You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாமன்னன்: 'இசக்கி' வடிவேலு உதயநிதியின் தந்தையாக சாதித்தாரா? - ரசிகர்கள் கருத்து
இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ளது ‘மாமன்னன்'.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் அவரது ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கிய முதல் இரண்டு படங்களின் தொடர் வெற்றியாலும், உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படமே தனது சினிமா பயணத்தின் கடைசி திரைப்படம் என அறிவித்திருந்த காரணத்தாலும், தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான வடிவேலு குணசித்திர வேடம் ஏற்று நடித்திருந்ததாலும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்தது.
‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’ படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய கருத்துகள் விவாதத்தைக் கிளப்பின.
தேவர் மகனின் இசக்கிதான் தனது மாமன்னன் என்கிறார் மாரி செல்வராஜ். இது ஏன் என்ற எதிர்பார்ப்புக்கு இடையே படம் வெளியாகியுள்ளது.
சென்னையில் முக்கியத் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. திரைப்படத்தைப் பார்க்க வந்தவர்களின் கருத்தை பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம்.
வடிவேலுவின் மாறுபட்ட நடிப்பு
பெரும்பாலான ரசிகர்கள் திரைப்படத்தைப் பாராட்டிப் பேசினார்கள். வடிவேலுவின் நடிப்பும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் சிறப்பாக இருந்ததாகப் பலர் குறிப்பிட்டனர்.
“இப்போதைய காலகட்டத்துக்கு இந்தப் படம் மிகவும் அவசியமாகத் தேவையானது” என்று ஒருவர் தெரிவித்தார்.
“வடிவேலு நகைச்சுவைப் பாத்திரத்தில் இருந்து மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்” என்றும் அவர் கூறினார்.
"படத்தை ஒரே ஒரு தடவை பார்க்கலாம்" என்று ஒரு ரசிகர் படம் குறித்த தனது விமர்சனத்தைச் சுருக்கமாக முன்வைத்தார்.
படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் இல்லாமல் இருந்தாலும் சிறப்பாக இருப்பதாக மற்றொருவர் தெரிவித்தார். எல்லோருக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்று இந்தத் திரைப்படம் பேசுவதாக திரைப்படம் பார்த்துவிட்டு வந்த மற்றொரு ரசிகர் குறிப்பிட்டார்.
இது அரசியல் திரைப்படம் என்று குறிப்பிட்ட ஓர் இளைஞர், மாரி செல்வராஜ் தனது படத்தின் அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருக்கும் வகையில் எடுத்திருப்பதாகக் கூறினார்.
“இதற்கு முன் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் வடிவேலு நடத்திருக்கிறார்.
சங்கமம் திரைப்படத்தில் மணிவண்ணனுடன் பேசுவது போன்ற காட்சியில் தனது நடிப்பை வடிவேலு வெளிப்படுத்தியிருப்பார். அதையெல்லாம்விட இந்தப் படத்தில் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார்,” என்று ரசிகர் ஒருவர் குறிப்பிட்டார்.
இசக்கி வடிவேலு மாமன்னன் கதாபாத்திரத்தில் எப்படி?
தேவர் மகன் திரைப்படத்தில் வரும் இசக்கி தான், மாமன்னன் படத்தில் வரும் வடிவேலு என்று மாரி செல்வராஜ் பேசியதைத் தொடர்ந்து, தற்போது மாமன்னன் கதாபாத்திரத்தை இசக்கியுடன் ஒப்பிட்டு, ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மற்றொரு ரசிகர், “இசக்கி எனக் கூப்பிட்டால், கக்கத்தில் துண்டை வைத்துக்கொண்டு, கை போனா போகுதுங்க நீங்க அண்ணியோட சிரிங்கனு சொல்ல வேண்டுமென எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த மாமன்னன் இசக்கி பயமாகத்தான் இருப்பான்.
மீசை இல்லாத இசக்கியும் வாள் எடுப்பான், மிரட்டுவான், அறிவாளியாகவும் இருப்பான்,” என்று திரைப்படம் குறித்த தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
“இடைவேளைக்கு முன்பு, கிளைமாக்ஸ் இரண்டு பகுதிகளிலும் மயிர்க்கூச்செறியும் திரைக்கதை. படம் முழுவதும் நாய், பன்றி, குதிரை, அப்பப்போ மலை மேல் லாங் ஷாட், ஆங்காங்கே புரட்சி வசனம். இதை வைத்தே படத்தை ஓட்டிவிட்டார். உதய் முகத்தில் நடிப்பே வரவில்லை. இசக்கி தான் மாமன்னன், தேவர் மகன் கமல் லுக்லதான் ஃபகத் இருக்கிறார்,” என்று ஒரு பயனர் மாமன்னன் திரைப்படம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் இந்தப் படம் குறித்து பதிவிட்டுள்ள ஒரு பயனர், “வடிவேலுவுக்காக இந்தப் படத்தைச் சென்று பார்க்க வேண்டும். அந்த ஜாம்பவான், தனது கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்