You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'30 விநாடிகளில் முடிந்துவிட்டது' - ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி கூறியது என்ன?
- எழுதியவர், ஆண்ட்ரே ரோடன்-பால்
- பதவி, பிபிசி நியூஸ்
ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிர் பிழைத்த அந்த நபர் பிரிட்டிஷ் குடிமகன் என்றும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் 11A இருக்கையில் இருந்த நபர் உயிர் பிழைத்ததாக, ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக், ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார். அந்த இருக்கையில் இருந்த பயணி பிரிட்டனை சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ், "விமானம் புறப்பட்ட 30 விநாடிகளில், ஒரு பெரிய சத்தம் கேட்டது. பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. அனைத்தும் மிக விரைவாக நடந்தது" என்று கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன.
அவர் தனது போர்டிங் பாஸை பகிர்ந்து கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. அதில் அவரது பெயர் மற்றும் இருக்கை எண் இடம் பெற்றுள்ளது.
ரமேஷின் சகோதரர் நயன் குமார் ரமேஷ், பிபிசியிடம் பேசுகையில், "தான் எப்படி உயிர் பிழைத்தோம் என்று விஸ்வாஸ் குமாருக்கே தெரியவில்லை" என்று கூறினார். ர்.
169 இந்தியர்கள் மற்றும் 52 பிரிட்டிஷ் குடிமக்கள் உட்பட மற்ற பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
நயன் மேலும் பேசும் போது "அவர் [விஸ்வாஸ் குமார் ரமேஷ்] நன்றாக இருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார், ஆனால் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த தனது மற்றொரு சகோதரர் அஜயைப் பற்றி அவர் கவலைப்பட்டார்.
"என்ன நடந்தது என்று கேள்விப்பட்டவுடன் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருந்தோம். வாயடைத்துப் போனேன்," என்று அவர் கூறினார்.
"அவர் [விஸ்வாஸ் குமார் ரமேஷ்] எப்படி உயிர் பிழைத்தார், எப்படி விமானத்திலிருந்து வெளியேறினார் என்று தெரியவில்லை. அவர் எங்களை அழைத்தபோது, 'அஜயைக் கண்டுபிடி, அஜயைக் கண்டுபிடி' என்பது போல, என் மற்ற சகோதரனைப் பற்றி அவர் அதிக கவலைப்பட்டார்."
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் ரமேஷ் ஒரு ஆம்புலன்ஸை நோக்கி நடந்து செல்கிறார். பின்னணியில் புகை மூட்டமாக இருந்தது. பின்னர் மருத்துவமனை படுக்கையில் இருந்த அவரை இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ரமேஷுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தவல் கமேட்டி, "அவரது உடல் முழுவதும் பல காயங்கள் இருந்தன. ஆனால் அவர் ஆபத்திலிருந்து மீண்டுவிட்டதாகத் தெரிகிறது" என்று கூறினார்.
அவர் தனது போர்டிங் பாஸைப் பகிர்ந்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன, அதில் அவரது பெயர் மற்றும் இருக்கை எண் காணப்பட்டது.
இந்தியாவில் பிறந்து 2003-ஆம் ஆண்டில் பிரிட்டனில் குடியேறிவிட்ட தொழிலதிபரான விஸ்வாஸ் குமார் ரமேஷூக்கு மனைவியும் நான்கு வயது மகனும் உள்ளனர்.
லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு கிளம்பிச் சென்ற விமானத்தில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் மருத்துவர்கள் தங்குமிடம் ஒன்றின் மீது மோதியது.
"இன்று காலை ஆமதாபாத்தில் நடந்த கோர விபத்தால் தாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக" பிரிட்டன் அரசரும் அரசியும் ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.
"இந்த பயங்கரமான துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்கிறோம், அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் செய்திக்காக காத்திருக்கிறார்கள்," என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரிட்டன் வெளியுறவுச் செயலர் டேவிட் லாமி இந்தியாவிலும் பிரிட்டனிலும் நெருக்கடிக் கால உதவிக் குழுக்களை ஏற்பாடு செய்துள்ளார்.
"பிரிட்டனை சேர்ந்தவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும். மேலும் FCDO (வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம்) பிரிட்டன் குடிமக்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் உதவி செய்வதற்காக உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து துரிதகதியில் செயல்பட்டு வருகிறது என்பதையும், டெல்லியிலும் லண்டனிலும் ஒரு நெருக்கடிக் கால உதவிக் குழுவை உருவாக்கியுள்ளது என்பதையும் நான் உறுதிப்படுத்த முடியும்" என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு