You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜூலை 1 முதல் ஆதார் கட்டாயம் - தட்கல் டிக்கெட் முறைகேடுகளை தடுக்க புதிய உத்தரவு என்ன?
இன்று (ஜூன் 12) தமிழ்நாட்டில் வெளியான செய்தித் தாள்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வெளியாகியுள்ள முக்கியச் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
ரயில் பயணிகள் தட்கல் டிக்கெட் எடுக்க ஜூலை 1-ம் தேதி முதல் ஆதார் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என்று இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"அவசரகால ரயில் பயணங்களுக்கு உதவ தட்கல் மற்றும் ப்ரீமியம் தட்கல் முன்பதிவு முறையைப் பயன்படுத்தலாம். மொத்த டிக்கெட்டுகளில் 30 சதவீதம் தட்கல் முறைக்கு ஒதுக்கப்படுகிறது. தட்கல் டிக்கெட்டை ரயில் நிலைய கவுன்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக பதிவு செய்யமுடியும்.
பெரும்பாலான ரயில்களில் தட்கல் முறையில் முன்பதிவு தொடங்கும் 5 நிமிடங்களுக்குள் டிக்கெட்கள் விற்பனையாகிவிடும். இதனால் பெரும்பாலான பயணிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
மேலும், தட்கல் முன்பதிவு முறையில் முறைகேடு நடப்பதாகவும், அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதாகவும் பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனடிப்படையில் 2.5 கோடி போலி கணக்குகளை ஐஆர்சிடிசி நீக்கியது.
இதற்கிடையே, பயணிகளுக்கு உதவும் வகையில் தட்கல் முன்பதிவு முறையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த 3-ம் தேதி அறிவித்தார்.
இதையடுத்து, தட்கல் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றங்களை ரயில்வே வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செல்போன் செயலியில் ரயில் பயணிகள் 'தட்கல்' டிக்கெட் எடுக்க ஜூலை 1-ம் தேதி முதல் ஆதார் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 15-ம் தேதி முதல் ஆதாருடன், ஓடிபி அடிப்படையிலான உறுதிப்பாடும் கட்டாயமாக்கப்படுகிறது.
ரயில் நிலைய கவுன்டர்களில் தட்கல் முன்பதிவு செய்வோர் மட்டுமின்றி, அங்கீகாரம் பெற்ற முகவர்கள், நேரடியாக செல்போன் மூலம் தட்கல் டிக்கெட் பெறுவோரும், செல்போனுக்கு அனுப்பப்படும் ஓடிபியை உறுதிப்படுத்திய பின்பே தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.
மேலும், ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் தட்கல் முன்பதிவு தொடங்கும் நேரத்தில் முதல் 30 நிமிடங்கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். அதன்படி, குளிர்சாதனப்பெட்டிகளில் காலை 10 முதல் 10:30 மணி வரையும், இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுக்கு காலை 11 முதல் 11:30 மணி வரையும் பொதுமக்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்'' என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவு விநியோக ஊழியர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வுக்கூடம்
"சென்னை மாநகராட்சி சார்பில் உணவு விநியோகம் செய்யும் ஊழியர்களுக்காக அதி நவீன குளிரூட்டப்பட்ட ஓய்வுக்கூடம் அண்ணா நகரில் அமைக்கப்பட்டுள்ளது," என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் ஊழியர்கள் மழை, வெயில் உள்ளிட்ட கடினமான சூழல்களிலும் தங்களது உணவு விநியோக சேவையைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்த ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பெண்கள் உள்ள நிலையில், அவர்களுக்கான கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் பல்வேறு இடங்களில் கிடைப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசின் 2025 -2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இணையம் சார்ந்த சேவைப் பணி ஊழியர்களுக்கென அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன குளிரூட்டப்பட்ட ஓய்வுக்கூடம் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், சென்னை மாநகராட்சி சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்பில் அண்ணா நகர் 3-ஆவது நிழற்சாலையில் குளிரூட்டப்பட்ட அதிநவீன ஓய்வுக் கூடம் அமைக்கப்பட்டு புதன்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 600 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள ஓய்வுக்கூடத்தில் குடிநீர் வசதி, 6 சார்ஜிங் பாய்ண்ட்கள், ஒரே நேரத்தில் 25 பேர் வரை அமரும் வகையில் இருக்கைகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
வரவேற்பைப் பொருத்து நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தியாகராய நகர் போன்ற பகுதிகளிலும், இதேபோல் குளிரூட்டப்பட்ட கூடங்கள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,"என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு