You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த பெண் - இப்போது உண்மை வெளிவந்தது எப்படி?
- எழுதியவர், டாம் மெக்ஆர்தர்
- பதவி, பிபிசி செய்தியாளர்
அமெரிக்காவில் செய்யாத கொலைக்காக 43 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த பெண் ஒருவரின் தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
நவம்பர் 1980இல், அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் செயின்ட் ஜோசப் பகுதியை சேர்ந்த நூலகப் பணியாளர் பாட்ரிசியா ஜெஷ்கேவைக் கத்தியால் குத்திய வழக்கில் சாண்ட்ரா ஹெம்மி என்ற 20 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஒரு மனநல மருத்துவமனையில் கடுமையான மயக்க மருந்தின் வீரியத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். மயக்கத்தில் இருந்த அவர் அந்த சமயத்தில் அளித்த வாக்குமூலத்தைத் தவிர, இந்த கொலை குற்றத்தில் அவரைத் தொடர்புப் படுத்தும் எந்த ஆதாரமும் இல்லை. இது அவரது வழக்கின் மறு ஆய்வில் கண்டறியப்பட்டது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இப்போது சாண்ட்ராவுக்கு 64 வயதாகிறது. அவருக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் மேற்கொள்ளும் பிரதிநிதிகளின் கூற்றுபடி, அமெரிக்க வரலாற்றில் செய்யாத குற்றத்துக்காக நீண்ட காலம் தண்டனை அனுபவித்த ஒரே பெண் இவராக தான் இருப்பார் என்கின்றனர்.
இன்னசென்ஸ் ப்ராஜெக்ட் (Innocence Project) அமைப்பில் உள்ள அவரது சட்டக் குழு, "ஹெம்மி இறுதியாக அவரது குடும்பத்துடன் இணைந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த வழக்கில் இருந்து அவரது பெயரை முழுமையாக நீக்க தொடர்ந்து போராடுவோம்" என்று கூறினர்.
அவர் தற்போது சிறையிலிருந்து விடுதலை ஆகிவிட்டார் என்றாலும், அவரது வழக்கு இன்னும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.
சர்க்யூட் கோர்ட் நீதிபதி ரேயான் ஹார்ஸ்மேன் ஜூன் 14 அன்று வெளியிட்ட 118 பக்க தீர்ப்பில், ஹெம்மியின் தண்டனை ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். அவர் குற்றமற்றவர் என்பதற்கான தெளிவான ஆதாரம் ஹெம்மியின் வக்கீல்களிடம் இருப்பதாக தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
"ஒட்டுமொத்த சாட்சியங்களும் ஹென்னி உண்மையில் குற்றமற்றவர் என்பதை ஆதரிப்பதாக இந்த நீதிமன்றம் நம்புகிறது" என்று கூறி, நீதிபதி ஹார்ஸ்மேன் தீர்ப்பை வாசித்து முடித்தார்.
உண்மையில் கொலை செய்தது யார்?
ஹென்னி குற்றம்சாட்டப்பட்ட கொலை வழக்கில் ஒரு போலீஸ் அதிகாரிக்கு நேரடி தொடர்பிருப்பதை, அப்போதைய அதிகாரிகள் புறக்கணித்ததாக சமீபத்திய விசாரணை கண்டறிந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த அதிகாரி, தன்னுடன் பணியாற்றிய மைக்கேல் ஹோல்மன் என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பிருப்பதை சுட்டிக்காட்டும் ஆதாரங்களை புறக்கணித்துள்ளார். ஹோல்மன் தற்போது உயிருடன் இல்லை.
மற்றொரு குற்றத்திற்காக சிறைக்குச் சென்ற ஹோல்மன், 2015இல் இறந்துவிட்டார். அவருக்கு எதிரான ஆதாரங்களை உள்ளூர் போலீசார் புறக்கணித்ததாக சமீபத்திய மதிப்பாய்வு கண்டறிந்துள்ளது.
கொலை நடந்த அன்று, ஹோல்மனுக்கு சொந்தமான டிரக் அப்பகுதியில் காணப்பட்டது. ஆனால் அவருக்கு எதிரான சாட்சியங்களை உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும் கொலை செய்யப்பட்ட பாட்ரிசியா ஜெஷ்கேவின் கிரெடிட் கார்டை ஹோல்மன் பயன்படுத்தினார், பின்னர் அதை ஒரு பள்ளத்தில் இருந்து எடுத்ததாக சமாளித்துவிட்டார்.
ஜெஷ்கேயின் தந்தையால் அடையாளம் காணப்பட்ட ஒரு ஜோடி தனித்துவமான தங்க காதணியும் ஹோல்மன் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. அது கொல்லப்பட்ட பாட்ரிசியாவின் காதணி என்பதை அவரின் தந்தை உறுதிபடக் கூறினார்.
ஹோல்மன் பற்றிய இந்த தகவல்கள் எதுவும் அந்த நேரத்தில் ஹெம்மியின் வழக்கறிஞர் குழுவுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதை விசாரணை மதிப்பாய்வு வெளிப்படுத்தியது.
குடும்பத்துடன் ஒன்றிணைந்த ஹெம்மி
விசாரணையின் போது, ஹெம்மி ஒரு மனநல மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக அனுமதிக்கப்பட்ட பின்னர், அவருக்கு ஆன்டிசைகோடிக் மருந்து மற்றும் சக்தி வாய்ந்த மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டன. அந்த மருந்துகளின் வீரியத்தால் மயக்க நிலையில் இருந்த ஹெம்மியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பதிவு செய்தனர்.
ஹெம்மி 12 வயதிலிருந்தே அவ்வப்போது மனநல சிகிச்சை பெற்று வந்தார்.
விசாரணையின் போது, அவரது பதில்கள் ஒற்றை வார்த்தைகளாக தான் இருந்தன. மேலும் "என்ன நடக்கிறது என்பதை அவர் முழுமையாக அறியவில்லை" என்று நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.
சில சமயங்களில் அவரால் தன் தலையை நிமிர்த்தி நேராக கூட பார்க்க முடியவில்லை. மருந்துகளின் பக்க விளைவால் தசைப்பிடிப்பு வலியும் இருந்தது.
நீதிபதி ஹார்ஸ்மேனின் மதிப்பாய்வு, தடயவியல் ஆதாரங்கள் ஹெம்மிக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தமில்லை என்று குறிப்பிட்டது.
அவருக்கு இந்த கொலை செய்ய எந்த நோக்கமும் இல்லை, அவர் இந்த கொலையை செய்ததற்கான எந்த சாட்சிகளும் இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
சாண்ட்ரா ஹெம்மி இறுதியாக வெள்ளிக்கிழமை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் தனது சகோதரியுடன் வாழ்க்கையை மீண்டும் தொடங்குவார் என்று கன்சாஸ் சிட்டி ஸ்டார் ஊடகம் தெரிவித்துள்ளது.
ஹெம்மி விடுதலை ஆன பிறகு, அருகிலுள்ள பூங்காவில் தன் குடும்பத்துடன் மீண்டும் இணைந்தார். அங்கு அவர் தனது சகோதரி, மகள் மற்றும் பேத்தியைக் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினார்.
அவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். ஹெம்மி விரைவில் தன் தந்தையை சந்திப்பார் என்று அவரின் சட்டக்குழு கூறியது.
ஹெம்மியின் வழக்கறிஞர் சீன் ஓ பிரையன் ஸ்டார் ஊடகத்திடம் பேசுகையில், "ஹெம்மி தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்திருக்கிறார். அவருக்கு சமூகப் பாதுகாப்பு தேவை. அவருக்கு மேலும் பல உதவி தேவைப்படும்" என்று கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)