You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாலை வசதியே இல்லாத கிராமம்: 12 கி.மீ நடந்தே சென்று குழந்தை பெற்ற தாய் - பிபிசி கள ஆய்வு
- எழுதியவர், சுஜாதா
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில் மாநில அரசின் 108 ஆம்புலன்ஸ் திட்டம், தாய்-சேய் நலத்திட்டம், இல்லம் தேடி மருத்துவம் என்று பல மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் உள்ளன. இவ்வளவும் இருந்துகூட வேலூர் மலைக்கிராமம் ஒன்றில் 12கி.மீ தூரத்திற்கு நடந்தே சென்று குழந்தை பெறவேண்டிய நிலை இன்னமும் நிலவுகிறது.
மருத்துவமனைக்குச் செல்ல போக்குவரத்து வசதி, சாலை வசதி இல்லாததால், பெண் ஒருவர் பிரசவத்திற்காக 12 கி.மீ தூரம் நடந்து சென்று மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் வேலூர் மாவட்டத்திலுள்ள மலை கிராமத்தில் அரங்கேறியுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட ஜார்த்தன்கொல்லை ஊராட்சி, முத்தன் குடிசை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி சிவகாமி கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த வாரம் அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது.
சாலை வசதி இல்லாததால், வாகனம் மூலம் பயணிக்க முடியாத சூழலில் 12 கிலோமீட்டர் நடந்தே சென்று கணியம்பாடி அடுத்த துத்திக்காடு பகுதியை அவர் அடைந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஆட்டோ மூலம் வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிவகாமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
கரடு முரடான பாதை
குறிப்பிட்ட கிராமத்தின் நிலையை அறிந்துகொள்ள பிபிசி தமிழ் முயன்றது. நாக நதி என்ற மலை அடிவாரத்தில் இருந்து துத்தி காட்டிற்கான ஊராட்சி தொடங்கியது.
இருசக்கர வாகனங்கள்கூட செல்ல முடியாத நிலையே காணப்பட்டது. செல்லும் வழிகள் எல்லாம் காடு மேடுகளாகவும் கரடு முரடான பாதையாகவும் இருந்தது. சில தூரத்துக்கு இரு சக்கர வாகனத்திலும் சில தூரத்துக்கு நடந்தும் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.
மழைக்காலத்தில் இந்தப் பாதையில் நடந்து செல்வது மிகவும் கடினமானது என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். சுமார் 3 மணிநேர பயணத்துக்கும் பின்னர் முத்தன் குடிசை கிராமத்தை அடைந்தோம்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜார்த்தான் கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட 8 கிராமங்களில் ஒன்றுதான் முத்தன் குடிசை கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
முத்தன் குடிசை கிராம மக்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால் 40 கி.மீ மலைப்பாதையைச் சுற்றிவர வேண்டி உள்ளது. செல்லை என்ற கிராமத்தின் வழியாக கரடுமுரடான குறுக்குவழிப் பாதையில் பயணித்தால் 15 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சிறிய தனியார் மருத்துவமனை உள்ளது. குறைந்த நேரம் எடுக்கும் என்பதால், அப்பகுதி மக்கள் அவசரகால மருத்துவ சிகிச்சைகளுக்கு இந்த வழியை நாடுகின்றனர்.
முத்தன் குடிசை கிராமத்தை உள்ளடக்கிய ஜார்த்தான் கொல்லை ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம்கூட இல்லாத நிலை இருக்கிறது. அங்கு அரசின் துணை சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. இங்கு அரசு மருத்துவமனையில் இருந்து செவிலியர்கள் வாரத்திற்கு ஓரிரு முறை வந்து அடிப்படைப் பரிசோதனைகளை மேற்கொள்வதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நம்மிடம் கூறினர்.
பேருந்தே செல்லாத குக்கிராமம்
சுதந்திரம் அடைந்த காலகட்டம் முதல் இன்று வரை மூன்று ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவை அளிக்கப்பட்டதே இல்லை என்று தெரிவித்த உள்ளூர் மக்கள், கடந்த மாதம் அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட பிஞ்ச மந்தை கிராமத்தைச் சேர்ந்த சிறுவனை பாம்பு கடித்துள்ளது. சரியான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் சிறுவன் உயிரிழந்தார் என்றும் கூறினர்.
பேருந்து வசதி இல்லாததால் மருத்துவ வசதியைப் போலவே, இந்த மலை கிராமங்களில் வாழும் மக்களுக்கு கல்வியும் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை.
பிஞ்ச மந்தையில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். முத்தன் குடிசை கிராமத்தில் உள்ள மாணவர்கள் இந்தப் பள்ளியில் கல்வி கற்க தினசரி 5 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது.
உண்டு உறைவிடப் பள்ளியில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் அங்கேயே தங்கிப் பணியாற்றி வருகின்றனர். மற்ற ஆசிரியர்கள் இருசக்கர வாகனத்தின் மூலம் இந்தக் கரடுமுரடான பாதையில் அன்றாடம் பயணிக்கின்றனர்.
சவால் நிறைந்த பிரசவம்
இத்தகைய கடினமான சூழலில்தான் சிவகாமி அண்மையில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து சிவகாமி நம்மிடம் பேசும்போது, “என் கணவர் கட்டட வேலை செய்து வருகிறார். அதனால் அடிக்கடி வெளியூருக்கு வேலைக்குச் சென்றுவிடுவார். 4 அல்லது 5 மாதத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார். எனக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது அவர் என்னுடன் இல்லை.
முத்தான் குடிசை கிராமத்தில் இருந்து கூலூர் வரை செல்வதற்குத் துணைக்கு வர வீட்டில் ஆள் இல்லை; நானும் என் மாமியாரும் தனியாக காட்டுப்பாதை வழியாகப் பயணித்தோம். என் குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று மனதில் எண்ணிக்கொண்டே நடந்தேன். 12 கி.மீ தூரம் நடந்த பின்னர் ஆட்டோவை வரவைத்து மருத்துவமனையை அடைந்தோம்,” என்றார்.
கர்ப்ப காலத்தின் போதும், கணவர் வெளியூரில் இருந்ததால், தங்கள் ஊரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில் வாரந்தோறும் நடக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கான முகாமுக்கு நடந்தே சென்று வந்ததாகவும் சிவகாமி தெரிவித்தார்.
தனது முதல் பிரசவம் வீட்டிலேயே சுகப் பிரசவமாக அமைந்தது என்று குறிப்பிட்ட சிவகாமி, தங்கள் கிராமத்தில் பலரும் வீட்டிலேயே குழந்தையைப் பெற்றெடுப்பதாகவும் இந்த முறை வலி அதிகமானதால் தான் மருத்துவமனைக்குச் செல்லும் நிலை உருவானது என்றும் கூறினார்.
மேலும், “பேருந்து வசதி இருந்திருந்தால் எங்களுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது. எங்களுக்கு இப்போது இரண்டு பெண் குழந்தை. பஸ் வசதி இல்லாததால் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதுகூட சிரமமாகவே உள்ளது.
மலை கிராமத்தில் அனைத்து வசதிகளும் இருந்திருந்தால் நாங்களும் சந்தோஷமாக இருப்போம். என் மகள் பிறந்தது மூலம் எதாவது வழி கிடைத்தால் நன்றாக இருக்கும்,” என்று ஏக்கத்துடன் கூறினார்.
தாமதமாக கிடைத்த உதவி
சிவகாமிக்கு குழந்தை பிறந்த பின்னர் தாயும் சேயும் ஜூலை 1ஆம் தேதி மாலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இரவு நேரம் என்பதால் கரடு முரடான மலைப்பாதையில் பயணித்து கிராமத்திற்குச் செல்ல முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து துத்திக்காடு ஊராட்சி மன்றத் தலைவரும் உறவினருமான பாபு என்பவரின் வீட்டிலேயே அவர்கள் இரவு தங்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அணைக்கட்டு பகுதி தாசில்தார், கணியம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் ஆகியோர் தெள்ளை மலை கிராமத்திற்கு இரவு 1 மணிக்கு வந்துள்ளனர்.
அங்கு உறவினர் வீட்டில் தங்கியிருந்த குழந்தையையும், தாய் சிவகாமியையும் தாசில்தார் வந்த ஜீப் மூலம் அழைத்துச் சென்று அதிகாலை 3 மணிக்கு கணியம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.
பின்னர் தாய்-சேய் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு குழந்தைக்குத் தேவையான உணவு மற்று மருந்துகள் வழங்கப்பட்டன.
நம்மிடம் பேசிய துத்திக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் பாபு, “சிவகாமி என்னுடைய உறவினர். அவர் வாழும் முத்தன் குடிசை கிராமம் உட்பட இந்தப் பகுதியில் உள்ள 18க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு முறையான சாலை கிடையாது. அதனால் மக்கள் அடிப்படைத் தேவைகளுக்குக்காக பத்து, பதினைந்து கி.மீ. வரை நடந்து செல்லவேண்டிய நிலையுள்ளது," என்று குறிப்பிட்டார்.
இந்த கிராமங்களுக்கு சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி கிடைக்காததால் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. அண்மையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் விரைவில் சாலை அமைக்கும் பணி தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நபார்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்க 7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நூறு ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். நூறு ஆண்டுகளில் முதன்முறையாக இப்பகுதியில் சாலை அமைய இருக்கிறது. இந்தச் சாலை அமைந்தால் மக்களின் வாழ்க்கைச் சூழலும் குழந்தைகளின் கல்வித் தரமும் மேம்படும்,” என்று கூறினார்.
சாலை வசதி இல்லாததால் படிக்கவில்லை
சாலை வசதி இல்லாததால் தன்னால் கல்வி பயில முடியவில்லை என்று மோகனா நம்மிடம் கூறினார்.
“என்னுடைய அப்பா என் சின்ன வயதிலேயே இறந்து விட்டார். என்னுடைய அம்மா என்னை பள்ளியின் பக்கமே அனுப்பியதில்லை. சாலை வசதி இருந்திருந்தால் நானும் படித்திருப்பேன். கல்வி கற்க வாய்ப்பு இல்லாத நிலையில், 15 வயதிலேயே என்னை திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள்.
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அந்தக் குழந்தைகளை நாங்கள் எப்படி படிக்க வைப்பது என்று தெரியவில்லை. சாலை, பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட வசதிகளை அரசாங்கம் எங்களுக்குச் செய்து தர வேண்டும்,” என்று தனது கோரிக்கைகளை மோகனா பட்டியலிட்டார்.
"சாலை வசதி மட்டுமின்றி, இப்பகுதியில் ஒரு மருத்துவமனையும், பள்ளிக்கூடமும் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் இங்குள்ள மலைக்கிராம மக்களின் நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்," என்கிறார் கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம்.
முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன
சாலை வசதி உட்பட எவ்வித வசதியும் இல்லாமல் உள்ள மலை கிராமங்களின் நிலை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், “அடிப்படை வசதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாக உள்ள இந்த மலைக்கிராமங்களுக்கு உரிய வசதிகள் செய்து தருவதற்குத் தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன,” என்றார்.
மேலும், “வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் 700க்கும் மேற்பட்ட மலைக் கிராம குடியிருப்புகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தெந்த பகுதிகளுக்கு சாலை வசதிகள், மருத்துவ வசதிகள் இல்லை எனக் கண்டறிந்து தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையைப் பெற்று தற்பொழுது அப்பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதான சாலையைத் தான் தற்பொழுது அமைத்துக் கொண்டுள்ளோம்.
மற்றொரு சாலை அமைக்க வேண்டிய பகுதி செங்குத்தாக உள்ளது. எனவே, கொஞ்சம் சுற்றி வரக்கூடிய நிலையை ஏற்படுத்தி, செங்குத்து தன்மையைக் குறைத்து சாலையை அமைப்பதற்கான சர்வே பணி தொடங்கியுள்ளது," என்றார்.
"மலைப்பகுதிகளில் சாலை வசதி, சுகாதாரத்துறை வசதி, அங்கன்வாடி மையங்கள், விடுதிகள் கட்டடங்கள், குடி தண்ணீர் வசதி அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டு 40% முடிந்தடைந்த நிலையில் மீதி உள்ள அனைத்து பணிகளும் கட்டாயமாக ஆறு மாத காலகட்டத்திற்குள் செய்து முடிக்கப்படும்,” என்றும் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்