உடன்பிறந்தவர்களுக்கு 'இரண்டாவது தாயாக' மாறும் மூத்த மகள் சொந்த வாழ்க்கையில் எதையெல்லாம் இழக்கிறார் தெரியுமா?

    • எழுதியவர், அனகா பதக்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

"தன் தோழிகளைப் போல் வேகமாக சைக்கிள் ஓட்டி செல்ல அந்த சிறுமிக்கும் ஆசை இருக்கும். மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து கூச்சலிட்டு ஓடி ஆடவும் விருப்பம் தான். ஆறு வயது தான் ஆகிறது, ஆனால் அந்த சிறுமியால் இப்படி எல்லாம் விளையாட முடியாது. பதின்வயது பெண் போல கவனத்துடன் இருக்க வேண்டும். தினமும் மாலையில் தன் தோழிகளுடன் விளையாட வெளியில் செல்லும் போது தனியாக செல்ல முடியாது. தன் சின்னஞ்சிறு தம்பியை கூடவே அழைத்து சென்று பார்த்துக் கொள்ள வேண்டும்.”

நான் வசிக்கும் பகுதியில் இதுபோன்ற காட்சிகளை நான் அடிக்கடி பார்க்கிறேன். பொதுவாக மூத்த சகோதரிகள் தங்கள் தம்பி/தங்கையை எல்லா இடங்களுக்கும் தூக்கி செல்கிறார்கள்.

இன்னும் சொல்ல வேண்டும் எனில் சுமந்து செல்கிறார்கள். அவர்களே சிறிய பிள்ளைகளாக இருந்தாலும், தங்கள் இளைய உடன்பிறப்புகளை பராமரித்துக் கொள்ளும் பொறுப்பு அவர்கள் மீது சுமத்தப்படுகிறது.

சமூக ஊடகங்களில் #eldestdaughtersyndrome என்னும் தலைப்பு சமீபத்திய ட்ரெண்டாக பகிரப்பட்டு வருகிறது. அதை பார்த்த போது அது நம்மை சுற்றி மட்டும் நடக்கவில்லை. உலகம் முழுவதும் நடக்கிறது என்று எனக்கு புரிந்தது.

"Eldest daughter syndrome” என்பது உண்மையில் மன நலம் சார்ந்த நோயின் அறிகுறி அல்ல. ஆனால் மூத்த மகளாக பிறந்தவர்களின் அனுபவங்களைப் பற்றி பேசும் தலைப்பாக மாறியது. தங்கள் குடும்பத்தில் பிறந்த மூத்த மகள் எப்படி தங்கள் வாழ்க்கையை வடிவமைத்தார்கள் என்பதை பல பெண்கள் பகிர்ந்தனர். தன் அக்காவை பற்றிய பல உணர்வுப்பூர்வமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

"இந்த பொறுப்புணர்வு வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கும்" என்கிறார் ஹிமான்ஷி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

இல்லத்தரசியான ஹிமான்ஷி வீட்டிலிருந்தபடியே டியூஷன் எடுக்கிறார். "நான் என் குடும்பத்தை பற்றி ஒருபோதும் மோசமாக பேசக் கூடாது. ஏனென்றால் நான் என் குடும்பத்தின் மூத்த மகள். அதனால் என் பெயரை வெளியிட விரும்பவில்லை.” என்றார்.

மராத்தி குடும்பத்தில் பிறந்த ஹிமான்ஷிக்கு மூன்று இளைய உடன்பிறப்புகள் உள்ளனர்.

"என் குழந்தைப் பருவம் பற்றி எனக்கு நினைவில்லை, அப்படி ஒன்று இருந்ததா என்று கூட எனக்கு தெரியவில்லை. என் தம்பிகளையும் தங்கையையும் பார்த்துக் கொண்டது தான் என் நினைவில் இருக்கிறது. என் குடும்பம் அதை தான் என்னிடமிருந்து எதிர்பார்த்தது. அவர்களை வளர்ப்பது என் கடமை. இப்படி சொல்வதால் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள், நான் என் குடும்பத்தை நேசிக்கிறேன், ஆனால் எனக்கு கொஞ்சம் சுதந்திரத்தையும் குறைவான பொறுப்புகளையும் கொடுத்திருக்கலாம் என்பதுதான் என் வருத்தம்” என்றார்.

குடும்பத்தில் மூத்த மகள் என்பதால் ஹிமான்ஷிக்கு கனவு லட்சியம் எதுவும் கைகூடவில்லை. கனவுகளை அடைவதிலிருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டதாக நம்புகிறார். தன் இளைய சகோதரிக்கு கிடைத்த வாய்ப்புகள் தனக்கு மறுக்கப்பட்டது என்கிறார்.

“நான் குடும்பத்தில் மூத்தவள் என்பதாலும் நான் ஒரு பெண் என்பதாலும் எனக்கு சீக்கிரமே திருமணம் முடிந்து விட்டது, அதேசமயம் என் இளைய சகோதரிக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது. மென்பொருள் பொறியாளர் ஆனார். இப்போது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். நான் பி.காம் பட்டதாரி. நான் வேலைக்கு செல்ல நினைத்தாலோ, தொழில் செய்ய விரும்பினாலோ, என்னால் முடியவில்லை. இப்போது நான் டியூஷன் எடுக்கிறேன்” என்று அவர் கூறுகிறார்.

#eldestdaughtersyndrome என்னும் ட்ரெண்டின் கீழ், சமூக வலைதளங்களில் பலர் தங்கள் சொந்த அனுபவங்களை பகிர்ந்தனர். மூத்த மகளாக இருந்தது தங்களை அடக்கமானவர்களாக மாற்றியதாக கூறினர். தன்னம்பிக்கை இல்லாதவர்களாக மாறியதாகவும் சொல்கின்றனர். தங்கள் மகிழ்ச்சியைப் பணயம் வைத்து மற்றவர்களுக்கு எப்போதும் முன்னுரிமை தரும் சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் பெண்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஹிமான்ஷிக்கு இந்த அனுபவங்கள் உண்டு.

“எனக்கு என்ன வேண்டும் என்று நேரடியாக கேட்க முடியாது. மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற தயக்கம் இருக்கும். எனக்காக ஏதாவது யோசித்தால், நான் என் குடும்பத்தை ஏமாற்றுகிறேனோ என்ற அழுத்தத்திற்கு ஆளாவேன். எனக்கு இப்போது நாற்பது வயது ஆகிறது, ஆனால் இன்னமும் என்னால் என்னை பற்றி சிந்திக்க முடியவில்லை. எனக்கு முக்கியத்துவம் கொடுக்க தோன்றவில்லை”என்று கூறியபடி பெருமூச்சு விடுகிறார் ஹிமான்ஷி.

புனேவை சேர்ந்த மன நல ஆலோசகர் மற்றும் நடத்தை சிகிச்சையாளர் ஷ்ருத்கீர்த்தி ஃபட்னாவிஸ் இந்த நிகழ்வை பற்றி விளக்குகிறார்.

“மூத்த குழந்தைகளிடம் காணப்படும் ஒரு பொதுவான குணம் தங்களை பற்றி யோசிக்காமல் பிறருக்காக யோசிப்பது. அவர்கள் இலட்சியவாதமாக இருப்பார்கள், எல்லா நேரத்திலும் சரியாக இருக்க வேண்டும் என்று எண்ணி தங்கள் மீது அதிக அழுத்தம் கொடுத்து கொள்வார்கள். பெரும்பாலும் தன்னை தானே குற்றம்சாட்டி கொண்டு சுயவிமர்சனம் செய்து கொள்வார்கள்.”

குடும்பத்தில் உள்ள மூத்த குழந்தைகளுடன் தொடர்புடைய `நியூரோட்டிசிஸம்’ (neuroticism) என்னும் ஆளுமைப் பண்பை குறித்து ஷ்ருத்கீர்த்தி விவரிக்கிறார்.

" நியூரோட்டிசிஸம்’ என்பது ஓய்வெடுக்க இயலாத ஒரு நிலை. அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க முயற்சிக்காமல் அவற்றை அடக்கி வைக்கிறார்கள். இதில் இரண்டு விஷயங்கள் நடக்கும். நமக்கு எதிராக நடக்கும் விஷயங்களுக்கு எதிர்த்து நிற்பது அல்லது விட்டுக் கொடுப்பது. அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் ஆனால் கை கூடாது. அந்த விரக்தியில் விட்டு கொடுத்து விடுவார்கள். சில மூத்த மகள்கள் சமூக ரீதியாக விலகி இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் மூத்த குழந்தையாக பிறப்பது உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது" என்கிறார்.

"இந்தியா போன்ற சமூகங்களில், பெற்றோர்கள் தங்கள் முதல் குழந்தைக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார்கள். பெற்றோர்களை பொறுத்தவரை முதல் குழந்தையை வளர்ப்பது அனுபவமில்லாத பரிசோதனை போன்று தான்" என்று சொல்லி ஷ்ருத்கீர்த்தி புன்னகைக்கிறார்.

"முதல் குழந்தை பிறக்கும் போது, ஒரு குழந்தையை எப்படி வளர்ப்பது என்பது பெற்றோர்களுக்கு தெரியாது, பின்னர் தெரிந்தோ-தெரியாமலோ அனைத்து எதிர்பார்ப்புகளையும் முதல் குழந்தையின் மீது வைப்பர். அவர்கள் குடும்ப அமைப்பும் இப்படித்தான் இருந்திருக்கும். தலைமுறை தலைமுறையாக இந்த போக்கு தொடரும். அதன் பின்னர் அவர்களுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை பிறக்கும் போது, அவர்கள் மிகவும் நிதானமாகி, அவர்களின் வளர்ப்பு சிறப்பாகிறது, ஆனால் முதல் குழந்தை அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆண் குழந்தைகளுக்கும் இது பொருந்தும் “ என்கிறார்.

இருப்பினும், இந்தியா போன்ற ஆணாதிக்க சமூகத்தில், சிறுமிகளாக இருந்தாலும் கூட தங்கள் தங்கை/தம்பியை பார்த்து கொள்ளும் பொறுப்பு அவர்கள் மீது சுமத்தப்படுகிறது. சிறிய வயதிலேயே, தம்பி தங்கைகளை பார்த்து கொள்ளும் பராமரிப்பாளராக மாறி விடுவார்.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (NFHS-5) தரவின்படி, பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்துவதற்கு குழந்தை திருமணங்கள் மற்றும் வீட்டு வேலைகள் ஆகியவை இரண்டு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.

அரசாங்க தரவுகளின்படி (2021-22) உயர்நிலை பள்ளி படிப்போடு நின்றுவிடும் பெண்களின் பள்ளி இடைநிற்றல் விகிதம் 12.3 சதவீதமாக உள்ளது.

இந்த பருவத்தில் உள்ள ஆண் பிள்ளைகளின் இடைநிற்றல் விகிதமும் பெண்களைப் போலவே உள்ளது. ஆனால் இடைநிற்றலுக்கான காரணம் வேறுபடுகிறது.

ரஞ்சனா கவண்டே ஒரு சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர். அவர் பேசுகையில், “இந்தியாவில் கிராமப்புறங்களில் பெண்கள் வீட்டு வேலைகள் மற்றும் தங்கள் தம்பி, தங்கைகளை கவனித்துக் கொள்வதற்காக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்துவது மிகவும் சகஜமாக நடக்கும் ஒன்று. ஏழைக் குடும்பங்களில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வார்கள். அவர்களால் குழந்தைகளை கவனிக்க முடியாது. எனவே 6 வயதுக்குட்பட்ட சிறுமிகள் தங்கள் இளைய உடன்பிறப்புகளை கவனித்துக் கொள்ள தொடங்குகிறார்கள். ”

"இந்தியப் பெற்றோர்கள் இதை பெண் குழந்தைகளுக்கு கொடுக்கும் ஒரு பயிற்சியாக நினைக்கிறார்கள், இது பெண்ணை நல்ல மனைவியாகவும் தாயாகவும் மாற்றும் என்று நம்புகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, இந்த பெண் குழந்தைகள், குழந்தை பருவத்தின் மகிழ்ச்சியை இழக்கிறார்கள். தங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்கிறார்கள்." என்று விளக்கினார்.

அமீர் சுல்தானா சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பாலின ஆய்வுகள் பிரிவின் இணை பேராசிரியராக உள்ளார். பெரும்பாலும் இந்திய நடுத்தரக் குடும்பங்களில் மூத்த மகள்களுக்கு அதிக பொறுப்புகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"பெண் பிள்ளைகள் பள்ளிக்கு சென்றாலும், பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் தம்பி /தங்கையை கவனித்துக் கொள்ள வேண்டும், அவர்களுக்கு உணவளிக்க வேண்டும், அவர்களின் இரண்டாவது தாயாக மாற வேண்டும். மூத்த பிள்ளை ஆணாக இருந்தால், அவருக்கு பிறகு பிறந்த மகள் மூத்த சகோதரனையும் சேர்த்து பார்த்து கொள்வார். பள்ளி முடிந்து வந்ததும் வீட்டை சுத்தம் செய்து, சமைத்து, இளையவர்களுக்கு ஊட்டிவிடுவார்” என்கிறார். இந்த சமூக நடத்தையால் மகள்களுக்கு, குறிப்பாக மூத்த மகள்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்று அமீர் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.

"மூத்த மகள்கள் உடல் உழைப்பின் அழுத்தத்தை பொறுத்து கொள்ள வேண்டும். குடும்பம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டால், பெரும்பாலும் மூத்த மகளுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்கப்படும். அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும். அவர்களால் ஒருபோதும் சமத்துவத்தை அனுபவிக்க முடியாது. அவர்களால் நிம்மதியாக படிக்க முடியாது, சிறந்த திறன்களை வளர்த்துக் கொள்ள முடியாது. பல சமயங்களில் அவர்களால் சரியாகச் சாப்பிட கூட முடிவதில்லை. அவர்களது மன ஆரோக்கியம் மட்டுமல்ல, உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. மிக முக்கியமாக, மூத்த மகள்கள் வாழ்நாள் முழுவதும் கவனித்து கொள்ளும் இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மீது தனி கவனம் செலுத்தப்படுவதில்லை.” என்றார்.

குடும்பத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் சமமாக பார்த்துக் கொள்வதும், பராமரிப்பதும் பெற்றோரின் பொறுப்பு என்கிறார் அமீர்.

“நம் குடும்பங்களிலும் சமூகத்திலும் பெண் குழந்தைகளுக்கான மரியாதையை நாம் அதிகரிக்கும் போது, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எளிதாக இருக்கும். பெற்றோர் இருவரும் வேலை செய்ய வேண்டிய சூழலில் உள்ள ஏழைக் குடும்பங்களின் நிலை புரிகிறது. குழந்தைகளைப் பராமரிக்க முடியாத நிலையால் மூத்த மகள் மீது கூடுதல் பொறுப்பு சுமத்தப்படுகிறது. ஆனால் இதற்கு அரசாங்கத்தால் தீர்வு தர முடியும். அந்த மாதிரியான குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கும் வழிமுறைகளை உருவாக்கவும், பெண்கள் பள்ளி படிப்பை தொடர்வதை உறுதி செய்யவும், அவர்களுக்கான உயர் கல்வியை ஊக்குவிக்கவும் முடியும்," என்று அவர் கூறுகிறார்.

ஆண் பெண் இருவரும் சமமாக பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் கலாசாரம் வளர்ந்தால் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்த சமத்துவம் இன்னும் வெகு தூரத்தில்தான் உள்ளது. ஆனால் இந்த சமத்துவத்தை நாம் அடைய முடிந்தால், என் வீட்டருகில் உள்ள அந்த 6 வயது சிறுமி தனது சைக்கிளை உற்சாகத்துடன் முழு வேகத்தில் ஓட்டி செல்ல முடியும். குழந்தை பருவத்தை இனிமையாக அனுபவிக்க முடியும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)