You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது – அதில் என்னென்ன தகவல்கள் இருக்கும்?
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிர் பிழைத்த அந்த நபர் பிரிட்டிஷ் குடிமகன் என்றும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நேசத்திற்குரியவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே எங்களது இப்போதைய இலக்கு என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. விபத்து குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட அந்த ஏர் இந்தியா விமானம் அருகில் இருந்த மருத்துவர்கள் விடுதியில் மோதியதாக ஆமதாபாத்தில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
"ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு மதியம் 1:38 மணிக்கு குடியிருப்புப் பகுதியில் (மேகானி நகர்) மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் 10 விமானப் பணியாளர்கள், 2 விமானிகள் உள்பட 242 பேர் இருந்தனர்" என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது என்று இந்திய விமான போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் பதிவிட்ட ராம் மோகன் நாயுடு "விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) அகமதாபாத்தில் விபத்து நடந்த இடத்திலிருந்து 28 மணி நேரத்திற்குள் விமானத் தரவுப் பதிவை (கருப்புப் பெட்டி) மீட்டெடுத்துள்ளது. இது விசாரணையில் ஒரு முக்கியமான அங்கமாக இருக்கும். விபத்து குறித்த விசாரணை நடத்துவதில் இது பெரிதும் உதவும்" என்று தெரிவித்துள்ளார்
கடந்த சில மணிநேரத்தில், ராய்ட்டர்ஸ், ஏஎஃப்பி உள்ளிட்ட செய்தி முகமைகள் ஒரு கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு முகமைகளும் காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி வருகின்றன.
விமானங்கள் வழக்கமாக இரண்டு கருப்புப் பெட்டிகளை - சிறிய ஆனால் கடினமான மின்னணுத் தரவு ரெக்கார்டர்களை - கொண்டு செல்கின்றன.
ஒன்று விமானி அறையிலிருந்து வரும் ஒலியைப் பதிவு செய்கிறது. இதனால் விமானிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும், ஏதேனும் அசாதாரண சத்தங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றையும் புலனாய்வாளர்களால் கேட்க முடியும். மற்றொன்று உயரம் மற்றும் வேகம் போன்ற விமானத் தரவுகளைப் பதிவு செய்கிறது.
போயிங் 787 பயன்பாட்டை ஏர் இந்தியா நிறுத்தப் போகிறதா?
சில இந்திய ஊடகங்களில், அரசாங்கம் அனைத்து போயிங் 787 விமானங்களின் பயன்பாட்டையும் நிறுத்தக்கூடும் என்ற செய்திகள் வந்தன.
அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், அது உண்மையல்ல என்று கூறியுள்ளது. அப்போது, "இந்தச் செய்தி உண்மையல்ல. குறைந்தபட்சம் இப்போதைக்கு அதைப் பற்றி ஆலோசிக்கவில்லை," என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
உயிர் பிழைத்த நபர் கூறியது என்ன?
விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் அந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் 11A இருக்கையில் பயணம் செய்தவர் என்று ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
மேலும், உயிர் பிழைத்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் ஜி.எஸ். மாலிக் கூறியுள்ளார்.
விமான நிறுவன அதிகாரிகள் முன்னர் பகிர்ந்த விமானம் குறித்த அறிக்கைப்படி, 11A இருக்கையில் இருந்த பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் என்றும், அவர் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்றும் தெரிகிறது.
"விமானம் புறப்பட்ட 30 விநாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது, பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. எல்லாம் மிக விரைவாக நடந்தது" என விஸ்வாஷ் கூறியதாக சில இந்திய செய்தி முகமைகள் தெரிவிக்கின்றன.
விபத்தில் பலியான 15 வயது சிறுவன் – குடும்பத்தினர் பிபிசியிடம் கூறியது என்ன?
ஆமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் கொண்டு வந்த மருத்துவமனையில், மிகவும் துயரமான சில கதைகளைக் கேட்க முடிகிறது.
விபத்துக்குள்ளான விமானம் விழுந்த கட்டடத்தில் வசித்து வந்த ஆகாஷ் என்ற 15 வயது சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் கேள்விப்பட்டோம். அந்தச் சிறுவன் கட்டடத்தில் உள்ள உணவகத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்தார்
அந்த உணவகத்தில் ஆகாஷின் அம்மா சீதாபென்னும் பணிபுரிந்து வந்தார். விபத்து நிகழ்ந்ததும், தனது மகனைக் காப்பாற்ற அவர் உள்ளே சென்றபோது அவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. சீதாபென் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆகாஷின் அண்ணா கல்பேஷை சந்தித்தோம், அவர் மிகவும் சோகமாக இருந்தார். தனது தம்பி மற்றும் தாய் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து அவர் அழுது கொண்டிருந்தார்.
விபத்து நடந்த இடத்திற்கு அருகில்தான் ஆகாஷின் தந்தையும் இருந்திருக்கிறார். திடீரென ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், உடனே அவர் அங்கு சென்றதாகவும் கூறினார். அருகில் சென்றபோது, எல்லா இடங்களில் இருந்தும் புகை வெளியேறிக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
அவர் அங்கு சென்றபோது, அவரது மனைவி சீதாபென் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார், தனது மகன் உயிர் பிழைக்கவில்லை என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது.
பணி ஓய்வுக்குச் சில மாதங்களே இருந்த நிலையில் பலியான மூத்த விமானி
இந்த விபத்தில் இறந்தவர்களில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அனுபவமுள்ள ஏர் இந்தியா விமானியான கேப்டன் சுமீத் சபர்வாலும் ஒருவர்.
அவர் 8,200 மணிநேரத்திற்கும் மேல் விமானப் பயண அனுபவம் கொண்டவர். அத்துடன் விமானத்தில் மூத்த குழு உறுப்பினராக கேப்டன் சபர்வால் இருந்தார். அவர் ஒரு லைன் பயிற்சி கேப்டன் ஆவார். இது விமானக் குழுவினருக்கு வழிகாட்டும் பொறுப்பு. இந்தப் பணி மிகவும் அனுபவம் வாய்ந்த விமானிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது.
அறுபது வயதான விமானி ஓய்வு பெறுவதற்குச் சில மாதங்களே இருந்த நிலையில், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பின் முன்னாள் அதிகாரியான தனது 82 வயது தந்தையுடன் அதிக நேரம் செலவிடத் திட்டமிட்டிருந்தார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"அவர் மிகவும் அமைதியான நபர். அவர் அடிக்கடி சீருடையில் வந்து செல்வதைப் பார்த்துள்ளோம். ஆனால், மிகவும் அமைதியானவராக இருந்தார்" என்று மும்பையில் உள்ள சபர்வாலின் அண்டை வீட்டுக்காரர் கூறியதாக அந்த நாளிதழ் செய்தி கூறுகிறது.
துணை விமானி, முதல் அதிகாரி கிளைவ் குந்தர், சுமார் 1,000 மணிநேரம் விமானப் பயண அனுபவத்தைக் கொண்டிருந்தார். மேலும், விபத்துக்குள்ளான ட்ரீம்லைனரை இயக்க சான்றிதழ் பெற்றவராகவும் இருந்தார்.
விமான விபத்தில் இறந்த 4 வயது பெண் குழந்தை
இங்கிலாந்தின் குளூசெஸ்டர்ஷையர் பகுதியை சேர்ந்த அகீல் நானாபாவா மற்றும் ஹன்னா வோராஜி, தங்களது நான்கு வயது மகள் சாராவுடன் விமான விபத்தில் இறந்தனர்.
இந்த குடும்பத்தின் சார்பாகப் பேசிய இமாம் அப்துல்லா, தாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், வியாழக்கிழமை அகமதாபாத்தில் நடந்தவற்றை புரிந்துக்கொள்ள முயல்வதாகவும் கூறினார்.
"இந்த இளம் குடும்பம் நம்பமுடியாத அளவிற்கு நெருக்கமாக இருந்தது - அர்ப்பணிப்புள்ள பெற்றோர் மற்றும் அவர்களின் அழகான இளம் மகள்," என்று அவர் கூறுகிறார்.
"அவர்கள் இரக்கமுள்ள, சுறுசுறுப்பான சமூக உறுப்பினர்கள், அவர்கள் எங்கள் உள்ளூர் இஸ்லாமிய பள்ளியிலும் பல்வேறு உள்ளூர் திட்டங்களிலும் தொடர்ந்து தன்னார்வத் தொண்டு செய்தனர். அவர்கள் பரவலாக நேசிக்கப்பட்டனர் மற்றும் ஆழமாக மதிக்கப்பட்டனர்.
அவரது அமைதியான தாராள மனப்பான்மை, அவரது அரவணைப்பு மற்றும் கருணை மற்றும் அவர்களின் மகளின் பிரகாசமான, மகிழ்ச்சியான மனப்பான்மை அவர்களை அறிந்த அனைவருக்கும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
அவள் பள்ளியில் சூரிய ஒளியின் கதிர், அவர்கள் எங்கள் வாழ்க்கையில் பலத்தின் தூணாக இருந்தனர்" என்று அவர் கூறுகிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பதிவில், "ஆமதாபாத்தில் நடந்த சோகம் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இதயத்தை உடைக்கிறது. இந்தச் சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்ட அனைவருடனும் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பாடுபடும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தேன்" என்று கூறியுள்ளார்.
இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த விமானம் பிரிட்டன் நேரப்படி மாலை 6:25 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10:55) தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்ததாக கேட்விக் விமான நிலையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கேட்விக் விமான நிலைய நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போது விபத்துக்குள்ளான AI171 விமானம், மாலை 6:25 மணிக்கு லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்தது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன?
ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்தின் அருகே இருந்த மருத்துவர்கள் விடுதியின் மீது மோதியதைத் தொடர்ந்து, சுமார் 50 முதல் 60 மருத்துவ மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு (FAIMA) தெரிவித்துள்ளது.
ஐந்து மாணவர்களைக் காணவில்லை என்றும், குறைந்தது இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் FAIMA சங்கம் கூறுகிறது.
சில மருத்துவர்களின் உறவினர்களையும் காணவில்லை. அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் கூற்றுப்படி, விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் உயிரிழந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.
ஏ.எஃப்.பி மற்றும் ஏபி செய்தி முகமைகளின் தகவல்படி, விமான விபத்தில் யாரும் உயிர் பிழைத்ததாகத் தெரியவில்லை என்று ஆமதாபாத் காவல்துறைத் தலைவர் கூறியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் கூறியது என்ன?
இந்த விமான விபத்திற்கு பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"பிரிட்டன் நாட்டினர் பலரை ஏற்றிக் கொண்டு லண்டனுக்கு சென்ற விமானம், இந்திய நகரமான ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளானது தொடர்பான துயரக் காட்சிகள் பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன.
அங்குள்ள நிலைமை குறித்து நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். இந்தத் துயரமான நேரத்தில், பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பிரிட்டன் நாட்டினர் 53 பேர் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளன. விமான நிலைய பகுதிக்கு வெளியே புகை காணப்பட்டதாகவும், அதன் பிறகு மொத்த குழுவினரும் விசாரணைக்காக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் ஆமதாபாத் விமான நிலையத்தின் 1வது முனையத்தின் மேலாளர் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்றும், மேலும் தகவல்களை வழங்க 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் அமைத்துள்ளதாகவும் ஏர் இந்தியா கூறியுள்ளது.
"விமானம் விபத்துக்குள்ளான பிறகு தீப்பிடித்தது. தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன," என்று தீயணைப்பு அதிகாரி ஜெயேஷ் காடியா தெரிவித்தார்.
விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் அமைப்பான 'ஃபிளைட் ரேடார் 24', "ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. அந்த விமானம் புறப்பட்ட சில விநாடிகளுக்குப் பிறகு எங்களுக்கு கடைசி சிக்னல் கிடைத்தது," என்று சமூக ஊடக தளமான எக்ஸில் பதிவிட்டுள்ளது.
தரையில் இருந்து 425 அடி உயரத்தில், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விமானம் சிக்னலை இழந்ததாக ஃப்ளைட் ரேடார் 24 தெரிவித்துள்ளது.
ஃபிளைட் ரேடார் 24-இன் கூற்றுப்படி, விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஆகும்.
இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தப்பிய நபர்
அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு வெளியே பதட்டமான உறவினர்களிடமிருந்து இப்போது எங்களுக்குத் தகவல் வரத் தொடங்கியுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் இருக்கும் பூனம் படேல், தனது மைத்துனி லண்டன் செல்லும் விமானத்தில் இருந்ததாக ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகிறார்.
"ஒரு மணி நேரத்திற்குள், விமானம் விபத்துக்குள்ளானதாக எனக்கு செய்தி கிடைத்தது. அதனால் நான் இங்கு வந்தேன்," என்று அவர் கூறுகிறார்.
விமானம் விபத்துக்குள்ளானபோது, தனது மகன் மதிய உணவு இடைவேளைக்காக மருத்துவர்களின் விடுதிக்குச் சென்றிருந்ததாக ரமிலா கூறுகிறார்.
அவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து காயமடைந்ததாகவும், ஆனால் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
குஜராத் முதலமைச்சர் கூறுவது என்ன?
ஏஎன்ஐ செய்தி முகமையின் கூற்றுப்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர், மாநில உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.
ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து சம்பவத்திற்கு குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ள அவர், "ஆமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவமான ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்து நான் வருத்தமடைந்தேன். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்த பயணிகளுக்கு உடனடி சிகிச்சைக்கான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்," என்று கூறியுள்ளார்.
மேலும், "காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காகக் கொண்டு செல்ல பிரத்யேக அவசரக்கால வழித்தடங்களை ஏற்பாடு செய்வதற்கும், முன்னுரிமையின் அடிப்படையில் மருத்துவமனையில் அனைத்து சிகிச்சை ஏற்பாடுகளையும் உறுதி செய்வதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். "விமான நிலையம் தற்போது செயல்படவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறியுள்ளார்.
விமானம் விபத்துக்குள்ளானபோது வானிலை தெளிவாக இருந்ததாக விமானப் பாதுகாப்பு நிபுணர் மார்கோ சான் கூறுகிறார்.
METAR என அழைக்கப்படும் விமான வானிலை முன்னறிவிப்பின்படி, அந்தப் பகுதியில் மேற்பரப்பு காற்று குறைவாகவும், தெரிவுநிலை (Visiblity) ஆறு கிலோமீட்டர் தூரம் என்ற அளவிலும் இருந்தது.
"அப்போது குறிப்பிடத்தக்க அளவில் மேகங்கள் இருந்ததாகவோ அல்லது மோசமான வானிலை நிகழ்வுகள் எதுவும் நிலவியதாகவோ எதுவும் பதிவாகவில்லை. அதீத காற்று, புயல் அல்லது இத்தகைய விபத்திற்குக் காரணமாக இருக்கக்கூடிய பிற பாதகமான நிலைமைகள் குறித்த அறிகுறிகள் ஏதும் இல்லை" என்று சான் கூறுகிறார்.
சிக்கலில் போயிங் நிறுவனம்
ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த விபத்தில்தான் போயிங் 787 விமானம் முதல் முறையாக விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த மாடல் விமானம் 14 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஆறு வாரங்களுக்கு முன்புதான் விமானத் தயாரிப்பு நிறுவனம், டிரீம்லைனர் என்று அழைக்கப்படும் இந்த மாடல் ஒரு பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்று ஒரு மைல்கல்லை எட்டியதாகத் தெரிவித்தது.
அந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், 1,175க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்ட உலகளாவிய 787 விமானக் குழு, 30 மில்லியனுக்கும் அதிகமான விமான நேரங்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் விமானங்களை இயக்கியுள்ளதாக நிறுவனம் கூறியது.
இந்த விபத்து, அதன் 737 திட்டங்களுடன், ஆபத்தான விபத்துகள் உள்படப் பல்வேறு சிக்கல்களைச் சமாளிக்கப் போராடி வரும் போயிங் நிறுவனத்திற்கு ஒரு பெரிய அடியாக விழுந்துள்ளது.
தனது பணியில் ஓர் ஆண்டு நிறைவைக் குறிக்கவுள்ள தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஆர்ட்பெக்கிற்கு இது மற்றொரு சோதனையாக இருக்கும்.
அமெரிக்க விமானத் தயாரிப்பாளரான இந்த நிறுவனத்தின் எதிர்காலம் குறித்துக் கேள்விகளை எழுப்பும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்த்து வைக்க அவர் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு – டாடா குழுமம்
ஏர் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரான டாடா குழுமம், இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளைக் கவனித்துக் கொள்வதோடு, பாதிக்கப்பட்ட மருத்துவ விடுதியை மீண்டும் கட்டுவதற்கும் ஆதரவளிப்பதாக டாடா குழுமம் கூறியுள்ளது.
"இந்த நேரத்தில் நாங்கள் உணரும் துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது" என்று டாடா குழுமம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன், இந்த விபத்திற்குத் தனது "ஆழ்ந்த வருத்தத்தை" வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், "இந்த நிகழ்வு தொடர்பான எங்கள் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்திக் கொள்கிறேன். ஏர் இந்தியாவில் உள்ள அனைவருக்குமே இதுவொரு கடினமான நாள். இப்போது எங்கள் முயற்சிகள் அனைத்தும், எங்கள் பயணிகள், பணியாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் தேவைகள் மீது கவனம் செலுத்துவதில் மட்டுமே உள்ளது," என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏர் இந்தியா அவசர உதவி எண்
ஏர் இந்தியா நிறுவனம், பயணிகள் தொடர்பான பிரத்யேக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. மேலும் தகவல் பெற விரும்பும் இந்திய குடும்பங்கள் 1800 5691 444 என்ற எண்ணை அழைக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு