You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் - இரான் மோதல் முற்றுவதால் ரஷ்யா கவலை
- எழுதியவர், ஸ்டீவ் ரோஸன்பெர்க்
- பதவி, ரஷ்ய செய்தி ஆசிரியர்
'ஆபரேஷன் ரைசிங் லயனை' இஸ்ரேல் தொடங்கிய போது, மத்திய கிழக்கில் நிலவும் சூழலை, 'கவலைக்கிடமானது' மற்றும் 'ஆபத்தானது' என ரஷ்ய அதிகாரிகள் விவரித்தனர்.
இருப்பினும், ரஷ்யாவுக்கு உள்ள சாதகமான அம்சங்களை ரஷ்ய ஊடகங்கள் விளக்கின.
அவற்றில்:
- உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு ரஷ்யாவில் அரசு கருவூலத்தை நிரப்பும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- யுக்ரேனில் ரஷ்யா மேற்கொள்ளும் போரிலிருந்து உலகத்தின் கவனத்தைத் திசை திருப்புகிறது.
- "கீயவ் (யுக்ரேன்) மறக்கப்பட்டுவிட்டது" என்பது மொஸ்கோவ்ஸ்கி கொம்சோமோலெட்ஸில் தலைப்புச் செய்தியாகக் காணப்பட்டது.
- மோதலில் மத்தியஸ்தம் செய்வதற்கான ரஷ்யாவின் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், யுக்ரேனில் அதன் நடவடிக்கைகள் தொடர்ந்த போதிலும், மத்திய கிழக்கில் தான் ஒரு முக்கிய பங்காளி என்றும், அமைதியை நிலைநாட்டுபவர் என்றும் ரஷ்யாவால் காட்டிக் கொள்ள முடியும். ஆனால், இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை நீண்ட காலம் நீடிக்கும் போது, தற்போதைய நிகழ்வுகளால் ரஷ்யாவுக்கு இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கலாம் என்பதையும் உணர முடிகிறது.
"மோதல் அதிகரிப்பதால் மாஸ்கோவுக்கு (ரஷ்யாவுக்கு) பெரிய ஆபத்துகளும், சேதங்களும் ஏற்படலாம்" என்று ரஷ்ய அரசியல் விஞ்ஞானி ஆண்ட்ரி கோர்டுனோவ் திங்களன்று வணிக நாளேடான கொம்மர்சாண்டில் எழுதினார்.
ரஷ்யா - இரான் ஒப்பந்தம் என்ன?
"இஸ்ரேலைக் கண்டிக்கும் விதமாக அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர, வேறு எதுவும் செய்வதற்கு ரஷ்யா தயாராக இல்லை என்பது தெளிவாகிறது. இரானுக்கு ராணுவ உதவி வழங்கவும் அது தயாராக இல்லை."
இந்த ஆண்டின் தொடக்கத்தில் விளாதிமிர் புதினும் அதிபர் மசூத் பெஷேஷ்கியனும் கையெழுத்திட்ட ரஷ்ய - இரானிய மூலோபாய கூட்டு ஒப்பந்தம் ஒரு ராணுவ கூட்டணிக்கான ஒப்பந்தம் அல்ல. அந்த ஒப்பந்தம், இரானைப் பாதுகாக்க ரஷ்யாவை கட்டாயப்படுத்தவில்லை. இருப்பினும் அந்த நேரத்தில், மாஸ்கோ அந்த ஒப்பந்தம் குறித்து நேர்மறையாகப் பேசியது.
ரியா நோவோஸ்டி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் இந்த ஒப்பந்தம் குறித்து பேசுகையில், "பிராந்திய மற்றும் உலக அளவில் அமைதி மற்றும் பாதுகாப்பின் நலன்களுக்காக ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதில் சிறப்பாகக் கவனம் செலுத்தப்பட்டது. பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பதற்கு ரஷ்யாவும், இரானும் விருப்பம் தெரிவித்துள்ளன" என்று குறிப்பிட்டார்.
ரஷ்யா மத்திய கிழக்கில் மேலும் ஒரு கூட்டாளியை இழக்க நேரிடுமா?
கடந்த 6 மாதங்களில் ரஷ்யா, மத்திய கிழக்கில் ஒரு முக்கிய கூட்டாளியான சிரியாவின் பஷர் அல்-அசத்தை ஏற்கெனவே இழந்துவிட்டது.
கடந்த டிசம்பரில் பஷர் அல்-அசத் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு, அவருக்கு ரஷ்யாவில் புகலிடம் வழங்கப்பட்டது.
இரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு, பிராந்தியத்தில் மற்றொரு மூலோபாய கூட்டாளியை இழக்கும் சூழல் ஆகியவை தற்போது ரஷ்யாவுக்கு பெரும் கவலையாக இருக்கும்.
செவ்வாயன்று மத்திய கிழக்கில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்த மொஸ்கோவ்ஸ்கி கொம்சோமோலெட்ஸ், "உலக அரசியலில் தற்போது, பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன, இது நம் நாட்டின் வாழ்க்கையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கும்" என்று கூறினார்.
விளாதிமிர் புதின் இந்த வாரத்தின் பெரும்பகுதியை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் செலவிடுவார். அங்கு நடைபெறும் வருடாந்திர சர்வதேச பொருளாதார மன்ற கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக ரஷ்யா யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய பிறகு, பெரிய மேற்கத்திய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளாமல் விலகி இருக்கின்றனர்.
ஆனால், இந்த ஆண்டில் 140-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்று மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யுக்ரேன் போரில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன என்பதை நிரூபிக்க, ரஷ்ய அதிகாரிகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்துவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
அது ஒரு பொருளாதார மன்றமாக இருந்தாலும் புவிசார் அரசியல் சூழலும் அதில் ஒரு பகுதியாக இருக்கும். மத்திய கிழக்கு மற்றும் யுக்ரேன் குறித்து ரஷ்ய அதிபர் புதின் கூறும் எந்தவொரு கருத்தும் கூர்ந்து கவனிக்கப்படும்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு