You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எம்ஜிஆர் படத்தில் இருட்டடிக்கப்பட்ட கருணாநிதி பெயர் - கோவையிலிருந்து கோபத்துடன் புறப்பட்ட கதை
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
''உடைந்த வாளாயிருந்தாலும் பரவாயில்லை. போராடுவதற்கு ஒரு வாள் கொடுங்கள்!''
''அண்ணன் சொன்ன வார்த்தையை கண்ணன் சொன்னாலும் மாற்ற முடியாது!''
இதெல்லாம் 'அபிமன்யூ' திரைப்படத்தில் பிரபலமான வசனங்கள்.
இந்த வசனத்தை எழுதியது ஏ.எஸ்.ஏ.சாமி என்று அந்தப் படத்தில் வரும். ஆனால், "இந்த வசனத்தை எழுதியது நான் தான்" என 'நெஞ்சுக்கு நீதி' நுாலின் முதல் பாகத்தில் கருணாநிதி எழுதியுள்ளார்.
''கோவையை அடுத்த சிங்காநல்லுாரில் பத்து ரூபாய்க்கு ஒரு வீடு பிடித்துக்கொண்டு, நானும் என் மனைவியும் தங்கியிருந்தோம். அந்த குருவிக்கூட்டினுள்ளே உட்கார்ந்து கொண்டு நான் எழுதிக் குவித்தவைகள் ஏராளம். அபிமன்யூ' என்கிற புராணப்படத்துக்கு புதுமையான வசனங்களை எழுதுகிற வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ஆனால், அந்தப் படத்தில் நான் எழுத்துப் பணியாற்றிய செய்தி திரையில் விளம்பரப்படுத்தப்படவே இல்லை.''
அப்போது கோவையை அடுத்த சிங்காநல்லுார் என்று எழுதும் அளவில், கோவையும் சிங்காநல்லுாரும் தனித்தனி நகரங்களாக இருந்தன. இப்போது ஒன்றுக்குள் ஒன்றாகிவிட்டன. கருணாநிதி தனது நுாலில் குறிப்பிட்ட அந்த முதல் மனைவி பத்மாவதி. சிங்காநல்லுாரில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் தங்கியிருந்ததாக கோவை குறித்த பல்வேறு நுால்களும் தெரிவிக்கின்றன.
கோவையிலிருந்து கோபத்தோடு கிளம்பிய கருணாநிதி
கோவையைத் தவிர்த்துவிட்டு, தமிழ் சினிமா வரலாற்றை எழுத முடியாது என்று தனது 'தெரிந்த கோவை தெரியாத கதை' புத்தகத்தில் எழுதியுள்ள கவியன்பன் கே.ஆர்.பாபு, தமிழ்நாடு முதலமைச்சர்களாக இருந்தவர்களில் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய நால்வரும் தங்களது வளர்ச்சிப் பாதையில் முக்கியக் கட்டத்தை அடைந்தது கோவையில்தான், அதிலும் புலியகுளத்தில் இருந்த பட்சிராஜா (தற்போது விக்னேஷ் மஹால்) மற்றும் சிங்காநல்லுாரில் இருந்த சென்ட்ரல் ஸ்டூடியோவிலும்தான் என்று எழுதியுள்ளார்.
''22 வயது கருணாநிதி, 'அபிமன்யூ', 'ராஜகுமாரி' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிக் கொடுத்தார். அவரது பெயரைப் போடாமல் ஏ.எஸ்.ஏ.சாமி பெயர் போடப்பட்டு அந்தப் படங்கள் வெளியானது. ராஜகுமாரி திரைப்படத்தில் நாயகனாக எம்ஜிஆர் நடித்திருந்தார். அபிமன்யுவிலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். வசன உதவி: கருணாநிதி என்று டைட்டிலில் போடப்பட்டது. ஜூபிடர் சோமுவிடம் 'என் பெயரை ஏன் போடவில்லை?' என்று கேட்டார் கருணாநிதி. 'நீங்கள் புதுசு. உங்கள் பெயருக்கு விளம்பரம் வரட்டும் போடுகிறேன்' என்றார் சோமு.
'இப்படியே ஒவ்வொரு தயாரிப்பாளரும் சொன்னால் எங்களைப் போன்றவர்களுக்கு எப்படி விளம்பரம் வரும்?' என்று கேட்டுவிட்டு, இனிமேல் இந்த ஸ்டூடியோவில் கால் வைக்க மாட்டேன் என்று முடிவெடுத்து விட்டுதான் குடியிருந்த சிங்காநல்லுார் வீட்டையும் காலி செய்துவிட்டு கோபித்துக்கொண்டு போய்விட்டார்.'' என்று கோவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஏற்பட்ட அனுபவத்தை விளக்கியிருக்கிறார் கே.ஆர்.பாபு.
கோவையை விட்டு கருணாநிதி புறப்பட்டுச் சென்ற நிகழ்வை, 'கோயமுத்துார்–ஒரு வரலாறு' புத்தகத்தில், 'கோவையும் தமிழ்த்திரையுலகமும், 'ராஜகுமாரியும் வேலைக்காரியும்' என்ற இரு அத்தியாயங்களில் இன்னும் விரிவாக விளக்கியிருக்கிறார் கோவை குறித்த பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள வரலாற்று ஆய்வாளர் சி.ஆர்.இளங்கோவன்.
''1946 ல் ஏ.எஸ்.ஏ.சாமிக்கு இயக்குநர் வாய்ப்பு கிடைத்தது. பி.யூ.சின்னப்பா, கதாநாயகனாவும், டி.ஆர். ராஜகுமாரி கதாநாயகியாகவும் நடிக்கவிருந்த படத்தின் பெயரும் 'ராஜகுமாரி' என்று முடிவானது. ஆனால், சில காரணங்களால் சின்னப்பாவும், ராஜகுமாரியும் நடிக்கவில்லை. அப்போது, துணை நடிகராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அதில் கதாநாயகன் ஆனார்.
அதே படத்துக்கு முதல் முதலில் கதை, வசனம் எழுத கோவைக்கு வந்தார் கருணாநிதி. தனது முதல் மனைவி பத்மாவதியுடன் சிங்காநல்லுாரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். சென்ட்ரல் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது, எம்.ஜி.ஆர். ராமநாதபுரத்தில் தங்கியிருந்தார். இருவரும் நல்ல நண்பர்களாயினர்.
அதைத் தொடர்ந்து, 'அபிமன்யூ' படத்துக்கும் கருணாநிதி கதை வசனம் எழுதினார். ஆனால், அதில் அவரின் பெயர் இடம் பெறவில்லை. உண்மையான எழுத்தாளன், எழுதுவதற்குப் பெறுகின்ற பணத்தை விட அதற்குக் கிடைக்கும் புகழையே விரும்புவான் என்ற நிலையிலிருந்த கருணாநிதி, உடனே வீட்டைக் காலி செய்துவிட்டு ஊருக்குக் கிளம்ப முடிவு செய்தார்.'' என்று அந்த நிகழ்வை அவர் விளக்கியுள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய சி.ஆர்.இளங்கோவன், ''கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் அண்ணனும், பிரபல பாடகருமான சிதம்பரம் ஜெயராமன் (காவியமா, நெஞ்சில் ஓவியமா உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியவர்), ஏ.எஸ்.ஏ.சாமி என்ற ஆரோக்கியசாமியை கருணாநிதிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அப்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருந்த சாமியிடம் உதவியாளராகச் சேர்ந்தார் கருணாநிதி. அவரது திறமையைப் பார்த்து, அவருக்கு தனியாக வசனம் எழுதும் பொறுப்பைக் கொடுத்துள்ளார்.'' என்கிறார்.
''அப்போது திருவாரூரிலிருந்து இரவு 10 மணிக்கு கோவை வரும் ரயிலில் இறங்கி, அங்கிருந்து தலையில் பெட்டியை வைத்துக்கொண்டு நடந்தே சிங்காநல்லுார் செல்லாண்டியம்மன் கோவில் வீதிக்குச் சென்றுள்ளனர். அபிமன்யூ மற்றும் ராஜகுமாரி படங்களுக்கு கருணாநிதி வசனம் எழுதியும் அவர் பெயர் டைட்டில் கார்டில் இடம்பெறவில்லை. ஆனால், 'ராஜகுமாரி' படத்தின்போதுதான், கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்கும் இடையில் நட்பு வலுவடைந்தது.'' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அண்ணாவின் வேலைக்காரியும் கருணாநிதியின் ராஜகுமாரியும்
அந்த காலகட்டத்தில் ருத்ராட்சக்கொட்டையும் கதர்ச்சட்டையுமாக காங்கிரஸ் அனுதாபியாக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரனிடம் (எம்.ஜி.ஆர்) பெரியாரின் புத்தகங்களைக் கொடுத்து, திராவிட உணர்வைப் பற்றி மணிக்கணக்கில் பேசி அவருக்கு திராவிடத்தின் பக்கம் இழுத்து வந்ததில் கருணாநிதிக்கு பெரும் பங்கு உண்டு என்கிறார் சி.ஆர்.இளங்கோவன்.
கருணாநிதியுடன் அந்த காலகட்டத்தில் இணைந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன், பழைய நண்பர்கள் பலரையும் இளங்கோவன் நேர்காணல் செய்துள்ளார். சென்ட்ரல் ஸ்டூடியோ ஜூபிடர் சோமுவிடம் வந்தபின்பு, திராவிட இயக்கக் கொள்கைகள் சார்ந்த திரைப்படங்கள் எடுக்கப்பட்டது என்பதையும் விளக்குகிறார். அங்குதான் அறிஞர் அண்ணாவின் வேலைக்காரியும், ராஜகுமாரியும் எடுக்கப்பட்டுள்ளது.
தனது பெயர் இருட்டடிப்பு செய்த கோபத்தில் இங்கிருந்து கிளம்பிய கருணாநிதி, தனது மனைவியை திருக்குவளையில் விட்டுவிட்டு, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்திடம் போய்ச் சேர்ந்ததை விளக்கும் இளங்கோவன், அங்குதான் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து, கருணாநிதி கதை-வசனம் எழுதிய 'மர்மயோகி' படம் தயாரிக்கப்பட்டது என்கிறார்.
''கருணாநிதி வசனம் எழுதும்போது, ஒரு திரைக்கதை போலவே, 'துாணுக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்தான்', 'திரைக்குப் பின்னால் நின்றும் அவள் வெட்கத்தால் முகத்தை மூடிக்கொண்டாள்' என்று காட்சியோடு எழுதுவது சுந்தரத்துக்கு பிடித்துப் போய்விட்டது. எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய அந்தப் படம் மூலம் தான் கருணாநிதி, எம்.ஜி.ஆர். எல்லோருமே ஸ்டார் அந்தஸ்து பெற்றனர். அதற்கு முன் 'மந்திரிகுமாரி' என்ற 'ஆன்டி ஹீரோ' சப்ஜெக்ட் படத்திலும் நடிப்பால் எம்.ஜி.ஆரும், வசனத்தால் கருணாநிதியும் கவனம் பெற்றுவிட்டனர். ராஜகுமாரியில் துவங்கிய நட்பு அங்கு மேலும் வலுவடைந்தது.'' என்கிறார் இளங்கோவன்.
அதற்குப் பின்பு, கோவை பட்சிராஜா ஸ்டூடியோவில் 'மலைக்கள்ளன்' படம் தயாரிக்கப்பட்டபோது, அதற்கு வசனம் எழுதுவதற்காக மீண்டும் கருணாநிதி கோவை வந்ததை இளங்கோவன் விவரிக்கிறார். அந்தப் படம் வருவதற்கு முன்பே, சிவாஜி நடித்த 'பராசக்தி' மற்றும் 'மனோகரா' ஆகிய படங்களால் கருணாநிதி புகழின் உச்சத்துக்குப் போய்விட்டார் என்கிறார்.
அப்போது மற்ற நடிகர், நடிகைகளின் பெயருக்காக கிடைப்பதை விட, 'கதை வசனம்: கருணாநிதி' என்று டைட்டில் வரும்போது, திரையரங்குகளில் கைத்தட்டலும் விசிலும் பறந்ததாக கருணாநிதியுடன் பணியாற்றிய பலரும் தம்மிடம் பகிர்ந்ததாகச் சொல்கிறார்.
''இதற்கிடையில் அரசியலிலும் பிரபலமாகி, 'மலைக்கள்ளன்' படத்துக்கு வசனம் எழுத கோவை வந்தபோது, கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராகவே ஆகிவிட்டார். ஆனாலும் எம்.ஜி.ஆர் மற்றும் பட்சிராஜா ஸ்டூடியோ ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோருடனான நட்புக்காகவே அவர் கோவைக்கு வந்து வசனம் எழுதிக் கொடுத்தார். அந்தப் படத்தில் நாயகனாக நடித்த எம்ஜிஆருக்கு 10 ஆயிரம் ரூபாயும், வசனம் எழுதிய கருணாநிதிக்கு 25 ஆயிரம் ரூபாயும் ஊதியமாக வழங்கப்பட்டதாகத் தகவல் உண்டு.'' என்கிறார் இளங்கோவன்.
பராசக்தி, மனோகரா போன்ற படங்களில் அவர் எழுதிய ஆவேசமான, ஈர்ப்புள்ள வசனங்களால், 'கருணாநிதியின் அனல் கக்கும் வசனத்தில்' என்று திரைப்படத்துக்கு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், சிவாஜியைப் போன்று எம்.ஜி.ஆரால் நீளமான வசனங்களைப் பேச முடியாது என்பதால், அவருக்கேற்ப 'மலைக்கள்ளன்' படத்துக்கு ஸ்ரீராமுலு கேட்டுக் கொண்டபடி, தன்னுடைய பாணிக்கு மாறாக மென்மையான, சுவராஸ்யமான வசனங்களை கருணாநிதி எழுதியதையும் இளங்கோவன் விவரிக்கிறார்.
''அந்தப் படத்தில், ஒரு காட்சியில் கதாநாயகி கோபத்தில் 'என்ன பேசுகிறீர்கள்' என்று கேட்பார். அதற்கு எம்.ஜி.ஆர். ''தமிழ்'' என்பார். இப்படி அவர் மென்மையாக எழுதியதால், 'மலைக்கள்ளன்' படத்துக்கு எழுதப்பட்ட விமர்சனங்களில், 'புயல் இந்தப் படத்தில் தென்றலாகிவிட்டது' என்று எழுதினார்கள். திரைப்படங்களில் சமூக, அரசியல் கருத்துகளைப் பரப்பும் ஒரு பாணியை தன்னுடைய 'வேலைக்காரி' படத்தின் மூலமாக அறிஞர் அண்ணா அறிமுகம் செய்தார். அதை தனது எல்லாப் படங்களிலும் விரிவாக்கினார் கருணாநிதி.'' என்கிறார்.
சமூகப் படங்களுக்கும் சாமிப்படங்களுக்கும் நடந்த போட்டி
இப்போது திரைத்துறையில் நடக்கும் அரசியல் பனிப்போர் போலவே, அந்தக் காலகட்டத்தில், இத்தகைய சமூகத் திரைப்படங்களுக்கு எதிராக, மக்களிடம் ஆன்மிகப் படங்களை எடுத்துக்கொண்டு போவதற்கும் ஒரு பெரிய வட்டம் பணியாற்றியதாகக் கூறும் இளங்கோவன், அதில்தான் 'திருவிளையாடல்', 'கந்தன் கருணை' , 'சரஸ்வதி சபதம்' போன்ற ஆன்மிகப் படங்களை ஏ.பி.நாகராஜன் அடுத்தடுத்து எடுத்ததாகச் சொல்கிறார். அதன் மறுபுறத்தில் கருணாநிதி என்ற ஒரே ஒரு மனிதர், நின்று விளையாடி வெற்றி பெற்றார் என்கிறார்.
சாதிய எதிர்ப்பு, பகுத்தறிவு, கைம்பெண் மறுமணம் போன்ற பல விஷயங்களையும் தன்னுடைய வசனங்களில் வெளிப்படுத்தினார் கருணாநிதி என்பதற்கு பல உதாரணங்களையும் இளங்கோவன் விளக்குகிறார். ஏ.பி.நாகராஜன் மற்றும் அவருக்குப் பின்னால் நின்ற பலரும், திரைக்குப் பின்னாலேயே மறைந்து விட்ட நிலையில், கருணாநிதி மட்டுமே, வசனகர்த்தா, பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல் தலைவர், முதலமைச்சர் என்று அடுத்தடுத்த பல வெற்றிகளைத் தொட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்.
கருணாநிதி கடந்த 2010 ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்தபோது, கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. அப்போது பல நாட்கள் கோவையில் அவர் தங்கியிருந்தார். அந்த நாட்களில் இரவு நேரங்களில் கோவை நகரை அவர் காரில் வலம் வந்து தன்னுடைய இளமைக்கால நினைவுகளை அசை போட்டதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் நினைவு கூர்கின்றனர். அப்போது கோவையிலுள்ள அவரின் பழைய நண்பர்களை அழைத்து வரச்சொன்னதாகவும், பலரை தான்தான் அழைத்து வந்ததாகவும் சொல்கிறார், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழுவின் துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலுார் பழனிசாமி.
''கோவையின் மீது அவருக்கு தனிப்பாசம் இருந்தது. அவர் எப்போது இங்கு வந்தாலும் நெகிழ்ந்துவிடுவார். கோவையில் அவர் இருந்தது 1943, 1944 ஆகிய ஆண்டுகளில்தான். சிங்காநல்லுாரில் அய்யாசாமி என்பவரின் வீட்டில்தான் அவர் மனைவியோடு தங்கியிருந்தார். அப்போதுதான் எம்ஜிஆருடன் அவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. அதே காலகட்டத்தில் கணபதி பட் என்பவர், ஜானகியை இங்கு நடிப்பதற்காக அழைத்து வந்திருந்தார். இங்குதான் எம்ஜிஆருக்கும், ஜானகிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் சேர்வதற்கு கருணாநிதி உறுதுணையாக இருந்தார்.'' என்கிறார் பொங்கலுார் பழனிசாமி.
எஸ்.ஏ.ராஜமாணிக்கம் உட்பட கோவையில் அவருக்கு ஏராளமான நண்பர்கள் இருந்ததாகக் கூறும் பொங்கலுார் பழனிசாமி, குறிப்பாக குனியமுத்துாரில் நிறைய நண்பர்கள் இருந்தார்கள் என்கிறார். அவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து வரச்சொல்லி, அவர்களுடன் பழைய நிகழ்வுகளைப் பற்றிப் பேசுவார். அவர்கள் கேட்ட உதவிகளையும் அவர்களுக்குச் செய்திருக்கிறார் என்கிறார் அவர்.
அவினாசி சாலை பாலம்; கட்டுவதற்கு அரை நுாற்றாண்டு காலம்
கோவையை கருணாநிதி மிகவும் நேசித்தார் என்பதற்கு, அவர் இங்கு கொண்டு வந்த பல திட்டங்களைச் சொல்லலாம் என்று குறிப்பிடும் கவியன்பன் கே.ஆர்.பாபு, இன்றைக்கு கோவை நகரின் பிரதான அடையாளமாக உள்ள அவினாசி சாலை மேம்பாலத்தை கருணாநிதி கட்டியதன் பின்னணியை பிபிசி தமிழிடம் விரிவாக விளக்கினார்.
''கோவையில் 1917 ஆம் ஆண்டில் ஒரே நாளில் இரண்டு மாநாடுகள் நடந்தன. ஒன்று அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்க மாநாடு. மற்றொன்று மாதவன் நாயர் தலைமையில் நடத்தப்பட்ட நீதிக்கட்சியின் மாநாடு. எதிரெதிர் கருத்துகளைக் கொண்ட இந்த இரண்டு மாநாடுகளிலும் ஒருமித்து நிறைவேற்றப்பட்ட ஒரே தீர்மானம்தான், அவினாசி சாலையில் பாலம் கட்ட வேண்டுமென்பது. ஆனால், சுதந்திரம் அடைந்த பின்னும் அது உடனே நிறைவேறவில்லை. காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது அதற்கு முயற்சி எடுக்கப்பட்டும் இறுதிவரை அது நடக்கவில்லை.'' என்கிறார் கே.ஆர். பாபு.
''ஆனால், கருணாநிதி 1972 ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்தபோது, இந்த பாலத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இரண்டே ஆண்டுகளில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு 1974 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. அரை நுாற்றாண்டு கடந்தும் இன்றைக்கு இருக்கும் போக்குவரத்தையும் தாங்கும் அளவுக்கு பொறியியல் நுட்பத்துடன் கட்டியதுதான் கருணாநிதியின் தொலைநோக்கும், கோவை மீதான தனிப்பாசத்துக்குமான ஆகச்சிறந்த உதாரணம்.'' என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு