அரசு கூர்நோக்கு இல்ல சிறுவன் மரணத்தை மறைக்க தாயை கடத்தியதாக குற்றச்சாட்டு: நடந்தது என்ன?

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவனின் தாயார், தனது மகனின் இறப்பை மறைக்க அதிகாரிகள் தன்னை மூன்று நாட்கள் பல இடங்களுக்கு கடத்தி சென்று, தன்னிடம் சமரசம் பேசி வற்புறுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். சிறுவனின் இறப்பு தொடர்பாக கூர்நோக்கு இல்லத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் இதுவரை கைதாகியுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்ன நடந்தது?
மேற்கு தாம்பரம் குப்பைமேடு பகுதியில் வசிப்பவர் பிரியா(37). கடந்த ஆண்டு டிசம்பர் மாத கடைசி வாரத்தில், சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த தனது மகன் (17) இறந்துவிட்டதாக தகவல் வந்ததும் நொறுங்கிப்போனார். தனது மகனின் இறப்பு குறித்து கேள்வியெழுப்பியதும் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் தன்னை கடத்திச் சென்று பல இடங்களில் தங்கவைத்தது, அச்சம் மிகுந்த அனுபவமாக இருந்தது என்கிறார் பிரியா.
மகன் இறந்த சோகத்தில் இருந்து அவர் மீளவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் பிரியாவின் கணவர் சிறுநீரக பிரச்னை காரணமாக இறந்துள்ளார். தனது மகன் வளர்ந்துவிட்டதால், குடும்பத்திற்காக அவனது உழைப்பு இனி தேவைப்படும் என்ற நேரத்தில் நேர்ந்த இறப்பை பிரியாவால் தாங்கமுடியவில்லை.
''ரயில்வே லைனில் பேட்டரியை திருடியதாக என் மகனை கடந்த டிசம்பர் 30ம் தேதி கைது செய்து கொண்டுபோனார்கள். டிசம்பர் 31ம் தேதி இரவு என் மகன் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. மர்மமாக உள்ளது. முதலில் அவனுக்கு உடல்நிலை சரியில்லை, வலிப்பு வந்துவிட்டது என்றார்கள், நான் கிளம்பி வருகிறேன் என்று சொன்னதும், சிறிது நேரத்தில் எனக்கு போன் செய்துவிட்டு, மகன் எமெர்ஜென்சி வார்டில் இருக்கிறான் என்றார்கள். பதட்டம் அதிகரித்துவிட்டது. என் வீட்டுக்கு அப்போது போலீஸ் வந்தார்கள், ஏன், எதற்கு என்று புரியவில்லை. அடுத்த சில நொடிகளில், என் மகன் இறந்துவிட்டான் என்றார்கள்,'' என விவரிக்கும்போது பிரியாவின் கண்கள் குளமாகின.
இரவு நேரத்தில் மகனின் உடலை பார்க்கச் சென்ற பிரியாவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியான அனுபவங்கள் ஏற்பட்டன என்கிறார். முதலில் மருத்துவமனை வாசலில் இருந்து அவரை கூட்டிச்சென்றவர்கள், சில நிமிடங்கள் உடலை காட்டிவிட்டு, அவரை ஒரு ஆட்டோவில் வைத்து ஒரு பெண்ணின் வீட்டுக்கு அழைத்துச்சென்றதாகவும், பின்னர் பல்வேறு இடங்களுக்கு வலுக்கட்டாயமாக தன்னை கூட்டிச்சென்றதாகவும் சொல்கிறார்.
''இரண்டு பெண்கள் என்னுடன் வந்தார்கள், அதிகாரிகள் என்னை அவர்களுடன் போகச் சொன்னார்கள். காலையில்தான் உடலை தரமுடியும் என்றார்கள். என்னுடைய மற்ற இரண்டு குழந்தைகள் மருத்துவமனை வாசலில் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களைகூட பார்க்க அனுமதிக்கவில்லை. என்னை இரவோடு இரவாக பல இடங்களுக்கு கூட்டிச்சென்றார்கள். மூன்று நாட்கள் வேறு வேறு இடங்களுக்கு கூட்டிச்சென்றார்கள். அந்த கூர்நோக்கு இல்லத்தைச் சேர்ந்த பெரிய அதிகாரிகள் என்னை மிரட்டினார்கள், மூன்றாவது நாள் நான் சத்தம் போட்டு கத்தவே என்னை விட்டுவிட்டார்கள்,'' என்கிறார் பிரியா.
விசாரணை நடைபெறுகிறது

பிரியாவின் குற்றச்சாட்டுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப்பிடம் பேசியபோது, சிறுவனின் உடற்கூராய்வு அறிக்கையில் அவனது உடலில் பல காயங்கள் இருந்தன என்றார்.
''செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்ற விசாரணை அறிக்கை மற்றும் உடற்கூராய்வு அறிக்கை ஆகிய இரண்டையும் அடிப்படையாகக்கொண்டு கூர்நோக்கு இல்லத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகளை கைது செய்துள்ளோம். பிரியா பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். பிரியாவை கடத்தியது தொடர்பாக தனி வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சிறுவனின் இறப்பு பற்றிதான் இப்போது விசாரணை செய்கிறோம்,'' என்கிறார்.
பிரியாவின் சட்ட போராட்டத்திற்கு உதவ மதுரையைச் சேர்ந்த மக்கள் கண்காணிப்பகம் என்ற தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், பிரியாவை கூர்நோக்க இல்ல அதிகாரிகள் நடத்தியவிதம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்கிறார்.
'தாய் கடத்தப்பட்டதை தனி வழக்காக விசாரிக்க வேண்டும்'
''தாயார் பிரியாவை மூன்று நாட்கள் பல இடங்களுக்கு கூட்டிச்சென்றுள்ளார்கள். இதனை தனி வழக்காக விசாரிக்கவேண்டும். செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் பலவிதமான கொடுமைகள் நடந்துள்ளன. பிரியாவின் மகன் இறந்த சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் பல குழந்தைகள் அங்கிருந்து தப்பியுள்ளார்கள். அந்த இல்லத்தில் இருந்த குழந்தைகளிடம் அவர்களை பாதிக்காதவகையில் விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டுவரவேண்டும்,'' என்கிறார்.
இறந்த சிறுவன் உட்பட கடந்த இரண்டு மாதங்களில் 20 சிறுவர்கள் அந்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதில் இறந்த சிறுவனின் அறையில் தங்கியிருந்த ஒரு சிறுவன் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகப் பெயர் சொல்ல விரும்பாத சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
''இந்த சிறுவன் மோசமாக தாக்கப்பட்டுள்ளான் என்பதற்கான ஆதாரங்கள் உடற்கூராய்வில் தெரியவந்துள்ளன. மேலும் இங்கிருந்த சிறுவர்களிடம் பேசிவருகிறோம். விசாரணை நடைபெற்றுவருவதால் பிற தகவல்களைச் சொல்லமுடியாது,''என்றார் அந்த அதிகாரி.
கடைசியாக பேட்டியை முடித்துக்கொண்டு நாம் கிளம்பும் நேரத்தில் நம்மிடம் வந்த பிரியா, ''அந்த ஹோம்ல நிறைய பசங்க இருக்கிறாங்க.. என் பயனுக்கு நடந்த மாதிரி யாருக்கும் நடக்ககூடாது. அந்த பசங்க பாதுகாப்பாக இருக்கனும்.. எனக்கு நீதி கிடைக்குமில்ல?,''என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












