சிஎஸ்கே - ஆர்சிபி ஆட்டம் மழையால் தடைபட்டால் எந்த அணி பிளேஆஃப் செல்லும்?

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஐபிஎல் டி20 தொடரின் 2024 சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில் 4வது அணி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

ஐபிஎல் ப்ளேஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்று நடக்கும் ஆர்சிபி - சிஎஸ்கே இடையிலான ஆட்டத்தின் முடிவு ப்ளே ஆஃப் சுற்றில் 4வது அணியை முடிவு செய்யும்.

பெங்களூருவில் இன்று(சனிக்கிழமை) நடக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் ஆட்டத்தில் வெல்லும் அணி, ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்கும்.

ஆனால், ஆர்சிபி-சிஎஸ்கே இடையிலான ஆட்டத்தில் மழை குறுக்கீடு இருக்க வாய்ப்புள்ளதாகப் பல்வேறு வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக பெங்களூருவில் பகல் நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 70 சதவீதமும் மாலை நேரத்துக்குப் பின் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் 80 சதவீதமும் இருப்பதாக வானிலை அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

போட்டி ரத்தானாலே சிஎஸ்கேவுக்கு வாய்ப்பு

பெங்களூரூவில் இன்று கடும் மழை பெய்து ஒரு பந்துகூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டாலே சிஎஸ்கே அணி தானாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிடும். ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் சிஎஸ்கே, ஆர்சிபி அணிக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். சிஎஸ்கே அணி 15 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் 4வது இடத்தைப் பிடிக்கும்.

ஆர்சிபி-சிஎஸ்கே இடையிலான ஆட்டத்தில் மழை குறிக்கிட்டுப் பின்னர் ஆட்டம் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தால் என்ன ஆகும் என்பதுதான் ஐபிஎல் சுவாரஸ்யம்.

ஐபிஎல் விதிகள் என்ன சொல்கின்றன?

ஐபிஎல் விதிப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் அந்தப் போட்டியை நடத்தக் கூடுதலாக 60 நிமிடங்கள் வழங்கப்படும். இதுவே ப்ளே ஆஃப், எலிமினேட்டர் சுற்று என்றால் 120 நிமிடங்கள் கூடுதலாக அதாவது இரவு 12.06 நிமிடங்கள் வரை போட்டி நடத்த வாய்ப்பு நீட்டிக்கப்படும்.

லீக் சுற்றில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குப் பின் கூடுதலாக வழங்கப்பட்ட ஒரு மணிநேரத்துக்குப் பின்பும், மழை தொடர்ந்தால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.

இது லீக் ஆட்டங்களுக்கு மட்டும் பொருந்தும். அதிகபட்சமாக இரவு 10.56 மணிக்குள் போட்டியின் முடிவைத் தெரிந்துகொள்ள 5 ஓவர்கள் வரை நடத்திக்கொள்ள முடியும்.

ஐபிஎல் விதிப்படி போட்டி நடத்தும் நேரத்தில் மழை குறிக்கிட்டு போட்டி தொடங்கத் தாமதமானால், மீதமிருக்கும் நேரத்தின்படி எத்தனை ஓவர்கள் பந்து வீசுவது என்பது மணிக்கு 14.11 ஓவர்ரேட் கணக்கின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, போட்டி நடத்தப்படும்.

அவ்வாறு நடத்தப்படும் ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் ஒரே மாதிரியான ஓவர்கள் பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். உதாரணமாக சிஎஸ்கே 10 ஓவர்கள் பேட் செய்தால், அதே அளவு ஆர்சிபி அணியும் பேட் செய்யும் வாய்ப்பை உறுதிசெய்ய வேண்டும்.

இரண்டாவதாக பேட் செய்யும் அணி முதலில் பேட் செய்த அணியைவிட அதிகமான ஓவர்கள் பேட் செய்யக்கூடாது. முடிவு எட்டப்படாவிட்டால் குறைந்தபட்சம் 5 ஓவர்கள் வரை வீசப்பட்டு போட்டி நடத்தப்பட்டு முடிவு அறியலாம்.

ஒருவேளை போட்டி நடத்தும் நேரத்தில் மழை குறுக்கீடு, இடையூறு நீண்டநேரம் இல்லாத பட்சத்தில் போட்டியை நடத்துவதற்கு எத்தனை மணிநேரம் மீதம் இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு, டிஎல்எஸ் விதிப்படி ஓவர்களை முடிவு செய்யவேண்டும்.

ஆனால், இதற்கு அதிகபட்ச நேரம் இரவு 12.06 மணிவரைதான். அதற்குள் 5 ஓவர்கள் வீசும் அளவுக்காவது சூழல் மாறியிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து மழை பெய்யும்பட்சத்தில் போட்டி ரத்து செய்யப்படும்.

ஆர்சிபி முதலில் பேட் செய்தால் என்ன செய்ய வேண்டும்?

மழை குறுக்கிட்டு, போட்டி 5 ஓவர்களாக நடத்தப்படும்பட்சத்தில் ஆர்சிபி அணி முதலில் பேட் செய்து 80 ரன்களுக்கு குறைவில்லாமல் சேர்க்க வேண்டும். சிஎஸ்கே அணியை 62 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். அவ்வாறு செய்தால், சிஎஸ்கேவின் நிகர ரன்ரேட் 0.448-ஐ விட, ஆர்சிபி ரன்ரேட் 0.450 ஆக அதிகரித்து ப்ளே ஆஃப் செல்ல முடியும்.

ஏழு ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டால் ஆர்சிபி 100 ரன்களுக்கு குறைவில்லாமல் சேர்த்து, சிஎஸ்கே அணியை 82 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் சிஎஸ்கே நிகர ரன்ரேட்டைவிட ஆர்சிபி ரன்ரேட் அதிகரித்து ப்ளே ஆஃப் செல்ல முடியும்.

இதுவே 10 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக இருந்தால், ஆர்சிபி அணி முதலில் பேட் செய்து 130 ரன்களுக்கு குறைவில்லாமல் சேர்த்து சிஎஸ்கே அணியை 112 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். இவ்வாறு நடந்தால் சிஎஸ்கேவின் நிகர ரன்ரேட் 0.440 ஆகவும், ஆர்சிபி நிக ரன்ரேட் 0.442 ஆகவும் அதிகரிக்கும்.

இதுவே 15 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டால் ஆர்சிபி அணி 170 ரன்களுக்கு குறைவில்லாமல் சேர்க்க வேண்டும், சிஎஸ்கே அணியை 152 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். 20 ஓவர்கள் ஆட்டமாக இருந்தால், ஆர்சிபி அணி 200 ரன்கள் சேர்த்து, சிஎஸ்கே அணியை 182 ரன்களில் சுருட்ட வேண்டும்.

ஆர்சிபி சேஸிங் செய்தால் என்ன செய்ய வேண்டும்?

ஆர்சிபி அணிக்கு 5 ஓவர்களில் 81 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், அதை 3.1 ஓவர்களில் அடைய வேண்டும். இவ்வாறு நடந்தால், சிஎஸ்கேவின் ரன்ரேட் 0.451-ஐ விட ஆர்சிபி ரன்ரேட் 0.459 ஆக உயரும்.

ஏழு ஓவர்களில் 101 ரன்கள் என ஆர்சிபிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் அதை 5.1 ஓவர்களுக்குள் அடைய வேண்டும். 10 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தில் ஆர்சிபிக்கு 131ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் அதை 8.1 ஓவர்களுக்குள் அடைய வேண்டும்.

பதினைந்து ஓவர்களில் 171 ரன்கள் என்று ஆர்சிபிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், 13.1 ஓவர்களில் ஆர்சிபி அடைந்தால் நிகர ரன்ரேட் 0.441 என அதிகரித்து ப்ளே ஆஃப் செல்லும். 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டால் ஆர்சிபி அணி 201 ரன்களை 18.1 ஓவர்களில் சேஸ் செய்யவேண்டும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)