மாமன்னன் பேசும் அரசியல் என்ன? மாரி செல்வராஜ் அதை சரியாக காட்டியுள்ளாரா?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் ஃபாசில் நடித்து வெளியான மாமன்னன் திரைப்படம் தமிழகத்தில் சினிமா என்ற வகையிலும் அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு என்ன காரணம்?

மாமன்னன் திரைப்படம் ஜூன் 29ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. மாரி செல்வராஜ் இதற்கு முன்பாக இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் வெகுவாகக் கவனிக்கப்பட்ட நிலையில், இந்தப் படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் படத்தின் நாயகனான உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராகப் பதவியேற்றிருப்பதால், மாமன்னன் படமே தனது கடைசித் திரைப்படமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்தப் படம் தொடர்பான முதல் அறிவிப்பு வெளியானபோதே வடிவேலுவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், படம் தொடர்பான ஆர்வம் இன்னமும் அதிகரித்தது.

ஒரு கட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில் ஆகியோரைவிட வடிவேலுவுக்குத்தான் முக்கியமான பாத்திரம் என வெளியான தகவல், இன்னமும் எதிர்பார்ப்பை அதிகரித்தது.

ஆனால், இவை எல்லாவற்றையும்விட இந்தப் படம் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகம் இருந்ததற்கு முக்கியமான காரணம், மாரி செல்வராஜின் முந்தைய படங்கள்தான்.

மாரி செல்வராஜின் கதைக்களங்கள்

அவரது முதல் படமான பரியேறும் பெருமாள் வெளியானபோது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தென்மாவட்டங்களில் வெளிப்படையாகவே நிலவும் சாதிவெறி, அந்த சாதிவெறியின் கொடுங்கரங்கள் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் நீண்டிருப்பது, ஒடுக்கப்பட்டவர்களின் மீது மிக நுணுக்கமாகவும் வெளிப்படையாகவும் எல்லா இடங்களிலும் நடத்தப்படும் வன்முறை, அந்த வன்முறையை ஒடுக்கப்பட்டவர்கள் நிராதரவாக எதிர்கொள்ளும் விதம் என சமகாலத்தின் ஒரு சரித்திர சாட்சியமாக அந்தப் படம் அமைந்திருந்தது.

அதற்கடுத்த படமான கர்ணன், கொடியங்குளத்தில் நிகழ்த்தப்பட்ட காவல்துறையின் அத்துமீறலைப் பின்னணியாகக் கொண்டிருந்தது.

பரியேறும் பெருமாள் படத்தில் சாத ரீதியாக ஒடுக்கப்படும் நாயகன், அத்தனை ஒடுக்குமுறைகளுக்குப் பிறகும் அதிலிருந்து விலகிச் செல்வதாகவும் பணிந்து செல்வதாகவுமே காட்டப்பட்ட நிலையில், கர்ணன் படத்தின் நாயகன் இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வாளை ஏந்தியிருப்பது போலக் காட்டியிருந்தார் மாரி செல்வராஜ்.

மாமன்னன், முந்தைய இரண்டு படங்களில் இருந்தும் முழுமையாக மாறுபட்டு அமைந்திருந்தது.

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டம் ஒன்றில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர், அரசியலுக்கு வந்து கீழ் மட்டத்திலிருந்து வளர்ந்து எம்.எல்.ஏ.வாக ஆன பிறகும் இடைநிலை ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்படுவதும், ஒரு கட்டத்தில் மகனுடன் சேர்ந்த அவர்களை எதிர்ப்பதும்தான் இந்தப் படத்தின் கதையாக அமைந்திருந்தது.

இந்தக் கதையின் ஊடாக, தமிழ்நாட்டின் சில அரசியல் நிகழ்வுகளையும் கோடிட்டுக் காட்டியிருந்தார் மாரி செல்வராஜ்.

இந்தப் படத்தில் கதாநாயகனின் சாதி என்பது வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை என்றாலும் மேற்கு மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட சாதியினரான அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவராகவே நாயகன் காட்டப்படுகிறார்.

சினிமாவில் அருந்ததியர்கள்

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பாக வெகு சில படங்களில் மட்டுமே அருந்ததியர் கதாநாயகன், கதாநாயகியாக காட்டப்பட்டிருக்கிறார்கள். அதில் முக்கியமான படம் எம்.ஜி.ஆர். நடித்த மதுரைவீரன்.

அதற்குப் பிறகு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஆத்தா உன் கோயிலிலே திரைப்படத்தில் கதாநாயகன் அருந்ததியராகக் காட்டப்பட்டார். இந்தப் படம், காதலில் சாதி ஏற்படுத்தும் பிரச்னையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

ஆனால், மாமன்னன் படத்தின் முக்கியத்துவம் என்பது சாதி என்பது அரசியலில் எப்படிச் செயல்படுகிறது என்பதை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்ததுதான்.

தமிழ்நாட்டின் அரசியலில் சாதிக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கிறது. ஒவ்வோர் அரசியல் கட்சிக்குள்ளும் ஒடுக்கப்பட்டவர்கள் நடத்தப்படும் விதம் குறித்துப் பல விமர்சனங்கள் இருக்கின்றன. அந்த விமர்சனங்களில் முன்வைக்கப்படும் ஒரு விஷயத்தை இந்தப் படம் விரிவாக விவாதித்திருக்கிறது.

கட்சிக்குள் உள்ள ஒடுக்கப்பட்டவர்களை, இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவர்கள் எப்படி நடத்துகிறார்கள், அது எப்படி ஒரு சாதாரண விஷயமாகக் கடந்து செல்லப்படுகிறது என்பதை விமர்சனப்பூர்வமாக காட்டியிருந்தது மாமன்னன்.

கலைத்தன்மையில் பின்னடைவு

"படமாக்கப்பட்ட விதம், திரைக்கதை ஆகியவற்றில் சில பிரச்னைகள் இருந்தாலும் ஒரு சமகால அரசியல் பிரச்னையை கையாண்ட விதத்தில் மாமன்னன் மிக முக்கியமான படம்," என்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.

ஆனால், வேறு சில விமர்சகர்கள் மாரி செல்வராஜ் தன் முந்தைய படங்களில் எட்டியிருந்த கலைத் தன்மையிலிருந்து சரிந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார்கள்.

"இந்தப் படம், மாரி செல்வராஜின் படங்களில் வர்த்தகரீதியில் மிக முக்கியமான படமாக இருக்கலாம். ஆனால், அவரது முந்தைய இரண்டு படங்களோடு ஒப்பிட்டால், சற்று பின்னால்தான் இருக்கிறது," என்கிறார் அமெரிக்கன் கல்லூரியின் பேராசிரியரான பிரபாகரன்.

ஒரு படம் ஒடுக்கப்பட்டோரின் பிரச்னைகளைப் பேசுவதாலேயே அதைச் சிறந்த படமாகச் சொல்லிவிட முடியாது; மிகப் பெரிய இயக்குநராக வந்திருக்க வேண்டிய மாரி செல்வராஜ் இந்தப் படத்தில் ஒரு சரிவைச் சந்தித்துள்ளார் என்று குறிப்பிடுகிறார் பிரபாகரன்.

"இந்தப் படத்தில் இரண்டு உண்மையான விஷயங்களை மாரி செல்வராஜ் இணைத்திருக்கிறார். ஒன்று, தனபால் சபாநாயகராக ஆக்கப்பட்டது.

மற்றொன்று ஆதிக்க சாதியினருக்குச் சொந்தமான கிணற்றில் குளிக்கும் மாணவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள். ஆனால், அது ஒரு கலை வடிவமாக மாறவில்லை.

ஒரு மிக முக்கியமான பிரச்னையை நேரடியாக அணுகாமல், வர்த்தக ரீதியாக அணுகியிருக்கிறார். தவிர, ஓர் இயல்பான திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் இதுபோல இருக்கவே முடியாது.

ஒரு கமெர்ஷியல் நடிகரின் படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், சாதி வன்முறையைப் பேசும் படத்தில் அப்படி இருக்க முடியாது. ஓர் உண்மையான கலைஞன் பின்னடைவைச் சந்தித்திருப்பது வருத்தமளிக்கிறது," என்கிறார் பிரபாகரன்.

இந்தப் படத்தில் நாயையும் பன்றியையும் முரணாக நிறுத்தியிருப்பதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

"மாரி செல்வராஜ் தனது படங்களில் தொடர்ந்து சூழலில் தென்படும் விலங்குகளைக் காட்டுகிறார். முந்தைய படங்களிலும் நாய், கழுதை, குதிரை, பன்றி போன்றவை காட்டப்படும். இந்தப் படத்திலும் அவற்றைக் காட்டுகிறார். அது ஒரு மிக முக்கியமான அம்சம்," என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

''இந்த முறை சர்ச்சை இல்லை''

மாரி செல்வராஜின் முந்தைய படமான கர்ணன் வெளியானபோது, அந்தப் படம் தென் மாவட்டத்தை மையமாகக் கொண்டிருந்த படமாக இருந்தாலும், மேற்கு மாவட்டங்களில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்தப் படம் அம்மாதிரி ஒரு சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்கிறார் அவினாசியைச் சேர்ந்த எழுத்தாளரான கே.என். செந்தில்.

"இந்தப் படம் ஏன் சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்பது புரியவில்லை. படத்தைப் பொருத்தவரை முதல் பாதி, தாங்கள் தேர்ந்தெடுத்த களத்திற்கு நியாயம் செய்திருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி ஒரு வழக்கமான சினிமாகவே கடந்து போய்விட்டது. கடைசியில் தேர்தல் போட்டிதான் படம் என்பதுபோல ஆகிவிட்டது," என்கிறார் கே.என். செந்தில்.

இருந்தபோதும், அரசியலில் ஒடுக்கப்பட்ட சாதியினர் மீதான அதிகாரத்தை எவ்வளவு நுட்பமாக இடைநிலை சாதியினர் கையாளுகின்றனர் என்பதைப் படத்தின் துவக்கத்திலிருந்து இறுதிவரை நுணுக்கமாக காட்டிக்கொண்டே வருவது பரவலான பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.

மாரி செல்வராஜை பொறுத்தவரை, இந்தப் படம் கலைரீதியாக அவரை முன்னகர்த்தியிருக்கிறதா என்ற கேள்விக்கு வெவ்வேறு பதில்கள் இருக்கலாம். ஆனால், 'மாரி செல்வராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' ஒன்றை உருவாக்கினால், இந்தப் படத்திற்கு அதில் முக்கியமான இடம் இருக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: