You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய 'தனி ஒருவன்'
- எழுதியவர், கெல்லி என்ஜி
- பதவி, பிபிசி செய்திகள்
உலகில் மிக அதிக அளவில் ரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் காலமானார். அவர் தனது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார்.
ஜேம்ஸ் ஹாரிசன், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று தனது தூக்கத்திலேயே இயற்கை எய்தினார் என்று அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை (மார்ச் 03) அன்று தெரிவித்தனர். அவருக்கு வயது 88.
ஆஸ்திரேலியாவில் அவர் 'தங்கக் கை மனிதர்' என்று அழைக்கப்படுகிறார். ஜேம்ஸ் ஹாரிசனின் ரத்தத்தில் Anti-D எனப்படும் ஒரு அரிய வகை ஆன்டிபாடி இருந்தது. கருவில் இருக்கும் குழந்தையை தாயின் ரத்தம் தாக்கும் அபாயம் இருக்கக் கூடிய கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளைத் தயாரிக்க இந்த ஆன்டிபாடி பயன்படுகின்றது.
14 வயதில், அவருக்கு செய்யப்பட்ட மார்பு அறுவை சிகிச்சையின் போது, பல முறை அவருக்கு ரத்தமாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகே அவர் ரத்த தானம் செய்ய உறுதியளித்ததாக, ஹாரிசனுக்கு அஞ்சலி செலுத்திய ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ரத்த தான சேவை தெரிவித்தது.
18 வயதில் அவர் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம் செய்ய தொடங்கினார். தனது 81 வயது வரை ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒருமுறை ஜேம்ஸ் ஹாரிசன் இதனை செய்து வந்துள்ளார். இதன் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை அவர் காப்பாற்றியுள்ளார்.
2005 ஆம் ஆண்டில், அதிக முறை ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம் செய்ததற்கான உலக சாதனையை அவர் படைத்தார். 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் இந்த சாதனையை முறியடித்த வரை, ஜேம்ஸ் ஹாரிசன் இந்த சாதனையை தன் வசம் வைத்திருந்தார்.
"எந்த செலவும் அல்லது வலியும் இல்லாமல், எனது தந்தை பல உயிர்களைக் காப்பாற்றியதில் நான் பெருமைப்படுகிறேன்", என்கிறார் ஹாரிசனின் மகள் டிரேசி மெல்லோஷிப்.
"இது வலிக்காது என்றும், நீங்கள் காப்பாற்றும் உயிர் உங்களுடையதாக கூட இருக்கலாம் என்றும் எனது தந்தை எப்போதும் கூறுவார்", என்று டிரேசி கூறினார்.
டிரேசி மற்றும் ஜேம்ஸ் ஹாரிசனின் இரண்டு பேரக் குழந்தைகளுக்கும் anti-D தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
"எங்களைப் போன்ற பல குடும்பங்கள், அவரது இந்த செயலால் பலன் அடைத்துள்ளதைப் பற்றி கேள்விப்பட்டது ஜேம்ஸுக்கு மகிழ்ச்சியை அளித்தது", என்று அவர் கூறினார்.
Anti-D தடுப்பூசிகள் கருவில் உள்ள மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு வரும் ஹீமோலிடிக் நோய் அல்லது HDFN எனப்படும் ஆபத்தான ரத்தக் கோளாறிலிருந்து பாதுகாக்கின்றன.
இந்த நோய் கர்ப்ப காலத்தின் போது வருகிறது. தாயின் ரத்த சிவப்பணுக்கள் கருவில் வளரும் குழந்தையின் ரத்த சிவப்பணுக்களுடன் பொருந்தாத போது இந்த நோய் பாதிப்பு ஏற்படுகின்றது.
தாயின் நோயெதிர்ப்பு அமைப்பு குழந்தையின் ரத்த அணுக்களை அச்சுறுத்தலாகக் கருதி அவற்றைத் தாக்க ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இது கருவில் உள்ள குழந்தைக்கு கடுமையான தீங்கு விளைவிக்கக் கூடும். இதனால் குழந்தைக்கு கடுமையான ரத்த சோகை, இதய செயலிழப்பு அல்லது மரணம் கூட ஏற்படலாம்.
1960-களில் anti-D தடுப்பூசிகள் உருவாக்கப்படுவதற்கு முன்பு, HDFN நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளில் ஒன்று உயிரிழந்தது.
ஜேம்ஸ் ஹாரிசனின் ரத்தத்தில் anti-D ஆன்டிபாடி எவ்வாறு இவ்வளவு அதிகமாக இருந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. 14 வயதில் அவருக்கு அதிக அளவில் ரத்த மாற்றம் செய்யப்பட்டதால் இதுபோல நடந்திருக்கக் கூடும் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் 200 க்கும் குறைவான anti-D ஆன்டிபாடிகளை தானம் செய்பவர்களே உள்ளனர். ஆனால் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 45,000 தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு உதவுகிறார்கள் என்று லைஃப்பிளட் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ரத்த தான சேவை தெரிவிக்கிறது.
ஹாரிசன் மற்றும் அவரைப் போல anti-D ஆன்டிபாடிகளை தானம் செய்பவர்களிடம் இருந்து பெறப்படும் ரத்தம் மற்றும் நோயெதிர்ப்பு செல்களைப் போன்று, ஆய்வகத்திலே anti-D ஆன்டிபாடிகளை உருவாக்க லைஃப்பிளட் அமைப்பு, ஆஸ்திரேலியாவின் வால்டர் அண்ட் எலிசா ஹால் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
உலகெங்கிலும் உள்ள கர்ப்பிணிகளுக்கு உதவ இந்த ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட anti-D ஆன்டிபாடிகளை பயன்படுத்தும் காலம் வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த புதிய சிகிச்சை முறையை உருவாக்குவது நீண்ட காலமாக 'முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் ஒரு விஷயம்' என்று லைஃப்பிளட் ஆராய்ச்சி இயக்குநர் டேவிட் இர்விங் கூறினார்.
போதுமான தரத்தில் மற்றும் அளவில் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யக் கூடிய, ரத்த தானம் செய்வதில் உறுதி பூண்டுள்ள நபர்கள் குறைவாக இருப்பதாகவே அவர் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)