இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற கேரள நபர் சுட்டுக் கொலை - எல்லையில் என்ன நடந்தது?

    • எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை
    • பதவி, பிபிசி தமிழ்

இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற கேரள நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். பிப்ரவரி 10-ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவம் குடும்பத்தினருக்கு தற்போதுதான் தெரிய வந்துள்ளது.

வேலை தேடிச்சென்ற அவர், ஜோர்டானில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற போது ஜோர்டான் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தும்பா பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் கேப்ரியேல். 47 வயதான இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஆவார். இவர் தமது உறவினரான 43 வயது எடிசன் மற்றும் மேலும் இரண்டு நபர்களுடன் சேர்ந்து வேலைக்காக இஸ்ரேல் செல்ல திட்டமிட்டிருந்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய தாமஸின் மனைவியின் சகோதரரான ரெக்ஸ், தாமஸிற்கு பணப் பிரச்னைகள் இருந்ததால் உறவினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்ல திட்டமிட்டதாக கூறினார்.

ஆங்கில மின்னஞ்சலை புரிந்து கொள்ள முடியாததால் தாமதம்

தாமஸ் உயிரிழந்து சுமார் 20 நாட்களுக்குப் பின்னரே தங்களுக்கு தெரிய வந்ததாக ரெக்ஸ் கூறினார்.

"பிப்ரவரி 5ம் தேதி கேரளாவிலிருந்து ஜோர்டான் சென்ற தாமஸ் கடந்த 9ம் தேதி வரை தமது மனைவியுடன் தொலைபேசியில் பேசினார். இதன் பின்னர் அவருடன் எங்களால் பேச முடியவில்லை.

இதன் பின்னர் தாமஸின் மனைவி கடந்த 24 ம் தேதி அம்மானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.

28ம் தேதி மாலையில் தூதரகத்திலிருந்து பதில் மின்னஞ்சல் கிடைத்துள்ளது. ஆனால் ஆங்கிலம் வாசிக்கத் தெரியாததால் மின்னஞ்சலை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை" என ரெக்ஸ் கூறினார்.

மின்னஞ்சலில் எழுதியிருந்தது என்ன?

ஜோர்டானில் உள்ள இந்திய தூதரகம் அனுப்பிய மின்னஞ்சல் தகவல்களை தாமஸின் குடும்பத்தினர் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.

அதில், "ஜோர்டானின் காரக் மாவட்டத்தில் ஜோர்டான் எல்லையைத் தாண்டி இஸ்ரேலுக்குள் நுழைய தாமஸ் உள்ளிட்டவர்கள் முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் தலையில் குண்டு துளைத்ததால் தாமஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார், அவரது உடல் ஜோர்டான் உள்ளூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது" என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மார்ச் 1ம் தேதி காலில் காயமடைந்திருந்த எடிசன் நாடு திரும்பினார். அவர் வந்த பின்னரே மின்னஞ்சலைப் படித்து, தாமஸ் உயிரிழந்ததைத் தெரிந்து கொண்டோம் எனவும் ரெக்ஸ் தெரிவித்தார்.

3 தெலுங்கு மொழி பேசுபவர்கள் 2 மலையாளிகள் என மொத்தம் 5 பேர் சென்றதாகவும், ஜோர்டானில் ஏற்கெனவே வேலைபார்க்கும் ஒருவர் அழைத்ததன் பேரில் இவர்கள் அனைவரும் அங்கு சென்றதாகவும் ரெக்ஸ் கூறினார்.

தாமஸ்-க்கு குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில், மனைவி மற்றும் தாய் தந்தையர் அவரது வருமானத்தை நம்பியே வசித்து வந்தனர். தற்போது அவரின் மரணம் குடும்பத்தை பெரும் துயருக்கு உள்ளாக்கியுள்ளதாகக் கூறிய ரெக்ஸ், அவரின் உடலை நாட்டுக்கு திரும்பக் கொண்டு வர அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

'சம்பவ இடத்திலேயே மயங்கி விட்டேன்'

தாமஸ் உடன் சென்று குண்டடிப்பட்டு திரும்பி வந்திருக்கும் எடிசனின் உறவினரான ஆக்னஸ் பிபிசி தமிழிடம் பேசினார். துப்பாக்கிச் சூடு நடந்ததுமே தான் சுயநினைவை இழந்து விட்டதாக எடிசன் தம்மிடம் கூறியதாக ஆக்னஸ் கூறினார்.

"இந்த சம்பவத்திற்குப் பின்னர் மருத்துவமனையிலேயே எடிசன் கண் விழித்தார். அங்கிருந்து சிறைக்கு அழைத்துச் சென்ற பின்னரே தாமஸை காணவில்லை என்பதை எடிசன் உணர்ந்துள்ளார்" என ஆக்னஸ் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக எடிசனின் கருத்துக்களை பெற முயற்சித்த போது, துப்பாக்கிச் சூடு நடந்ததுமே தான் மயங்கி விழுந்து விட்டதாகவும், தற்போது மருத்துவ சிகிச்சையில் இருப்பதால், மருத்துவரின் ஆலோசனையின்றி தம்மால் மேற்கொண்டு பேச முடியாது என அவர் தெரிவித்துவிட்டார்.

உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை

வெளிநாடு வாழ் கேரள மக்களுக்கு உதவி செய்து வரும் கேரள அரசு அமைப்பான NORKA-வின் (Department of Non Resident Keralite's Affairs) தலைமைச் செயல் அதிகாரி அஜித் தலச்சேரி பிபிசி தமிழிடம் பேசினார்.

ஜோர்டானில் கேரள மாநிலத்தவர் உயிரிழந்தது தொடர்பாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகும் வரை தங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை எனக் கூறினார் அவர்.

"தற்போதைய சூழலில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கிறோம், உயிரிழந்த தாமஸின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்" என கூறிய அஜித் தலச்சேரி, முறையற்ற வேலைவாய்ப்பு முகமைகளிடம் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக் கூறினார்.

கேரள அரசால் 1996ம் ஆண்டு உருவாக்கப்பட்ட NORKA அமைப்பு வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்களின் நலனுக்காக இயங்கி வருகிறது.

வேலை வாய்ப்புக்காக இவ்வாறு செல்பவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதை தவறாக இருப்பதால், தேவையற்ற சிக்கல்களுக்கு ஆளாவதாகக் கூறினார் அஜித் தலச்சேரி.

ஜோர்டானில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஜோர்டானில் இந்தியக் குடிமகன் துரதிர்ஷ்டவசமான சூழலில் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஜோர்டான் அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. அவரின் உடலை இந்தியா கொண்டு வர முயற்சி செய்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)