போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா கைது - காவல்துறை வெளியிட்ட தகவல்கள்

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

போதைப் பொருளைப் பயன்படுத்தியதான குற்றச்சாட்டில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீகிருஷ்ணா கெவின் என்பவரிடம் இருந்து போதைப்பொருளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் உடையவர் என்றும் அதை அவர் நண்பர்களுடன் இணைந்து, பகிர்ந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவராக இருக்கிறார் என்றும் சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், "போதைப்பொருள் உட்கொள்பவருடன் வாட்ஸ்ஆப் குழுக்களில் இணைந்து அது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களில், போதைப்பொருள் உட்கொள்ளும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றைப் பகிர்ந்துள்ளார்," என்றும் கூறப்பட்டுள்ளது.

இவர்களுடைய வங்கி பணப் பரிவர்த்தனை மற்றும் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள், விசாரணை சாட்சியங்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள் அடிப்படையில் ஸ்ரீகிருஷ்ணா, கெவின் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை கூறுவது என்ன?

மேலும், ஸ்ரீகிருஷ்ணா கைது செய்யப்பட்டது குறித்து, சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னையின் நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இரவு விடுதியில் கடந்த மே 22ஆம் தேதியன்று மது அருந்தச் சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்களின் காரணமாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் ஒரு வழக்கில் ஒருவரும் இரண்டாவது வழக்கில் ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரதீப்குமார், கானா நாட்டைச் சேர்ந்த ஜான், பிரசாத் மற்றும் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, போதைப்பொருட்கள் வாங்கி, பயன்படுத்தி, விற்பனை செய்யும் கெவின் என்பவரும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணையின் பேரில் ஜெஸ்வீர் என்கிற கெவின் இன்று (ஜூன் 26) கைது செய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்து கொகைன், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள், ரூ. 45,200 பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை நகரக் காவல்துறையால் திங்கட்கிழமையன்று கைதுசெய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போதைப் பொருள் விற்பனை செய்தது தொடர்பாக, ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி டி. பிரசாத் அளித்த தகவலின் பேரில் ஸ்ரீகாந்த் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

கொக்கெய்ன் என்ற போதைப் பொருளை வாங்கியது தொடர்பாக ஜூன் 23ஆம் தேதி நடிகர் ஸ்ரீகாந்தை விசாரணைக்காக அழைத்தது நுங்கம்பாக்கம் காவல்துறை. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் நாள் முழுக்க விசாரணை நடத்தப்பட்டது. இதற்குப் பிறகு அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து எழும்பூர் 14வது பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜூலை 7ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. பிரபல நடிகர் ஒருவர், போதைப் பொருள் பயன்பாடு தொடர்பாக கைதுசெய்யப்பட்டது அரசியல், திரையுலகு என பல இடங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி?

இவ்வளவு பெரிய அளவில் இந்த விவகாரம் வெடிப்பதற்குக் காரணமாக அமைந்தது நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மது பாரில் கடந்த மே மாதம் நடந்த ஒரு மோதல்தான். மே மாதம் 22ஆம் தேதி திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளரான ராஜா என்பவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் மதுபானம் அருந்த வந்திருக்கிறார். அப்போது அங்கே, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் ஒருவருக்கும் ராஜாவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து பார் நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. இந்த நிலையில், ராஜாவுக்கு ஆதரவாக சிலர் காவல் நிலையத்திற்கு வந்து, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கூறினர்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டிய காவல்துறை, மே 29ஆம் தேதி மைலாப்பூரைச் சேர்ந்த டி. பிரசாத் (33), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர். கணேஷ்குமார் (42), வடபழனியில் உள்ள சின்ன போரூரைச் சேர்ந்த ஜி. தனசேகர் (29), பனையூரைச் சேர்ந்த டி. அஜய் ரோகன் (36), சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான நாகேந்திரசேதுபதி என்ற சுனாமி சேதுபதி (33) ஆகியோர் தேனியில் வைத்து கைதுசெய்யப்பட்டனர். இதற்குப் பிறகு ராஜா, சந்தோஷ் என்ற இருவரும் புனேவில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடந்த விசாரணையில் பிரசாத் ஏற்கனவே சில மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இந்த மோசடிகளில் அவருக்குத் துணையாக இருந்த காவல்துறை துணை ஆய்வாளர் மணிகுமார் என்பவரும் காவலரான செந்தில்குமார் என்பவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இதற்கிடையில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ANIU) அளித்த தகவல்களின் அடிப்படையில் சேலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற ப்ராடோ என்பவரை நுங்கம்பாக்கம் காவல்துறை சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஜூன் 17ஆம் தேதி கைதுசெய்தது. அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவர் ஜூன் 18ஆம் தேதி ஓசூரில் கைதுசெய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 11 கிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது.

பிரதீப்பிடம் நடத்திய விசாரணையில், தான் பிரசாதிற்கு போதைப் பொருள்களை சப்ளை செய்ததாகவும் அவர் அதனை நடிகர் ஸ்ரீகாந்திற்கு கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். சுமார் 40 முறை இதுபோல வாங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பின்னணியில்தான் ஸ்ரீகாந்த்தை அழைத்து விசாரித்த நுங்கம்பாக்கம் காவல்துறை, விசாரணைக்குப் பிறகு அரசு மருத்துவமனையில் போதைப் பொருள் சோதனைக்கு உட்படுத்தியது. அதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில், கைதுசெய்யப்பட்டு அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படையாகப் பேச காவல்துறை அதிகாரிகள் மறுக்கின்றனர்.

பிரதீப்பிடம் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இன்னொரு நடிகருக்கும் காவல்துறை விசாரணைக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

கேரள திரையுலகில் போதைப்பொருள் தொடர்பான சர்ச்சை

திரை நட்சத்திரங்கள் போதைப் பொருளைப் பயன்படுத்துவது என்பது இந்தியாவின் பல மாநிலங்களில் பெரும் சிக்கலான விவகாரமாகவே இருந்துவருகிறது. கடந்த ஏப்ரல் மாத மத்தியில் கொச்சியின் காலூர் பகுதியில் ஒரு ஹோட்டலில் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நடவடிக்கைக் குழு ஒரு அதிரடி சோதனையை நடத்தியது. அப்போது அந்த ஹோட்டலில் இருந்து ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவரை எர்ணாகுளம் டவுன் வடக்கு காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்திய கொச்சி நகரக் காவல்துறை, அவரைக் கைதுசெய்தது. பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, மலையாள திரைத்துறையின் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், விநியோகிஸ்தர்களை அழைத்து போதைப் பொருள் பரவல் குறித்து கூட்டம் நடத்தவிருப்பதாக அம்மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி மனோஜ் ஆபிரகாம் ஊடகங்களிடம் தெரிவித்தார். அதற்குச் சில நாட்களுக்கு முன்பாக ஆழப்புழாவில் ஒரு காரை கலால் துறையினர் சோதனையிட்டபோது, அந்தக் காரில் இருந்து ஹைபிரிட் கஞ்சா பிடிபட்டது. இது தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த கஞ்சா பிடிபட்ட பிறகு, இது தொடர்பாக திரைத்துறையினர், தொலைக்காட்சி நடிகர்கள், மாடல்கள் ஆகியோரிடம் கலால் வரித் துறையினர் விசாரணை நடத்தினர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு