இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி - பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் ஜொலித்த ஜடேஜா

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் 104 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

ஆமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 2) தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 0 - 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ்

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக, ஜான் கேம்பல் மற்றும் டேகனரின் சந்தர்பால் களமிறங்கினர்.

சந்தர்பால் 3வது ஓவரில், ரன்கள் ஏதும் எடுக்காமல் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக 6வது ஓவரில், 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜான் கேம்பல், பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு சீரான இடைவெளியில், விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. கேப்டன் ரோஸ்டனும் 24 ரன்கள் மட்டுமே எடுத்து, சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். 44.1 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சு, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களைத் திணறடித்தது.

குறிப்பாக, முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் யாருமே 50 பந்துகளுக்கு மேல் எதிர்கொள்ளவில்லை. ஜஸ்டின் கிரீவ்ஸ் மட்டுமே 32 ரன்கள் எடுத்திருந்தார், மற்ற அனைத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் 30 ரன்களை தாண்டவில்லை.

இந்திய அணியில், முகமது சிராஜ் 14 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் எடுத்திருந்தனர்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ்

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் நடக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் ராகுல் சதமடிப்பது இது இரண்டாவது முறை.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

சிறப்பான முறையில் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சீல்ஸ் பந்தில், 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார் ஜெய்ஸ்வால்.

அதன்பிறகு களமிறங்கிய சாய் சுதர்சன், 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம், சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியாவில் நடக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் ராகுல் சதமடிப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர், 2016இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவர் 199 ரன்கள் எடுத்திருந்தார்.

197 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து, வாரிக்கன் பந்தில் ஆட்டமிழந்தார் கே.எல்.ராகுல்.

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துருவ் ஜூரெல் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.

ராகுல் மட்டுமல்லாது, துருவ் ஜூரெல் (125 ரன்கள்), ரவீந்திர ஜடேஜா (104 ரன்கள்) ஆகியோரும் சதமடித்தனர். குறிப்பாக துருவ் ஜூரெல் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 128 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்தநிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது.

ஜடேஜா 104 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சில் ரோஸ்டன் சேஸ் இரண்டு விக்கெட்டுகளையும், ஜேடன் சீல்ஸ், ஜோமல் வாரிக்​கன், காரி பியர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்திய அணியின் வெற்றி

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

286 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

100 ரன்களைக் கடப்பதற்கு முன்பாகவே 8 விக்கெட்டுகளை இழந்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இறுதியில், 45.1 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் அலிக் அதனேஸ் மட்டுமே 38 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற அனைவருமே 30 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்திருந்தனர். இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் 104 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெஸ்ட் இண்டீஸ் அணி

இந்த வெற்றியின் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய கடைசி 5 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணியிடம் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் எதுவும் மூன்றாம் நாளைத் தாண்டி நீடிக்கவில்லை.

அதேபோல, 2002க்குப் பிறகு இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடப்பு டெஸ்ட் தொடரின் 2வது போட்டி அக்டோபர் 10 - 14 தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு