கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபரானால் அது இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா?

பிரிட்டன் பிரதமராக ரிஷி சூனக் பதவியேற்றபோது இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பிரிட்டனின் முதல் இந்து பிரதமர் ரிஷி சூனக் ஆவார்.

சூனக் பிரதமரானால் இந்தியாவுடனான உறவுகள் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சூனக்கின் ஆட்சிக் காலத்தில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அதாவது Free trade agreement (FTA) பற்றி எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.

இது தவிர பட்டதாரி விசா திட்டம், பிரிட்டன் செல்வதற்கான தகுதி சம்பள வரம்பை அதிகரிப்பது போன்ற சூனக்கின் பல முடிவுகள் இந்தியர்களுக்கு சாதகமாக இருக்கவில்லை.

அதேபோல் இந்திய அடையாளத்துடன் தொடர்புடைய கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றதும் அது குறித்து இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. ரங்கோலி வரைந்து கமலாவுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

பின்னர் 2021 ஜூன் மாதம் பிரதமர் மோதி அமெரிக்கா சென்றபோது, ​​கமலா ஹாரிஸை இந்தியாவுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் துணை அதிபரான பிறகு ஒருமுறை கூட அவர் இந்தியா வரவில்லை. கமலா துணை அதிபராக பதவியேற்றது, இந்திய-அமெரிக்க உறவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தற்போது ​​ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலகியதை அடுத்து கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்கான போட்டியில் கலந்து கொள்ளும் சாத்தியகூறு காரணமாக அது பற்றிய விவாதம் சூடு பிடித்துள்ளது. கூடவே டொனால்ட் டிரம்பின் கட்சியும் அவரை குறிவைத்துள்ளது.

அடிக்கடி விவாதத்தில் இடம்பெறும் அவரது இந்திய அடையாளம் குறித்து கமலா ஹாரிஸின் நிலைப்பாடு என்ன?

கடந்த காலங்களில் இந்தியா குறித்து கமலா ஹாரிஸ் கூறியது என்ன, கமலா வெற்றி பெற்றால் அமெரிக்க-இந்திய உறவில் தாக்கம் ஏற்படுமா?

அமெரிக்காவில் கமலா ஹாரிஸை பாராட்டிய பிரதமர் மோதி

2021 ஜூன் மாதத்தில் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோதியும், கமலா ஹாரிஸும் காணப்படும் படங்கள் சமூக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டன.

பிரதமர் மோதி மற்றும் கமலா ஹாரிஸின் பாவனைகள் குறித்து மக்கள் வெவ்வேறு வழிகளில் விளக்கம் அளித்தனர்.

இதற்குப் பிறகு 2023 ஜூனில் பிரதமர் மோதி அமெரிக்கா சென்றபோது ​​​​அவர் கமலா ஹாரிஸைப் பாராட்டினார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோதி தனக்கு பின்னால் அமர்ந்திருந்த, கமலா ஹாரிஸ் குறித்துப் பேசினார். “இந்தியாவில் வேர்கள் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவில் உள்ளனர். அதில் சிலர் இந்த சபையில் பெருமையுடன் அமர்ந்திருக்கிறார்கள். அதில் ஒருவர் என் பின்னால் இருக்கிறார்''என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி பிரதமர் மோதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

"சமோசா காகஸ் (Samosa Caucus) இப்போது சபையின் சுவையில் கலந்துவிட்டதாக என்னிடம் கூறப்பட்டது. அது வளர்ந்து இந்திய உணவு வகைகளின் பன்முகத்தன்மையை இங்கு கொண்டு வரும் என்று நம்புகிறேன்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

சமோசா காகஸ் என்பது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் பிரதிநிதிகளின் குழுவிற்குப் பயன்படுத்தப்படும் சொல்.

பிரதமர் மோதி கமலா ஹாரிஸின் எந்த வேர்கள் பற்றிப் பேசினாரோ அதன் காரணமாகவும் அவர் இப்போது குறிவைக்கப்படுகிறார்.

கமலா ஹாரிஸ் ஏன் குறிவைக்கப்படுகிறார்?

2024 அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகிய பிறகு அவர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தார். பைடனின் ஆதரவு காரணமாக கமலா தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் மற்றும் ஆசிய, கறுப்பின துணை அதிபராக ஆனார். .

ஆனால் அதே நேரத்தில் அவர் மீதான தாக்குதலும் அதிகரித்துள்ளது.

டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கிளென் க்ரோத்மேன் சமீபத்திய பேட்டியில்,”கமலா ஹாரிஸின் இனப் பின்னணி காரணமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பல ஜனநாயகக் கட்சியினர் கருதுவதாக நான் நம்புகிறேன்,” என்று கூறினார்.

இப்போது கேள்வி என்னவென்றால், கமலா ஹாரிஸ் தனது இந்திய அடையாளம் குறித்து என்ன சொல்கிறார் என்பதுதான்.

கமலா ஹாரிஸ் தனது இந்திய அடையாளம் குறித்து என்ன சொன்னார்?

ரிஷி சூனக்கின் குடும்பம் இந்தியாவைச் சேர்ந்தது. ஆனால் அவர் தனது இந்திய அடையாளத்தை விட தனது இந்து அடையாளத்தைப் பற்றியே வெளிப்படையாகப் பேசி வருகிறார்.

கமலா ஹாரிஸ் தனது தாயைப் பற்றி பேசும்போது மட்டுமே பெரும்பாலும் தனது இந்திய அடையாளத்தை குறிப்பிட்டு வருகிறார்.

"என் அம்மா ஷியாமளா 19 வயதில் தனியாக அமெரிக்காவிற்கு வந்தார். அவர் ஒரு விஞ்ஞானி, ஒரு சிவில் உரிமை ஆர்வலர், தனது இரு மகள்களுக்கும் தன்னம்பிக்கையை விதைத்தவர்," என்று 2023ஆம் ஆண்டில் கமலா ஹாரிஸ் ட்வீட் செய்திருந்தார்.

கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியாவின் ஓக்லாண்டில் பிறந்தார். கமலாவின் பெற்றோர் வெளியில் இருந்து அமெரிக்கா வந்தனர்.

கமலாவின் தாய் இந்தியாவில் பிறந்தவர், தந்தை ஜமைக்காவில் பிறந்தார். கமலாவின் தாயார் டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

கமலாவுக்கு ஐந்து வயதாக இருந்தபோது ​​அவரது பெற்றோர் பிரிந்துவிட்டனர்.

கமலாவை தாய் ஷியாமளா கோபாலன் ஹாரிஸ் வளர்த்தார். ஷியாமளா இந்தியா வரும்போதெல்லாம் அவருடன் கமலா வருவார்.

கமலா தனது சுயசரிதையான 'தி ட்ரூத் வி டோல்ட்’ இல் தனது பெயரின் அர்த்தத்தை விளக்கியிருந்தார்.

"என் பெயரின் அர்த்தம் தாமரை மலர். இந்திய கலாச்சாரத்தில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தாமரை செடி தண்ணீருக்கு அடியில் வளரும். பூக்கள் நீரின் மேற்பரப்பிற்கு மேலே பூக்கும். வேர்கள் ஆற்றுப் படுகையில் உறுதியாக இணைக்கப்பட்டிருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜமைக்கா, இந்தியா மற்றும் அமெரிக்கா. இத்தகைய பல அடையாளங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமலா, அமெரிக்கர் என்று அழைக்கப்படுவதையே தான் விரும்புவதாக கூறினார்.

இருப்பினும் 2020ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின்போது ​​கமலா இந்திய உணவை சமைத்து, தென்னிந்தியாவைப் பற்றி ஒரு வீடியோவில் பேசுவதை பார்க்க முடிந்தது.

சாதம், தயிர், பருப்பு, இட்லி என்று நிறைய சாப்பிட்டு வளர்ந்ததாக கமலா கூறியிருந்தார்.

கமலா 2014இல் வழக்கறிஞர் டக்ளஸ் எம்ஹாஃப்பை மணந்தபோது சடங்குகளில் ​​இந்திய மற்றும் யூத மரபுகள் பின்பற்றப்பட்டன.

இந்தியா தொடர்பான விஷயங்களில் கமலாவின் நிலைப்பாடு

கமலா ஹாரிஸ் இந்திய அடையாளம் குறித்து பேசி வருகிறார். இந்தியா தொடர்பான விஷயங்களிலும் தனது கருத்தை தெரிவித்து வருகிறார்.

துணை அதிபர் ஆவதற்கு முன்பே கமலா ஹாரிஸ் பொது வாழ்வில் ஈடுபட்டிருந்தார்.

அல்மேடா மாகாணத்தில் உள்ள மாகாண வழக்கறிஞர் அலுவலகத்தில் கமலாவின் தொழில் வாழ்க்கை தொடங்கியது. கமலா 2003-இல் சான் பிரான்சிஸ்கோ மாகாண வழக்கறிஞரானார்.

பின்னர் அவர் கலிஃபோர்னியாவின் முதல் கறுப்பின அட்டர்னி ஜெனரல் ஆனார்.

இந்த நியமனத்துக்குப் பிறகு ஜனநாயகக் கட்சியில் கமலாவின் அந்தஸ்து படிப்படியாக உயர்ந்தது. 2017இல் அவர் கலிஃபோர்னியாவில் இருந்து செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2019-இல் இந்திய அரசு 370வது பிரிவை நீக்கியபோது ​​​​ஹாரிஸ் அதை எதிர்த்தார்.

"காஷ்மீர் மக்கள் தனியாக இல்லை என்பதை நாங்கள் நினைவூட்ட விரும்புகிறோம். நிலைமையை நாங்கள் கண்காணித்து வருகிறோம்," என்று ஹாரிஸ் கூறியிருந்தார்.

இருப்பினும் ஹாரிஸ் துணை அதிபரானபோது ​​​​அவரது அணுகுமுறை மாறியது போல காணப்பட்டது. கோவிட் தொற்றை திறம்பட சமாளித்ததாக கூறி பிரதமர் மோதியை பாராட்டினார்.

இந்திய அமெரிக்க சமூகத்துடன் இணைவதற்கு கமலா மிகக் குறைவான முயற்சிகளையே எடுத்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர் என்று ஏஷியா நிக்கேயின் செய்தி கூறுகிறது.

"உலகில் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில் நமது நாடுகளில் உள்ள கொள்கைகள் மற்றும் அமைப்புகளை பாதுகாப்பது முக்கியம். எனது சொந்த அனுபவத்தில் இருந்து ஜனநாயகத்தின் மீதான இந்திய மக்களின் அர்ப்பணிப்பை நான் அறிவேன் என்று ஹாரிஸ் மோதியிடம் கூறினார்,” என்று 2021 இல் பிரதமர் மோதியின் அமெரிக்க வருகைக்குப் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

ஹாரிஸின் இந்த கருத்து, இந்தியாவிடம் மனித உரிமைகள் பிரச்னையை அமைதியான முறையில் எழுப்ப பிரதமர் மோதிக்கு அளிக்கப்பட்ட ஒரு சமிக்ஞையாக பார்க்கப்பட்டது.

கமலா வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு என்ன பயன்?

கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் களமிறங்கியது முதல் இந்தியாவில் ஓரளவு குறைவான எதிர்வினைகளையே பார்க்க முடிகிறது.

கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் இந்தியா-அமெரிக்கா உறவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஹாரிஸ் வெற்றி பெற்றால் அது இந்திய-அமெரிக்க உறவை விட அமெரிக்க அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறார்கள்.

“கமலா ஹாரிஸ் தனது இந்திய அடையாளத்தை முன்வைக்கவில்லை. அவர் தனது ஜமைக்கா அடையாளத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறார்,” என்று தெற்காசிய கல்வி நிறுவன இயக்குனர் மைக்கேல் குகல்மேன் தனது அறிக்கையில் கூறியுள்ளதாக ஏபி செய்தி முகமை தெரிவிக்கிறது.

"இந்தியர்கள் கமலா ஹாரிஸைப் பார்க்கும்போது ​​அவர்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அல்ல, ஒரு அமெரிக்கத் தலைவரையே பார்க்கிறார்கள்" என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஹேப்பிமேன் ஜேக்கப் ஏபி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

அவர் துணை அதிபராக இருந்த காலத்தில் இந்தியா-அமெரிக்க உறவுகளில் எதிர்பார்த்த அளவிற்கு தாக்கம் ஏற்படவில்லை ன்று ஜேக்கப் குறிப்பிட்டார்

"கமலா அதிபரானால் உறவுகள் முன்பு இருந்ததைப் போலவே இருக்கும். இந்திய அரசு பைடன் நிர்வாகத்துடன் நல்ல உறவைக் கொண்டுள்ளது. கமலா ஹாரிஸும் அதில் ஒரு பகுதியாக இருந்துள்ளார்,” என்று சர்வதேச விவகார நிபுணர் ஹர்ஷ் பந்த் கூறியதாக என்டிடிவி ப்ராஃபிட் தெரிவிக்கிறது.

டிரம்ப் வெற்றி பெற்றால் இந்தியா மீது என்ன தாக்கம் ஏற்படும்?

டொனால்ட் டிரம்பின் வெற்றிக்காக இந்தியாவில் சில ஹோமங்கள் நடத்தப்படுவதை பார்க்க முடிகிறது. 2020 தேர்தலின் போதும் இந்தியாவில் இதே போன்ற ஹோமங்கள் நடந்தன.

ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போதே இந்தியாவை குறிவைத்து தாக்க ஆரம்பித்துள்ளார் என்பது வேறு விஷயம்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளை விற்பனை செய்வதற்கு இந்தியா அதிக வரி விதிப்பதாகவும், இதற்கு இந்தியாவை அல்ல, அமெரிக்காவைதான் பொறுப்பாக்குவதாகவும் சமீபத்தில் டிரம்ப் கூறினார்.

டிரம்ப் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு பல சவால்கள் வரலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்துவது, மாசு விஷயத்தில் இந்தியாவுக்கு உதவாமல் இருப்பது போன்ற பல முடிவுகளை டிரம்ப் எடுக்கக்கூடும் என்று செய்தியாளர் சஷாங்க் மட்டு சமூக ஊடகங்களில் எழுதினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வேர்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

ஒரு பக்கம் டிரம்பின் துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி.வான்ஸின் மனைவி உஷா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். மறுபுறம், அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக ஆகும் போட்டியில் கமலா ஹாரிஸ் உள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)