You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாய்லாந்து பெண் உலக அழகியாக தேர்வு - இந்தியாவின் நந்தினி எந்த இடத்தை பிடித்தார்?
இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒபல் சுசாதா சௌசி பட்டம் வென்றுள்ளார்.
இதன் இறுதிச் சுற்று ஹைதராபாத்தில் மே 31, சனிக்கிழமை இரவு நடைபெற்றது. மே 7-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் பல்வேறு நாட்டில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
1951-ஆம் ஆண்டு முதல் 'ப்யூட்டி வித் பர்பஸ்' என்ற நோக்கத்தின் அடிப்படையில் உலக அழகி போட்டி நடத்தப்பட்டது.
தூதராக விருப்பம்
சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக படித்து வரும் ஒபல் சுசாதா சௌசி, ஒரு நாள் தூதுவராக பொறுப்பேற்க வேண்டும் என்று தன்னுடைய எதிர்காலத் திட்டம் பற்றி பேசியதாக மிஸ் வேர்ல்ட் இணைய தளம் தெரிவிக்கிறது.
மனநல ஆரோக்கியம் மற்றும் மானுடவியல் போன்ற துறைகளிலும் ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார் அவர்.
பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் அவர்.
ஒபல் அவருடைய வீட்டில் 16 பூனைகள் மற்றும் 5 நாய்களை வளர்த்து வருகிறார்.
இறுதிச் சுற்றுக்குத் தகுதியானவர்கள் யார்?
தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுசாதா, எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஹஸெட் டெரிஜி, போலந்தைச் சேர்ந்த மஜா லாஜா, மார்டினிகைச் சேர்ந்த ஆரேலியா ஜோச்சேம் என இந்த நான்கு போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
ஒபல் உலக அழகிப் பட்டத்தை வென்றார். எத்தியோப்பியாவின் டெரிஜி இரண்டாம் இடத்தையும், லாஜா மூன்றாம் இடத்தையும் ஜோச்சேம் நான்காம் இடத்தையும் பிடித்தனர்.
108 நாடுகளில் இருந்து பங்கேற்ற போட்டியாளர்கள்
108 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
முதல்சுற்று போட்டிகளுக்குப் பிறகு, அமெரிக்காஸ் கரீபியன், ஆப்ரிக்கா, ஐரோப்பியா, ஆசியா-ஓசினியா என்று ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் 10 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்கள் மூன்று கட்டங்களாக நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பங்கேற்றனர்.
காலிறுதிப் போட்டியின் முதல் சுற்று கடந்த ஞாயிறு அன்று நிறைவுற்றது. ஒவ்வொரு கண்டத்திலும் இருந்தும் தலா 10 நபர்கள் என்று தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 40 போட்டியாளர்களில், காலிறுதிக்குப் பிறகு, ஒவ்வொரு கண்டத்திலும் முதல் 5 இடங்களைப் பிடித்த நபர்கள் இரண்டாம் சுற்றுக்கு அனுப்பப்பட்டனர்.
ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட ஐந்து நபர்களில் முதல் இடம் பிடித்த இரண்டு நபர்கள் அடுத்த கட்டத்திற்கு அனுப்பப்பட்டனர். அதன் பின்னர் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. அதன்படி, ஏற்கனவே ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட இரண்டு போட்டியாளர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு இறுதிப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச் சுற்றில் உலக அழகிப் பட்டத்தை வென்றார் தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுசாதா.
கேள்வி எழுப்பிய நடுவர்கள்
இறுதிச் சுற்றில் நடுவர்கள், போட்டியாளர்களிடம் கேள்விகளைக் கேட்டனர்.
நம்ரதா ஶ்ரீரோத்கர் போலந்தின் லாஜாவிடம் கேள்வி எழுப்பினர். தகுபதி ராணா எத்தியோப்பிய போட்டியாளரிடமும், முன்னாள் உலக அழகிப் பட்டம் பெற்ற இந்தியாவின் மானுஷி சில்லார் மார்டினிக் போட்டியாளரிடமும், சோனு சூட் தாய்லாந்து போட்டியாளரிடம் கேள்விகள் கேட்டனர்.
இந்த கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையிலேயே வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா சார்பில் பங்கேற்ற போட்டியாளர் நந்தினி குப்தா, முதல் 20 இடங்களில் இடம் பிடித்திருந்தார். ஆனால் இறுதிச்சுற்றுக்கு அவரால் முன்னேற முடியவில்லை
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.