You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அப்பாராவ்: 20 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்தவரின் குடும்பத்தை தேடிச் சென்ற பிபிசி - தெரிந்தது என்ன?
- எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, கொனேரு அப்பாராவ் ஆந்திர பிரதேசம்-ஒடிசாவின் எல்லைப் பகுதிகளில் இருந்து வேலைக்காக ரயிலில் பாண்டிச்சேரிக்கு புறப்பட்டார். அப்போது அவருக்கு 40 வயது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் அந்த ரயில் நின்றபோது, அப்பாராவ் தேநீர் அருந்துவதற்காக ரயிலை விட்டுக் கீழே இறங்கினார். மீண்டும் ஏறுவதற்குள் ரயில் புறப்பட்டுவிட்டது.
ரயிலை தவறவிட்ட அப்பாராவுக்கு உதவ முன்வந்த ஒருவர், அவரை ஆட்டு மந்தையை மேய்ப்பவராக மாற்றிவிட்டார்.
சுமார் 20 ஆண்டுகளாக, அப்பாராவை தனது சொந்த கிராமத்திற்குச் செல்ல விடாமல் தடுத்து வைத்து, ஆடுகளை மேய்க்கச் செய்துள்ளார் அந்த நபர்.
தமிழக தொழிலாளர் நலத்துறை நடத்திய கொத்தடிமைத் தொழிலாளர்களை ஒழிக்கும் நடவடிக்கையின் காரணமாக கொத்தடிமை தொழிலில் இருந்து அப்பாராவ் விடுவிக்கப்பட்டார். அவருக்கு இப்போது 60 வயதாகிறது.
அவருக்கு தெலுங்கு மொழி ஏறக்குறைய மறந்துபோய்விட்டது. அவர் தமிழ் மொழியிலேயே தற்போது பேசுகிறார். அதிலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகளை மேய்ப்பதிலே அவரது வாழ்க்கை முழுவதையும் கழித்ததால், அவர் தற்போது பேசுவதில்கூட சிரமங்களை எதிர்கொள்கிறார்.
அவரை வேலைக்கு அமர்த்திய அந்த நபர், தினசரி சாப்பிட மூன்று வேலை உணவு மட்டுமே வழங்கியதாகவும், ஒரு பைசாகூட சம்பளமாக வழங்கவில்லை என்றும் அப்பாராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.
கொனேரு அப்பாராவ் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
அவர் ஒருமுறை, தான் ஆந்திர மாநிலத்தில் உள்ள பார்வதிபுரம் அருகே இருக்கும் ஜம்மிடிவலசா பகுதியில் வசிப்பதாகவும், மற்றொரு முறை அது ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள அலமண்டா மண்டலத்தில் உள்ள ஜம்மடவலசா பகுதி என்றும், மற்றொரு முறை அதே மண்டலத்தில் உள்ள ஜங்கிடிவலசா என்றும் அப்பாராவ் கூறினார்.
அவரது குடும்பத்தைத் தேடும் முயற்சியில், பிபிசி முதலில் பார்வதிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜம்மிடிவலசா கிராமத்திற்குச் சென்றது.
பார்வதிபுரம் ஜம்மிடிவலசா
அப்பாராவின் குடும்பம் எங்குள்ளது என்பதைக் கண்டுபிடிக்க தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள், பழங்குடியினர் சங்கங்கள், மக்கள் அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஊடகங்கள் எனப் பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த நிலையில், பிபிசி முதலில் பார்வதிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜம்மிடிவலசா கிராமத்திற்குச் சென்றது.
பிபிசி: இந்தப் புகைப்படத்தில் இருப்பவரை எங்காவது பார்த்திருக்கீர்களா?
உள்ளூர்வாசிகள்: இல்லை, நான் பார்த்ததில்லை.
பிபிசி: இவர் ஜம்மிடிவலசா கிராமத்தில் வசித்ததாகக் கூறுகிறார்.
உள்ளூர்வாசிகள்: என்ன விஷயம்? எங்களுக்கு எதுவும் தெரியாது.
பிபிசி: இவரை உங்கள் ஊரில் பார்த்தது போல் இருக்கிறதா?
உள்ளூர்வாசிகள்: இவரை எங்கள் கிராமத்தில் பார்த்தது இல்லை, ஆனால்... இங்கிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் ஜம்மடவலசா என்ற மற்றொரு கிராமம் உள்ளது. இவர் அந்த ஊரைச் சேர்ந்தவராக இருக்கலாம்.
பிபிசி: இவர் பார்வதிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜம்மிடிவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் என்றே தன்னைக் குறிப்பிடுகிறார்.
உள்ளூர்வாசிகள்: இல்லை... ஒடிசாவில் ஜம்மடவலசா என்ற கிராமம் உள்ளது. இவர் ஒடிசாவை சேர்ந்தவர் போலத்தான் இருக்கிறார்.
ஒடிசா ஜம்மடவலசா
கொனேரு அப்பாராவுக்கும் பார்வதிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜம்மிடிவலசாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கிராம மக்கள் கூறினர். அதனால், அவர்கள் கொடுத்த தகவலின்படி, மோசமான மண் சாலைகளில் பயணித்து ஓடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள ஜம்மடவலசாவை அடைந்தோம்.
பிபிசி: இவரது பெயர் கொனேரு அப்பாராவு... இந்த ஜம்மடவலசா ஊரைச் சேர்ந்தவர்தான். அடையாளம் தெரிகிறதா?
உள்ளூர்வாசிகள்: நாங்கள் தாடினோள்ளு, நாசிகொள்ளு, பீடிகொள்ளு குடும்பப் பெயரைச் சேர்ந்தவர்கள். கொனேரு என்ற குடும்பப் பெயருடன் யாரும் இல்லை. இவர் ஜம்மடவலசா பகுதியைச் சேர்ந்தவர் இல்லை, ஜங்கிடிவலசாவை சேர்ந்தவராக இருக்கலாம்.
பிபிசி: ஜங்கிடிவலசா எங்கே இருக்கிறது?
உள்ளூர்வாசிகள்: அந்தப் பக்கம்... மிகவும் தூரமாகச் செல்ல வேண்டும்.
ஜங்கிடிவலசா போனோம், ஆனால்...
அங்கிருந்து மேலும் 18 கிலோமீட்டர் பயணம் செய்து ஜங்கிடிவலசாவை அடைந்தோம். அங்கேயும் கொனேரு அப்பாராவை யாரும் அடையாளம் காணவில்லை, அவரை தங்களுக்குத் தெரியும் என்று யாரும் கூறவில்லை.
முன்னர் கூறியது போல், எதிர்பாராத சூழ்நிலைகளில் அப்பாராவ் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆடுகளை மேய்த்து வாழ்க்கை நடத்தி வருகிறார். படிப்படியாகத் தனது தாய்மொழியை மறந்துவிட்டார். பிறந்த இடம், தனக்குத் தெரிந்த மனிதர்களின் விவரங்களையும் சரியாகச் சொல்ல முடியாமல் அவர் தவிக்கிறார்.
அப்பாராவை அவரது குடும்பத்தினருடன் சேர்க்க ஆந்திர பிரதேச மாநில அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கும் அப்பாராவ் தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரிடம் வேலை செய்தார். அப்பாராவுக்கு சம்பளமாக அண்ணாதுரை பணம் எதுவும் கொடுத்ததில்லை. சம்பளம் எதுவும் கொடுக்காமல் அப்பாராவிடம் வேலை மட்டும் வாங்கிய அண்ணாதுரையை காவல்துறை கைது செய்தது.
அவர் மீட்கப்பட்டது எப்படி?
சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் வழக்கமான ஆய்வின் ஒரு பகுதியாக கடம்பங்குளம் பகுதிக்குச் சென்றபோது, அப்பாராவ் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.
அப்பாராவ் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், தனது கிராமத்திற்குச் செல்லாமல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே ஆடுகளை மேய்த்து வருகிறார் என்றும் அதிகாரிகள் தெரிந்து கொண்டனர்.
அப்பாராவின் நிலையைப் புரிந்துகொண்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அவரை அங்கிருந்து மீட்டு ஒரு முதியோர் இல்லத்தின் பராமரிப்பில் வைத்தனர்.
20 வருடத்தில் பணத்தை கண்ணால் பார்க்கவில்லை
சொந்த ஊருக்குப் போக தனது உரிமையாளர் பணம் கொடுக்கவில்லை என்று அப்பாராவ் பிபிசியிடம் கூறினார். மூன்று வேளை உணவு, ஆடைகள் கொடுத்தார்கள், ஆனால், சம்பளம் எதுவும் கொடுக்கவில்லை. இங்கிருந்து எப்படிப் போவது என்று தெரியவில்லை, சொல்லவும் யாரும் இல்லாததால் அப்படியே காலம் கழித்துவிட்டேன் என்றார் அப்பாராவ்.
"எது கேட்டாலும் அவரால் சரியாகப் பேச முடியவில்லை. மேலும், தெலுங்கு மொழியை அவர் முழுமையாக மறந்துவிட்டதாகத் தெரிகிறது. தமிழில் பேச வேண்டிய அவசியம் இருந்ததால் அதைக் கற்றுக்கொண்ட அவர் தெலுங்கை மறந்துவிட்டார்," என்று பழங்குடியினர் சங்கத் தலைவர் பி.எஸ். அஜய் குமார் பிபிசியிடம் கூறினார்.
அஜய் குமார், விஜயவாடாவில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, கொனேரு அப்பாராவின் குடும்பத்தினரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறார்.
தனக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாகவும், அது அலமண்டாவில் இருப்பதாகவும் கொனேரு அப்பாராவ் கூறுகிறார். கொனேரு அப்பாராவ் கூறும் அலமண்டா ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ளது.
மேலும், எந்தத் தேவையாக இருந்தாலும் அதற்காக பெரிய நகரமான பார்வதிபுரத்திற்கு சென்றதாகவும் அவர் கூறினார். இது ஒடிசா மாநில எல்லைக்கு அருகில் உள்ளது. கொனேரு அப்பாராவ் கூறும் ஊர்கள், கிராமங்கள், நகரங்களின் பெயர்கள் அனைத்தும் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில எல்லைக்கு அருகில் இருப்பவை. அவர் சொன்ன விஷயங்களை வைத்து அந்த கிராமங்களுக்குச் சென்றால் யாராலும் அவரை அடையாளம் காண முடியவில்லை.
கொனேரு அப்பாராவ் கடந்த 20 ஆண்டுகளாக அவர் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து விலகி தமிழ்நாட்டில் வசித்து வருகிறார். இந்த 20 ஆண்டுகளில் ஆந்திரா, ஒடிசா பழங்குடி கிராமங்களில் பல அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், அப்பாராவ் சொல்லும் கிராமங்களில் அவரை யாரும் அடையாளம் காணவில்லை.
அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களின் இருப்பிடத்தை உள்ளூர் பழங்குடியினரும் கண்டுபிடிக்க முயல்வதாகத் தெரிவித்தனர். அதனால், கொனேரு அப்பாராவின் சில புகைப்படங்களை பிபிசி அவர்களுக்கு வழங்கியது.
கொனேரு அப்பாராவ் பற்றி மாவட்ட ஆட்சியர் கூறுவது என்ன?
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் பார்வதிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தற்போது கொனேரு அப்பாராவின் குடும்ப உறுப்பினர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பார்வதிபுரம் மாவட்ட ஆட்சியர் ஏ.ஷியாம் பிரசாத்திடம் பிபிசி பேசியது.
"அவரை அடையாளம் காணக்கூடிய ஒருவரைக் கண்டுபிடிக்க நாங்கள் முயல்கிறோம். ஆனால் இதுவரை எங்கள் முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கவில்லை. அவர் பழங்குடியினரா இல்லையா என்பதுகூட எங்களுக்குத் தெரியாது. கொனேரு அப்பாராவின் உறவினர்கள் மற்றும் அவரது சொந்த ஊரைக் கண்டுபிடிக்க நாங்கள் தொடர்ந்து முயல்வோம்" என்றார் ஷியாம் பிரசாத்.
சமூக ஊடகங்கள் மூலம் தேடுதல் முயற்சி
கொனேரு அப்பாராவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் மற்றும் பிற அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
"இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கொத்தடிமைத் தொழிலில் இருந்து விடுவிக்கப்பட்ட அப்பாராவை எங்கே யாரிடம் ஒப்படைப்பது என்பது பெரிய கேள்வி." என்கிறார் அஜய் குமார்.
"உள்ளூர் சமூக ஊடகக் குழுக்களில் அப்பாராவின் கதையை நாங்கள் பதிவிட்டோம், ஆனால் யாரும் அவரை அடையாளம் காணவில்லை. தேநீர் குடிக்க ரயிலில் இருந்து இறங்கிய பிறகு, பிறரிடம் சிக்கி 20 வருடங்கள் கொத்தடிமையாக அவர் இருந்தார் என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
ஒன்று, இரண்டு, அல்ல 20 ஆண்டுகள் சம்பளமே இல்லாமல் அவர் ஆடு மேய்த்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அப்பாராவை அவரது குடும்பத்தினரிடம் சேர்க்க அனைவரும் இணைந்து பணியாற்றுகிறோம்," என்று அஜய் குமார் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)