ராணுவ தினம்: 1949, ஜன.15-ம் தேதி இந்திய ராணுவத்திற்கு மிக முக்கியமான நாள் - ஏன்?

இந்திய ராணுவ தினம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 75-வது ராணுவ தினத்தை இந்தியா கொண்டாடுகிறது. 

1949, ஜனவரி 15-ம் தேதி சுமார் 200 ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு இந்திய ராணுவத்தின் கட்டுப்பாடு இந்தியர் வசம் ஒப்படைக்கப்பட்டது. 

இந்த நாளில், ராணுவத்தின் சாதனைகள், தேசத்திற்கு ராணுவ வீரர்கள் ஆற்றிய சேவைகள், தியாகங்கள் நினைவுகூர்ந்து கவுரவிக்கப்படும். 

ராணுவ தினத்தை கொண்டாடுவது ஏன்?

1949, ஜனவரி 15-ம் தேதி ராணுவ தளபதி பதவி, பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியிடம் இருந்து முதன் முறையாக இந்தியர் ஒருவருக்கு வழங்கப்பட்டது. முப்படைகளுக்கும் தலைமைப் பதவியே ராணுவத் தளபதி என்று அழைக்கப்படுகிறது. 

தற்போதைய நிலையில், இந்தியாவில் குடியரசுத் தலைவரே ராணுவ தளபதியாக இருக்கிறார். அவரே முப்படைகளின் தலைவர். 

ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சருக்குப் பிறகு ராணுவத் தளபதி பதவி ஏற்ற பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பாவே இந்திய ராணுவ தளபதி பதவியை அலங்கரித்த முதல் இந்தியர் ஆவார். 

இந்திய ராணுவ தளபதி பதவியை வகித்த கடைசி பிரிட்டிஷ்காரர் பிரான்சிஸ் புட்சர் ஆவார். அந்த நேரத்தில், பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா லெப்டினென்ட் ஜெனரலாக பதவி வகித்தார். 

இந்திய ராணுவ தினம்

பட மூலாதாரம், AIR MARSHAL KC NANDA KARIAPPA

படக்குறிப்பு, பீல்டு மார்ஷல் கே.எம். கரியப்பா

இந்திய ராணுவ தளபதியாக பதவியேற்றபோது கே.எம்.கரியப்பாவுக்கு வயது 49. 'இந்தியாவுக்கு வெற்றி' என்று பொருள்படும் 'ஜெய்ஹிந்த்' என்ற முழக்கத்தை கே.எம்.கரியப்பா ஏற்றுக் கொண்டார். 

கிழக்கு இந்திய கம்பெனியின் படைகளே பிரிட்டிஷ் இந்திய ராணுவமாக மாறி, சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய ராணுவமாக உருப்பெற்றது. 

உலகின் வலிமையான 4-வது ராணுவமாக இந்திய ராணுவம் கருதப்படுகிறது. 

பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா

இந்திய ராணுவத்தில் 5 நட்சத்திர அந்தஸ்துக்கான பீல்டு மார்ஷல் பட்டம் பெற்றவர்கள் இரண்டே இரண்டு அதிகாரிகள் தான். அதில் முதலாமவர் கே.எம்.கரியப்பா, இரண்டாவதாக அந்த கவுரவத்தை அடைந்தவர் பீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷா.

கே.எம்.கரியப்பா 'கிப்பர்' என்றும் அழைக்கப்படுகிறார். ஃபடேகர் என்ற இடத்தில் கரியப்பா நியமிக்கப்பட்ட போது, அவரது பெயரை உச்சரிப்பதில் பிரிட்டிஷ் அதிகாரியின் மனைவிக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை 'கிப்பர்' என்று அவர்கள் அழைக்கத் தொடங்கினர். 

1900, ஜனவரி 28-ம் தேதி கர்நாடகாவில் கே.எம்.கரியப்பா பிறந்தார். முதல் உலகப் போர் (1914-1918) கால கட்டத்தில் அவர் ராணுவப் பயிற்சி பெற்றார். 

1942-ம் ஆண்டு, லெப்டினென்ட் ஜெனரல் பதவியைப் பெற்ற முதல் இந்திய அதிகாரி என்ற பெருமையை கரியப்பா அடைந்தார். 1944-ம் ஆண்டு, பிரிகேடியர் பதவியை ஏற்ற கரியப்பா, பான்னு முன்னணி பிரிகேடின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்திய ராணுவ தினம்

பட மூலாதாரம், Getty Images

1986, ஜனவரி 15-ம் தேதி கே.எம்.கரியப்பா பீல்டு மார்ஷலாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 86.

1947-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின் போது மேற்கு மண்டல தளபதி பொறுப்பை பீல்டு மார்ஷல் கரியப்பா வகித்தார். 

லே பிராந்தியம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியானதில் அவர் முக்கிய பங்காற்றினார். 

1947, நவம்பர் மாதம் ராஞ்சியில் கிழக்கு மண்டல ராணுவ தளபதியாக கரியப்பா நியமிக்கப்பட்டார். 

அடுத்த இரண்டே மாதங்களில் காஷ்மீரில் நிலைமை மோசமானதால், டெல்லி மற்றும் கிழக்கு பஞ்சாபில் பயிற்சி மற்றும் ஆபரேஷனல் கமாண்ட் தலைமைப் பதவியில் டட்லி ருஸ்ஸெலுக்குப் பதிலாக கரியப்பா அமர்த்தப்பட்டார். அதற்கு மேற்கு மண்டலம் என்று பெயர் சூட்டியவர் அவரே. 

உடனே, ஜம்மு-காஷ்மீர் படைப் பிரிவின் தளபதியாக ஜெனரல் திம்மையாவை அவர் நியமித்தார். 

ஜோஜிலா, டிராஸ் மற்றும் கார்கிலை இந்திய ராணுவம் கைப்பற்றும் வரை லே செல்லும் சாலையை பயன்பாட்டிற்கு திறக்க முடியவில்லை. 

இந்திய ராணுவ தினம்

பட மூலாதாரம், Getty Images

மேலிட உத்தரவுக்கு பணியாமல், கரியப்பா மேற்கண்ட இடங்களை கைப்பற்றினார். ஒருவேளை அவர் அவ்வாறு செய்யாமல் விட்டிருந்தால், லே பிராந்தியம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்திருக்காது. 

அவரது திட்டத்தின்படி, நௌஷெரா, ஜாங்கர் ஆகிய பகுதிகளை கைப்பற்றிய இந்திய ராணுவம், ஜோஜிலா, டிராஸ், கார்கில் பகுதிகளில் இருந்து எதிரிகளை விரட்டியது. 

1953-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற கே.எம்.கரியப்பா 1993-ம் ஆண்டு தனது 94-வது வயதில் காலமானார். 

ராணுவ தினம் எவ்வாறு கொண்டாடப்படும்?

ராணுவ தின கொண்டாட்டம் இம்முறை கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெற்றது. தலைநகர் டெல்லிக்கு வெளியே இந்த கொண்டாட்டம் நடப்பது இதுவே முதல் முறை. 

டெல்லி கன்டோன்ட்மென்டில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில்தான் ஒவ்வோர் ஆண்டும் ராணுவ தினம் ஏற்பாடு செய்யப்படும். 

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை டெல்லிக்கு வெளியே நடத்தினால்தான் அதிகப்படியான மக்களை அவை சென்றடையும், மக்களின் பங்கேற்பும் அதிகரிக்கும் என்ற நோக்கததில்தான் இம்முறை பெங்களூருவில் நடத்தப்பட்டது. 

"தென்னிந்திய மக்களின் வீரம், தியாகம் மற்றும் தேசத்திற்கான சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த வரலாற்று நிகழ்வு பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கர்நாடகாவைச் சேர்ந்தவரான பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பாவுக்கு மரியாதை சேர்ப்பதாகவும் இது இருக்கும்," என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. 

பெங்களூருவில் நடைபெற்ற ராணுவ தின நிகழ்ச்சியில், இந்திய ராணுவத்தின் வலிமையையும், திறனையும் பறைசாற்றும் வகையில் அணிவகுப்புகள் நடைபெற்றன.

இந்திய ராணுவ தினம்

பட மூலாதாரம், HARDIK CHHABRA/THE INDIA TODAY GROUP VIA GETTY IMAGES

வேகமாக மாறி வரும் தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்தை எதிர்கொள்ள இந்திய ராணுவம் எவ்விதம் தயாராகியுள்ளது என்பதை எடுத்துக் காட்டும் வகையிலும் அது அமைந்தது. 

மேலும், மோட்டார் சைக்கிள், பாரா மோட்டார்ஸ் மீது ராணுவ வீரர்கள் மெய் சிலிர்க்க வைக்கும் சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர்.

ராணுவ தினத்தின் கருப்பொருள் என்ன?

ஒவ்வோர் ராணுவ தினத்தன்றும் சில கருப்பொருட்களாக கொள்ளப்படும். அந்த வரிசையில், 'ரத்த தானம் செய்யுங்கள் - உயிரை காப்பாற்றுங்கள்' என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள்.

அதன்படி, டிசம்பர் முதல் ரத்த தான முகாம்கள் நடத்தப்படும். 

இந்திய ராணுவ தினம்

பட மூலாதாரம், TWITTER/@IASOUTHERN

மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்தில் கடந்த டிசம்பர் 24-ம் தேதியே இந்திய ராணுவத்தினர் ரத்த தான முகாம்களை நடத்தியுள்ளனர். 

பி.ஐ.பி. முகமை அளித்துள்ள தகவல்படி, அந்த காலகட்டத்தில் 7,500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டதுடன், ரத்த தானம் அளிக்க தயாராக உள்ள 75 ஆயிரம் தன்னார்வலர்கள் பட்டியலும் தயார் செய்யப்பட்டது. 

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

கடந்த ஆண்டில் ராணுவ தினத்திற்கான கருப்பொருளாக 'எதிர்காலத்திற்கான முன்னேற்றம்' என்ற வாசகம் இருந்தது. 

நவீனமாகிவிட்ட இன்றைய போர்க்களத்தில் அதிகரித்து வரும் அதிநவீன மற்றும் அழிவுகரமான தொழில்நுட்பத்தின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுவதே இதன் நோக்கம்.

- கமலேஷ் மதேனி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: