You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆமதாபாத் விமான விபத்து: 'அம்மாவுக்கு ஒரே ஆதரவாக இருந்தார், ஆனால் அனைத்தும் முடிந்துவிட்டது'
- எழுதியவர், திலீப் குமார் ஷர்மா
- பதவி, பிபிசிக்காக
"விமானப் பணிப்பெண் ஆவதுதான் அவளுடைய கனவு. விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். கல்லூரியில் படிக்கும்போதே விமானப் பணியாளர் தேர்வில் தேர்ச்சியடைந்து வேலை பெற்றாள். அப்போது அவளுக்கு 19 வயதுதான் இருக்கும். சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்திருந்தாள். இனிமேல் நகந்தோயி எப்போதுமே வரமாட்டாள்."
சோகத்துடன் இதைச் சொல்லும் சந்தோம்பா ஷர்மாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது.
குஜராத்தின் ஆமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 21 வயது விமானப் பணிப்பெண் நகந்தோயி ஷர்மாவும் உயிரிழந்தார். பிபிசி அவரது பெரியப்பா சந்தோம்பா ஷர்மாவிடம் அவர் குறித்துப் பேசியது.
பிபிசி உடனான உரையாடலில் பேசிய சந்தோம்பா ஷர்மா, "என் சகோதரரின் மூன்று குழந்தைகளில் நகந்தோயி இரண்டாவது குழந்தை. அவளுக்கு ஒரு அக்காவும் 10ஆம் வகுப்பு படிக்கும் ஒரு தம்பியும் உள்ளனர்" என்று கூறினார்.
"எங்கள் குடும்பத்தில் பெரும்பாலானவர்கள் பூசாரிகளாகவும், சமையல் தொழில் செய்பவர்களாகவும் உள்ளனர். நகந்தோயிதான் எங்கள் குடும்பத்தில் விமான பணிப்பெண்ணாக ஆன முதல் பெண். அவள் வேலைக்காகப் பல நாடுகளுக்குச் செல்வாள். துபைக்கும், அமெரிக்காவுக்கும் அவள் பணிநிமித்தமாகச் சென்றுள்ளாள். நகந்தோயி, எங்களை மிகவும் பெருமைப்பட வைத்த அன்பான பெண்" என்று சந்தோம்பா ஷர்மா கூறுகிறார்.
கடந்த 2023ஆம் ஆண்டு கல்லூரியில் படிக்கும்போது நகந்தோயிக்கு விமானப் பணிப்பெண்ணாக வேலை கிடைத்தது. அப்போது அவர் இம்பாலில் உள்ள தன்முஞ்சரி (டிஎம்) கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.
"நகந்தோயி சிறு வயதிலேயே நன்றாகப் படிப்பார். அவரது சில தோழிகள் விமானப் பணிப்பெண்களாகப் பயிற்சி பெற்று வந்தனர். நகந்தோயி தனது முதல் முயற்சியிலேயே தேர்வானாள்" என்று சந்தோம்பா ஷர்மா கூறுகிறார்.
"அவளுக்கு இந்த வேலை கிடைத்ததில் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்." நகந்தோயிபெரிய நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றிக் கொண்டார் எனக் கூறும் சந்தோம்பா, தங்கள் குடும்பத்தில் அத்தகைய வேலையில் சேர்ந்த முதல் பெண் அவர்தான் என்றும் குறிப்பிட்டார்.
'எல்லாம் முடிந்துவிட்டது'
மணிப்பூரின் தௌபல் நகரத்தில் உள்ள அவாங் லெய்காய் பகுதியில் வசிக்கும் நகந்தோயியின் குடும்பம், துக்கத்தில் துவண்டு போயுள்ளது. மகளை இழந்து தவிக்கும் தாயை யாராலும் ஆறுதல்படுத்த முடியவில்லை. லண்டனுக்கு விமானத்தில் செல்வதற்கு முன்பு தனது அக்கா கீதாஞ்சலியிடம் போனில் நகந்தோயி பேசியுள்ளார்.
நகந்தோயியின் அக்கா கீதாஞ்சலி இப்போது தனது வீட்டிற்கு வருபவர்களிடம் தன் சகோதரியின் அனைத்து புகைப்படங்களையும் காட்டியபடியே அழுகிறார்.
தனது வீட்டிற்கு வந்திருந்த மாநில முன்னாள் முதல்வர் ஓக்ராம் இபோபி சிங்கை பார்த்தபோதும் கீதாஞ்சலி அழுதார். "என் சகோதரி நகந்தோயி என்னைச் சந்திக்க அழைத்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஆனால் இப்போது அவரது உடலைப் பெற ஆமதாபாத் செல்கிறேன். எல்லாம் முடிந்துவிட்டது" என்று கூறினார்.
"வியாழக்கிழமை காலை 11:30 மணியளவில் நகந்தோயி தனது அக்காவிடம் தொலைபேசியில் பேசினார். அதுதான் எங்கள் மகள், குடும்பத்தாரிடம் கடைசியாகப் பேசியது" என்று நகந்தோயியின் தந்தை நந்தேஷ் குமார் ஷர்மா உள்ளூர் ஊடகங்களிடம் பேசும்போது தெரிவித்தார்.
"தான் லண்டனுக்கு போவதாகவும், அடுத்த சில நாட்களுக்குப் பேச முடியாது என்றும் ஜூன் 15ஆம் தேதி திரும்பிய பிறகு அழைப்பதாகவும் நகந்தோயி கூறியுள்ளார்."
அன்றைய தினம் மதிய நேரத்தில், கீதாஞ்சலியின் மொபைலில் விமான விபத்து பற்றிய செய்தியைக் கண்டதும், குடும்பத்தினர் கவலையடைந்தனர். அவர்கள் உடனடியாக நகந்தோயியை அழைத்தனர். ஆனால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
"அவர் அந்த விமானத்திற்குள் இருப்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்தும் சரி அல்லது வேறு யாரிடம் இருந்தும் சரி எங்களுக்கு எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை. விமான விபத்து குறித்து செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம்தான் எங்களுக்குத் தெரிய வந்தது" என்று நகந்தோயியின் பெரியப்பா சந்தோம்பா ஷர்மா கூறுகிறார்.
"மாலையில் சில ஏர் இந்தியா அதிகாரிகள் வீட்டிற்கு வந்து, குடும்பத்தினரை டிஎன்ஏ பரிசோதனைக்காக ஆமதாபாத் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். கீதாஞ்சலியும் மற்ற இரண்டு குடும்ப உறுப்பினர்களும் வெள்ளிக்கிழமையன்று ஆமதாபாத் சென்றனர்."
மார்ச் மாதத்தில் மூன்று-நான்கு நாட்கள் விடுமுறையில் நகந்தோயி வீட்டிற்கு வந்திருந்தார். அந்த நேரத்தில் அவரது தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
"குடும்பத்தினரைச் சந்திக்க நகந்தோயி அடிக்கடி வீட்டிற்கு வருவாள். கீதாஞ்சலி, நகந்தோயிக்கு அக்காவை போலன்றி ஒரு தோழியாகவே இருந்தாள். வீட்டு வாசலுக்கு வரும்போதே கீதாஞ்சலியைக் கூப்பிட்டுக் கொண்டேதான் வருவாள். அவள் இல்லாவிட்டால் நகந்தோயிக்கு எதுவுமே சரியாக இருக்காது" என்று சந்தோம்பா கூறுகிறார்.
வயதான அம்மாவுக்கு அனைத்துமாக இருந்த லைமனுன்தெம் சிங்சன்
ஜூன் 12 அன்று ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்டதும் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் பணியாளர்களில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த லைமனுன்தெம் சிங்சனும் ஒருவர்.
குகி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், லைமனுன்தெம் சிங்சன் இம்பாலை சேர்ந்தவர், வன்முறை வெடித்த பிறகு தனது குடும்பத்துடன் காங்போக்பி மாவட்டத்தில் ஒரு வாடகை வீட்டிற்குக் குடிபெயர்ந்தார்.
சுமார் 25 வயதான லைமனுன்தெம் சிங்சன், கடந்த ஆண்டு ஏர் இந்தியாவில் விமானப் பணியாளராக பணியில் சேர்ந்தார். லைமனுன்தெம் சிங்சனின் தந்தை இறந்துவிட்டார், வயதான தாய் மட்டுமே இருக்கிறார்.
மணிப்பூரின் முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் தனது எக்ஸ் பதிவில் இவ்வாறு எழுதியுள்ளார்: "ஆமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் மணிப்பூரை சேர்ந்த கொங்ராபைலாட்பம் நகந்தோயி ஷர்மா, லைமனுன்தெம் சிங்சன் ஆகிய இரு விமானப் பணிப்பெண்களும் அடங்குவர் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்."
"இருவரும் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தனர். அர்ப்பணிப்பு மற்றும் பெருமையுடன் சேவையாற்றி வந்த அவர்களின் திடீர் மறைவு அவர்களது குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் நம் அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பு" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
வியாழக்கிழமை ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. லண்டனுக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் இறந்துவிட்டதாக ஏர் இந்தியா உறுதிப்படுத்தியது. விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இருந்தனர்.
இந்த விமான விபத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகனான விஸ்வாஷ் குமார் ரமேஷ் மட்டுமே உயிர் பிழைத்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு