டைட்டன் நீர்மூழ்கி மீட்பு: உள்ளே என்னென்ன கிடைத்திருக்கின்றன?

டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காகச் சென்று ஆழ்கடலில் நசுங்கி சிதைந்த டைட்டன் நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்தவர்களின் உடற் பாகங்கள் கிடைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.

இந்த நீர்மூழ்கியில் பயணம் செய்த 5 பேரும் இறந்துவிட்டனர். டைட்டன் நீர்மூழ்கியின் சிதைந்த பாகங்கள் கனடாவின் செயின்ட் ஜான்ஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டன.

டைட்டனின் தரையிறங்கும் சட்டமும் பின்புற உறையும் இந்தப் பாகங்களில் அடங்கும் என கடலோரப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க மருத்துவ வல்லுநர்கள் இந்தச் சிதைவுகளை முறையான பகுப்பாய்வு செய்வார்கள் என்று கடலோரப் படை தெரிவித்துள்ளது.

வடக்கு அட்லாண்டிக்கில் 3,800 மீ (12,500 அடி) ஆழத்தில் மூழ்க்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்காக ஜூன் 18-ஆம் தேதி சென்ற 5 பேரும் இறந்தனர்.

இந்த விபத்துக்குப் பிறகு முதல் முறையாக டைட்டனின் பாகங்கள் வெளி உலகுக்குக் காட்டப்படுகின்றன.

புதன்கிழமை கனடாவின் செயின்ட் ஜான்ஸில் உள்ள ஹொரைசன் ஆர்க்டிக் கப்பலில் இருந்து டைட்டன் நீர்மூழ்கியின் உலோகச் சிதைவுகள் இறக்கப்பட்டன.

என்னென்ன கிடைத்திருக்கின்றன?

உடல்கள் எதுவும் மீட்பதற்கான வாய்ப்பு குறித்து அதிகாரிகள் ஆரம்பத்தில் சந்தேகம் கொண்டிருந்தனர்.

"இது கடற்பரப்பில் நம்பமுடியாத அளவுக்கு கடினமான முடியாத சூழல்" என்று கடலோரப் படையின் ஜான் மாகர் கூறினார்.

இதுவரை டைட்டானிக் கப்பலுக்கு அருகில் உள்ள ஒரு பெரிய குப்பைக் களத்தில் நீர்மூழ்கியின் 5 பெரிய துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்சம் ஒரு டைட்டானியம் எண்ட் கேப், டைட்டானியம் வளையம், தரையிறங்கும் சட்டகம், கருவிகள் வைக்கும் பெட்டி ஆகியவை அடங்கும் என்று பிபிசி அறிவியல் செய்தியாளர் ஜொனாதன் அமோஸ் தெரிவித்தார்.

டைட்டனின் மீட்பு பணிக்கு கனடா கப்பலான ஹொரைசன் ஆர்க்டிக் தலைமை ஏற்றது. தற்போது மீட்புப் பணிகளை முடித்துவிட்டு தளத்துக்குத் திரும்புவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

டைட்டனை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் பாதுகாப்புக் குறைபாடுகளுக்காக விமர்சிக்கப்பட்டது. இதன் பாதுகாப்பு பற்றி முன்னாள் ஊழியர்கள் பலரும் குறை கூறியுள்ளனர்.

என்ன நடந்தது?

ஜூன், 111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காகப் புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி நசுங்கி நொறுங்கியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்தது

டைட்டன் நீர்மூழ்கியின் உள்ளே இருந்து நிகழ்ந்த வெடிப்பு(implosion) இந்த இழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க கடலோர காவல் படை கூறுகிறது.

இதற்கிடையே டைட்டன் நீர்மூழ்கியின் பாதுகாப்பு குறித்த கவலைகளை முன்பே வெளிப்படுத்தி கடல் தொழில்நுட்ப சமூகம் என்ற அமைப்பு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் ஜேம்ஸ் கேமரூனும் இதுகுறித்து முன்பே கணித்ததாகக் கூறுகிறார்.

இந்த விஷயத்தில் அமெரிக்கா, கனடா, பிரெஞ்சு நாடுகளின் குழுக்கள் கடந்த ஐந்து நாள்களாக பெரிய அளவிலான தேடல், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தன.

நீர்மூழ்கியில் இருந்தவர்கள் யார்யார்?

காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர்.

ஹாமிஷ் ஹார்டிங் - 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார்.

ஷாஸாதா தாவூத் - 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்.

சுலேமான் தாவூத் - ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர்

பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு.

ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி.

பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு.

ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி.

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த 19 வயதேயான சுலேமான் தாவூத், உலக சாதனையை முறியடிக்க விரும்பியதால், தனது ரூபிக்ஸ் கியூப்பை தன்னுடன் எடுத்துச் சென்றதாக அவரது தாய் கிறிஸ்டின் தாவூத் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ரூபிக் கியூப்பை கொண்டு உலக சாதனையை பதிவு செய்வதற்காக தந்தை ஷாஜதா தனது கேமராவைக் கொண்டு சென்றிருக்கிறார். கின்னஸ் உலக சாதனைக்காகவும் விண்ணப்பித்திருக்கிறார்.

டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளான நேரத்தில் கிறிஸ்டின் தாவூதும் கடலின் மேற்பரப்பில் நீர்மூழ்கிக்கு உதவுவதற்காக நின்று கொண்டிருந்த போலார் பிரின்ஸ் கப்பலில் இருந்தனர். அப்போதுதான் நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட தகவல் தெரியவந்தது.

"அதன் அர்த்தம் என்னவென்று எனக்கு அந்த நேரத்தில் புரியவில்லை. பின்னர் நீர்மூழ்கி அங்கிருந்து கீழ்நோக்கிச் சென்றது," என்று கிறிஸ்டின் கூறினார்.

டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குப் பிறகு தாவூத் குடும்பத்தினர் அளித்த முதல் பேட்டி இதுவாகும்.

டைட்டானிக் கப்பலின் சிதைவைப் பார்க்க தனது கணவருடன் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

"நான் பின்வாங்கிவிட்டு, [சுலேமானை] அழைத்துச் செல்ல இடம் கொடுத்தேன். ஏனென்றால் அவன் உண்மையில் செல்ல விரும்பினான்” என்றார் கிறிஸ்டின்.

சுலேமான், அவரது தந்தை ஷாஜதா தாவூத், மேலும் மூன்று பேர் நீர்மூழ்கியில் இறந்தனர். டைட்டனுக்குச் சொந்தமான ஓஷன்கேட்டின் 61 வயதான தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டிஷ் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு கடற்படையின் முன்னாள் ஆழ்கடல் வீரர் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர் அந்த மூவர்.

தனது மகன் சுலேமான் ரூபிக்ஸ் கியூப்பை மிகவும் நேசித்ததாகக் கூறுகிறார் கிறிஸ்டின் தாவூத்.

போகுமிடமெல்லாம் ரூபிக்ஸ் கியூபை எடுத்துச் செல்லும் வழக்கம் கொண்ட சுலேமான். 12 வினாடிகளில் கியூபை சரி செய்து பார்வையாளர்களை திகைக்க வைத்ததாகவும் கூறினார்.

டைட்டன் நீர்மூழ்கி எப்படிப்பட்டது?

கடல் மட்டத்திற்குக் கீழே 4000 மீட்டர் ஆழத்தை அடையும் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களில் ‘டைட்டன் நீர்மூழ்கியும்’ ஒன்று. இத்தகைய திறன்கொண்ட நீர்மூழ்கியை, ஓஷன்கேட் என்ற தனியார் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கிறது.

‘டைட்டன் நீர்மூழ்கியை’ போலவே ‘சைக்ளாப்ஸ்’ என்ற நீர்மூழ்கியையும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஓஷன்கேட் நிறுவனம் இயக்கி வருகிறது. ஆனால் ’டைட்டானிக் சேதத்தை’ பயணிகள் பார்வையிடுவதற்காகவே அந்த நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ‘டைட்டன் நீர்மூழ்கி’.

’டைட்டன் நீர்மூழ்கி சுமார் 10,432 கிலோ எடையளவைக் கொண்டது. மேலும் இரண்டு குவிமாடம் கொண்ட கார்பன் ஃபைபர் மற்றும் டைட்டானிய மூடிகளோடு,13 செ.மீ அளவிற்கு ஏரோஸ்பேஸையும் இது கொண்டுள்ளது.

இதனால் கடலுக்கு அடியில் சுமார் 4000 மீட்டர் (13,123 அடி) ஆழத்திற்கு டைட்டன் நீர்மூழ்கியால் செல்ல முடியும்.

'டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள்' கடலின் மேற்பரப்பில் இருந்து 3,800 மீட்டர் ஆழத்தில் கிடக்கின்றன. டைட்டன் நீர்மூழ்கியால் அதைச் சென்றடைய முடியும்.

டைட்டன் நீர்மூழ்கி எப்படி இயங்கும்?

’மற்ற நீர்மூழ்கி கப்பல்களைப் போல் அல்லாமல், டைட்டன் நீர்மூழ்கி குறைந்த அளவு சக்தியைக் கொண்டே இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதேநேரம், அது தன்னுடைய இயக்கத்தைத் தொடங்குவதற்கும், நிறுத்துவதற்கும் மற்றொரு தனி கப்பலின் துணையும், ஆதரவும் அதற்குத் தேவைப்படும்’ என அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு, டைட்டன் நீர்மூழ்கி முதன்முதலாக அதன் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியது. அதன் பின் 2021ஆம் ஆண்டு முதல் அதன் அதிகாரப்பூர்வ பயணம் தொடங்கப்பட்டது.

கடந்த ஆண்டு மட்டும் டைட்டன் நீர்மூழ்கி 10 ஆழ்கடல் பயணங்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்தப் பயணங்கள் அனைத்துமே டைட்டானிக் கப்பல் சிதைந்து கிடக்கும் பகுதிக்குச் சென்றவை அல்ல.

கப்பல் ஏவுதளத்திலிருந்து புறப்படுவது முதல் மீண்டும் மேற்பரப்புக்குத் திரும்புவது வரை மணிக்கு சுமார் 4 கிமீ வேகத்தில் ‘டைட்டன் நீர்மூழ்கி’ பயணிக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: