தமிழ்நாடு அரசின் புதிய திட்டம்: வீடு கட்ட ஆன்லைன் மூலம் உடனடி அனுமதி பெறுவது எப்படி?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் 2,500 சதுர அடி நிலத்தில் வீடு கட்டுவோர், இணைய வழியில் விண்ணப்பித்தவுடன் கட்டுமானப் பணிகளைத் துவங்கும் நடைமுறையைத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாட்டில் 2,500 சதுர அடி நிலத்தில் 3,500 சதுர அடி பரப்பளவுக்குள் வீடு கட்டுவோர் இணைய வழியிலேயே விண்ணப்பித்து, உடனடியாக ஒப்புதல் பெறும் நடைமுறையை தமிழ்நாடு அரசு துவங்கியிருக்கிறது. இது தொடர்பாக தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கட்டட அனுமதிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் திட்டம் என்பது என்ன?

தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கு இணையதளத்தின் மூலம் ஒற்றைச் சாளர அனுமதி அளிக்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. 'தமிழ்நாடு திட்ட அனுமதிக்கான ஒற்றைச் சாளர முறை' என்று அதற்குப் பெயர். ஆனால், திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் என்பது சிறிய வீடுகளுக்கானது.

2,500 சதுர அடி மனையில் 3,500 சதுர அடி பரப்பிற்குள் வீடு கட்டுவோர் இப்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த ஒற்றைச் சாளர அனுமதிக்கு https://onlineppa.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பிப்பது எப்படி? யார் விண்ணப்பிக்கலாம்?

வீடு கட்டுவதற்கான வரைபடங்களைத் தயார் செய்ய பொதுமக்களால் முடியாது. இதற்கென உரிமம் பெற்ற பொறியாளர்கள் மட்டுமே அதனை உருவாக்க முடியும். இதுபோன்ற உரிமம் பெற்ற பொறியாளர்கள் உருவாக்கி அளிக்கும் வரைபடத்தை வைத்து வீட்டின் உரிமையாளரோ, சம்பந்தப்பட்ட பொறியாளரோ விண்ணப்பிக்க முடியும்.

எவ்வளவு நாட்களில் அனுமதி கிடைக்கும்?

உடனடியாகக் கிடைக்கும். இணையதளம் மூலம் விண்ணப்பித்து விட்டு, அனுமதிக்குக் காத்திருக்க வேண்டியதில்லை என்றும் பொறியாளர்கள் விதிமுறைப்படி வரைபடத்தைத் தயார் செய்து விண்ணப்பித்துவிட்டு, உடனடியாக கட்டுமானப் பணிகளைத் துவங்கலாம் என்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இதன் அர்த்தம் கட்டட வரைபடம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதல்ல. அவை விதிமுறைகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த வரைபடத்தை சமர்ப்பிக்கும் பொறியாளர்கள்தான் பொறுப்பாவார்கள்.

அனுமதி பெற்ற வரைபடம் மீறப்பட்டால் என்ன ஆகும்?

இந்த உடனடி அனுமதி சுயசான்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. கட்டட உரிமையாளர்கள் தாங்கள் அளித்த வரைபடத்தையே மீறினால், முன்பு வரைபடம் மீறப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ, அதே நடவடிக்கை எடுக்கப்படும்.

யாருக்கு கூடுதல் பலன்?

ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில்தான் அதிகமாக 800 சதுர அடி முதல் 2000 அடிக்குள் வீடுகட்டுவது அதிகம் என்பதால், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் பலன் பெறுவார்கள். நகர்ப்புறங்களிலும் இந்த அளவில் வீடு கட்டுபவர்களுக்கு பலன் கிடைக்கும். முன்பு இதுபோன்ற அனுமதிகளைப் பெற 3 மாதமாவது ஆகும். இப்போது உடனடியாகப் பணிகளைத் துவங்கலாம்.

கேள்வி: தொழிற்சாலைகளுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒருவர் தெரியாமல் வீடு கட்ட விண்ணப்பித்துவிட்டு, வேலையை துவங்கினால் என்ன ஆகும்?

பதில்: அது சாத்தியமில்லை. விண்ணப்பிக்கும் போதே, இடத்தையும் சர்வே எண்ணையும் தேர்வு செய்யும்போது, அந்த நிலம் வேறு உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தால், அந்த சர்வே எண்ணுக்கு விண்ணப்பிக்க முடியாது. ஆகவே இதுபோன்ற பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

கேள்வி: இப்படி விண்ணப்பிக்கும்போது பரிசீலனை, கட்டமைப்பு - வசதி கட்டணங்கள் கிடையாது என அரசு சொல்கிறது. அப்படியானால் வீடு கட்டுவோர் அரசுக்கு எந்த அனுமதிக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லையா?

பதில்: அப்படியல்ல. பரிசீலனைக் கட்டணம் அதாவது Scrutiny Fee என்பது இதுபோன்ற வீடுகளுக்கு மிகக் குறைவாகவே இருக்கும். அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தரைத் தளம் மற்றும் முதல் தளம் மட்டும் கட்டுவோருக்கு ஏற்கனவே எந்தக் கட்டணமும் கிடையாது. ஆகவே, இதில் விண்ணப்பிப்போர் பிற கட்டணங்கள் அனைத்தையும் செலுத்தியாக வேண்டும். அதாவது, கட்டட உரிமக் கட்டணம், சாலை அமைப்பதற்கான கட்டணம், உள்ளூராட்சி அமைப்புகளுக்கான கட்டணம், கட்டுமானத் தொழிலாளர் வாரியத்திற்கான கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்தியாக வேண்டும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)