You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஞானசேகரனுக்கு ஆயுள் சிறை: அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஞானசேகரன் குறைந்தது 30 ஆண்டுகள் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்றும் அதற்குப் பிறகே, அவரது விடுதலை குறித்து பரிசீலிக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என கடந்த மே 28ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் மீது சாட்டப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக அறிவித்த நீதிபதி எம். ராஜலட்சுமி, தண்டனை விவரங்கள் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி, தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன.
எந்தெந்த பிரிவுகளின் கீழ் தண்டனை?
ஞானசேகரன் மீது பிஎன்எஸ் சட்டத்தின் சட்டப்பிரிவுகள் 329 (விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்), (சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்), 87 (வலுக்கட்டாயமாக கடத்தி சென்று ஆசைக்கு இணங்க வைத்தல்), 127(2) - (உடலில் காயத்தை ஏற்படுத்துதல்), 75(1)(2)(3) ( பாலியல் வன்கொடுமை செய்தல்), 76 (கடுமையாக தாக்குதல்) 64(1) (பாலியல் ரீதியாக துன்புறுத்துதல்), 351(3) (கொலை மிரட்டல் விடுத்தல்) 238(B) (பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்) ஆகியவற்றின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66(இ) (தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல்), தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் பிரிவு 4 என மொத்தம் 11 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் தண்டனை விவரங்கள் தனித்தனியாக அறிவிக்கப்பட்டன.
அதில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 64-1ன் கீழ் பாலியல் துன்புறுத்தல் பிரிவின் அடிப்படையில் ஞானசேகரனுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
329 (விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்) என்ற பிரிவின் கீழ் 3 மாதங்களும் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் (126 (2)) என்ற குற்றத்திற்கு ஒரு மாதமும் உடலில் காயத்தை ஏற்படுத்துதல் (127(2)) என்ற குற்றத்திற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமைக்கு (75(1)(2)(3)) மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் கடுமையாக தாக்குதல் (பிரிவு 76) என்ற குற்றத்திற்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல் விடுத்தல் (351(3)) என்ற குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் பாலியல் குற்றம் தொடர்பான ஆதாரங்களை அழித்தல் (238(B)) குற்றச்சாட்டில் 3 ஆண்டு சிறையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
தீர்ப்பு பற்றி வழக்கறிஞர்கள் கருத்து
தண்டனை விவரங்கள் வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி, இது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்று குறிப்பிட்டார். "குற்றவாளிக்கு 30 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி. இந்தக் குற்றச்சாட்டிற்கு இதுதான் அதிகபட்ச தண்டனை. அது வழங்கப்பட்டுள்ளது. எந்தச் சலுகையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதான் முக்கியமானது. இந்த வழக்கில் யாருமே பிறழ் சாட்சியாகவில்லை. பெண்கள் தங்களுக்கு குற்றமிழைக்கப்பட்டால் துணிந்து புகார் அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
ஞானசேகரன் தரப்பின் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பிஎன்எஸ் 64/1 பிரிவின் கீழ் 30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது அவரது அடிப்படை உரிமைக்கு எதிரானது. இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். தண்டனையின் முழுவிவரம் கிடைத்த பிறகு மேல் முறையீடு செய்வோம்" எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கில் வேறு யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்களா?
இந்த வழக்கில் வேறு சிலரும் சம்பந்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், இதில் வேறு யாரும் சம்பந்தப்படவில்லையென தடயவியல் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். "இன்னொரு நபர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா என சில விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இது குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். குற்றம்சாட்டப்பட்டவரின் தொலைபேசிதான் இந்த வழக்கில் முக்கியமான தடயவியல் சாட்சியம். அந்த போன் தடவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அந்த போனில் என்னென்ன விஷயங்கள் இருந்தன, அவருடைய சமூகப் பழக்க வழக்கங்கள் என்னென்ன, சமூக வலைதளங்கள் எதிலெல்லாம் அவர் இருக்கிறார் என்று ஆராயப்பட்டது. சம்பவம் நடந்த 23ஆம் தேதி அந்த போனில் என்னவெல்லாம் நடந்தது என்றும் ஆராயப்பட்டது. சம்பவ நேரத்தில் அந்த போன் 'ஃப்ளைட் மோடில்' (தொடர்புகொள்ள முடியாத நிலையில்) இருந்தது என்பதை தடய அறிவியல் ஆய்வகம் நீதிமன்றத்தில் பதிவுசெய்தது.
இதனை தடயவியல் நிபுணர் நீதிமன்றத்தில் வாய்மொழி சாட்சியமாகவும் அளித்தார். அந்த போனில் ஏர்டெல் சிம் பயன்படுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஏர்டெல்லின் நோடல் அதிகாரி நீதிமன்றத்திற்கு வந்து, மே 23ஆம் தேதி மாலை 6.29 மணிக்குத்தான் அந்த போனுக்கு முதல் அழைப்பு வந்தது என்றும் அதற்குப் பிறகு 8.52வரை எந்த அழைப்பும் வரவில்லையென்றும் சாட்சியமளித்தார். 8.52க்கு பிறகுதான் அவருக்கு 'மிஸ்ட் கால்கள்' குறித்த குறுஞ்செய்தி வந்தது.
பிஎன்எஸ்சின் 358வது பிரிவின்படி, இன்னொரு குற்றவாளி இருப்பதாக நீதிமன்றம் கருதினால், அந்த நபரையும் இணைத்து நீதிமன்றமே விசாரணை நடத்தலாம். ஒரே ஒருவர்தான் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால்தான், இவருக்கு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. குற்றவாளி அந்தப் பெண்ணை அச்சுறுத்துவதற்காகவும் தானும் பல்கலைக்கழக ஊழியர் எனக் காட்டுவதற்காகவும்தான் போனில் பேசுவதைப் போல நடித்தார்" என அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி விளக்கம் அளித்தார்.
வழக்கை அவசரஅவசரமாக முடித்த திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
ஆனால், அ.தி.மு.க. இந்த விவகாரத்தில் இன்னும் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக இன்றும் தெரிவித்துள்ளது. தண்டனை விவரங்கள் வெளியான பிறகு இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, "FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு? #SIRஐ_காப்பாற்றியது_யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அனைத்து பதில்களும் கிடைக்கத்தான் போகின்றன. ஸ்டாலின் சாரே நினைத்தாலும்,அந்த SIRஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, "இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான். இதுபோன்று பொய் புரளிகளை வைத்து அரசியல் செய்வதையே முழுநேர தொழிலாகச் செய்து கொண்டிருக்கும் பழனிசாமி இன்று போல் உண்மைகளால் தொடர்ந்து அவமானப்படப் போவது உறுதி" எனக் கூறியிருக்கிறார்.
வழக்கின் பின்னணி என்ன?
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் இன்று (மே 28) தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் டிசம்பர் 23ஆம் தேதியன்று இரவு உணவுக்குப் பிறகு, மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மறுநாள் காலையில் அந்த மாணவி புகார் அளித்தார். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து காவல்தறையினர் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை மாணவி அடையாளம் காட்டினார். இதையடுத்து டிசம்பர் 25ஆம் தேதியன்று 37 வயதான ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கோட்டூர்புரத்தில் உள்ள நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் என காவல்துறை தெரிவித்தது.
இதற்கிடையில் டிசம்பர் 26ஆம் தேதியன்று காலையில், மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி அ.தி.மு.க. வழக்கறிஞர் வரலட்சுமி, பா.ஜ.க. வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து டிசம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்குப் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை நகர காவல் ஆணையர் கடந்த ஜனவரி 5ஆம் தேதி உத்தரவிட்டார்.
வழக்கின் புலனாய்வு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று சைதாப்பேட்டை ஒன்பதாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்குப் பிறகு இந்த வழக்கு மார்ச் 7ஆம் தேதியன்று சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஏப்ரல் 23ஆம் தேதியன்று மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பாக சாட்சிகளின் விசாரணை தொடங்கியது. தினந்தோறும் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் காவல்துறை தரப்பில் 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மே 28ஆம் தேதி இந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு