ஆமதாபாத் விமான விபத்து பற்றி இதுவரை வெளியான தகவல்கள் - முழு விவரம்

இன்று (ஜூன் 12) மதியம் 1:38 மணியளவில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது.

பயணிகள், விமானிகள், விமானப் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் அதில் இருந்தனர். புறப்பட்ட சில நொடிகளில் அந்த விமானம், விமான நிலையத்திற்கு அருகே இருந்த ஒரு மருத்துவர் விடுதி மீது விழுந்து நொறுங்கியதாக, ஒரு காவல்துறை அதிகாரி கூறியதை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு மேகானி நகர் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் 10 விமானப் பணியாளர்கள், 2 விமானிகள் உள்பட 242 பேர் இருந்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்தவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், ஒருவர் கனடாவை சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் கூறியது என்ன?

ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிர் பிழைத்த அந்த நபர் பிரிட்டிஷ் குடிமகன் என்றும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நேசத்திற்குரியவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே எங்களது இப்போதைய இலக்கு என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. விபத்து குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன?

ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்தின் அருகே இருந்த மருத்துவர்கள் விடுதியின் மீது மோதியதைத் தொடர்ந்து, சுமார் 50 முதல் 60 மருத்துவ மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு (FAIMA) தெரிவித்துள்ளது.

ஐந்து மாணவர்களைக் காணவில்லை என்றும், குறைந்தது இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் FAIMA சங்கம் கூறுகிறது.

சில மருத்துவர்களின் உறவினர்களையும் காணவில்லை. அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் கூற்றுப்படி, விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் உயிரிழந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

ஏ.எஃப்.பி மற்றும் ஏபி செய்தி முகமைகளின் தகவல்படி, விமான விபத்தில் யாரும் உயிர் பிழைத்ததாகத் தெரியவில்லை என்று ஆமதாபாத் காவல்துறைத் தலைவர் கூறியுள்ளார்.

இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தப்பிய நபர்

அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் இருக்கும் பூனம் படேல், தனது மைத்துனி லண்டன் செல்லும் விமானத்தில் இருந்ததாக ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகிறார்.

"ஒரு மணி நேரத்திற்குள், விமானம் விபத்துக்குள்ளானதாக எனக்கு செய்தி கிடைத்தது. அதனால் நான் இங்கு வந்தேன்," என்று அவர் கூறுகிறார்.

விமானம் விபத்துக்குள்ளானபோது, ​​தனது மகன் மதிய உணவு இடைவேளைக்காக மருத்துவர்களின் விடுதிக்குச் சென்றிருந்ததாக ரமிலா கூறுகிறார்.

அவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து காயமடைந்ததாகவும், ஆனால் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

கட்டுப்பாட்டு அறைக்கு விடுக்கப்பட்ட 'மேடே அழைப்பு'

விமானக் கண்காணிப்பு தளமான ஃப்ளைட் ரேடார் 24-இன் (FlightRadar24) கூற்றுப்படி, விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விமான கண்காணிப்பு தரவின்படி, விமானம் தரையில் இருந்து 425 அடி உயரத்தில் இருந்தபோது கிடைத்ததுதான் கடைசி சிக்னல். அந்த உயரத்தில், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விமானம் சிக்னலை இழந்ததாக ஃப்ளைட் ரேடார் 24 தெரிவித்துள்ளது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி 'மேடே அழைப்பு' (Mayday call) விடுத்ததாக இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரி தெரிவித்தார்.

(மேடே அழைப்பு என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அவசரக்கால சமிக்ஞை. இது முதன்மையாக விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் தகவல் தொடர்புகளில் உயிருக்கு ஆபத்தான அவசர நிலையைக் குறிக்கப் பயன்படுகிறது.)

அதன் பிறகு விமானியிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. விமானம் மேகானி நகர் என்ற குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. அது மருத்துவர்கள் விடுதியின் மீது விழுந்து நொறுங்கியதாக போலீசார் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தனர்.

மத்திய ஆமதாபாத்தில் எடுக்கப்பட்ட (பிபிசியால் சரிபார்க்கப்பட்ட) காணொளிகளில், விபத்து நடந்த பகுதியில் இருந்து வானை நோக்கிப் பெருமளவிலான கரும்புகை எழுவதைக் காண முடிந்தது.

சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த மக்கள் 'முடிந்த வரை பல உயிர்களைக் காப்பாற்ற' அங்கு விரைந்ததாக பிபிசியின் ராக்ஸி காக்டேகர் கூறினார்.

தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட அவசர சேவைப் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கை மற்றும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அப்பகுதியில் இருந்து உடல்கள் எடுக்கப்பட்டதை தான் கண்டதாகவும் அவர் விவரித்தார்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

'விபத்தின் போது வானிலை தெளிவாக இருந்தது'

அதேநேரம், விமானம் விபத்துக்குள்ளானபோது வானிலை தெளிவாக இருந்ததாக விமானப் பாதுகாப்பு நிபுணர் மார்கோ சான் கூறுகிறார்.

METAR என்றழைக்கப்படும் விமான வானிலை முன்னறிவிப்பின்படி, அந்தப் பகுதியில் மேற்பரப்பு காற்று குறைவாகவும், தெரிவுநிலை (Visiblity) ஆறு கிலோமீட்டர் தூரம் என்ற அளவிலும் இருந்தது.

இதுதொடர்பாகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய பிரதமர் மோதி, "ஆமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் என்னை அதிர்ச்சியிலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்குத் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது இரங்கல்கள். பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காகப் பணியாற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளேன்" என்று கூறியுள்ளார்.

ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்த்திற்கு இரங்கல் தெரிவித்த குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல், "உடனடி மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், போர்க்கால அடிப்படையில் ஏற்பாடுகளைச் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று கூறினார்.

ஏர் இந்தியாவின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், "அவசர மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது, குடும்பங்களுக்குத் தகவல்களை வழங்க ஆதரவுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

ஏர் இந்தியா நிறுவனம், பயணிகள் தொடர்பான பிரத்யேக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. தகவல் பெற விரும்பும் இந்திய குடும்பங்கள் 1800 5691 444 என்ற எண்ணை அழைக்கலாம்.

பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் (FCDO) இந்தியாவிலும் பிரிட்டனிலும் நெருக்கடி-நிலை குழுக்களை ஏற்பாடு செய்துள்ளதாக அதன் வெளியுறவுச் செயலர் டேவிட் லாமி கூறியுள்ளார்.

"இன்று இந்தியாவில் நடந்த துயரமான விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் பிரிட்டன் துணை நிற்கிறது. பிரிட்டன் நாட்டவர்களும் அந்த விமானத்தில் இருந்தனர் என்பதை நாங்கள் அறிவோம். பிரிட்டன் நாட்டினருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆதரவளிக்க வெளியுறவு அலுவலகம், இந்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. டெல்லியிலும் லண்டனிலும் ஒரு நெருக்கடி-நிலை குழு உருவாக்கப்பட்டுள்ளது" என்று டேவிட் லாமி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு – டாடா குழுமம்

ஏர் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரான டாடா குழுமம், இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளைக் கவனித்துக் கொள்வதோடு, பாதிக்கப்பட்ட மருத்துவ விடுதியை மீண்டும் கட்டுவதற்கும் ஆதரவளிப்பதாக டாடா குழுமம் கூறியுள்ளது.

ஏர் இந்தியா அவசர உதவி எண்

ஏர் இந்தியா நிறுவனம், பயணிகள் தொடர்பான பிரத்யேக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. மேலும் தகவல் பெற விரும்பும் இந்திய குடும்பங்கள் 1800 5691 444 என்ற எண்ணை அழைக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு