ஹவாலா பணம் என்றால் என்ன?சட்டவிரோத கடத்தல் வழித்தடமாகும் கோவை-கேரளா

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

கோவையிலிருந்து பிரத்யேக உடைக்குள் மறைத்து பைக்கில் கேரளாவுக்குக் கடத்தப்பட்ட ரூ.72 லட்சம் பணம் மற்றும் 200 கிராம் தங்கத்தை கேரளா போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பிடித்து, அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், கோவை–கேரளா இடையே தங்கக் கடத்தலும், அதற்காக ஹவாலா முறையில் பணப்பரிவர்த்தனையும் அதிகரித்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தங்கம் மீதான இறக்குமதி வரியை ஒரு சதவிகிதமாக்கும் வரை தங்கக் கடத்தலைத் தடுப்பது கடினம் என்கின்றனர் தங்க நகை உற்பத்தியாளர்கள்.

தமிழக–கேரள எல்லையில் கோவை நகரம் அமைந்துள்ளதால், கோவைக்கும், கேரள மாநிலத்துக்குமான சமூக, வர்த்தகத் தொடர்புகள் அதிகம். மணல், செங்கல் போன்றவையும் அதிகளவில் கடத்திச் செல்லப்படுவதாக வருவாய் துறை தகவல்கள் கூறுகின்றன.

அதேபோன்று, இரு மாநிலங்களிலிருந்தும் போதைப் பொருட்கள், ரகசிய முறையில் கடத்திச் செல்லப்படுவதும் அதிகரித்துள்ளது என, கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் கூறுகின்றனர்.

போதைப் பொருள் கடத்தலை தடுக்க தீவிர சோதனை

கடந்த மே 27ம் தேதி கோவையிலிருந்து வேலந்தாவளம் வழியாக கேரளாவுக்கு போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்ட போலீசாருக்கு ரகசியமான தகவல் கிடைத்துள்ளது. அதனால் வேலந்தாவளம் வழியாக வந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை கேரளா போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரும், கொழிஞ்சாம்பாறை போலீசாரும் இணைந்து சோதனையிட்டுள்ளனர். அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேரைப் பிடித்து சோதனை செய்துள்ளனர். அதில், அவர்களின் வாகனங்களில் எந்தவிதமான பொருட்களும் பிடிபடவில்லை.

அதன்பின்பு நடந்ததை பிபிசி தமிழிடம் விளக்கிய கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறை சீனியர் சிவில் போலீஸ் அதிகாரி சுமதி, ''எங்களுடைய மாவட்ட தலைமை காவல் அதிகாரி அஜித்குமார் உத்தரவின் பேரில், இந்த பகுதியில் வழக்கமாக வாகன சோதனை நடத்துவோம். எங்கள் துறைக்கு ஒரு ரகசியத் தகவல் வந்ததாக மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததால், போதைப் பொருளைத் தேடியே வாகனங்களை சோதனையிட்டோம். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேரிடம்தான் இந்த பணம் பிடிபட்டது.'' என்றார்.

''அவர்கள் வந்த வாகனங்களிலும், அவர்கள் வைத்திருந்த பைகளிலும் எதுவும் பிடிபடவில்லை. ஆனால், அவர்களைத் தொடர்ந்து விசாரித்தபோது, 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். அதன்பின்பு, அவர்களின் உடைகளை சோதனையிட்டபோதுதான், ஒருவர் மேலாடைக்குள் பிரத்யேக உடை அணிந்திருந்தது தெரியவந்தது. அதைச் சோதித்தபோது அதற்குள் ரூ.72 லட்சம் ரொக்கப்பணம், 200 கிராம் தங்கம் இருந்தது. நாங்கள் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்துவிட்டோம்.'' என்றார்.

கேரள போலீசாரிடம் பிடிபட்டவர்கள், கோவை தியாகி குமரன் வீதியைச் சேர்ந்த சாகர் (வயது 32), சந்தீப் (வயது 35) மற்றும் மணிகண்டன் (வயது 40) என்பதும், இவர்கள் அனைவரும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் என்பதும் தெரியவந்துள்ளதாகவும் கேரள காவல்துறையினர் தெரிவித்தனர். கேரளாவில் ஹவாலா பணம் பிடிபடுவது சமீபத்திய ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறது.

* கடந்த மே 4 ஆம் தேதியன்று கோழிக்கோடு கொடுவள்ளி என்ற இடத்தில், கர்நாடகாவிலிருந்து வரும் வழித்தடத்தில் நடத்திய வாகன சோதனையில் கர்நாடகா பதிவெண் கொண்ட ஒரு காரில் ரகசியமாக உருவாக்கப்பட்டிருந்த பகுதியில் 4 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

* கடந்த மார்ச் 4 ஆம் தேதியன்று, ஆந்திராவிலிருந்து கோவை வழியாக பாலக்காடு வந்த ஆம்னி பஸ்சில் கோவை–வாளையார் அருகே போதைத் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தியபோது, ரூ.71.50 லட்சம் பிடிபட்டது.

* சென்ற ஆண்டு ஜனவரியில் பாலக்காடு அருகேயுள்ள குருடிக்காடு என்ற இடத்தில் நடத்திய வாகன சோதனையில் காரில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருந்த ஒரு பகுதியில் ஒரு கோடியே 90 லட்ச ரூபாய் பணத்துடன் மலப்புரத்தை சேர்ந்த முகம்மது குட்டி, முகம்மது நிசார் என்ற இருவர் போலீசாரிடம் சிக்கினர்.

* கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சித்துாரில் கேரள காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.2 கோடி ஹவாலா பணம் சிக்கியது.

இந்த சோதனைகளில் சிக்கிய பெரும்பாலான வாகனங்கள், கோவையிலிருந்தும், கோவை வழியாகவும் கேரளா சென்றவை.

இவ்வாறு பிடிபடும் ஹவாலா பணத்தையும் பிடிபடுபவர்களையும், அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறையிடம் போலீசார் ஒப்படைக்கின்றனர்.

கேரளாவிலும், கோவையிலும் தங்கம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் ஹவாலா பணத்துடன் அதிகளவில் பிடிபட்டிருப்பதையும் போலீசார் விவரிக்கின்றனர். அதில் ஒன்றாகவே தற்போது பணத்துடன் சேர்த்து தங்கமும் பிடிபட்டுள்ளது. பிடிபட்ட அந்தத் தொகையும் சட்டவிரோதமாக தங்கத்தை வாங்கவே எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

ஹவாலா முறைகேடு எப்படி, யாரால் நிகழ்த்தப்படுகிறது?

ஹவாலா முறைகேடு என்றால் என்ன, அது எப்படி நடத்தப்படுகிறது என்பது பற்றி, அமலாக்கத்துறையின் மங்களூரு உதவி இயக்குநர் கேசவராவ் பிபிசி தமிழிடம் விளக்கினார்.

''ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு முறையாக பண பரிமாற்றம் செய்வதாக இருந்தால், அதை வங்கி மூலமாகச் செலுத்திவிடலாம். ஆனால் அதற்கான வருவாய் வழியைக் காண்பிக்க வேண்டும். அதற்குரிய வருமான வரியையும் செலுத்த வேண்டும்.

அதைச் செலுத்தாமல் ஓரிடத்தில் ஒருவர் ஒப்படைக்கும் தொகையை, அவர் அல்லது அவர் சார்ந்த வேறு நபர் ஓரிடத்தில் பெற்றுக்கொண்டு, வரி ஏய்ப்பு செய்வதே ஹவாலா மோசடி. இதைச் செய்பவர்கள்தான் ஹவாலா ஆபரேட்டர்கள். பணம் கொடுக்கும் இடத்தில் ஒருவரும், பணம் வாங்கும் இடத்தில் ஒருவரும் என இருவர் இதைச் செய்வார்கள்.'' என்றார் கேசவராவ்.

இவ்வாறு முறைகேடாக பணப்பரிவர்த்தனை செய்வதில் ஹவாலா ஆபரேட்டர்கள் கடைபிடிக்கும் முறை பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தியுள்ள விசாரணையில் பலவிதமான தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன்படி, கோவையிலிருந்து கொல்கத்தாவுக்கு ஹவாலா முறையில் 10 லட்ச ரூபாய் பணம் கைமாறும்போது, கோவையிலுள்ள ஹவாலா ஆபரேட்டரிடம் அந்தத் தொகையைக் கொடுக்க வேண்டும். அவர் ஒரு பழைய 10 ரூபாய் நோட்டைக் கொடுப்பார். அந்த ரூபாயில் உள்ள எண்ணை, கொல்கத்தாவில் அந்த 10 லட்ச ரூபாய் தொகையை வாங்கும் நபருக்கு அனுப்பி வைக்க வேண்டும். வாங்கும் நபரின் தொடர்பு எண்ணையும் கொடுக்க வேண்டும். அங்குள்ள ஹவாலா ஆபரேட்டரிடம் அந்த நபர் சென்று, அந்த நோட்டின் எண்ணைக் கூறினால் அல்லது வாட்ஸ்ஆப் மூலமாகக் காண்பித்தால் அந்தத் தொகை அவரிடம் ஒப்படைக்கப்படும்.

முன்பு இந்த ரூபாய் நோட்டின் எண்ணை எஸ்எம்எஸ் மூலமாகப் பரிமாறிக் கொண்டிருந்தனர். இப்போது அந்த ரூபாய் நோட்டையே படமெடுத்து வாட்ஸ்ஆப்பில் அனுப்பி விடுகின்றனர் என்று கூறும் அமலாக்கத்துறை அதிகாரிகள், இதற்காக ஒரு லட்சத்துக்கு 300 –500 ரூபாய் அளவிலேயே ஹவாலா ஆபரேட்டர்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கும் என்கின்றனர்.

இந்த ஹவாலா ஆபரேட்டர்களால் இவ்வளவு பெரிய தொகையை எப்படி உடனுக்குடன் கைமாற்றித் தர முடிகிறது, அந்தளவுக்கு அவர்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என்பதற்கான காரணத்தையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விளக்குகின்றனர்.

''மும்பையில் தொழில் செய்யும் ஒருவர், கோவையில் ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டியிருக்கும். அதேபோல, இங்கே தொழில் செய்பவருக்கு வேறு இடத்திலிருந்து ஒருவர் பணம் அனுப்ப வேண்டியிருக்கும். இவர்களைப் போன்றவர்கள், ஹவாலா ஆபரேட்டர்களிடம் பணத்தைக் கொடுப்பதால், அவர்களிடம் எப்போதுமே பணமும் இருக்கும்; பரிவர்த்தனைக்கான டிமான்டும் இருக்கும். இவர்கள் வங்கி நெட்வொர்க் போலவே செயல்படுவார்கள். ஆனால் திடீர் ரெய்டில் இவர்களிடம் பணம் சிக்காது.'' என்கின்றனர்.

அங்கே போவது முதலீடு; இங்கே வருவது சம்பளம்

ஊழல் பணம், போதை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான பணம் ஆகியவைதான், இதுபோன்று ஹவாலா முறையில் அதிகளவில் பரிவர்த்தனை செய்யப்படுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோன்று, தொழிலதிபர்கள் பலர், கணக்குக் காட்டாமல், வரி செலுத்தாமல் வைத்திருக்கும் கருப்புப் பணத்தையும் இந்த முறையில் கைமாற்றிக் கொள்கின்றனர் என்கின்றனர்.

''கேரளாவைச் சேர்ந்த ஒருவர் மும்பையில் ஒரு நிலம் வாங்கும்போது, ஒரு கோடி ரூபாய்தான் கணக்கின் படி செலுத்தப்படும். மீதம் 2 கோடி ரூபாய் கருப்புப் பணமாகவே கைமாறும். அதை மும்பை கொண்டு செல்வதில் பல சிக்கல்கள் உள்ளன. அதற்குப் பதிலாக இப்படி ஹவாலா முறையில் கைமாற்றிக் கொள்வது வழக்கமாகவுள்ளது.'' என்று அமலாக்கத்துறை உதவி இயக்குநர் கேசவராவ் பிபிசி தமிழிடம் விளக்கினார்.

உள்நாட்டில் இதுபோன்று ஹவாலா மோசடி நடக்கும் நிலையில், வெளிநாட்டிலிருந்து பலரும் இதே முறையில் பணத்தை அனுப்புவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பெயர் கூற விரும்பாத கேரளாவின் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர், ''கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் துபை, சௌதி அரேபியா, அபுதாபி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் 10 லட்ச ரூபாய் சம்பாதித்து, அதை முறைப்படி அனுப்பினால் ஒன்றரை லட்ச ரூபாய் வரி உள்ளிட்ட பலவற்றுக்கும் போய்விடும். அதற்குப் பதிலாக ஹவாலா முறையில் இங்குள்ள தங்கள் குடும்பத்தினருக்கு பணத்தை கைமாற்றித் தந்தால் அந்தத் தொகையில் 20–30 ஆயிரம் ரூபாயைத் தவிர்த்து மற்ற தொகை முழுவதுமாக அவர்கள் குடும்பத்துக்குப் போய்விடும்.'' என்றார்.

''கேரளாவைச் சேர்ந்த பலர், அரபு நாடுகளில் தொழில் செய்கின்றனர். அதற்கு முதலீடு செய்வதற்கு இங்கிருந்து பணத்தை நேரடியாக அனுப்புவதில்லை. அங்கே பணியாற்றும் நபர்களை அங்கே அந்தத் தொகையை கொடுக்கச் செய்து, அவர்களின் குடும்பத்தினருக்கு இங்கேயுள்ள ஹவாலா ஆபரேட்டர் மூலமாக அந்தத் தொகையைக் கொடுத்துவிடுவார்கள். இதுதான் சர்வதேச அளவில் ஹவாலா மோசடியாக பல ஆண்டுகளாக நடந்து வருகிறது." என்றும் அவர் மேலும் விளக்கினார்.

இறக்குமதி வரியால்தான் தங்கக்கடத்தல் அதிகரிக்கிறதா?

இத்தகைய பணப்பரிமாற்றத்தை மிஞ்சும் வகையில், சமீபகாலமாக தங்கமும், கடத்தல் தங்கத்துக்குமான பணமும் ஹவாலா முறையில் கைமாற்றப்படுவதாக கேரள போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். அதிலும் கோவைக்கும், கேரளாவுக்கும் இடையே தங்க நகைத் தொழில் சார்ந்த பரிவர்த்தனைகள் அதிகம் நடப்பதால் தங்கம் விலை அதிகமான பின்பு, ஹவாலா மோசடி அதிகமாகிவிட்டதாகக் கூறுகின்றனர்.

கோவை தங்க நகைப்பட்டறை தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் கமலஹாசன் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவலின்படி, கோவையில் 40 ஆயிரம் தங்க நகைப்பட்டறைகள் செயல்படுகின்றன. அவற்றில் பணியாற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்களால், தினமும் 100 கிலோ தங்க நகை தயார் செய்யப்பட்டு, வெளிநாடு, வெளிமாநிலம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. இவற்றுக்குத் தேவையான தங்கத்தைக் கொண்டு வருவதில்தான் ஹவாலா மோசடி நடப்பதாகச் சொல்லப்படுகிறது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை ஒரு சதவிகிதமாகக் குறைக்காத வரையிலும், இத்தகைய சட்டவிரோத பணப்பரிவர்த்தனையும், தங்கக் கடத்தலும் நடப்பதைக் குறைப்பது மிகவும் கடினம் என்கிறார் கோயம்புத்துார் தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம். அப்படிக் குறைத்தால் அனைத்துத் தங்கமும் சட்டப்பூர்வமாகவே கைமாற்றப்படும் வாய்ப்புள்ளது என்கிறார் அவர்.

''இணை பொருளாதாரமயமாகிவிட்ட உலகச்சூழலில், வரி வித்தியாசத்தால் இதுபோன்று தங்கம் கடத்தப்படுவது தொடர்கிறது. தங்கம் மீதான இறக்குமதி வரியை 15 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாகக் குறைத்துள்ளது மத்திய அரசு. இப்போதும் ஜிஎஸ்டி 3 சதவிகிதத்துடன் சேர்த்து 9 சதவிகிதம் வரி செலுத்த வேண்டியுள்ளது. வங்கி அல்லது இடைத்தரகருக்கு ஒரு சதவிகிதம் சேர்த்தால் 10 சதவிகிதம் பவுனுக்கு 7 ஆயிரம் ரூபாய் வீதம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.'' என்று விளக்குகிறார் முத்து வெங்கட்ராம்.

வெளிநாட்டில் இதுபோன்று எந்த வரியும் இல்லாத நிலையில், அங்கேயிருந்து இங்கே வந்து தங்கத்தை சட்டப்படி கொண்டு வந்து தொழில் செய்து லாபம் பார்ப்பது கஷ்டம் என்று கருதும் பலரும், சட்டவிரோதமாக தங்கத்தைக் கொண்டு வந்து யாருக்காவது கிடைக்கும் லாபத்துக்கு விற்றுவிடுகின்றனர் என்று கூறும் முத்து வெங்கட், சமீபமாக தங்கக்கடத்தல் அதிகரிக்க இதுவே காரணம் என்கிறார்.

''தங்க நகை தொழில் செய்வோரின் நீண்ட கால கோரிக்கைப்படி, இறக்குமதி வரியை ஒரு சதவிகிதமாக மாற்றினால், எல்லோருமே சட்டப்பூர்வமாக தங்கத்தைக் கொண்டு வருவார்கள். வரி செலுத்தாமல் தங்கம் நுழைய வாய்ப்பே இருக்காது. தங்கம் கடத்துவோர், அதில் லாபமில்லை என்று அந்தத் தொழிலையே விட்டுவிடுவார்கள். மக்களுக்கும் அதனால் பெரும் பயன் கிடைக்கும்.'' என்கிறார் முத்துவெங்கட்ராம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு