You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆமதாபாத் விமான விபத்தில் இருந்து இவரை காப்பாற்றிய அந்த '5 நிமிடங்கள்' - என்ன நடந்தது?
- எழுதியவர், பார்கவ் பரிக்
வியாழக்கிழமையன்று மதியம் (நேற்று), 30 வயதான பூமி சவுகான் விமானத்தை தவறவிட்டதால் வருத்தமடைந்தார். ஆனால் விரைவிலேயே, அதற்காக அவர் நன்றி தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவர் தவறவிட்ட ஏர் இந்தியா விமானம், ஆமதாபாத்திலிருந்து 242 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
பூமி சவுகான் அந்த விமானத்தில் பயணிப்பதற்காக குஜராத்தில் உள்ள அங்கலேஷ்வரில் இருந்து சாலை வழியாக பயணம் மேற்கொண்டார்.
"நாங்கள் சரியான நேரத்தில் ஆமதாபாத்தை அடைந்தோம். ஆனால் நகரத்தில் இருந்த போக்குவரத்து நெரிசலால், நான் விமான நிலையத்தை ஐந்து நிமிடங்கள் தாமதமாகத்தான் அடைந்தேன். என்னை விமான நிலையத்துக்குள் அனுமதிக்கவில்லை, முதலில், நான் டிக்கெட் பணத்தை இழந்துவிட்டேன், வேலையை இழக்க நேரிடும் என்றும் நான் வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது, நன்றியோடு இருக்கிறேன்... பணம் போயிருக்கலாம். ஆனால் என் உயிர் காப்பாற்றப்பட்டது"என்று சவுகான் பிபிசியிடம் கூறினார்.
"நான் படிப்பிற்காக இங்கிலாந்து சென்று பகுதி நேரமாக வேலை செய்து கொண்டிருந்தேன். திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து எனது சொந்த ஊரான அங்கலேஷ்வருக்கு திரும்பி வந்தேன்," என்று கூறிய அவர், "நான் இங்கு ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்தேன். எனது விடுமுறை முடிந்துவிட்டதால் நான் மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது" என்று குறிப்பிட்டார்.
போக்குவரத்து நெரிசலால், இணையதளம் மூலம் விமானத்தில் செக்-இன் செய்ததாக பூமி கூறினார். ஆனால் விமானத்தில் ஏற அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
"நான் தாமதமாக வந்தேன் என்றும், குடிவரவு செயல்முறையும், போர்டிங்கும் முடிந்துவிட்டதனால் என்னால் விமானத்தில் ஏற முடியாது என்றும் ஏர் இந்தியா ஊழியர்கள் கூறினார்கள்,"
"நான் வேலையை இழந்துவிடக் கூடும், டிக்கெட் பணமும் போய்விடும் என்று பலமுறை கெஞ்சினேன். யாரும் கேட்கவில்லை. பணத்தைத் திரும்பக் கேட்டேன், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்."என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பின்னர். விமான நிலையத்திலிருந்து வெளியேறி, வழியில் டீ குடிக்க வண்டியை நிறுத்திய போது தான் அந்த விமானம் விபத்துக்குள்ளானது என்பதை பூமி உணர்ந்தார்.
"நாங்கள் டீ குடிக்கலாம் என்று வண்டியை நிறுத்தி, எங்கள் பயண முகவருடன் பணத்தை திருப்பி பெறுவது பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது தான் அங்கலேஷ்வரிலிருந்து, நான் ஏறவிருந்த விமானம் விபத்துக்குள்ளானது என்று அழைப்பு வந்தது," என்று பூமி கூறுகையில், அவரது குரல் அதிர்ச்சியில் நடுங்கியது. "நாங்கள் உடனே ஒரு கோவிலுக்குச் சென்று கடவுளுக்கு நன்றி கூறினோம்... ஆமதாபாத்தின் போக்குவரத்து நெரிசல்தான் என் உயிரைக் காப்பாற்றியது"என்றார் பூமி.
லண்டன் நோக்கி புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் குடிமக்கள், 7 போர்ச்சுகீசியர்கள் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒருவர் இருந்தனர். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் அந்த விமானத்தில் பயணித்தார்.
விபத்துக்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
உயிர் பிழைத்த அந்த நபர் பிரிட்டிஷ் குடிமகன் என்றும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"விமானம் புறப்பட்ட 30 விநாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது, பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. எல்லாம் மிக விரைவாக நடந்தது" என விஸ்வாஸ் கூறியதாக சில இந்திய செய்தி முகமைகள் தெரிவிக்கின்றன.
விஸ்வாஸ் குமார் ரமேஷ் அந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் 11A இருக்கையில் பயணம் செய்தார் என்று ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.