ஓட்டுநரை தூங்கச் சொல்லும் செயலி - சாலை விபத்துகள் குறைய உதவுமா?

பட மூலாதாரம், Getty Images
இந்திய சாலைகளில் நடக்கும் விபத்துகளால் 2021ஆம் ஆண்டு 1.5 லட்சம் பேர் இறந்துள்ளனர் என இந்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி நடக்கும் விபத்துகளில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்களும் சிக்கி உயிரிழக்கின்றனர். இதற்கான தீர்வை ஒரு லாரி உரிமையாளர் கண்டறிந்துள்ளார்.
இந்திய சாலைகளில் அதிகரிக்கும் விபத்துகள்
நாளொன்றுக்கு சுமார் 80 லட்சம் லாரிகள் இந்திய நெடுஞ்சாலைகளில் ஒடுவதாக ஒர் புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால், இவர்களில் பலரும் முறையான பயிற்சிகளை பெற்று இருப்பதில்லை. இதுவும் சாலை விபத்துகள் அதிகரிக்க காரணமாக அமைகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டில் இந்திய சாலைகளில் 4.03 லட்சம் விபத்துகள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன. இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 3.54 லட்சமாக இருந்தது.
சாலை விபத்துகளால் கடந்த 2021ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் ஒன்றரை லட்சம் பேர் இறந்துள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 17% அதிகமாகும்.
வேகமாக வாகனத்தை இயக்குவதும், கவனக்குறைவுடன் வாகனத்தை ஓட்டுவதும் தான் விபத்து ஏற்படும் காரணங்களில் மிக முக்கிய காரணமாக இருக்கிறது என தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
தீர்வை கண்டுபிடித்த லாரி உரிமையாளர்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் நடக்கும் விபத்துகளில், பாதிக்கும் மேற்பட்ட விபத்துகளில் லாரி போன்ற பெரு வாகனங்கள் பங்கு வகிக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு லாரியின் சொந்தக்காரர், விபத்துகளில் இருந்து லாரி ஓட்டுநர்களை பாதுகாக்க ஒரு தீர்வைக் கண்டறிந்துள்ளார்.
இதற்காக லாரி ஓட்டுநர்கள் பயன்படுத்தும் வகையில், ஹம் சேஃபர்(HUM SAFER) என்ற பெயரில் ஒரு செயலியை உருவாக்கியுள்ளார்.
இந்த செயலி, ஃபோன் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு, ஓட்டுநருக்குத் தூக்கம் வருகிறதா அல்லது வாகனத்தின் வேகம் அதிகமாகிறதா என்பதைக் கண்டறிந்து வேகத்தைக் குறைத்து பிரேக் போட ஓட்டுநருக்கு எச்சரிக்கை செய்கிறது.
இதை பின்பற்றும் ஓட்டுநர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.தொடர்ந்து ஓய்வின்றி வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்களுக்கு, எப்போது ஓய்வு தேவை என்பதையும் இந்த செயலி பரிந்துரை செய்கிறது.
எப்படி செயல்படுகிறது இந்த செயலி?

பட மூலாதாரம், Getty Images
இந்த செயலியை உருவாக்கிய ஜெஹான் காட்டேவால், " இந்தியாவில் 80% விபத்துகள் அதிவேகம் அல்லது தொடர்ந்து வாகனத்தை ஓட்டுவது போன்ற தவறுகளால் தான் நடக்கின்றன. 20% முதல் 30% விபத்துகள் ஓட்டுநர்களுக்கு போதிய தூக்கம் இல்லாததால் நடக்கின்றன. தொடர்ந்து வாகனத்தை இயக்குவதால், ஓட்டுநர்கள் களைப்பாக இருக்கின்றனர்.
நாளொன்றுக்கு 16 முதல் 18 மணி நேரம் வரை வாகனங்களை இயக்குமாறு லாரி ஓட்டுநர்கள் பணிக்கப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் பணிச்சுமையின் காரணமாக விபத்துகள் நிகழ்கின்றன," என்றார்.
ஹம் சேஃபர் செயலி, ஓட்டுநர்களை மகிழ்விக்கும் வண்ணம் சுவாரஸ்யமான முறையில் செயல்படுகிறது. இது மிகவும் நேர்மறையாகவும் செயல்படுகிறது.
நீங்கள் ஓய்வெடுங்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, “இந்த டயலாக் எந்த பாலிவுட் படத்தில் வருகிறது” என்று ஓட்டுநரிடம் கேள்வியை எழுப்புகிறது. “உங்கள் நண்பர்களுடன் பேசுங்கள்” என்று பரிந்துரைகளை முன்வைக்கிறது, என்று இந்த செயலியை உருவாக்கிய ஜெஹான் கூறினார்.
இந்தச் செயலி ஓட்டுநர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது. சிறந்த ஓட்டுநர்களுக்குப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அந்தப் புள்ளிகளை ரொக்கப் பரிசாகவோ அல்லது எரிபொருள் விலையில் தள்ளுபடியாகவோ ஓட்டுநர்கள் பெற்றுக் கொள்ளமுடியும், என இதனை உருவாக்கியவர் கூறினார்.
ஓட்டுநர்களிடம் வரவேற்பு

பட மூலாதாரம், Getty Images
இந்த செயலியை பயன்படுத்தும் ஓட்டுநர் கூறும் போது, "நிச்சயமாக இதில் பாதுகாப்புக் குறிப்புகளும் இருக்கு, வேகமாக போனால் பாயின்ட்ஸ் குறையும். அதனால, பாதுகாப்பாக இருந்து காசை மிச்சப்படுத்தலாம். இந்த ஆப்பிலிருந்து கொஞ்சம் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. நாங்க லாரியை மெதுவாக இயக்குவதால் குடும்பத்தின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது," என்று ஓட்டுநர் இர்ஃபான் கான் கூறினார்.
தனது செயலி குறித்து ஜெஹான் பேசும் போது, "இந்தியாவின் எல்லா லாரி ஓட்டுநர்களிடமும் இந்தச் செயலி போய் சேர அதிக காலம் பிடிக்கும். ஆனால், இது குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்," என்றார்.
ஜெஹான் உருவாக்கிய இந்த செயலியை இந்தியாவில் தற்போது வரை 20 ஆயிரம் லாரிகள் பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு வாரமும் புதிதாக ஆயிரம் பேர் வரை இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்குகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 80 லட்சம் லாரிகளையும் சென்றடைய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்று ஜெஹான் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












