கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அவரால் டிரம்பை சமாளிக்க முடியுமா?

    • எழுதியவர், சாரா ஸ்மித்
    • பதவி, வட அமெரிக்க ஆசிரியர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்த பிறகு, டொனால்ட் டிரம்பை வீழ்த்த சரியான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டிய பெரும் சவாலை எதிர்கொண்டு வருகிறது ஜனநாயகக் கட்சி.

இப்போதைக்கு கமலா ஹாரிஸின் பெயர் தான் அடுத்த வேட்பாளர் எனப் பேசப்பட்டு வருகிறது.

அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி எதிர்கொண்டு வரும் சவால்கள், வெற்றிக்கான வாய்ப்பாக மாறுமா என்பதன் மீதே அனைவரின் பார்வையும் இருக்கிறது.

பென்சில்வேனியாவில் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகின்றன.

இந்தத் தாக்குதலின் காரணமாக, கடந்த 8 நாட்களில் அமெரிக்க அதிபர் தேர்தலின் திசையே மாறியிருக்கிறது.

மிகக்குறுகிய காலகட்டத்தில், டொனால்ட் டிரம்பை சுற்றி ஒரு வட்டம் உருவாகி இருக்கிறது. தாக்குதலுக்குப் பிறகு நடந்த குடியரசுக் கட்சியின் மாநாட்டில் டிரம்பை ஒரு தேவதை போல வரவேற்றனர்.

குடியரசுக் கட்சியால் அதிகாரப் பூர்வமாக அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் டிரம்ப்.

விவாதத்திற்கான யோசனை

இதற்கு நேரெதிராக, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான தற்போதைய அதிபர் ஜோ பைடன் தனது வேட்புமனுவை திரும்பப்பெற்று வெளியேறியுள்ளார்.

அதிபர் விவாதங்களில் கடந்த ஒரு மாதமாக ஜோ பைடனின் செயற்பாடு மோசமானதாக இருந்தது. தொலைக்காட்சியில் வெளியான அதிபர் விவாதத்திற்கு பிறகு, ஜனநாயகக் கட்சியினர் சற்றே பீதி அடைந்தனர்.

அது மட்டுமின்றி, பைடனை வேட்பாளராக தொடரலாமா என்ற சந்தேகங்களும் வலுக்க ஆரம்பித்தன.

டிரம்பை விவாதத்திற்கு அழைத்து சவால் விடுவதற்கு முன் பைடன் பின்தங்கி இருந்தார். இதனால், தேர்தல் பிரசாரத்தின் மூலம் பைடன் டிரம்பை முந்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.

அச்சமயத்தில் தான் அதிபர் விவாத யோசனை முன்னெடுக்கப்பட்டது. டிரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன செய்வார்? என்ற விதத்தில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பது பைடனுக்கு நன்மையாக அமையும் என்றும், இதன் மூலம் ஆதரவு பெருகும் என பைடன் குழுவினர் நம்பினர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பைடனின் வயது மீது குவிந்த கவனம்

டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்க பட வேண்டுமா? வேண்டாமா? என்ற பிரச்னையை மையமாக வைத்து தேர்தல் நடத்தப்பட்டால், அது நமக்கு நன்மை விளைவிக்கும், அதன் மூலம் வெற்றியடையலாம் என்ற அடிப்படையில் பைடனின் பிரசாரம் அமைந்திருந்தது.

ஆனால், அதிபர் விவாதத்தில் பைடனின் குளறுபடியான பேச்சு மற்றும் மோசமான செயற்பாடு சூழ்நிலையை மொத்தமாக மாற்றியது.

இதன் பிறகு உடனடியாக ஒட்டுமொத்த தேர்தல் கவனமும், பைடன், அவரது ஆரோக்கியம், அவரது வயது மற்றும் இவர் அதிபர் தேர்தலை எதிர்கொள்ள தகுதியானவரா என்ற ரீதியில் மாறியது.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் யார்?

மேலும் அதிபர் பைடன் விவாதத்தில் சுட்டிக்காட்டிய சில குறிப்புகள் தெளிவாகவோ, புரிந்துகொள்ளும் படியாகவோ இல்லை. இதற்கு அதிபருக்கு சளி பிரச்னை இருந்தது, அவர் ஜெட் லேக் இல் (Jet Lag) இருந்தார் என முன்வைக்கப்பட்ட சாக்குகளும் நம்பத்தகாத வகையிலேயே இருந்தன.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த மற்றும் அறிவார்ந்த உறுப்பினர்கள் தேர்தலில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதை உணர்ந்தனர்.

இச்சூழலில் வாக்காளர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்த வேண்டிய வாய்ப்பு இருந்தது. ஏனெனில், வாக்காளர்கள் கடந்த முறை போட்டியிட்ட அதே பழைய முதிர்ந்த நபர்களில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டியதை எண்ணி சோர்வுற்று இருந்தனர்.

எனவே, ஜனநாயகக் கட்சி, புதிய வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டி இருந்தது. ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடக்கவிருக்கும் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் அதிபர் வேட்பாளர் யாரென அறிவிக்கவுள்ளது.

கமலாவுக்கு என்ன வாய்ப்பு?

அதுவரையிலும் கட்சியின் திறமையான மற்றும் இளம் அனுபவம் வாய்ந்த வேட்பாளர்களுடன் நடக்கும் அரசியல் நிகழ்வுகள், உரைகள் மிகவும் உற்சாகமானதாக இருக்கும். இது, புதிய வேட்பாளருக்குத் தேவையான கவனத்தை ஈர்க்கும்.

புதிய அதிபர் வேட்பாளராகக் கமலா ஹாரிஸின் பின்னால் ஜனநாயகக் கட்சி அணி திரள்வதாகத் தெரிகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பல பிரதிநிதிகள், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஆகியோர் கமலாவிற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால், கமலா ஹாரிஸுக்கு எதிராக எந்தச் சவாலும் இல்லை.

ஜனநாயகக் கட்சியின் கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம், மிச்சிகன் கவர்னர் கிரெட்சென் விட்மர், மற்றும் பென்சில்வேனியா கவர்னர் ஜோஷ் ஷாபிரோ போன்ற எந்த போட்டியாளர்களும் கமலா ஹாரிஸுக்கு வலிமையான சவாலாக இருப்பார்களா என்றும் தெரியவில்லை.

ஆகையால், ஜனநாயகக் கட்சி கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்துள்ளது.

கமலாவுக்கு ஆதரவு உள்ளதா?

குடியரசுக் கட்சியினர் டொனால்ட் டிரம்பின் பிம்பத்தைச் சுற்றி ஒற்றுமையாக இருப்பதை ஜனநாயகக் கட்சியினர் பார்த்து வருகின்றனர். ஆதரவு மட்டுமின்றி குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் டிரம்ப் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் செலுத்துகின்றனர்.

கட்சியின் பேராதரவுடன் டிரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார். தற்சமயம் அவரை சுற்றி பெரிய வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தருணத்தில், கமலா ஹாரிஸை வேட்பாளராக தேர்வு செய்வதில் ஜனநாயகக் கட்சியின் பெரும் பகுதியினர் உற்சாகம் காட்டாத நிலையில், டிரம்புக்கு எதிராக கடுமையான போட்டியை வெளிப்படுத்துவது பெரிய சவாலாக இருக்கும்

ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து பின்வாங்குவதற்கு சில நாட்களுக்கு முன், ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர், ‘கமலா ஹாரிஸிடம் திறமையான ஆளுமை இல்லை. அவரிடம் சித்தாந்தமோ, தார்மிகமான அடித்தளமோ இல்லை’ என கூறியுள்ளார்.

அதே சமயம் அவர், பைடனை வேட்பாளர் போட்டியில் இருந்து பின்வாங்க வைக்க வேண்டுமானால், கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளிப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், கமலா ஹாரிஸ் தனது துணை அதிபர் வேட்பாளராக யாரைத் தேர்வு செய்வார் என்பதில் கடுமையான போட்டி நிலவக் கூடும்.

ஜனநாயகக் கட்சியின் முன்னிருக்கும் சவால் என்ன?

இந்தத் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்பை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சிக்கு, வாக்காளர்கள் கவனத்தை ஈர்ப்பது பெரிய சவாலாக இருக்கிறது. ஏனெனில், டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் கவன ஈர்ப்பை உருவாக்கி வருகிறார். இவரைச் சுற்றி தான் இந்த தேர்தலே நிகழ்கிறது, என்றும் சொல்லலாம்.

‘எந்தவொரு பெரிய பிரச்னையிலிருந்தும் ஆதாயம் பெறுவதைத் தவறவிடக்கூடாது’ (Never let a critical crisis go to waste) என்பது ரஹ்ம் இமானுவேல் -க்கு பிடித்தமான வாசகம்.

இவர் பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த போது, வெள்ளை மாளிகையில் தலைமைப் பணியாளராக இருந்தார்.

இந்தச் சொற்றொடருக்கு, நெருக்கடியான சூழல் என்பது நாம் இதுவரை செய்யாததை செய்து முடிக்க கிடைத்திருக்கும் வாய்ப்பு என்று பொருள்.

அதிபர் விவாதத்தில் ஜோ பைடனின் மோசமான செயல்பாட்டுக்குப் பிறகு ஏற்பட்ட இந்த நெருக்கடியை ஜனநாயகக் கட்சி ஒரு வாய்ப்பாகக் கருதி, வரவிருக்கும் தேர்தலின் திசையை மாற்றப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்பது அவரது எண்ணம்.

அமெரிக்க ஜனநாயகத்தின் எதிர்காலத்தை தீர்மானம் செய்வதில், இந்தத் தேர்தல் முடிவுகள் முக்கியப் பங்காற்றும் என்று பைடனே ஒருமுறை கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் மூலம் அமெரிக்காவின் ஜனநாயக அமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சி கூறுகிறது.

இப்படியான சூழலில், அதிபர் தேர்தலில் வெற்றிபெறக் கூடிய வேட்பாளரைத் தேர்வு செய்வதில், ஜனநாயகக் கட்சி சிறப்பாகச் செயல்பட வேண்டியக் கட்டாயத்தில் உள்ளது. இந்தத் தேர்தலின் சூழல் மிகவும் தீவிரமானதாக இருக்கிறது, ஜனநாயகக் கட்சி அதன் தற்போதைய அதிபரை, வேட்புமனுவைத் திரும்பப்பெறக் கட்டாயப்படுத்தி இருக்கிறது.

மற்றும், திறந்த போட்டியின் மூலம், பைடனுக்கான சிறந்த மாற்று வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு அவர்கள் தைரியமாகவும் இல்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)