You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''நீங்க தென்னை மரத்தில இருந்து விழுந்தீங்கன்னு நெனச்சுட்டு இருக்கீங்களா?'': கமலா ஹாரிஸ் குறித்து உற்சாகமடையும் சமூக ஊடகம்
- எழுதியவர், ஆனா ஃபகுய்
- பதவி, பிபிசி செய்திகள்
கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போவதாக அறிவித்த சில நாட்களில், அமெரிக்க இளைஞர்கள் சமூக வலைதளங்களில் மீம்களாக, வீடியோக்களாக பல விஷயங்களை காண நேரிட்டது.
திடீரென அமெரிக்காவில் தென்னை மரங்கள் பற்றி மக்கள் அதிகம் பேசுகின்றனர். ஒரு பிரிட்டிஷ் பாப் பாடகர் அமெரிக்காவின் அரசியல் சக்தியாக மாறியேவிட்டார். வெளிர்பச்சை நிறம் புத்தெழுச்சி பெற்றுள்ளது.
அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் பின்வாங்குவதாக கடந்த வாரம் அறிவித்தார். பிறகு தன்னுடைய ஆதரவை கமலா ஹாரிஸுக்கு வழங்கினார். அதன் பின் சமூக ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த சில மணிநேரங்களில், கமலா ஹாரிஸின் பிரசாரத்தில் உற்சாகம் அதிகரித்தது.
எக்ஸ் தளத்தில், பைடன் - ஹாரிஸ் பரப்புரை பக்கத்தின் பெயர் 'KamalaHQ' என்று மாற்றப்பட்டது. பிரிட்டிஷ் பாப் பாடகரான சார்லி XCX, கமலா ஹாரிஸுக்கு வழங்கிய வெளிப்படையான ஆதரவுக்கு பின்னர், அவருடைய எக்ஸ் தளத்தில் உள்ள பேனர் பகுதியில் இடம் பெற்றிருந்த அதே வெளிர்பச்சை நிற பேனரை 'KamalaHQ'வின் எக்ஸ் பக்கத்திலும் மாற்றினார்கள்.
அதிபரின் திடீர் பின்வாங்கலும் கமலாவின் அடுத்தடுத்த எழுச்சியும் தேர்தலில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியிருக்கும் அதே சூழலில், சமூக வலைதள பயனர்கள், குறிப்பாக இளைஞர்கள் இந்த மாற்றத்தைக் கண்டு உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஆனால், நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் முக்கிய வாக்கு வங்கியாக திகழும் இளைஞர்கள் மத்தியில் இதே உற்சாகம் தொடர இந்த வைரல் வீடியோக்களும், ஆன்லைன் அப்டேட்களும் உதவுமா, அதன் வேகம் தொடருமா என்பது தெளிவாக தெரியவில்லை.
ஆனால் இந்த சமூக வலைதள பதிவுகள் கமலா ஹாரிஸுக்கு பலனளிக்கின்ற வகையில்தான் இருக்கிறது. பைடன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த இரண்டு நாட்களுக்குள் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வந்து குவிந்துள்ளது. நன்கொடை பெறுவது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து 44 ஆயிரம் கறுப்பின பெண்கள் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். 58 ஆயிரம் நபர்கள் தன்னார்வலர்களாக தங்களை பதிவு செய்து கொண்டனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வைரலாகும் கமலா ஹாரிஸின் 'சொதப்பல்' நேர்காணல்கள்
குடியரசுக் கட்சியினர் இதற்கு முன்பு கமலா ஹாரிஸ் நேர்காணலில் சறுக்கிய, சொதப்பிய தருணங்களை ஆன்லைனில் பதிவிட்டு வந்தனர். ஆனால் கடந்த சில வாரங்களாக அவரின் ஆதரவாளர்கள் அதே வீடியோக்களை பதிவிட்டு அவரை அன்பானவராகவும், தங்கள் வாழ்வியல் நிகழ்வுகளை தொடர்படுத்திக் கொள்ள இயலும் நபராகவும் கமலா ஹாரிஸை காட்டி வருகின்றனர்.
கமலா தன்னுடைய அம்மாவைப் பற்றி வெள்ளை மாளிகை நிகழ்வு ஒன்றில் கூறியதன் வீடியோவும் இவ்வாறாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது.
"உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு என்னதான் ஆச்சு. நீங்க எல்லாரும் தென்னை மரத்தில இருந்து விழுந்தீங்கன்னு நெனச்சுட்டு இருக்கீங்களா," என்று தன்னுடைய அம்மா பேசியதை நினைவு கூறி சிரித்திருக்கிறார் கமலா.
ஆனால் அந்த வீடியோ பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது அதே நிகழ்வை மையப்படுத்தி தங்களின் சமூக வலைதள பக்கங்களில் தென்னை மற்றும் பனை எமோஜிகளை பதிவிட்டு தங்களின் ஆதரவை வெளிக்காட்டி வருகின்றனர் கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள்.
"உங்கள் எதிராளி ஏதாவது கூறினால் அதை நீங்கள் எடுத்து உங்களுக்கு ஏற்றவகையில் மாற்றிக் கொண்டு அவர்களின் அதிகாரத்தை நீக்கிவிடுகிறீர்கள்" என்று கூறுகிறார் கேத்தரின் ஹென்சென். நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும், கேத்தரின் டிஜிட்டல் தொலை தொடர்பு எவ்வாறு வாக்கு வங்கிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆய்வு செய்து வருகிறார்.
மீம்கள் முக்கியமானவை. மீம்ஸ் என்பது மக்களுக்குத் தகவல்களைத் தெரிவிக்கும் ஒரு சிக்கலான வழியாகும் என்று கூறுகிறார் அவர்.
பாடகர் சார்லி XCX கமலாவுக்கு ஆதரவு தெரிவித்தது சமூக வலைதளங்களில் பேச்சுப்பொருளானது.
பைடன் தன்னுடைய ஆதரவை கமலா ஹாரிஸுக்கு வழங்கிய பின்னர் சார்லி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் 'கமலா இஸ் பிராட்' (kamala IS brat) என்று பதிவிட்டிருந்தார். அது அவருடைய புதிய இசை ஆல்பத்தை குறிப்பதாகவும் இருந்தது.
இது குறித்து பேசிய கேத்தரின், இந்த வார்த்தை (Brat) பெண்களை மையப்படுத்தி உபயோக்கும் போது தங்களின் பாதையை தாங்களே தேர்வு செய்து கொள்ளும் பெண்களை குறிப்பதாக அமைகிறது என்று குறிப்பிடுகிறார்.
செவ்வாய் கிழமை மதியம் வரை அந்த ஒரு பதிவு 50 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு ஃப்ளோரிடாவில் உள்ள பார்க்லாண்ட் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து "மார்ச் ஃபார் அவர் லைஃப்ஸ்" என்ற இயக்கத்தை ஆரம்பித்த டேவிட் ஹாக் இது குறித்து தன்னுடைய கருத்தை பதிவிட்டிருந்தார்.
இளைஞர்களின் வாக்குகளை பெற, இந்த பதிவு ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் சிறியது அல்ல என்று கூறுகிறார், 24 வயதான ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர் டேவிக் ஹாக்.
மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள விளம்பரங்களைக் காட்டிலும் இந்த பதிவு நிறைய இளைஞர்களை சென்று சேர்ந்திருக்கும் என்று கூறுகிறார் ஆனி வூ ஹென்றி. கடந்த காலத்தில் ஜனநாயகக் கட்சியின் பரப்புரைகளில் டிஜிட்டல் அரசியல் வியூக வகுப்பாளராக இவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
பைடன் - ஹாரிஸ் பரப்புரைக்காக டிக்டாக்கில் 300 வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டன. பைடன் போட்டியில் இருந்து பின்வாங்கிய பிறகு பதிவிட்ட மூன்று வீடியோக்கள், அந்த பக்கத்தில் வாங்கிய லைக்குகளில் 20% லைக்குகளை பெற்றிருப்பதாக கூறுகிறார் ஹென்றி.
அடிமட்டத்தில் இருந்து ஆதரவு
2008ம் ஆண்டு பாரக் ஒபாமாவின் பரப்புரையில் பயன்படுத்தப்பட்ட சமூக வலைதள உத்திகளைப் போன்றது கமலா ஹாரிஸின் இன்றைய பரப்புரை என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
"இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற, முழு ஈடுபாடு கொண்ட, பாப் கலாசாரத்தில் இருக்க கூடிய ஒருவர் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டு வெகுநாட்கள் ஆகிவிட்டன" என்று கூறுகிறார் பிலிப் டீ வெல்லிஸ். ஒபாமாவின் பரப்புரைக்காக அரசியல் விளம்பர ஆலோசகராக அவர் பணியாற்றினார்.
ஆனால், அது வாக்குகளாக மாறும் என்று அர்த்தமில்லை என்றும் அவர் எச்சரிக்கிறார்.
ஆன்லைன் அரசியல் உற்சாகம் என்பது ஆரம்ப காலங்களில் இருந்தே ஒரு பரப்புரையாக வடிவமைக்கப்பட்டு பின்னர் வாக்களர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களுக்கு வழங்கப்படுகிறது என்று சிலர் மேற்கோள்காட்டுகின்றனர். அதனால்தான் இந்த உந்துதல் அடிமட்டத்தில் இருந்து வரும் ஆதரவாக கருதப்படுகிறது என்று மேற்கோள்காட்டுகிறார் கேத்தரின்.
ஒபாமாவின் வெற்றியும் கூட அடிமட்டத்தில் இருந்து வந்த ஆதரவு அடிப்படையில் அமைந்ததுதான். ஆனால் அதன் பின்னணி வேறு. டிக்டாக் என்ற ஒன்று இல்லவே இல்லை. ஃபேஸ்புக் அப்போதுதான் கல்லூரி வளாகங்களுக்கு வெளியே பிரபலமாகி வந்தது என்று குறிப்பிடுகிறார் கேத்தரின்.
நவம்பரில் ஏதேனும் மாற்றத்தை இது உருவாக்குமா?
ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் கலாச்சார அறிஞர் ஆய்வுகள், ஊடக செயல்பாடுகள் மற்றும் சமூக இயக்கங்கள் துறையின் பேராசிரியராக பணியாற்றி வரும் ரேச்சல் கிரான்ட் இந்த தருணம் ஹாரிஸ் அவரின் பல்வேறு அடையாளங்களை காண அனுமதிக்கிறது என்கிறார்.
ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த அனுபவம் அல்லது கருக்கலைப்பு உரிமை போன்றவற்றை குறித்து அவர் பேசும் காணொளிகளை, தங்களின் எண்ணங்களை எதிரொலிக்கும் ஒன்றாக இளம் வாக்காளர்கள் பார்க்கலாம்
நான்கு மாதத்தில் நடைபெற இருக்கும் ஒரு கடினமான தேர்தலுக்கு நடுவே, கமலா ஹாரிஸுக்கு குவிந்த கோடிகணக்கான டாலர்கள் வாக்காளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இருப்பினும், ஜனநாயகக் கட்சியினர் வாக்காளர் எண்ணிக்கையை உறுதிப்படுத்த வைரல் மற்றும் முக்கிய பிரச்சினைகளை அடையாளப்படுத்துதலுக்கு இடையே சமநிலையை பின்பற்ற வேண்டும்.
"அவரது பிரசாரம் தேங்காய் மற்றும் மீம்களில் மட்டுமே கவனம் செலுத்த கூடாது," என்று கூறுகிறார் ஹென்றி. மாறாக அவர் அமெரிக்க மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)