You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாதவிடாய் வராமல் இருப்பது அல்லது தள்ளிப் போவதற்கான 8 முக்கிய காரணங்கள்
மாதவிடாய் வராமல் இருப்பதற்கு அமினோரியா (amenorrhea) எனப் பெயர். இந்த நிலை ஏற்படுவதற்கு பலவித காரணிகள் உள்ளன.
மாதவிடாய் வராமல் இருப்பதற்கு கர்ப்பமாக இருத்தல் ஒரு காரணமாக உள்ளது. ஆனால், கர்ப்பமாக இல்லாமல் இருப்பவர்களுக்கும் மாதவிடாய் ஏற்படாமல் இருப்பதற்கு பலவித காரணங்கள் உள்ளன.
பொதுவாக, இனப்பெருக்க வயதில் உள்ள ஒரு பெண்ணுக்கு 28 நாட்களைக் கொண்ட மாதவிடாய் சுழற்சி இருக்க வேண்டும். மாதவிடாய் அதற்கு சில நாட்கள் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ ஏற்படுவது வழக்கம் தான்.
பல சந்தர்ப்பங்களில் மாதவிடாய் தள்ளிப்போவது தீவிரமான பிரச்னையாகக் கருதப்படுவதில்லை, ஆனால் தொடர்ந்து அவ்வாறு நிகழ்ந்தால் அது வேறு ஏதாவது உடல்நலப் பிரச்னைக்கு அறிகுறியாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மகப்பேறு மருத்துவர் அமிரா அல்கோர்டின் மார்டினெஸ் பிபிசியிடம் கூறுகையில், "உங்களையும் உங்கள் உடலையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் உடலில் ஏதாவது சரியில்லையா என்பது உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு பெண்ணின் உடலும் முற்றிலும் வித்தியாசமான முறையில் செயல்படும். எந்தப் பெண்ணின் உடலும் ஒரே மாதிரியாக செயல்படாது." என்கிறார்.
பிரிட்டன் தேசிய சுகாதார சேவை (NHS) கூறுகையில், "ஒரு பெண் கர்ப்பமாக இல்லாத நிலையில் மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து மாதவிடாய் ஏற்படவில்லை என்றாலோ, அல்லது 45 வயதுக்கு முன்பாகவே மாதவிடாய் நின்றுவிட்டாலோ அப்பெண் நிச்சயமாக மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்." என்கிறது.
15 வயதுக்குள் ஒரு சிறுமிக்கு முதல் மாதவிடாய் வரவில்லை என்றாலும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது, அமெரிக்காவின் மயோ கிளீனிக்.
இந்த இரண்டு அமைப்புகளும் அமினோரியா ஏற்படுவதற்கு எட்டு காரணங்கள் உள்ளதாக பட்டியலிடுகின்றன...
1. மனச் சோர்வு
மருத்துவர் அமிரா கூறுகையில், "மனச் சோர்வு தான் முக்கியமான காரணம். நம் காலத்தின் பெருந்தொற்றாக மன சோர்வு உள்ளது." என்கிறார் அவர்.
மனச் சோர்வு நம் உடலில் அட்ரினலின் ஹார்மோனை துரிதமாக அதிகப்படுத்துகிறது, இந்த ஹார்மோன் நம் உடலை சாத்தியமான ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்கான எச்சரிக்கை நிலையில் வைக்கிறது.
இந்த ஹார்மோன்களின் நீண்ட கால விளைவால், மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படலாம். சில சமயங்களில் மாதவிடாய் ஏற்படாமல் இருக்கும் அல்லது மாதவிடாயின் போது தீவிரமான வலி ஏற்படும்.
சில சமயங்களில், மனச் சோர்வு காரணமாக ஒரு மாதவிடாய் சுழற்சியில் இருமுறை மாதவிடாய் ஏற்படும். (ஒரு மாத விடாய் சுழற்சி என்பது நான்கு வாரங்களைக் கொண்டது.)
மாதவிடாய் ஏற்படாமல் இருப்பதற்கு மனச்சோர்வு தான் காரணம் என்றால், தினசரி உடற்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி மூலம் அதை சரிசெய்ய முடியும் என பரிந்துரைக்கிறது என்.ஹெச்.எஸ். அது சரிவர பலன் தரவில்லை என்றால், அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (cognitive behavioural therapies (CBT)) எனப்படும் மனச்சோர்வு மற்றும் மனப் பதற்றத்தை குணப்படுத்துவதற்கான உளவியல் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
2. திடீரென உடல் எடை குறைவது
உடலில் உள்ள கலோரிகளின் அளவு மிக அதிகமாக குறையும்போது, கருப்பையிலிருந்து முட்டைகள் வெளியேறுவதற்கான (ovulation) ஹார்மோன் உற்பத்தி நின்றுவிடலாம்.
அங்கீகாரம் பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் உடல் எடை கூடுவதற்கு உதவக்கூடும்.
எனினும், உண்பது தொடர்பான ஒருங்கின்மையால் உடல் எடை குறைந்தால், ஒருவர் மனநல மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
3. உடல் எடை அதிகமாக இருத்தல் அல்லது உடல் பருமன்
உடல் எடை அதிகமாக இருந்தால் உடல் அதிகளவிலான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியிடும். இந்த ஹார்மோன் ஒரு பெண்ணின் இனப்பெருக்க அமைப்பை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களுள் ஒன்று.
ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாகும் போது, அது மாதவிடாய் சரியாக ஏற்படுவதைப் பாதிக்கும். சில சந்தர்ப்பங்களில் மாதவிடாயை முழுவதுமாகவே நிறுத்திவிடும்.
அமினோரியா உள்ளவர்கள் மற்றும் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் அல்லது பி.எம்.ஐ 30க்கும் அதிகமாக உள்ளவர்கள், ஊட்டச்சத்து நிபுணரை ஆலோசித்து ஆரோக்கியமான எடையை அடைய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
4. அதிக உடற்பயிற்சி
அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் உடற்சோர்வு, மாதவிடாயை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களைப் பாதிக்கிறது. உடலில் அதிகளவில் கொழுப்பு இருப்பதும், கருப்பையிலிருந்து முட்டைகள் வெளியேறுவதைத் தடுக்கிறது.
தொழில்முறை தடகள வீராங்கனைகளுக்கு விளையாட்டு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள், இதை சரிசெய்ய எந்தளவுக்கு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை கூறுவார்கள்.
5. பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்)
கருப்பைக்குள் அதிகளவில் பை போன்ற அமைப்புகள் உள்ளன. ஃபாலிக்கிள்ஸ் எனப்படும் இவை கருமுட்டைகள் உருவாவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
வழக்கமாக, முட்டைகள் கருப்பைக்குள் வளர்ந்து, அவற்றில் ஒரு கருமுட்டை கருத்தரித்தலுக்குத் தயாராக இருக்கும்.
ஆனால், பிசிஓஎஸ் ஏற்பட்டால், நிறைய ஃபாலிக்கிள்கள் ஒரே நேரத்தில் உருவாகும், இதனால் வளர்ந்த முட்டைகளை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும்.
இம்மாதிரியான நிலையில், ஃபாலிக்கிள்களில் இருந்து முட்டைகள் வெளியேற முடியாது.
பிரிட்டனில் பத்தில் ஒரு பெண் பி.சி.ஓ.எஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாக என்.ஹெச்.எஸ் கூறுகிறது. மாதவிடாய் ஏற்படாமல் இருக்கும் 33% பேருக்கு பி.சி.ஒ.எஸ் காரணமாக உள்ளது.
கருப்பைகளின் செயல்பாட்டை பாதித்து, அதிலிருந்து கருமுட்டைகளை வெளியேற முடியாமல் செய்கிறது பி.சி.ஓ.எஸ்.
6. மெனோபாஸ் மற்றும் முன்கூட்டியே மெனோபாஸ் ஏற்படுவது
கர்ப்பமடைதல் மற்றும் பாலூட்டுதலைப் போன்றே, மெனோபாஸ் நிலையிலும் மாதவிடாய் ஏற்படாமல் போகிறது.
மெனோபாஸ் நிலையை அடையும்போது, பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறையும், கருப்பையிலிருந்து கருமுட்டைகள் வெளியேறுவது ஒழுங்கற்ற நிலையில் இருக்கும்.
45 முதல் 55 வயதுக்குள் மெனோபாஸ் நிலை ஏற்படுகிறது.
எனினும், நூறில் ஒரு பெண்ணுக்கு 40 வயதுக்கு முன்பாகவே மெனோபாஸ் நிலை ஏற்படுவதாக பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு ப்ரீமெச்சூர் மெனோபாஸ் எனப் பெயர்.
7. கருத்தடை
கருத்தடை மாத்திரைகள், ஊசிகள், கருப்பைக்குள் செலுத்தப்படும் கருத்தடை சாதனங்களாலும் அமினோரியா ஏற்படும்.
கருத்தடை மாத்திரைகளை எடுப்பதை நிறுத்திய பிறகும், மீண்டும் கருப்பையிலிருந்து கருமுட்டைகள் வெளியேறுவதற்கு சில காலமாகும்.
8. மற்ற பிரச்னைகள் மற்றும் மருந்துகள்
நீரிழிவு நோய் அல்லது ஹைப்பர் தைராய்டு அல்லது ஹைப்போ தைராய்டு போன்ற ஹார்மோன் ஒருங்கின்மை பிரச்னைகளாலும் மாதவிடாய் ஏற்படாமல் இருக்கும்.
மனநோய் மருந்துகள், கீமோ தெரபி, மன அழுத்தத்தை குணப்படுத்துவதற்கான மருந்துகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் அலர்ஜிக்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போதும் அமினோரியா ஏற்படும் என, மயோ க்ளீனிக் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு