You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போயிங் விமானங்களில் தரமற்ற உதிரி பாகமா? மீண்டும் வெளிச்சம் பெறும் முன்னாள் ஊழியரின் குற்றச்சாட்டு
- எழுதியவர், ஜொனாதன் ஜோசப்ஸ்
- பதவி, வணிகச் செய்தியாளர்
ஆமதாபாத்திலிருந்து புறப்பட்ட 30 விநாடிகளில் விழுந்து நொறுங்கிய விமானம் போயிங் 787, ட்ரீம்லைனர் வகையை சார்ந்தது.
போயிங் 787 வகை விமானம் விபத்துக்குள்ளாவது இது முதல் முறை.
அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் இந்த மாடலை 14 வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது.
உலகின் வெவ்வேறு விமான நிறுவனங்களிடம் 1,175-க்கும் மேற்பட்ட 787 வகை விமானங்கள் இருப்பதாக அந்த தருணத்தில் போயிங் நிறுவனம் தெரிவித்தது.
போயிங் விமான நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கடந்த 14 ஆண்டுகளில் இந்த ரக விமானம் ஒரு பில்லியன் பயணிகளின் போக்குவரத்துத் துணையாக இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் 50 லட்சம் முறை மேற்கொண்ட பயணங்களின் மூலம் இந்த சாதனை சாத்தியமானது என்றும் தெரிவித்திருந்தது.
தனது 737 வகை விமானங்கள் மூலம் ஏற்பட்ட விபத்துகள் உட்பட்ட பல்வேறு பிரச்னைகளுடன் போராடி வரும் போயிங் நிறுவனத்திற்கு 787 ட்ரீம்லைனர் நொறுங்கியது ஒரு மிகப்பெரிய இடியாக அமைந்துள்ளது.
நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஓராண்டைக் கடந்துள்ள கெல்லி ஓர்ட்பெர்கிற்கு இது மற்றுமொரு சோதனை.
கடுமையான சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் போயிங் நிறுவனத்தின் எதிர்காலம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு காண்பதற்காக அவர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.
ஏர் இந்தியா போயிங் 787-8-ன் சிறப்பு அம்சங்கள்
போயிங் 787-8 விமானம் ஏர் இந்தியாவிடம் 2014-ல் சேர்ந்தது. அதில் மொத்தமாக 256 இருக்கைகள் உள்ளன.
அதன் நீளம் 57 மீட்டர், அகலம் (இரண்டு இறக்கைகளின் நுனிகளுக்கு இடையிலான தூரம்) 60 மீட்டர் மற்றும் அதன் உயரம் 17 மீட்டர்
விமானத் தயாரிப்பில் முறையான தர நிலைகளை பின்பற்றுவதில்லை என போயிங் நிறுவனத்தின் மீது அதன் முன்னாள் ஊழியரான ஜான் பர்னெட் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அந்த நிறுவனத்தில் 32 வருடங்கள் பணி புரிந்த பின்னர் அவர் 2017ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார். போயிங் நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் அவர் பல ஆதாரங்களை கொடுத்தார்.
சில நாட்கள் கழித்து, 2024ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பர்னெட் தனக்குதானே விளைவித்துக்கொண்ட காயங்களால் உயிரிழந்தார்.
ஆமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளானதும் போயிங் நிறுவனப் பங்கு மதிப்பு 4.32 சதவீதம் சரிவை சந்தித்தது.
தயாரிப்பு குறைபாடுகள் குறித்த குற்றச்சாட்டுகள்
வடக்கு சார்ல்ஸ்டன் தொழிற்சாலையில் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருந்த போது ஜான் பர்னெட் அங்கு தரக் கட்டுப்பாட்டு மேலாளராக இருந்தார்.
தயாரிப்புப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் கடும் அழுத்தத்தில் இருந்ததாகவும், தரம் குறைவான உதிரி பாகங்களை விமானங்களில் பொருத்தியதாகவும் அவர் பிபிசியிடம் 2019ஆம் ஆண்டு தெரிவித்தார்.
விமானத்தின் ஆக்சிஜன் அமைப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகவும், நான்கில் ஒரு ஆக்சிஜன் முகக்கசவம் அவசர காலத்தில் வேலை செய்யாத நிலையில் இருக்கலாம் என்றும் பர்னெட் எச்சரித்திருந்தார். 787 ரக விமானத்தில் நிறுவப்பட்ட அவசர கால ஆக்சிஜன் அமைப்பு பரிசோதிக்கப்பட்டபோது 25 விழுக்காடு தோல்வியடைந்ததாக அவர் கூறினார்.
தெற்கு கரோலினாவில் தயாரிப்பு பணிகள் தொடங்கிய பிறகு விமானங்களை வேகமாக தயாரிக்கும்படி தொழிலாளர்கள் மீது அழுத்தம் அதிகரிக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக அவர்கள் தயாரிப்பு முறையிலும், பாதுகாப்பு அம்சங்களிலும் சமரசம் செய்துகொள்ள நேர்ந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
பர்னெட் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் ஆய்வு செய்தபோது அவற்றில் சில உண்மையானவை என்று உறுதி செய்யப்பட்டன,
குறைபாடான உதிரிபாகங்களும் உபகரணங்களும் நிறுவனத்திலிருந்து காணாமல் போன பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி போயிங் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.
பர்னெட்டின் குற்றச்சாட்டுகளை போயிங் நிறுவனம் மறுத்தது.
சில ஆக்சிஜன் சிலிண்டர்கள் முறையற்ற வகையில் அனுப்பப்பட்டு அவை விமானங்களில் நிறுவப்பட்டன என கூறப்பட்ட குற்றச்சாட்டில் உண்மையில்லை என விநியோக நிறுவனம் விளக்கம் (2017-ல் ) அளித்தது.
இதற்கிடையே கடந்த வருடம் ஜனவரி மாத தொடக்கத்தில் போர்ட்லாண்ட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட புதிதாக தயாரிக்கப்பட்ட போயிங் 737 மேக்ஸ விமானத்தின் அவசர கால வழியின் கதவு புறப்பட்ட சிறிது நேரத்தில் தனியாக பிரிந்து சென்றது.
தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு தரங்களை உறுதி செய்ய தவறிவிட்டதாக போயிங் நிறுவனத்தின் மீது கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு