You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தி பாடல்களை ஆராதித்த ரசிகர்களை ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமா பக்கம் ஈர்த்த 'இசைராஜா'
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த ஐம்பதாண்டுகளில், தமிழ்த் திரையிசையில் இளையராஜா தொட்டிருக்கும் உயரங்கள் இதுவரை யாரும் தொடாத ஒன்று. தமிழ்த் திரையுலகில் அவர் ஏன் ஒரு மகத்தான சாதனையாளர்?
தமிழ்த் திரையுலகில் எம்.எஸ். விஸ்வநாதனின் தீவிரம் குறைய ஆரம்பித்த 1970களில், இந்தித் திரைப்படப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருந்த காலகட்டம். 'தம் மரோ தம்' (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா), "ப்யார் திவானா ஹோதா ஹை" (கடி பதங்), 'சுரா லியா ஹை தும்னே ஜோ தில் கோ' (யாதோங் கி பாரத்) போன்ற பாடல்களின் மூலம் ஆர்.டி. பர்மன் தமிழ் மனங்களைக் கொள்ளை கொள்ள ஆரம்பித்திருந்த நேரம். தமிழ்த் திரையுலகிலும் பல மறக்க முடியாத பாடல்கள் வெளிவந்துகொண்டிருந்தாலும், சட்டென ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக ஏதும் இல்லை.
இந்த நிலையில்தான் 1976ஆம் ஆண்டில் அன்னக்கிளி திரைப்படம் வெளிவந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள், தமிழ்நாட்டின் திரைப்பட ரசனையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின.
ரசிகர்களை கட்டிப்போட்ட 'அன்னக்கிளி'
அந்த காலகட்டத்தில் இந்த மாற்றம் எப்படியானதாக இருந்தது என்பதை, ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய 'தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம்' நூலில், இளையராஜா பற்றிய ஒரு கட்டுரையில், பேராசிரியர் ஒருவர் நினைவுகூர்ந்திருந்தார்.
"நாங்கள் அப்போது தீவிர தமிழ் உணர்வோடு இருந்தோம். இந்தி எதிர்ப்புணர்வு கொண்டவர்கள். ஆனால், பாடல்கள் கேட்பதென்றால் இந்திப் பாடல்கள்தாம். தஞ்சாவூரில் நாங்கள் இருந்த பகுதியில் என் வயதைச் சேர்ந்தவர்கள் வழக்கமாகக் கூடும் டீக்கடையில் இந்திப் பாடல்களே போடுவார்கள். நாங்கள் அவற்றின் ரசிகர்கள்.
திடீரென ஒரு நாள் அலைபோல, 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே' என்ற பாடல் வந்தது. அன்னக்கிளி படம் வந்து ஒரு சில நாட்கள் ஓடிய பின் எடுத்துவிட்டார்கள். ஆனால், பாடல்கள் பிரபலமானதையொட்டி, அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் திரையிட்டார்கள். படம் நூறு நாட்களைத் தாண்டியது.
இப்பாடல்கள் வந்த பிறகு ஒரே நாளில் இந்திப் பாடல்களைவிட்டு, தமிழ்ப் பாடல்களைக் கேட்கும் பழக்கத்துக்கு மாறிப்போனோம், அந்த அளவுக்கு அப்பாடல்கள் மாற்றத்தைக் கொண்டுவந்தன" என அந்தப் பேராசிரியர் கூறியிருந்தார்.
அன்னக்கிளி படத்தைப் பொறுத்தவரை, 70களுக்கே உரிய வழக்கமான கதையைக் கொண்ட திரைப்படம் அது. ஆனால், அந்தப் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தை வேறு தளத்தில் நிறுத்தின.
"எதிர்பார்க்கக்கூடிய சம்பவங்களைக் கொண்ட வழக்கமான இந்தத் திரைப்படத்தில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத்தக்கதாக இருந்தன. ஒன்று, இந்தப் படம் முழுக்க முழுக்க தெங்குமரகடா என்ற அழகிய கிராமத்தில் படமாக்கப்பட்டிருந்தது. செட் ஏதும் போடப்படாமல், இருந்ததால் அந்த நிலப்பரப்பை அப்படியே திரையில் கொண்டுவந்தது இந்தப் படம்.
இரண்டாவதாக, இளையராஜா என்ற இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தியது. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'அன்னக்கிளி உன்னைத்தேடுதே' என்ற பாடல் வெளிவந்த சில வாரங்களிலேயே தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெங்கும் எதிரொலிக்க ஆரம்பித்தது. இந்தப் படத்தின் பாடல்கள், அடுத்த சில ஆண்டுகளுக்கு மிகப் பிரபலமாக இருந்தன," என தன்னுடைய The Eye of the Serpent நூலில் குறிப்பிடுகிறார் பிரபல திரைப்பட ஆய்வாளரான தியோடர் பாஸ்கரன்.
இந்தப் படம் இளையராஜாவுக்கு மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகுக்கே ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழ்த் திரையிசையின் அசைக்க முடியாத நாயகனாக உருவெடுத்தார் இளையராஜா. ஒரு இசையமைப்பாளரின் அன்னக்கிளிக்குக் கிடைத்த வெற்றியால், இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இளையராஜாவை நோக்கிப் படையெடுக்க, அடுத்த சில ஆண்டுகளுக்கு நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்துக் குவித்தார் இளையராஜா. 1979ஆம் ஆண்டில் மட்டும் 29 படங்கள் அவரது இசையில் வெளிவந்தன.
மௌனத்தை ரசிக்க வைத்த ராஜா
இந்த காலகட்டத்தில் இளையராஜாவின் இசை இருந்தால் போதும், படம் வெற்றிப் படமாகிவிடும் என்ற நிலை உருவாகியது. 70களிலும் 70களிலும் பிரபலமாக இருந்த இயக்குனர் மகேந்திரன் இதற்கு சில உதாரணங்களை தன்னுடைய 'சினிமாவும் நானும்' கட்டுரையில் சொல்கிறார்.
அதாவது, ரஜினிகாந்த் நடித்த 'முள்ளும் மலரும்' படத்துக்கு பின்னணி இசையைச் சேர்ப்பதற்கு முன்பாக, படத்தை பார்த்த தயாரிப்பாளர்கள் மகேந்திரனைத் திட்டித் தீர்த்துவிட்டனராம். இதற்குப் பிறகு இளையராஜாவின் பின்னணி இசை சேர்க்கப்பட்டு, படம் ரிலீஸானதும் மாபெரும் வெற்றிபெற்றது. இதற்குப் பிறகு, தொகையைக் குறிப்பிடாமல் காசோலையை எழுதி மகேந்திரனிடம் கொடுத்தார்களாம் தயாரிப்பாளர்கள்.
படத்தின் வெற்றிக்குக் காரணமே இளையராஜாதான் என்கிறார் மகேந்திரன். அதேபோல, 'உதிரிப்பூக்கள்' படத்துக்கு அவரது இசை கிடைத்திருக்காவிட்டால் அது எதிரிப்பூக்களாகியிருக்கும் என்கிறார் அவர்.
"முள்ளும் மலரும் தொடங்கி எனது படங்களை எல்லாம் நீங்கள் மனதார உணர்ந்து, நுகர்ந்து பாராட்டுவதற்கு உண்மையான காரணம் இளையராஜாதான். என் மனம் எண்ணியதையெல்லாம் பார்வையாளனிடம் இசை அலைகளாகக் கொண்டுபோய் சேர்த்தவர் இளையராஜா. அவரது உன்னத இசைப் புலமை உதவியிராவிட்டால், எனது படங்களின் மௌனத்தை நீங்கள் ரசித்திருக்கவே முடியாது" என்கிறார் மகேந்திரன்.
ஐந்து ஆண்டுகளில் 100 படங்கள்
ஒரே நேரத்தில் பல படங்களுக்கு இசையமைத்தாலும், இதில் பெரும்பாலான பாடல்கள் மனதைக் கவரும் வகையில் இருந்தன. படத்திற்கு ஒரு பாடலாவது எல்லோரும் முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது. 1975ல் அறிமுகமான இளையராஜா, 1980லேயே 100 படங்களுக்கு இசையமைத்துவிட்டார். பாலுமகேந்திராவின் மூடுபனிதான் அவரது நூறாவது படம். 1983ல் 200வதுபடமான ஆயிரம் நிலவே வா வெளியானது. 1989 - 90ல் ஐநூறு படங்களுக்கு இசையமைத்து முடித்திருந்தார் இளையராஜா. 2016ல் அவரது 1000வது படமாக தாரை தப்பட்டை படம் வெளியாது. இந்தப் படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது, அறிமுகமாகி நாற்பதாண்டுகளுக்குப் பிறகும் அவரது இசையில் நீடித்துவரும் உன்னதத்தைக் காட்டுவதாக இருந்தது.
படம் ஓடும் தியேட்டருக்கு வெளியே நின்றபடியே அவரது பின்னணி இசையின் மூலம், "இதோ இங்கே அந்தக் கதாபாத்திரம் வருகிறது... அந்த. இருவர் இப்போது சந்திக்கிறார்கள்... இந்த இசையின்போது அந்த கேரக்டரின் மெளனம் திரையில் வருகிறது..." என்று நம்மை உணர வைக்கும் அசாத்திய இசை ஆளுமை ராஜாவினுடையது. இளையராஜாவுக்கு முன்னும் பின்னும் எத்தனையோ இசைமேதைகள் திரையுலகில் கோலோச்சினர். ஆனால், பின்னணி இசையில் இளையராஜாவுக்கு மட்டுமே ஒரு தனித்துவம் உள்ளது. அது அவருக்கே உரித்தான சிம்மாசனம். அவரைத் தவிர வேறு யாரும் அதில் அமர முடியாது எனக் குறிப்பிடுகிறார் மகேந்திரன்.
இசையில் மறுமலர்ச்சி
திரையிசையின் மறுமலர்ச்சி நாயகனாக அவர் அறியப்படுவதற்கு மற்றுமொரு காரணம் "அரண்மனைகளிலும் அக்ரஹாரத்திலும் இருந்த தமிழ் சினிமா அவர் காலத்தில் கிராமத்தை நோக்கிக் கிளம்பியதுதான். கண்ணுக்கெட்டும் தூரம்வரை நிலப்பரப்பைக் காட்டும் கேமராக்களும் கலர் ஃபிலிம்களும் அதிகப் பயன்பாட்டுக்கு வந்தபோது அதற்குரிய இசையை இளையராஜா வைத்திருந்தார்" என்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி.
இது குறித்து பிபிசியிடம் பேசிய யுகபாரதி, தமிழ் மீது அவருக்கு இருந்த புலமை அதற்கு முக்கியமான காரணம் என்கிறார் அவர். "தமிழின் பிரபல இசையமைப்பாளர்களில் பலர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இல்லை. ஆனால் இளையராஜா தமிழின் வளமான சந்தக் கட்டுமானத்தை உள்வாங்கியவர். தமிழ் நிலப்பரப்போடு நேரடிப் பரிச்சயம் கொண்டவர். இதனால்தான் இளையராஜாவின் இசை தமிழரின் இசையாக மலர்ந்தது" என்று கூறும் யுக பாரதி, எளிய சந்தங்களையும் மக்களின் வழக்கில் உள்ள வார்த்தைகளையும் பாடல்களில் தந்தவர் இளையராஜா என்கிறார்.
"60களின் துவக்கத்தில் வெளிவந்த குலமகள் ராதை திரைப்படத்தில், உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, என்னைச் சொல்லிக் குற்றமில்லை என்று ஒரு பாடல் இருக்கிறது. அதே போன்ற பாடல், இளையராஜாவின் இசையில் வரும்போது 'உன் குத்தமா, என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல' என்று மாறிவிடுகிறது. அதேபோல, அருணகிரி நாதரின் 'ஏறுமயிலே ஏறி விளையாடும் முகம் ஒன்று, ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று' என்ற சந்தம், இளையராஜாவின் இசையில் 'மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு' என்று மாறிவிடுகிறது. அதாவது, செவ்வியல் சந்தங்களை மக்கள் வழக்கில் உள்ள சந்தங்களாக மாற்றினார் இளையராஜா." என்கிறார் யுகபாரதி
இதே கருத்தை எதிரொலிக்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம். "இளையராஜா பொதுவாக மெலடி, காதல், சோகப் பாடல்களுக்காக சுட்டிக்காட்டவும் பாராட்டவும் படுகிறார். ஆனால், அவரிடம் இயல்பாகவே ஒரு நாட்டுப்புற மரபும் எளிமையும் உண்டு.
இளையராஜா தமிழ் சினிமாவுக்கு வந்த பிறகுதான் மாற்றம் என்பது இசையில் மட்டுமில்லாமல், பாடல்களிலும் தென்பட ஆரம்பித்தது. எளிமையான வார்த்தைகள், நேரடித்தன்மை கொண்ட பாடல்கள் இவரது வருகைக்கு பின் தமிழ் சினிமாவில் அதிகம் தென்பட ஆரம்பித்தது. இளையராஜாவும் அவரது சகோதரர் பாவலர் வரதராஜனும் இடதுசாரி மேடைகளில் எளிய, பிரசாரத்தன்மை கொண்ட பாடல்களைப் பாடியவர்கள்.
இளையராஜா திரைப்படங்களுக்கு இசையமைக்கத் துவங்கியபோது அந்த அம்சம் வெளிப்பட ஆரம்பித்தது. அப்படி நேரடித் தன்மை கொண்ட பல பாடல்களை இளையராஜாவின் இசையில் எழுதியவர் அவரது சகோதரரான கங்கை அமரன் என்பதும் இதில் குறிப்பிடத்தக்க அம்சம்" என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
மொழிப் பார்வை
இளையராஜாவைப் பொறுத்தவரை, மொழிசார்ந்த பார்வையும் கூர்மையாக இருந்ததால் தமிழ் வார்த்தைகளைச் சிதைக்காத அளவில் அவரால் இசையமைக்க முடியும். பாபநாசம் சிவனுக்குப் பிறகு இளையராஜாவுக்குத்தான் சந்தங்களுடன் செய்யுள் இயற்றும் ஆற்றல் இருந்ததாகக் கருதுகிறேன் என்கிறார் யுகபாரதி. மேலும் ஒரு ராகத்தை எப்படியெல்லாம் பாடலாக மாற்ற முடியும் என்பதில் அவர் யாரும் அடைய முடியாத உயரங்களை அடைந்திருந்தார் என்கிறார் யுகபாரதி. இது தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் நினைவுகூர்கிறார் அவர்.
"ஒரு படத்திற்காக பாடல் எழுத வேண்டியிருந்தது. மூன்று ட்யூன்கள் அடங்கிய கேஸட்டை என்னிடம் கொடுத்து, மூன்றாவது ட்யூனுக்கு பாட்டெழுதும்படி சொல்லப்பட்டது. நானும் எழுதிவிட்டேன். அடுத்த நாள் இளையராஜாவை பாடலுடன் போய்ப் பார்த்தேன். அவர் பாடல் ஒலிப்பதிவுக்காக சேர்ந்திசைக் குழுவுடன் தயாராக இருந்தார். பிறகு பாடலை வாசித்துப் பார்த்தவர், அது ட்யூனுடன் பொருந்தவில்லையே என்றார். எனக்குக் குழப்பமாகிவிட்டது.
பிறகுதான் நேர்ந்த குழப்பம் புரிந்தது. அதாவது, கேஸட்டை என்னிடம் கொடுத்தவர், இரண்டாவது ட்யூனுக்கு பாட்டெழுத வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக மூன்றாவது ட்யூனுக்கு எழுத வேண்டும் என்று சொல்லிவிட்டார். இதனை இளையராஜாவிடம் விளக்கிவிட்டு, இரண்டாவது ட்யூனுக்கு நாளை எழுதிவருவதாகச் சொன்னேன். ஆனால், இளையராஜா என்னைக் கையமர்த்தினார். பிறகு உள்ளே சென்று தனது இசைக் குழுவினரிடம் சில மாற்றங்களைச் சொன்னார். பிறகு நான் எழுதிவந்த பாடலையே, இரண்டாவது ட்யூனில் பொருத்தினார்.
அதாவது அவரைப் பொறுத்தவரை எல்லா இசையும் ஒன்றுதான். கேட்பவர்களுக்குத்தான் அது வேறு,வேறு. இந்த சம்பவத்தை நேரில் பார்க்காவிட்டால் யாராலும் நம்பவே முடியாது" என்கிறார் யுகபாரதி. அழகர்சாமியின் குதிரை படத்தில் இடம்பெற்ற "பூவைக் கேளு, காத்தைக் கேளு" என்ற பாடல்தான் அது.
திரையிசையைத் தவிர்த்து, இளையராஜா மேற்கொண்ட, தனியான ஆல்பங்கள், சிம்பனி உள்ளிட்ட பிற முயற்சிகளும் கவனிக்கத்தக்கவைதான். ஆனால், கடந்த அரை நூற்றாண்டாக தமிழ் பேசும் ஒவ்வொருவரது காதலிலும் சோகத்திலும் பிரிவிலும் மகிழ்ச்சியிலும் கேட்க சில இளையராஜா பாடல்களாவது உண்டு. இது வேறு யாரும் நிகழ்த்தாத சாதனை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு