டிஜிட்டல் பரிவர்த்தனை முதல் ஆதார் வரை - இன்று முதல் புதிய விதிகள்

இந்தியா முழுவதும் ஜூன் 2025இல், ஆதார் அட்டை தகவல்களை இலவசமாகப் புதுப்பிப்பது முதல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் வரை, சில விஷயங்களில் முக்கியமான மாற்றங்கள் நிகழவுள்ளன.

இந்தத் திருத்தங்கள் அல்லது மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும், ஏனென்றால் இவை அனைத்தும் நம் அன்றாட வாழ்க்கையில் தாக்கம் செலுத்தக் கூடிய விஷயங்கள்.

ஜூன் மாதத்தில் எந்தெந்த விதிகள் மாறப் போகின்றன என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்பான மாற்றங்கள்

தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, ஜூன் 1 முதல், தனிநபர்கள் இடையேயான யுபிஐ பரிவர்த்தனைகள் மற்றும் வாடிக்கையாளர்கள்- வணிகங்கள் இடையேயான யுபிஐ பரிவர்த்தனைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பயனரின் (பணம் அனுப்புபவர்) யுபிஐ செயலியில் இறுதிப் பயனாளியின் (பணம் பெறுபவர்) வங்கிப் பெயர் (Banking name) மட்டுமே யுபிஐ செயலியின் பரிவர்த்தனைத் திரையில் காட்டப்பட வேண்டும்.

அந்த சுற்றறிக்கையின்படி, யுபிஐ மூலம் பணம் செலுத்துபவர்கள் சரியான நபருக்கு தான் பணம் செலுத்துகிறார்களா என்ற நம்பிக்கையை அதிகரிக்க இது செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, பணம் செலுத்தும் போது கியூஆர் (QR) குறியீடு மூலம் பெறப்பட்ட பெயரோ அல்லது வேறு எந்த வகையான பெயரோ இனி பணம் செலுத்துபவரின் யுபிஐ செயலியின் திரையில் காட்டப்படாது என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், யுபிஐ செயலிகளில் ஒரு பயனாளி தனது வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட பெயரிலிருந்து வேறுபட்ட எந்தப் பெயரையும் பயன்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் நண்பருக்கு யுபிஐ மூலம் பணம் அனுப்பினால், அவரது வங்கி ஆவணத்தில் அவரது பெயர் எப்படி இருக்கிறதோ, அவ்வாறே யுபிஐ செயலியிலும் அவரது பெயர் காண்பிக்கப்படும். தாமாக யுபிஐ செயலிக்காக வேறு பெயரை பயன்படுத்த முடியாது.

ஆதார் அட்டை தொடர்பான மாற்றங்கள்

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜூன் 14, 2025 வரை எனது ஆதார் போர்ட்டலைப் பயன்படுத்தி சில ஆவணங்களை இலவசமாகப் புதுப்பித்துக்கொள்ளலாம்.

இந்த குறிப்பிட்ட தேதி வரை, ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் அடையாளச் சான்றுகள் மற்றும் முகவரி தொடர்பான ஆவணங்களை போர்ட்டலைப் பயன்படுத்தி இலவசமாகப் புதுப்பிக்க முடியும்.

இதன் மூலம், ஆதார் அட்டைதாரர்கள் தங்களது பெயர், பாலினம், பிறந்த தேதி மற்றும் ஆதார் சேர்க்கையின் போது குறிப்பிடப்பட்ட முகவரிக்கான ஆவணங்களைப் புதுப்பிக்க முடியும்.

இருப்பினும், ஆதார் மையத்தில் இந்த செயல்முறைக்கான கட்டணம் என்பது ரூ.50 ஆகும்.

மியூச்சுவல் ஃபண்ட் கட்-ஆஃப் நேரத்தில் மாற்றம்

முதலீட்டு தளமான Upstox.com வலைத்தளத்தின்படி, இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) சமீபத்தில் ஓவர்நைட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது.

இந்த மாற்றம் ஜூன் 1 முதல் அமலுக்கு வரும்.

மாற்றத்தின்படி, திருத்தப்பட்ட காலக்கெடு புதிய கட்-ஆஃப் (Cut-off) நேரத்திற்குப் பிறகு செய்யப்படும் மியூச்சுவல் ஃபண்ட் பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தும்.

ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கான இந்த காலக்கெடு பிற்பகல் 3 மணி, ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு மாலை 7 மணி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு