You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் திமுக அரசை விளம்பரப்படுத்தும் கேள்விகளா? சர்ச்சையின் பின்னணி என்ன?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில், தி.மு.க அரசை விளம்பரப்படுத்தும் வகையில் கேள்விகள் கேட்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
'அரசுப் பணிக்கு வருகிறவர்கள், அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு கேள்விகள் கேட்கப்படுகிறதா?' எனக் கேள்வி எழுப்புகிறார், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன்.
வினாத்தாள் சர்ச்சைக்கு கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வினாக்களைத் தயாரிக்கும் நிபுணர் குழுவுக்கு போதிய அறிவுறுத்தல் வழங்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூறுகிறது. ஆனாலும், சர்ச்சை தொடர்வது ஏன்?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஜூன் 15 அன்று குரூப் 1 தேர்வு நடந்தது. சார்-ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வில் 165வது கேள்வியாக, இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த கேள்வி இடம்பெற்றிருந்தது. அதில், 'இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தி.மு.க முக்கியமாக பங்கெடுத்துக் கொண்டது; மக்களைத் தமிழர் என்ற அடையாளத்தால் ஒன்றிணைய தி.மு.க வற்புறுத்தியது' எனக் கேட்கப்பட்டிருந்தது.
இவற்றில் எது சரி, எது தவறு என்ற அடிப்படையில் வினா தயாரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
'தமிழ்நாட்டில் எந்த திட்டத்தை அறிமுகம் செய்ததால் முதல்வரை மக்கள் தாயுமானவர் என அழைக்கின்றனர்?' என்ற வினா கேட்கப்பட்டிருந்தது. இதற்கு, 1.பள்ளியில் காலை உணவு, 2.விடியல் பயணத் திட்டம், 3.நீங்கள் நலமா? 4. மக்களுடன் முதல்வர் ஆகிய திட்டங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
"வினாத்தாள்களில் சுய விளம்பர கேள்விகள்"
இவ்விரு கேள்விகளையும் குறிப்பிட்டு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், 'தேர்வர்களின் அறிவை சோதிப்பதற்கு ஆளும்கட்சியை போற்றும் விதமாக கேள்வியை வடிவமைப்பது தான் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சிறப்பம்சமா?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
'தமிழ்நாடு அரசின் துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் போன்ற பதவிகளுக்கான தேர்வில் இதுபோன்ற கேள்விகள் அவசியம் தானா அல்லது அரசு உயர் பதவியில் இருப்போர் ஆளும்கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆரம்பப்புள்ளியாக இவை சேர்க்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது' எனவும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
'மாணவர்களின் தேர்வு வினாத்தாள்களில் சுய விளம்பர கேள்விகளை இடம்பெறச் செய்வதில் தி.மு.க அரசு கவனம் செலுத்துவது முறையானதல்ல' என்கிறார், நயினார் நாகேந்திரன்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வில், மாநில அரசின் கொள்கைக்கு மாறான கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை தி.மு.க அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஆனால், வினாத்தாளில் இவை குறித்த கேள்வி இடம்பெற்றிருந்தது.
புதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் ஆக்கப்பூர்வமான திறனை உயர்த்தி அவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதாக கேள்வி அமைந்திருந்தது.
அடுத்து, குடிமக்கள் பதிவேட்டைத் தயார் செய்வதில் குடியுரிமை திருத்தச் சட்டம் உதவும் என்ற ரீதியில் கேள்வி அமைந்திருந்தது. இவை இரண்டையும் மாநில அரசு எதிர்த்து வரும் வேளையில் அதுதொடர்பான கேள்விகள் இடம்பெற்றதாக அப்போது விமர்சனம் எழுந்தது.
"தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லை"
தி.மு.க ஆட்சியில் மட்டுமல்லாமல், கடந்த அ.தி.மு.க ஆட்சியிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது விமர்சனங்கள் எழுந்தன.
2018 நவம்பர் மாதம் நடந்த குரூப் 2 தேர்வில் ஈ.வெ.ராமசாமி எனும் பெரியாரின் பெயர், அவரின் சாதியுடன் அச்சிடப்பட்டிருந்தது. அதில், 'திருச்செங்கோடு ஆசிரமத்தை தோற்றுவித்தது யார்?' என்ற கேள்விக்கு காந்திஜி, ராஜாஜி, சி.என்.அண்ணாதுரை ஆகியோரின் பெயர்களுடன் பெரியாரின் இயற்பெயருடன் சாதி சேர்க்கப்பட்டிருந்தது.
இதற்கு விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், "வினாத்தாள்களை நிபுணர் குழு தயாரிக்கிறது. வினாத்தாள் தொடர்பான பிரச்னை குறித்து குழு அமைத்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறியிருந்தது.
"ஆனால், கடந்தகால செயல்பாடுகளில் இருந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை" எனக் கூறுகிறார், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வினாத்தாள்களை தயார் செய்கிறவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நேரடி தொடர்புகள் எதுவும் இல்லை. அதேநேரம், தங்களின் அரசியல் சார்புநிலையைக் காட்டிக் கொள்வதற்காக இவ்வாறு செயல்படுகின்றனர்" என்கிறார்.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வினாத்தாள்களை தயாரிக்கும் நிபுணர் குழுவில் உள்ளவர்களுக்கு புரிதல் திறனில் உள்ள சிக்கல்களே இதற்கு காரணமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"எந்தப் பயனும் இல்லை"
"வினாத்தாளில் அரசியல் கேள்விகளைக் கேட்பதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. இப்படியொரு கேள்வியைக் கூட கண்டறிய முடியாதது என்பது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நிர்வாக திறமையின்மையைக் காட்டுகிறது" என்கிறார், பிரின்ஸ் கஜேந்திரபாபு.
இதே கருத்தை முன்வைக்கும் அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெய ராஜராஜேஸ்வரன், "போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்கால நலனுக்கு உகந்த கேள்வியாக இவை இல்லை. ஆட்சியில் இருப்பவர்கள், தங்கள் கட்சியை விளம்பரப்படுத்துவதற்காக இவ்வாறு கேட்கப்படுகின்றன" எனக் கூறுகிறார்.
கேள்விகளில் என்ன தவறு?
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார், தி.மு.க செய்தித் தொடர்புத் துறை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வினாத்தாளில் இடம்பெற்ற கேள்விகளில் சமூகம் சார்ந்து இல்லாமல், தி.மு.க முன்வைக்கும் தத்துவம் சார்ந்து கேள்விகள் எதுவும் இடம்பெறவில்லை. அந்தவகையில், இதில் எந்தவித சர்ச்சைகளும் இல்லை" எனக் கூறுகிறார்.
"கல்வியில் அரசியல் கொள்கைகளைத் திணிக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை" எனக் கூறும் கான்ஸ்டன்டைன், "கல்வி என்பது சமூகத்துக்கானது. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விஷயங்கள் கேள்விகளாக இடம்பெறுவதில் என்ன தவறு?" எனக் கேள்வி எழுப்புகிறார்.
"இதுபோன்ற கேள்விகளால் ஒரு கட்சியை முன்னிலைப்படுத்துவதாக பார்க்க முடியாது" எனக் கூறுகிறார், காஞ்சிபுரத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வரும் மோகனவேல்.
"தேர்வர்களின் மனதில் சிலவற்றைப் பதிய வைப்பதற்காக இவ்வாறு கேட்கப்படுகின்றன. முன்பு, 'ஜூன் 5 ஆம் தேதியில் என்ன தினம் கொண்டாடப்படுகிறது?' என்ற கேள்வி இடம்பெறும். சுற்றுச்சூழல் தினம் என்பதைப் பதிய வைப்பதற்காக இவ்வாறு கேட்கப்பட்டது" என்கிறார்.
"தமிழ்நாட்டில் 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது முக்கியமானது" எனக் கூறும் மோகனவேல், "தேசிய கட்சியை அகற்றிவிட்டு மாநிலக் கட்சி ஆட்சியில் அமர்வதற்கான முக்கிய போராட்டமாக இது இருந்துள்ளது. இதுதொடர்பான கேள்வியை விளம்பரப்படுத்துவதாகப் பார்க்க முடியாது" எனவும் குறிப்பிட்டார்.
"ஒருவரின் பெயரை அடைமொழி வைத்துக் கேள்விகளைக் கேட்பதும் இயல்பானது. நடப்பு நிகழ்வுகள் என்ற அடிப்படையிலேயே இவற்றை எதிர்கொள்கிறோம்" என்கிறார், மோகனவேல்.
அரசுப் பணியாளர் தேர்வாணையம் சொல்வது என்ன?
வினாத்தாள் சர்ச்சை குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், "தமிழ், வரலாறு, கணிதம், புவியியல், திறனறி தேர்வு உள்பட ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 100 கேள்விகள் வரை நிபுணர்களிடம் இருந்து பெறப்படும். கேள்விகளின் தன்மைகளை ஆராய்வது, பிழைகளைக் கண்டறிவது என தனித்தனி குழுக்கள் உள்ளன" எனக் கூறுகிறார்.
ஒவ்வொரு தேர்வுக்கும் சுமார் பத்தாயிரம் கேள்விகளில் இருந்து வினாத்தாள் தயாரிக்கப்படுவதாகக் கூறும் அவர், "என்னென்ன கேள்விகள் இடம்பெற்றுள்ளன என்ற விவரம், தேர்வாணைய உறுப்பினர்கள் உள்பட யாருக்கும் தெரியாது" என்கிறார்.
வினாத்தாளைத் தயாரிக்கும்போது சாதி பெயர், சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம்பெறக் கூடாது என நிபுணர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறிய அந்த அதிகாரி, "சில நேரங்களில் விடைகளை வைத்து கேள்விகளைத் தயாரிப்பார்கள். விடையைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட வேண்டும் என்பதற்காக பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன" எனக் கூறினார்.
"வினாத்தாளில் சர்ச்சை உள்ளதாகக் கண்டறிந்தால், அதைத் தயாரித்த குழு எது என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கேள்வியை சர்ச்சைக்குரிய ஒன்றாக பார்க்கவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு