You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அவகாசம் தராமல் அடித்து விரட்டினர்' - அனகாபுத்தூர் மறுகுடியமர்வால் கொந்தளிப்பில் மக்கள் - பிபிசி கள ஆய்வு
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"அங்கே சொந்தமாக வீடு கட்டி நன்றாக வாழ்ந்தோம். அதை இடிக்கும்போது மனம் உடைந்துவிட்டது. பக்ரீத் வரை அவகாசம் கொடுங்கள் என்றோம். 40 ஆண்டுகளாக வாழ்ந்த எங்களை ஒரே நாளில் வெளியேற்றிவிட்டார்கள்," எனக் கூறியபடியே கலங்குகிறார், சையது அலி பாத்திமா.
மே 21 அன்று, சென்னை அடையாற்றின் கரையோரம் வசித்த சுமார் 700 குடும்பங்களை நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு வெளியேற்றியது. அப்போது இடிக்கப்பட்ட வீடுகளில் சையது அலி பாத்திமாவின் வீடும் ஒன்று.
அரசாங்கத்தால் புதிதாக ஒதுக்கப்பட்ட வீடுகளில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மறுக்கின்றனர்.
அனகாபுத்தூரின் அடையாற்றுக் கரையோரத்தில் வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது? உண்மையைத் தெரிந்துகொள்ள பிபிசி கள ஆய்வு மேற்கொண்டது.
வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மக்கள்
சென்னை பல்லாவரத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அனகாபுத்தூர். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் அடையாற்றின் கரையோரமாக சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன.
அனகாபுத்தூரின் பிரதான இடத்தில் வசித்து வந்த இந்த மக்களில் பலர் தூய்மைப் பணியாளர்களாகவும் அருகிலுள்ள நிறுவனங்களில் ஒப்பந்த ஊழியர்களாகவும் பணிபுரிந்து வந்தனர்.
மே 21ஆம் தேதி அடையாறில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, அந்தப் பகுதியில் நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக இங்குள்ள வீடுகளை அகற்றுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அன்று தொடங்கி கடந்த சில நாட்களாக, தாய் மூகாம்பிகை நகர், டோபிகானா தெரு, ஸ்டாலின் நகர், காயிதே மில்லத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை அதிகாரிகள் இடிக்கத் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களை காவல்துறை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.
'வீடுகளில் இருந்து வெளியேற மாட்டோம்' எனக் கூறிய மக்களை தெருவில் இழுத்துச் சென்ற சம்பவங்களும் நடந்தன. பிறகு அவர்களின் வீடுகளும் முழுமையாக இடிக்கப்பட்டன. இதைப் பார்த்து அவர்கள் கதறியழுத காட்சிகள் இணையத்தில் பரவின.
கரையோரம் வசித்த மக்களுக்குப் போதிய அவகாசம் கொடுக்காமல் காவல்துறையைக் குவித்து அச்சுறுத்தி வெளியேற்றியதாக குற்றம் சாட்டுகிறார், அப்பகுதியில் வசிக்கும் ரமேஷ் பாபு.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஒரு வாரத்துக்கு முன்பு திடீரென நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் சுமார் 40 ஆண்டுகளாக வசித்து வந்த மக்களை அப்புறப்படுத்திவிட்டனர்" எனக் கூறுகிறார்.
'அச்சுறுத்தியே காலி செய்தனர்'
ஒவ்வொரு வீடாகச் சென்று அதிகாரிகள் பல்வேறு வகைகளில் மிரட்டியதாகக் கூறும் ரமேஷ்பாபு, "தாமதமாக வந்தால் வீடு தர மாட்டோம். பொருட்களை இலவசமாக ஏற்றிச் செல்வதற்கு உதவி செய்ய மாட்டோம் எனக் கூறி வெளியேற்றிவிட்டனர்," என்கிறார்.
ஸ்டாலின் நகரில் இடிக்கப்பட்ட தனது வீட்டின் முன்பு நின்றிருந்த சசிகுமார், "என் மகன் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி செல்ல இருக்கிறார். எங்கள் குடும்பத்தில் அவர்தான் முதல் தலைமுறை பட்டதாரி. அனகாபுத்தூர் முகவரியை வைத்து கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க இருந்தேன். அரசுக் குடியிருப்பில் வசித்தால் கடன் கிடைக்குமா எனத் தெரியவில்லை," என்கிறார்.
தற்போது வரை முறையாக வீட்டு வரி கட்டி வருவதாகக் கூறும் சசிகுமார், "ஓர் ஆண்டுக்கு முன்புகூட ஒருவர் வீடு கட்டினார். அப்போது அதிகாரிகள் எதுவும் கூறவில்லை. கரையோரம் உள்ளதால் வெள்ளம் வரும் என்றார்கள். ஆனால், எவ்வளவு மழை பெய்தாலும் இங்கு நீர் தேங்காது," எனக் கூறினார்.
மக்களை வெளியேற்றிய பிறகு பூங்கா, உயிரினங்கள் வளர்ப்பு ஆகிய திட்டங்கள் இங்கு வரவுள்ளதாக அதிகாரிகள் கூறியதாகக் குறிப்பிடும் சசிகுமார், "மழை வெள்ளம் அதிகமாக வந்தால் அப்போது உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படாதா என அதிகாரிகளிடம் கேட்டபோது, பதில் இல்லை" என்கிறார்.
"அடையாற்றின் கரையோரம் பிரபலமான கட்டுமான நிறுவனங்கள் சுவர்களை எழுப்பி விளம்பரம் செய்து வருகின்றன. அவர்களை அரசு கண்டுகொள்ளவில்லை" எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
கள நிலவரம் என்ன?
மே 29ஆம் தேதியன்று அனகாபுத்தூருக்கு பிபிசி தமிழ் சென்றபோது, மசூதி ஒன்றைத் தவிர அனைத்து வீடுகளும் இடிக்கப்பட்டிருந்தன. 'பக்ரீத் வரை மட்டுமே இந்த மசூதி இருக்கும். அதன்பிறகு இடிக்கப்பட்டுவிடும்' என அங்கிருந்த தலைமைக் காவலர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், 'இந்த இடத்தில் நீண்டநேரம் நிற்க வேண்டாம். சிசிடிவி மூலம் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது' எனக் கூறி அங்கிருந்து நம்மை வெளியேற்றுதில் அவர் உறுதியாக இருந்தார். சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அனகாபுத்தூரில் அரசின் கணக்குப்படி வெளியேற்றப்பட்ட 593 குடும்பங்களுக்கு சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள கீரப்பாக்கம், பெரும்பாக்கம், நாவலூர் ஆகிய இடங்களில் நகப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அங்கு பிபிசி தமிழ் சென்றபோது, வீடுகளில் குடியேறிய மக்களுக்கு பயோ மெட்ரிக் உள்பட அவர்களின் தனிப்பட்ட விவரங்களைச் சேகரிக்கும் பணியில் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
'வீடுகளைப் பிரிப்பதிலும் பாரபட்சம்'
இடிக்கப்படும் வீடுகளுக்கு மாற்றாக அரசு வீடுகளை ஒதுக்கினாலும் "அவை போதிய வசதிகளுடன் இல்லை" எனக் கூறுகிறார், மோகன பிரியா. இவர் பல்லாவரத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
"அனகாபுத்தூரில் 40 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தோம். இங்கு ஏதோ குடோனில் அடைத்தது போல் உள்ளது. குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கும் பயமாக உள்ளது. வீட்டின் அருகில் சாக்கடை ஓடுகிறது. இங்கிருந்து எப்படி வேலைக்குப் போவது எனத் தெரியவில்லை," எனக் கூறுகிறார்.
"பெரும்பாக்கத்தில் ஒதுக்கப்பட்ட வீட்டை அதிகாரிகள் முன்கூட்டியே காட்டவில்லை" எனக் கூறும் மோகன பிரியா, "என் பெற்றோருக்கு வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கத்திலும் எனக்கு பெரும்பாக்கத்திலும் பிரித்து வீடு கொடுத்துள்ளனர். உதவிக்கு என யாரையும் அழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது," எனக் கூறுகிறார்.
தான் வேலை பார்க்கும் இடத்திற்கும் பெரும்பாக்கத்துக்கும் இடையே சுமார் 25 கி.மீ தொலைவு உள்ளதாகக் கூறும் அவர், "தினசரி சம்பளமாக 400 ரூபாயை வாங்குகிறேன். இதில் பெட்ரோலுக்கு பாதிப் பணம் போய்விடும்" எனவும் வேதனைப்பட்டார்.
அனகாபுத்தூரில் காயிதே மில்லத் நகரில் மளிகைக் கடை நடத்தி வந்த ஹமீதா கனியின் பேச்சிலேயே கோபம் வெளிப்பட்டது. "மின்வசதி, குடிநீர் வசதி எல்லாம் கொடுத்தார்கள். என் கணவர் இறந்துவிட்டார். அதற்கான சடங்குகள்கூட முடியவில்லை. பத்து நாள் அவகாசம் கொடுங்கள் எனக் கேட்டும் கொடுக்காமல் அடித்து விரட்டினார்கள்," எனக் கொந்தளிக்கிறார்.
"பெரும்பாக்கத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட வீடு சரியில்லை" எனக் கூறும் அவர், "பாத்ரூமில் இருந்து தண்ணீர் வெளியே போகவில்லை. எங்களுடன் வந்த ஒருவர் மீது ஜன்னல் உடைந்து விழுந்து கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மழைக்கு இந்த வீடு என்ன ஆகும் எனத் தெரியவில்லை" என்கிறார்.
'புல்டோசர் வைத்து இடித்துவிட்டார்கள்'
பிரியாணி கடையில் வேலை பார்த்து வரும் முஸ்தாக் அகமது பேசும்போதே கலங்கினார். "படப்பையில் உள்ள உறவினர் வீட்டில் பொருள்களை வைத்துள்ளேன். அனகாபுத்தூரில் பெரிய மகள் 8வது படிக்கிறார். சின்ன மகள் ஆறாவது படிக்கிறார். அவர்களின் எதிர்காலத்திற்கு என்ன செய்வது? இங்கிருந்து எப்படி வேலைக்குப் போவது?" எனக் கேள்வி எழுப்பினார்.
"எனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் மூன்று நாட்களாகத் தண்ணீர் வரவில்லை. இதோ வருகிறோம் எனக் கூறிவிட்டுப் போனார்கள். இதுவரை வரவில்லை" எனவும் முஸ்தாக் அகமது குறிப்பிட்டார்.
இதய அறுவை சிகிச்சை செய்துள்ள தனது தந்தைக்கு 5வது மாடியில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறும் சையது அலி பாத்திமா, "லிஃப்ட் வேலை செய்யவில்லை. அவரை எப்படி மேலே கூட்டிச் செல்வது?" எனக் கேள்வி எழுப்பினார்.
நீதிமன்ற உத்தரவு என்று கூறி தங்கள் வீடுகளை அரசு இடித்ததாகக் கூறும் அவர், "எங்கள் வீடுகளை இடிக்க இடிக்க மனம் உடைந்துவிட்டது. உணவு, பணம் ஆகியவற்றை அரசு கொடுக்கலாம். ஆனால், நாங்கள் உழைத்துக் கட்டிய வீட்டுக்கு இணையாக எதையும் தர முடியாது" எனக் கூறுகிறார்.
அனகாபுத்தூரில் இருந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து குடியேற்றம் செய்யப்பட்ட மக்களும் வசிக்கின்றனர். அரசின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் போதிய வசதிகள் இல்லாமல் சிரமப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு ஊரக தொழில்துறை மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் விளக்கம் கேட்பதற்கு பிபிசி தமிழ் முயன்றது.
"சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடர் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறுவதால் தற்போது பேச இயலாது" என அவரது உதவியாளர் ராஜன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் விளக்கம்
அதேநேரம், அனகாபுத்தூர் விவகாரம் தொடர்பாக, மே 21ஆம் தேதி தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆற்றங்கரையில் வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதற்கு ஒப்புதல் தராதவர்களை உடனே அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த அறிக்கையில், "நதிநீர் சீரமைப்புத் திட்டம் என்பதால், மழைக்கால வெள்ளத் தடுப்பு காரணங்களுக்காக ஆற்றங்கரையில் வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்களை அரசு உரிய உதவிகளுடன் மறு குடியமர்வு செய்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, மறு குடியமர்வின்போது, சமுதாய வளர்ச்சித் திட்டங்கள், குடும்ப அட்டை மாற்றம் செய்தல், விதவை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு திட்ட உதவி மாற்றம் செய்தல், கல்வி, அங்கன்வாடி, தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிச் சேர்க்கை போன்ற அனைத்து திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுவது என்ன?
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் உயரதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது. 'பெயர் குறிப்பிட வேண்டாம்' எனக் கூறிவிட்டு மக்களின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்தார்.
"கடந்த 2009ஆம் ஆண்டு முதல் சென்னை நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை மூலம் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறு ஆகியவற்றின் கரையோரம் வசிக்கும் மக்களை மீள்குடியேற்றம் செய்து வருகிறோம்" எனக் கூறினார்.
"கடந்த ஆட்சியில் கூவம் கரையோரம் வசித்த மக்களை மறுகுடியமர்வு செய்தனர். தற்போது அடையாறு ஆற்றங்கரையோரம் வசித்த மக்களை மறுகுடியமர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன" எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆற்றங்கரையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள வீடுகள் மட்டுமே இடிக்கப்படுவதாக அவர் கூறினார். "அப்படியானால், கரையில் இருந்து 50 மீட்டர் தாண்டியும் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதே?" என்றோம்.
"பல்லாவரம் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுநீர், சுத்திகரிப்பு செய்து ஆற்றில் விடப்படுகிறது. ஆற்றின் ஓரம் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்குக் கூடுதல் இடம் தேவைப்படுவதால் அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டன" என்று விளக்கமளித்தார்.
மறுகுடியமர்வு மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளில் சிக்கல் நீடிப்பது குறித்துக் கேட்டபோது, "மக்கள் குடியேறிய பிறகே வசதிகள் செய்து தரப்படுகின்றன. முன்னரே அவற்றை மேற்கொள்ளும்போது பராமரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது" என்கிறார்.
அடையாற்றுக் கரையோரம் உள்ள தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சலுகை வழங்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, "நீர்வள ஆதாரத்துறை வரையறுத்துள்ள 50 மீட்டருக்குள் எந்த நிறுவனம் இருந்தாலும் அவை அகற்றப்படும். அதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார்" என்று மட்டும் பதில் அளித்தார்.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான பெரும்பாக்கம், கீரப்பாக்கம், நாவலூர் ஆகிய பகுதிகளில், மறுகுடியமர்வு செய்யப்பட்ட மக்கள் அரசின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கின்றனர். அவர்களுக்கு அரசின் அனைத்து திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளதாக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கூறுகிறது.
ஆனால், தாங்கள் வாழ்ந்த பகுதிகளில் கிடைத்த கல்வி, மருத்துவ வசதிகள் மட்டுமின்றி, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட புதிய குடியிருப்புகளில் சரிவர இல்லை என்ற மக்களின் குமுறலை நேரில் கேட்க முடிந்தது.
தமிழக அரசு குறிப்பிடும் நீதிமன்ற உத்தரவின் பின்னணி
தமிழ்நாட்டில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 2023ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 90 ஆயிரம் நீர்நிலைகள் ஆக்ரமிக்கப்பட்டு இருப்பதாகவும் அவற்றைப் பாதுகாப்பதற்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கங்காபூர்வாலா, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிப் பாதுகாப்பது தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் மீதான நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க 2023ஆம் ஆண்டு டிசம்பர் வரை தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அவகாசம் வழங்கியிருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு 2004ஆம் ஆண்டே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பினர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதுதொடர்பான பணிகளைக் கண்காணிக்கவும் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'குழுக்கள் அமைத்தாலும் எத்தனை ஹெக்டேர் அரசு நிலங்கள் ஆக்ரமிப்பில் உள்ளன? அவற்றில் எத்தனை நீர்நிலைகள் உள்ள? ஆக்கிரமிப்புகளைக் கண்காணிக்க எத்தனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன?' என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி, தலைமைச் செயலரையும் எதிர்மனுதாரராகச் சேர்த்தனர்.
இதுதொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர். இதன் அடிப்படைலேயே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாக, பெயர் குறிப்பிட விரும்பாத நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு