You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குழந்தைகளுக்கு சர்க்கரை நோய்: பரவலாகும் புதிய அபாயம்! - விளைவுகள் மற்றும் தீர்வுகள்
- எழுதியவர், அன்பு வாகினி
- பதவி, உணவுத் தொழில்நுட்ப வல்லுநர்
உலகளவில், குறிப்பாக இந்தியாவில், உடல் பருமன், இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 Diabetes) ஆகியவை வேகமாக அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய ஆய்வுகளின்படி, 2030க்குள் உலகில் உடல் பருமனாக இருக்கும் பத்து குழந்தைகளில் ஒன்று இந்தியாவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது என்று தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்துள்ளது.
இது பெரும்பாலும் வயதானோருக்கு மட்டுமே வரும் நோயாக இருந்தாலும், இப்போது குழந்தைகளிடமும் அதிகரித்து வருகிறது. இது நாட்டின் பொது சுகாதாரத்துக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
மூன்று காரணங்கள் என்ன?
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மூன்று காரணங்கள் முக்கியமாகின்றன. அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு (HFSS) கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் குழந்தைகளின் உடல் பருமன், நீரிழிவுக்கு முதன்மைக் காரணம்.
குளிர்பானங்கள், பேக்கரி உணவு வகைகள், பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் மறைமுக சர்க்கரை அதிக அளவில் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை உயர்த்தி, இன்சுலின் செயல்படும் தன்மையைக் குறைக்கிறது.
இரண்டாவதாக, சக்கை உணவு (ஜங்க் ஃபுட்), பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் எளிதாகவும், விலை மலிவாகவும் கிடைப்பதால் குழந்தைகளின் உணவுப் பழக்கம் மாறிவருகிறது.
மூன்றாவதாக, உடல் ரீதியான செயல்பாடுகள் குறைந்துவிட்டிருப்பது இந்தப் பிரச்னையை மேலும் தீவிரப்படுத்துகிறது. குழந்தைகள் வெளியே விளையாடுவதற்குப் பதிலாக கைப்பேசி, டேப்லெட், வீடியோ கேம்களில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள், உடற்கல்வி வகுப்புகளுக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இந்த மூன்று காரணிகளும் சேர்ந்து குழந்தைகளின் உடல்நலத்தை பெரிதும் பாதிக்கின்றன.
விளம்பரங்களின் தாக்கம்
கார்ட்டூன் கதாபாத்திரங்கள், பிரபலங்கள் தோன்றும் விளம்பரங்கள் குழந்தைகளின் உணவுத் தேர்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
'ஜங்க் ஃபுட்' தயாரிக்கும் நிறுவனங்கள் குழந்தைகளுக்குப் பிடித்தமான கார்ட்டூன் கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகின்றன.
நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் ஜங்க் ஃபுட் உணவு வகைகளை விளம்பரப்படுத்துவதால், குழந்தைகள் அவற்றை 'ட்ரெண்டி' என்று கருதுகின்றனர்.
ஜங்க் ஃபுட்டின் சுவை, அவை தரும் அனுபவத்தை மட்டுமே விளம்பரங்கள் முன்னிலைப்படுத்துகின்றன. உடல் பருமன், நீரிழிவு, பல் சிதைவு போன்ற நீண்டகால பாதிப்புகள் பற்றி அதில் எதுவும் காட்டப்படுவதில்லை.
பள்ளிகளில் 'சர்க்கரைப் பலகை' அமைக்கும் முயற்சி
இந்த பிரச்னையை சமாளிக்க தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) ஒரு முக்கிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. சிபிஎஸ்இ (CBSE), மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளில் 'சர்க்கரைப் பலகை' (Sugar Boards) என்கிற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் சிபிஎஸ்இ 24,000க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு 'சர்க்கரைப் பலகை' அமைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
சர்க்கரைப் பலகை (Sugar Board) என்பது அதிக சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள், மக்களுக்கு ஏற்படுத்தும் ஒரு தகவல் பலகையாகும்.
இந்தப் பலகைகளில் மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு தேவையான முக்கியத் தகவல்கள் இடம்பெறும். முதலில், மாணவர்கள் தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படும்.
அதேபோல், அவர்கள் அன்றாடம் உண்ணும் சிற்றுண்டிகள், பானங்களில் எவ்வளவு சர்க்கரை அடங்கியுள்ளது என்பதை விளக்கும் தகவல்கள் தரப்படும்.
அதிகப்படியான சர்க்கரை உட்கொண்டால் ஏற்படும் ஆரோக்கிய அபாயங்கள், பல் சொத்தை, உடல் பருமன், நீரிழிவு நோய் போன்றவை பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். இதனுடன், ஆரோக்கியமான மாற்று உணவு வகைகள் பரிந்துரைக்கப்படும்.
இந்த முயற்சி மாணவர்களின் உணவுப் பழக்கங்களை மேம்படுத்தவும், அதிக - சர்க்கரை, உப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளின் நுகர்வைக் குறைக்கவும் உதவும்.
இதன்மூலம், பள்ளி கேன்டீன்களில் இத்தகைய ஆரோக்கியமற்ற உணவு வகைகளின் விற்பனையைக் கட்டுப்படுத்தவும் இயலும். இந்திய உணவு பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) இந்த முயற்சியை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும், குழந்தைகளின் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவதில் இது முக்கியமான நடவடிக்கை என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அதேவேளை, பள்ளி கேன்டீன்களில் ஆரோக்கியமான, சத்தான உணவு வகைகள் வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
முழுமையான தீர்வுக்கான வழிகள்
ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களால் மக்களின் ஆரோக்கியம், குறிப்பாக குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறியாகி வருகிறது. இந்த சூழ்நிலையை சரிசெய்ய அரசாங்கம், சுகாதாரத் துறை நிபுணர்கள், ஊட்டச்சத்து வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த 'உணவுக் கொள்கை' மாதிரியை உருவாக்க வேண்டும்.
இந்தக் கொள்கையின் மூலம், ஆரோக்கியமான உணவு வகைகள் மக்களுக்கு எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
பள்ளிகளுக்கு அருகே ஜங்க் ஃபுட் விற்பனையை முழுமையாகத் தடை செய்யும் தேசியத் திட்டத்தை உருவாக்க வேண்டும். குறிப்பாக, பள்ளி வளாகங்களிலிருந்து 50 மீட்டர் தூரத்துக்குள் இந்த உணவு வகைகள் கிடைக்காதவாறு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.
'சர்க்கரைப் பலகை' போன்ற முயற்சிகள் நல்ல தொடக்கமாக இருந்தாலும், நீண்ட கால மாற்றத்துக்கு உணவு பழக்கவழக்கங்கள், விளம்பரத் தடைகள், உணவுப் பொருட்களின் விற்பனையில் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்கள் தேவை.
இதற்கு ஒரு முன்மாதிரியாக, மெக்சிகோ, சிலி போன்ற நாடுகள் உணவு-பானங்களில் அதிக சர்க்கரை, கொழுப்பு அல்லது சோடியம் (உப்பு) இருப்பதை எளிதில் அடையாளம் காண உதவும் 'முன்பக்க எச்சரிக்கை லேபிள்களை' (Front-of-Pack Warning Labels) அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த லேபிள்கள் ஆரோக்கியமற்ற பொருட்களை நுகர்வோருக்கு தவிர்க்க உதவுகின்றன.
இதேபோல், இந்தியாவிலும் உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (FSSAI) உடனடியாக எச்சரிக்கை லேபிளிங் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இத்தகைய நடவடிக்கைகள், குழந்தைகள் உட்பட அனைவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
அதேநேரத்தில், புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக கொழுப்பு, சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள ஜங்க் ஃபுட் பொருட்கள் வரியின்றி இறக்குமதி செய்யப்படுவதால், அவை மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன.
இந்த நிலைமை பொது சுகாதாரத்துக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. இதைத் தடுக்க, அரசாங்கம் உடனடியாக திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.
ஒருங்கிணைந்த திட்டம் தேவை
தற்போதைய 'சர்க்கரைப் பலகை' முயற்சி குழந்தைகளின் ஆரோக்கிய உணவுப் பழக்கங்களை மேம்படுத்த ஒரு நல்ல தொடக்கமாக இருந்தாலும், நிலையான மாற்றத்துக்கு ஒருங்கிணைந்த தேசிய பல்துறை செயல்திட்டம் தேவை.
இதை அவசர கால அடிப்படையில் உருவாக்கி குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியம், சுகாதாரம் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்கும் தீர்வுகள் காண்பதற்கும் அரசாங்கம், கல்வியாளர்கள், பெற்றோர்கள், சமூக அமைப்புகளும் இந்த முயற்சியில் ஒருங்கிணைந்து உறுதிப்பட செயல்பட வேண்டும்.
(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்து ஆகும்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு