You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிளாஸ்டிக் தாளில் இட்லியை வேக வைத்தால் என்ன ஆபத்து?மருத்துவர்கள் தகவல்
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி
உணவகங்களுக்குச் செல்லும் போது இட்லி மிகவும் பாதுகாப்பான உணவாக பலராலும் எப்போதும் நம்பப்படுகிறது. ஆனால் கர்நாடக அரசு, வெறும் இட்லியில் புற்றுநோயை உருவாக்கும் நச்சுத்தன்மை இருப்பதை கண்டறிந்துள்ளது.
241 உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது 52 உணவகங்களில் துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள்கள் மீது இட்லி மாவு ஊற்றி இட்லி சமைக்கப்பட்டதை அம்மாநிலத்தின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக, இட்லியை நீராவியில் வேக வைக்க, இட்லி தட்டில் சுத்தமான துணியை பயன்படுத்துவார்கள். ஆனால் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை நடத்திய திடீர் சோதனையில், சில சாலையோர கடைகள் மற்றும் உணவகங்களில் இட்லி அவிக்க துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இந்த பிளாஸ்டிக் தாள்கள் கார்சினோஜென்ஸ் (carcinogens) எனப்படும் புற்றுநோய் காரணியை உருவாக்கும்.
- ஹலால் முறையில் விலங்குகள் எவ்வாறு கொல்லப்படும்? ஹலால் இறைச்சி ஆரோக்கியமானதா? 6 கேள்வி - பதில்கள்
- மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி?
- தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்? உணவு உண்ணும் போது நீர் அருந்தலாமா?
- புகைப் பிடிப்பதை நிறுத்தினால் சர்க்கரை, கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடத் தோன்றுவது ஏன்?
மருத்துவர்கள் கூறுவது என்ன?
"தரமற்ற பிளாஸ்டிக் தாள்கள் உயர் வெப்பநிலையில் உருகும் போது, அதில் உள்ள நச்சுகள் இட்லிக்குள் சென்றுவிடுகின்றன. பாரம்பரியமாக இட்லிக்கு பயன்படுத்தும் துணிகளில் இதுபோன்ற நச்சுத்தன்மை உருவாவதில்லை," என்று மருத்துவர் யூ.எஸ். விஷால் ராவ் தெரிவிக்கிறார். எச்.சி.ஜி. புற்றுநோய் மையத்தின் டீனான அவர் பிபிசி ஹிந்தியிடம் இதுகுறித்து பேசினார்.
"நீரிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் அதிகம் உள்ளன. அதையும் நாம் கவனிக்க வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளால் உருவாகும் கார்சினோஜென்ஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்," என்றும் அவர் கூறினார். மாநில அரசு எடுத்த இந்த நடவடிக்கைகள் குறித்து அவர் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் பிபிசி ஹிந்தியிடம் பேசும் போது, "நாங்கள் அனைத்து உணவுகளும் பாதுகாப்பற்றது என்று கூறவில்லை. நீங்கள் என்ன உணவை உட்கொள்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உணவகங்களும் உங்களின் வாடிக்கையாளர்களுக்கு என்ன உணவை பரிமாறுகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பல நேரங்களில் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கானது எது என்றும் தெரியாமல் உணவுகள் விற்கப்படுகின்றன," என்றார்.
இதர பொருட்களிலும் ரசாயனம்
இட்லிகளில் மட்டும் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை. பட்டாணியின் நிறம் பளிச்சென தெரிவதற்காக கலக்கப்படும் நிறமிகள் போன்றே, பஞ்சு மிட்டாய், சிக்கன் கபாப், தேநீர், கேக் மற்றும் இதர உணவுப் பொருட்களில் கலக்கப்படும் நிறமிகளையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தங்களது சோதனைகளில் கண்டறிந்துள்ளனர்.
உதாரணத்திற்கு பட்டாணியில் பயன்படுத்தப்படும் நிறமி தடை செய்யப்பட்ட ரசாயனம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதனை நிச்சயமாக உணவுப் பொருட்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள், பச்சைக் குத்த பயன்படுத்தப்படும் மையையும் பரிசோதனைக்குட்படுத்தினார்கள். அதில் செலேனியம், குரோமியம், பிளாட்டினம், ஆர்செனிக் உள்ளிட்ட 22 வகையான கன உலோகங்கள் கண்டறியப்பட்டன.
இவை பி.ஐ.எஸ். தரக் குறியீடு பெறவில்லை, மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின் படியும் உருவாக்கப்படவில்லை. இவை சரும பிரச்னைகளையும், பாக்டீரியா, வைரல், பூஞ்சை தொற்றுகளையும் ஏற்படுத்தும் என்றும் அந்த துறை தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)