மத்திய பட்ஜெட்டில் பிகார், ஆந்திராவுக்கு சிறப்புத் திட்டம் - தமிழ்நாடு புறக்கணிப்பா? பாஜக விளக்கம்

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

2024-25ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதன் அடிப்படை என்ன?

இந்த நிதி நிலை அறிக்கையில் ஆந்திரப்பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் பல திட்டங்கள் குறிப்பிடப்பட்டு அவற்றுக்குத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால், மற்ற பல மாநிலங்கள் இந்த பட்ஜெட் குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளன.

அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி, இதனை 'ஆந்திரா - பிகார் பட்ஜெட்' என விமர்சித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'ஆந்திரா - பிகார் பட்ஜெட்'

இந்த நிதிநிலை அறிக்கைக்கு தமிழ்நாட்டில் இருந்து கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்த முறை நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும்போது தமிழ்நாட்டின் சில தேவைகளைக் கவனத்தில் கொள்ளவேண்டுமெனக் கூறி, அது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதில், "மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல், கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள, புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்" என்று முதலமைச்சர் கூறியிருந்தார்.

'இந்தியாவிற்கான பட்ஜெட் அல்ல'

ஆனால், இந்த நிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் மெட்ரோ ரயில் திட்டங்கள், புதிய ரயில்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாகத் தெரியவில்லை. மாறாக, அரசியல் காரணங்களுக்காக பிகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஆளுவோருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் போன்றே உள்ளது." என்று கூறினார்.

அரசியல் சுயலாபங்களுக்காக குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்துவரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது என கடுமையாக விமர்சித்தார் முதலமைச்சர்.

"இந்திய மக்களாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களைச் சிதைத்திடும் வகையில் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள பாரதிய ஜனதா கட்சி அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

'தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அநீதி'

இந்த நிதிநிலை அறிக்கையில் பிகார், அசாம் போன்ற மாநிலங்களுக்கு வெள்ள துயர்நீக்கத்திற்கான நிதி குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தனது பட்ஜெட் உரையில் இது குறித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிகார் மாநிலம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாகவும் இந்த வெள்ளம் நேபாளத்தில் இருந்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

“நேபாளத்தில் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் திட்டங்கள் முன்னேற்றமடையவில்லை. வெள்ள துயர்நீக்க நடவடிக்கைகளுக்காக நாங்கள்11,500 கோடி ரூபாயை வழங்கவிருக்கிறோம். இந்தியாவுக்கு வெளியில் துவங்கும் பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளால் அசாமில் ஆண்டுதோறும் வெள்ளம் ஏற்படுகிறது. அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகியவை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்படுகின்றன. அவர்களுக்கு உதவிகள் அளிக்கப்படும்" என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

இதனைச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

"இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க பேரிடர் நிவாரணத்தை வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியபோதிலும், இந்த பட்ஜெட்டிலும் போதிய நிதி வழங்கப்படவில்லை. 37,000 கோடி ரூபாய் பேரிடர் நிவாரணமாக வழங்குவதற்கான ஒரு விரிவான அறிக்கையினை தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த நிலையில், மத்திய அரசு சுமார் 276 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை வழங்கியுள்ளது." என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும், "ஆனால் இன்று உத்தராகண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்கள் மட்டுமின்றி, பிகார் மாநிலத்திற்கு மட்டும் 11,500 கோடி ரூபாய் பேரிடர் தடுப்புப் பணிகளுக்காக வழங்கப்பட உள்ளது. இது, தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அநீதியாகும்" எனக் குற்றம்சாட்டியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

அதேபோல, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு நிதி எதையும் வழங்காதது, கோயம்புத்தூர், மதுரை ரயில் திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஆகியவை குறித்தும், புதிய ரயில் திட்டங்கள், நெடுஞ்சாலைத் திட்டங்கள் இல்லாதது குறித்தும் முதல்வரின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் மாநில அரசின் பங்கே அதிகமாக இருக்கும் நிலையில், கூடுதல் நிதி எதையும் வழங்காமல் வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் முதல்வரின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த அறிக்கை வெளியான பிறகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 27ஆம் தேதி பிரதமர் தலைமையில் முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிடி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

மேலும் புதன்கிழமையன்று தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதிமுகவின் விமர்சனம்

எதிர்க்கட்சியான அ.தி.மு.கவும் இந்த நிதி நிலை அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தமிழ்நாட்டின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதாக கூறியிருக்கிறார்.

"இந்த வரவு - செலவு அறிக்கை வடமாநிலங்களையும் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை." என்று கூறியுள்ளார்.

குறிப்பாக தமிழகத்திற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது என்றும் எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சில மாநிலங்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகையா?

நிதிநிலை அறிக்கையில் சில மாநிலங்களை மட்டும் குறிப்பிட்டு, திட்டங்களை ஒதுக்கீடு செய்வது முன்னெப்போதும் இல்லாத வழக்கம் என்கிறார் பொருளாதாரப் பேராசிரியரும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினருமான ஜோதி சிவஞானம்.

"இந்தியாவின் நிதிநிலை அறிக்கை என்பது நாட்டின் ஒட்டுமொத்த வருவாயும் எப்படி செலவு செய்யப்படுகிறது என்பதற்கான அறிக்கை. இதில் சில மாநிலங்களை மட்டும் குறிப்பிட்டு அவற்றுக்குத் திட்டங்களை அறிவிப்பது முன்னெப்போதும் நடக்காதது." என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு செய்ய நிதி கமிஷன் இருக்கிறது. எவ்வித பாரபட்சமும் இல்லாமல் நிதிப் பகிர்வை செய்ய வேண்டியது அதன் பொறுப்பு. இல்லாவிட்டால் மத்திய அரசின் திட்டங்கள் மூலமாக மாநிலங்களுக்கு நிதி அளிக்கலாம் அல்லது மத்திய அரசே திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தலாம். ஆனால், ஒரு மாநில அரசு கேட்கிறது என்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்வது சரியல்ல. ஏனென்றால் அது மத்திய அரசுக்கு சொந்தமான நிதி அல்ல. எல்லா மாநிலங்களுக்கும் சொந்தமானது." என்று கூறினார்.

நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது, அனால் அதுமட்டும் விஷயமல்ல, சில மாநிலங்களுக்கு மட்டும் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு பல மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதுதான் விஷயம் என்கிறார் ஜோதி சிவஞானம்.

பா.ஜ.க கூறுவது என்ன?

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் சரியானவையல்ல என்கிறார் தமிழக பா.ஜ.கவின் துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி.

"சென்னை மெட்ரோ ரயில் முதல் அலகிற்குத்தான் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும்போது இரண்டாவது அலகிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றே தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்கும்போது ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணத்தைத் தராதது போல பேசுவது சரியல்ல. இந்தப் பிரச்னை மத்திய அரசும் மாநில அரசும் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனை." என்று கூறுகிறார் அவர்.

தொடர்ந்து பேசுகையில், "ஆந்திர மாநிலத்தில் பத்தாண்டுகளாக தலைநகரம் இல்லை, அந்தப் பிரச்னையைத் தீர்த்திருக்கிறோம் என மகிழ வேண்டும். அதைவிடுத்து குறை சொல்வது சரியல்ல. நிடி ஆயோக்கை புறக்கணிப்பது தமிழக மக்களைப் புறக்கணிப்பதற்குச் சமம்" என்கிறார் நாராயணன் திருப்பதி.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் சில மாநிலங்கள் நிதி நிலை அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுவதை மறுத்திருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், " ஒவ்வொரு மாநிலமும் அவர்கள் முன்வைத்த திட்டங்களின் அடிப்படையில் தாங்கள் கோரியவற்றைப் பெற்றிருக்கும். எந்த மாநிலமும் விடுபடவில்லை. எந்த மாநிலத்தையும் விட்டுவிடுவது எங்கள் நோக்கமுமில்லை. பிரதமர் துவக்கிவைத்த எல்லாத் திட்டங்களும் எல்லா மாநிலங்களுக்குமானவை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆந்திராவிற்கும் பிகாருக்கும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்ன?

இந்த நிதிநிலை அறிக்கையில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி உதவியாக பலதரப்பு முகமைகள் மூலம் நடப்பு நிதியாண்டில் 15,000 கோடி ரூபாய் ஏற்பாடு செய்யப்படும். அதேபோல, போலாவரம் நீர்ப்பாசனத் திட்டத்தை முடிப்பதற்குத் தேவையான நிதி உதவி செய்யப்படும் என நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.

ஆனால், இந்த நிதியை மத்திய அரசு நேரடியாக அளிக்கப்போவதில்லை என்றும் பலதரப்பு முகமைகள் மூலமாக அளிக்கப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அது கடனுதவியா, கடனுதவி என்றால் கடனை யார் திருப்பிச் செலுத்துவது போன்றவை விளக்கப்படவில்லை.

அதேபோல, பிகாருக்கும் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் பிகாரில் உள்ள நாளந்தாவில் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒடிசாவிலும் சுற்றுலாவை மேம்படுத்த நிதியுதவி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, பிகார், அசாம், உத்தரகாண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேச மாநிலம் ஆகியவற்றுக்கும் வெள்ள துயர் நீக்க நடவடிக்கைகளுக்கு உதவி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)