You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மேடே அழைப்பு என்றால் என்ன? ஆமதாபாத் விமான விபத்துக்கு முன் விமானி அதை குறிப்பிட்டது ஏன்?
ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வியாழக்கிழமை (ஜூன் 12) விபத்துக்குள்ளானது.
ஆமதாபாத்தில் உள்ள மேகானி நகர் என்ற குடியிருப்புப் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) தலைவர் ஃபைஸ் அகமது கித்வாய் ஏபி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
எக்ஸ் தளத்தில் விமான விபத்து நடந்ததை ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்பட மொத்தம் 242 பேர் விமானத்தில் இருந்ததாக அது கூறியது.
ஃப்ளைட் ரேடார் 24 என்னும் விமான கண்காணிப்பு தளத்தின்படி, விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஆகும். அதன் பதிவு எண் VT-ANB. இந்த போயிங் 787 மாடல் 14 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
தரவுகள் காட்டுவது என்ன?
விமானம் புறப்படும்போது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய பிபிசி வெரிஃபை விமான கண்காணிப்புத் தரவைச் சரிபார்த்தது.
விமானம் மதியம் 1:38 மணிக்கு ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டது.
விமானம் புறப்படுவதற்கு முன்பே ஓடுபாதையின் விளிம்புக்கு அது சறுக்கியதைத் தரவு காட்டுகிறது. கடைசி கண்காணிப்புப் புள்ளி, விமானம் தரையில் இருந்து 425 அடி (கடல் மட்டத்தில் இருந்து 625 அடி) உயரத்தில் இருப்பதைக் காட்டுகிறது.
விமான விபத்து மற்றும் அதன் பிறகு என்ன நடந்தது என்பதைக் காட்டும் ஆன்லைனில் பகிரப்பட்ட காணொளிகளையும் பிபிசி சரிபார்த்து வருகிறது.
விபத்து நடந்த நேரம்
விமான ரேடார் தரவுகளின்படி...
மதியம் 1:30 மணிக்கு விமானம் தரையில் இருந்தது, வேகம் பூஜ்ஜிய நாட்ஸ் (Knots- விமானங்களின் வேகத்திற்கான அலகு)
மதியம் 1:34 மணிக்கு, விமானம் இன்னும் ஓடுபாதையில்தான் இருந்தது, ஆனால் மெதுவாக நகர்ந்தது. அந்த நேரத்தில் விமானத்தின் வேகம் மணிக்கு 10 நாட்ஸ் (மணிக்கு 18.5 கிமீ).
விமானம் மதியம் 1:38 மணிக்குப் புறப்பட்டது. அது 174 நாட்ஸ் என்ற வேகத்தில் தரையில் 425 அடி உயரத்தை எட்டியது. அதன் பிறகு, விமானத்தில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை.
மேடே அழைப்பு
ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானதாக டிஜிசிஏ அறிவித்தது.
விமானத்தின் கேப்டனுக்கு 8,200 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளதாகவும், துணை விமானிக்கு 1,100 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளதாகவும் டிஜிசிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் ஆமதாபாத்தில் உள்ள ஓடுபாதை 23இல் இருந்து மதியம் 1:39 மணிக்குப் புறப்பட்டது.
புறப்பட்ட பிறகு, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு மேடே எனும் உயிருக்கு ஆபத்து இருப்பதைக் குறிக்கும் அவசர அழைப்பு வந்தது. ஆனால், அதன் பிறகு விமானத்தில் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை. விமான நிலைய எல்லைக்கு வெளியே விமானம் விபத்துக்குள்ளானது.
மேடே அழைப்பு என்றால் என்ன?
ஒரு விமானம் அவசர நிலையை எதிர்கொள்ளும்போது, அதன் விமானி மேடே அழைப்பை விடுப்பார். இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அவசரக்கால சமிக்ஞை. இந்த அழைப்பு ஒரு விமானம் சிக்கலில் இருப்பதைக் குறிக்கிறது.
'மேடே' என்ற சொல் பிரெஞ்சு வார்த்தையான 'மேடர் (Maider)' என்பதில் இருந்து உருவானது. இதன் பொருள் 'உதவி தேவை' என்பதாகும்.
விமானங்களைப் போலவே, படகுகளும் அவசரக்கால சூழ்நிலைகளில் இந்த அழைப்பைப் பயன்படுத்துகின்றன.
'மேடே' என்ற சொல் 1923 முதல் ஆங்கிலத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்கா 1927ஆம் ஆண்டில் இதை அதிகாரப்பூர்வமாக ரேடியோ அவசரநிலைகளுக்குப் பயன்படுத்தத் தொடங்கியது.
கட்டுப்பாட்டு அறை அல்லது கோபுரத்திற்கு நிலைமையின் தீவிரத்தை உணர்த்த, 'மேடே, மேடே, மேடே' என்று மீண்டும் மீண்டும் கூறப்படுவது வழக்கம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு