அமெரிக்கா தவிர்த்து இந்திய மாணவர்கள் வேறு எந்தெந்த நாடுகளில் படிக்கலாம்?

    • எழுதியவர், ரெபெக்கா தோர்ன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

அமெரிக்காவில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான நேரம் ஒதுக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து டொனால்ட் டிரம்ப் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சி.பி.எஸ். (CBS) ஊடகம், இதற்கான அதிகாரபூர்வ குறிப்பாணையைப் பார்த்தது.

வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் விசாக்களுக்காக (foreign exchange visas) விண்ணப்பிப்பவர்களின் சமூக ஊடக பக்கங்களைப் பரிசோதிப்பதற்கு அமெரிக்க வெளியுறவு துறை திட்டமிட்டிருப்பதே, இதற்கான முக்கிய காரணமாக நம்பப்படுகிறது.

தன் நாட்டின் பெரிய பல்கலைக் கழகங்கள் சில மிகவும் தாராளமயமாக இருப்பதாக நம்பும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவற்றுக்கு எதிராக விரிவான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த சமீபத்திய முடிவும், இந்த நடவடிக்கைகளின் ஒருபகுதியாக கருதப்படுகிறது.

அதே நடவடிக்கைகளின் கீழ், ஹார்வர்டு பல்கலைக்கழகம் சர்வதேச மாணவர்களை அனுமதிப்பதை தடுக்கும் வகையில் சில நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்துள்ளார். பல்கலைக்கழக வளாகத்தில் யூத எதிர்ப்பைத் தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மீது டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அதற்கு எதிர்வினையாக ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் டிரம்பின் நடவடிக்கைக்கு நீதிபதி தற்காலிகமாக தடை விதித்தார்.

அதிகமாக பாதிக்கப்படும் மாணவர்கள் யார்?

2023-24 கல்வியாண்டில் அமெரிக்க கல்லூரிகளில், 210க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 11 லட்சத்துக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் பதிவு செய்திருந்ததாக, சர்வதேச மாணவர்கள் குறித்த தரவுகளை சேகரிக்கும் ஓபன் டோர்ஸ் (Open Doors) எனும் அமைப்பு கூறுகிறது.

ஓபன் டோர்ஸ் கூற்றுப்படி, அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்தே அதிகளவில் படிக்கச் சென்றுள்ளனர், சுமார் 3 லட்சத்து 30,000 இந்திய மாணவர்கள் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளனர்.

அதற்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது, 2,80,000 மாணவர்கள் சீனாவிலிருந்து சென்றுள்ளனர். அதற்கடுத்ததாக தென் கொரியா, கனடா, தைவான், வியட்நாம், நைஜீரியா, வங்கதேசம், பிரேசில் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த மாணவர்கள் உள்ளனர்.

எனினும், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ புதன்கிழமை கூறுகையில், "சீன கம்யூனிச கட்சியுடன் தொடர்புடைய அல்லது நுண்ணர்வுடன் கையாளக்கூடிய பாடப்பிரிவுகளைப் படிக்கும் மாணவர்கள் உட்பட சீன மாணவர்களின் விசாக்கள் டிரம்ப் நிர்வாகத்தால் திரும்பப் பெறப்படும்" எனத் தெரிவித்தார்.

மேலும் அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து எதிர்காலத்தில் பெறப்படும் விசா விண்ணப்பங்கள் தொடர்பான "பரிசோதனையை மேம்படுத்தும் வகையில்" விதிமுறைகள் திருத்தியமைக்கப்படும் என்றார்.

இதனால், அமெரிக்காவில் ஏற்கெனவே படிக்கும் சீன மாணவர்களுள் எத்தனை பேர் பாதிக்கப்படுவர் என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்த நடவடிக்கையை "உறுதியாக எதிர்ப்பதாக" கூறியுள்ள சீனா, ஆக்கப்பூர்வமான உறவை கையாளுமாறு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.

ஏற்கெனவே ஏராளமான வெளிநாட்டு மாணவர்களை அவர்களின் நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோரின் விசாக்களை திரும்பப் பெறும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகங்களில் பாலத்தீன ஆதரவு போராட்டக்காரர்களை ஒடுக்கும் வகையில், டொனால்ட் டிரம்பின் முயற்சிகளுள் ஒருபகுதியாக வெளிநாட்டு மாணவர்களில் குறைந்தது 300 பேரின் விசாக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக, மார்ச் மாத பிற்பகுதியில் ரூபியோ தெரிவித்தார். அந்த மாணவர்கள் எந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதை ரூபியோ குறிப்பிடவில்லை.

தங்கள் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்கள் சேருவதை தடுப்பதன் மூலம், பல்கலைக்கழகத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என, பல்கலைக்கழக நிர்வாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தது.

இந்த நடவடிக்கை மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு "குறிப்பிடத்தக்க மன அழுத்தத்தை" ஏற்படுத்தியிருப்பதாக, ஹார்வர்டு சர்வதேச அலுவலகத்தின் இயக்குநர் மௌரீன் மார்ட்டின் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கையால் மாணவர்கள் பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதாகவும், சர்வதேச பயணத்தை ரத்து செய்வதாகவும் சில சந்தர்ப்பங்களில் மற்ற கல்லூரிகளுக்கு மாற்றுமாறு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தாங்கள் மோதலை எதிர்கொள்ள நேரும் நாடுகளுக்குத் திரும்ப கட்டாயப்படுத்தப்படலாம் என அஞ்சுவதாகவும் மாணவர்கள் சிலர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் தெரிவித்துள்ளனர்.

மேற்கு விர்ஜினியா பல்கலைக்கழகம் மற்றும் பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய ஓய்வுபெற்ற பேராசிரியரும் சர்வதேச உயர்கல்வி குறித்த வியூக வகுப்பாளருமான வில்லியம் பர்ஸ்டெயின், இதனால் அமெரிக்கா மீது ஏற்படும் தாக்கமும் தீவிரமாக இருக்கும் என தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "கடினமாக இருந்தாலும், ஹார்வர்டு பல்கலைக்கழகம் இந்த சோதனையைக் கடந்துவிடும். ஆனால், தங்களின் கல்விக் கட்டணத்துக்காக அதிகளவில் சர்வதேச மாணவர்களைச் சார்ந்திருக்கும் பொது பல்கலைக்கழகங்கள் குறித்து நான் கவலைகொள்கிறேன்" என்றார்.

மாணவர்களுக்கு உள்ள மற்ற வாய்ப்புகள் என்ன?

சமீப ஆண்டுகளாக, கனடா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் வெளிநாட்டு மாணவர்களின் கவனத்தை குறிப்பிடத்தக்க வகையில் ஈர்த்துள்ளன.

ஆனால், சமீப காலமாக குடிவரவு சட்டங்களில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களால், மாணவர்களின் எண்ணிக்கை அங்கேயும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் கனடா உறுதிபூண்டுள்ளது. உதாரணமாக, வெளிநாட்டு மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய அவர்களது நிதி ஆதாரத்தின் அளவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சிகளுள் ஒன்றாக இது உள்ளது.

மதிப்புமிக்க ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் உள்ள பிரிட்டனும், சர்வதேச மாணவர்களுக்கான வாய்ப்புகளை கட்டுப்படுத்தி வருகிறது.

அங்கு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம், மாணவர் விசா தொடர்பான கட்டுப்பாடுகள் செயல்பாட்டுக்கு வந்தன, அதன்படி அங்கு படிக்கும் முதுநிலை மாணவர்கள், அவரைச் சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினரை பிரிட்டனுக்கு அழைத்து வர முடியாது.

சர்வதேச மாணவர்களுக்கான உலகின் மிகப்பெரிய சந்தையாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவும், வெளிநாட்டவர்களின் விசா விண்ணப்பங்கள் மீது வரம்பு விதித்துள்ளது. அதாவது, ஒரு குறிப்பிட்ட அளவு வரைதான் அந்நாடு இனி விண்ணப்பங்களை ஏற்கும். கொரோனா தொற்று காலத்துக்கு முன்பிருந்த அளவுக்கு ஒட்டுமொத்தமாக குடிவரவை குறைப்பதற்காக ஆஸ்திரேலியா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பேராசிரியர் வில்லியம் பர்ஸ்டெயின் கூறுகையில், நாடுகள் எந்தளவுக்கு தங்களின் கல்வி கட்டமைப்புகள் மீது முதலீடு செய்ய தேர்ந்தெடுக்கிறதோ, அதே அளவுக்கு மாணவர்களும் தங்கள் நாட்டிலேயே படிப்பதை தேர்ந்தெடுக்கலாம்.

மற்ற நாடுகளில் நிலை என்ன?

தங்களுடைய நிதி ஆதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு வெளிநாட்டு மாணவர்களைச் சார்ந்திருக்கும் மற்ற நாட்டு பல்கலைக்கழகங்கள் அமெரிக்க அரசின் நடவடிக்கைகளை தங்களுக்கான ஒரு வாய்ப்பாக பார்க்கின்றன. இந்தப் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களிடம் அதிகளவில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கின்றன.

ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி ஜான் லீ கூறுகையில், "அமெரிக்க கொள்கையால் பாகுபாடுகளைச் சந்திக்கும், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிப்பது அல்லது தங்கள் படிப்பை தொடர்வதில் இன்னல்களை சந்திக்கும் அனைத்து மாணவர்களையும் வரவேற்கிறோம்" என தெரிவித்தார்.

"ஹாங்காங்கில் தங்கள் படிப்பை தொடர்வதை தேர்ந்தெடுத்துள்ள மாணவர்களுக்கு தங்களின் அரசாங்கம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தங்களால் முடிந்த சிறப்பான ஆதரவு மற்றும் ஏற்பாடுகளை வழங்கும்," என அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் உள்ள சன்வே பல்கலைக்கழகம் உட்பட ஆசியாவின் சில நிறுவனங்களும் வெளிநாட்டு மாணவர்களை வரவேற்றுள்ளன.

"நாங்கள் அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்துடன் கூட்டு வைத்துள்ளோம். அதன்படி, ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களை (credits) அரிசோனா பல்கலைக்கழகத்துக்கு மாற்றுவது அல்லது சன்வே பல்கலைக்கழகத்தின் ஏதேனும் ஒரு பாடப்பிரிவுக்கு உங்களை மாற்றவோ எங்களால் முடியும். இதன் மூலம், உங்களுக்குக் கூடுதலாக லேன்கேஸ்டர் பல்கலைக்கழகத்திடமிருந்து பிரிட்டிஷ் சான்றிதழும் கிடைக்கும்," என, சன்வே பல்கலைக்கழக குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி எலிசபெத் லீ தெரிவித்தார்.

ஐரோப்பாவில், அமெரிக்காவுக்கு சிறந்த மாற்றாக ஜெர்மனியை மாணவர்கள் கருதுகின்றனர்.

ஜெர்மன் அகாடமிக் எக்ஸ்சேஞ்ச் சர்வீஸ் (DAAD) கூற்றுப்படி, 2025-ஆம் ஆண்டில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் அந்நாட்டுக்கு படிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்தாண்டு மார்ச் மாதம், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே சர்வதேச மாணவர்களை அனுமதிக்கும் வகையில் புதிய முன்மொழிவுகளை அறிமுகப்படுத்தியது, அதன்படி முன்பு வாரத்துக்கு 10 மணிநேரம் பணி செய்யலாம் என்பது, தற்போது 20 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேசமயம், வெளிநாட்டு மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய நிதி ஆதாரத்தின் அளவை ஜெர்மனி உயர்த்தியுள்ளது. ஆனாலும் இது கனடா மற்றும் ஆஸ்திரேலியாவை விட அதிகமானது அல்ல.

பேராசிரியர் வில்லியம் பர்ஸ்டெயின் கூறுகையில், "கடந்த 15 ஆண்டுகளில் உயர் கல்விக்கான சர்வதேச சந்தை அடிப்படையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, எனவே சர்வதேச மாணவர்களுக்கென பல வாய்ப்புகளும் இடங்களும் உள்ளன" என்றார்.

"மலேசியாவில் மிகவும் சிறந்த பல்கலைக்கழகங்கள் பல உள்ளன," என்கிறார் அவர். "ஆஸ்திரேலியாவும் இன்னும் ஒரு வாய்ப்பாக உள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியேறுவது குறித்து யோசிக்கும் சிறந்த பேராசிரியர்களை கவர்வதற்கு பணம் ஒதுக்கப்படுகிறது."

"எனவே, ஐரோப்பா இன்னும் ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது என நினைக்கிறேன். ஆனால், உலகிலேயே மிகவும் பரபரப்பு அதிகமாக உள்ள பகுதி என்பதால், என் கவனம் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை நோக்கி உள்ளது."

வெளிநாட்டில் உள்ள வேறொரு கிளைக்கு மாணவர்களை மாற்ற முடியுமா?

பேராசிரியர் வில்லியம், "இத்தகைய கிளை-வளாகங்கள்" பிரபலமடைந்து வருவதாக நம்புகிறார்.

"பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் பல காலமாக இதை செய்துவருகின்றன," என்கிறார் அவர். "மலேசிய பல்கலைக்கழகங்களும் அதைச் செய்கின்றன." என்றார்.

ஹார்வர்ட் இணையதளம் அர்ஜெண்டினா, இங்கிலாந்து, கொரியா, செனகல் மற்றும் பிரேசில் என வெளிநாடுகளில் படிப்பதற்கான வாய்ப்பு கொண்ட 50 நாடுகளை தன் இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது.

டிரம்பின் தடை உறுதியானால், மாணவர்கள் இந்த நாடுகளில் தங்கள் படிப்பை மாற்றிக்கொள்ள முடியுமா என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு