திபுரம் என்றார், ஆனால் பார்திபுரம் என்ற மாவட்டம் ஆந்திராவில் இல்லை, பார்வதிபுரம் என்ற மாவட்டம் முன்பு இருந்துள்ளது. அது தற்போது மண்யம் என்ற மாவட்டமாகப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருடன் பேசி வருகிறோம்" என்று ஆதி முத்து பிபிசியிடம் கூறினார்.
இந்நிலையில், பிபிசி தெலுங்கு செய்திக் குழுவினர் அப்பாராவ் தனது ஊர் என்று கூறி வந்த ஜம்மிடிவலாசாவுக்கு நேரில் சென்றனர். அங்குள்ள மக்களிடம் அப்பாராவின் புகைப்படத்தைக் காண்பித்து, அவரை அந்த ஊரில் இருப்பவர்களுக்குத் தெரியுமா என்று பரவலாகக் கேட்டனர். ஆனால் அந்த ஊரில் அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.
அவர் தனது ஊரின் பெயரைச் சரியாக உச்சரிக்காததால், அதே போன்ற உச்சரிப்பு கொண்ட ஜம்மடவலாசா என்ற ஊர் ஒடிசா மாநிலத்தில் உள்ளது என்பதை அறிய முடிந்தது. எனவே அந்த ஊருக்கும் பிபிசி செய்திக் குழுவினர் சென்றிருந்தனர். அந்த ஊரில் அவரது புகைப்படத்தைக் காண்பித்துக் கேட்டபோது அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.
இருப்பினும் இந்தத் தேடல் பற்றிய செய்தி ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பரவலாகச் சென்றது.
பிபிசி வீடியோவை பகிர்ந்து அப்பாராவின் குடும்பத்தாரைத் தேடுவதில் தாங்களும் ஈடுபட்டதாக பழங்குடியினர் சங்கத் தலைவர் பி.எஸ்.அஜய் குமார் தெரிவித்தார்.
"ரயிலில் இருந்து இறங்கி தேநீர் குடிக்கச் சென்றபோது அயலவரிடம் சிக்கி அங்கேயே 20 ஆண்டுகளாக அவர்கள் பிடியில் அடிமைப்படுத்தப்பட்டார் என்பதை அறிவதற்கே வியப்பாக இருந்தது. அவர் அடிமை நிலையில், கூலியில்லாமல் உழைத்தது ஒரு வருடமோ, இரண்டு வருடங்களோ இல்லை. அப்பாராவ், 20 ஆண்டுகளுக்கு கூலியில்லாமல் ஆடுகளை மேய்த்திருக்கிறார்.
பண்ணையடிமைக் காலத்தில் நடந்த சம்பவம் போல இந்த நவீன காலத்தில் நடந்திருப்பது கவலையளிக்கிறது. அப்பாராவை அவரது குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைக்க அனைவருடனும் கைகோர்த்து முயன்று வருகிறோம். அப்பாராவின் பரிதாபகரமான கதையை உள்ளூர் சமூக ஊடகக் குழுக்களில் பகிர்ந்தோம்," என்று குறிப்பிட்டார்.
இருந்தாலும் சமூக ஊடகங்களில் நேரடியாக எந்தக் கூடுதல் செய்தியும் கிடைக்கவில்லை.
ஆனால், மண்யம் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு நம்பிக்கையளிக்கும் செய்தி வந்துள்ளது. மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்ட கிருஷ்ணன் என்ற நபர், அப்பாராவ் தனது சகோதரர் என்று கூறியிருக்கிறார்.
இதுபற்றி மாவட்ட ஆட்சியர் ஷ்யாம் பிரசாத் கூறும்போது "அவர் அப்பாராவ் தனது சகோதரர் என்று கூறுகிறார்" என்று தெரிவித்ததுடன், அந்த நபர் கூறிய தகவல்கள் மாவட்ட ஆட்சியரகத்தால் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு முன் பிபிசி தமிழிடம் பேசியிருந்த அவர், "அப்பாராவை அறிந்த ஒருவரைக் கண்டுபிடிக்க கடுமையாக முயன்று வருகிறோம். ஆனால் எங்கள் முயற்சிகள் பலனளிக்கவில்லை. அப்பாராவ் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்றுகூடத் தெரியவில்லை. அப்பாராவ் கூறும் தகவலின் அடிப்படையில் அவரது சொந்த ஊரையும், உறவுகளையும் கண்டுபிடிக்க முயல்கிறோம்" என்று கூறியிருந்தார்.
இப்போது அவருக்கு வந்திருக்கும் புதிய தகவல், அப்பாராவ் குடும்பத்தாருடன் அவரைச் சேர்க்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)