இலங்கையில் புற்றுநோய்க்கான மருந்து தட்டுப்பாடு: பள்ளி மாணவியை பலி வாங்கிய பொருளாதார நெருக்கடி

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால் இன்றும் மக்கள் பல்வேறு விதமான துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

நாட்டிலுள்ள நோயாளிகள் பெரும்பாலும் இவ்வாறான நெருக்கடிகளைச் சந்தித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் ஓரளவு முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அதன் தாக்கம் இன்றும் மக்களைப் பாதித்து வருகின்றது.

இந்த விஷயம் தொடர்பாக ஆராய்வதற்காக பிபிசி தமிழ், இறக்குவானை - பாலம்; கோட்டை பகுதிக்குச் சென்றது.

இரத்தினபுரி மாவட்டம் இறக்குவானை பகுதியில் பெருமளவு பெருந்தோட்ட மலையக தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அவ்வாறான பெருந்தோட்ட பகுதியே இறக்குவானை - பாலம்; கோட்டை பகுதி.

பாலம்; கோட்டை பகுதியிலுள்ள வரிசைக் குடியிருப்பு ஒன்றில் வாழ்ந்து வருகின்றார், புஷ்பலதா.

புஷ்பலதா, அவரது கணவர் இருவருமே கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.

அவர்களது பிள்ளைகள் இறக்குவானை பரியோவான் தமிழ் தேசிய கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்களுடைய இரண்டாவது மகளான டில்ஷா டில்ரூஷி, 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

டில்ஷா டில்ரூக்ஷி கடந்த சில மாதங்களாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டில்ஷா டில்ரூக்ஷியை தேடி பிபிசி குழுவினர், அவரது வீட்டிற்குச் சென்ற வேளையில் அவரது தாயும், சகோதரியும் மாத்திரமே வீட்டில் இருந்தார்கள்.

தனது கணவர், நோயால் பாதிக்கப்பட்டுள்ள டில்ஷா டில்ரூக்ஷியுடன், மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் தங்கியுள்ளதாக அவரது மனைவி புஷ்பலதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தனது மகள் எதிர்நோக்கியுள்ள நிலைமை குறித்து புஷ்பலதா தெளிவுபடுத்தினார்.

''மகளுக்கு ரத்தப் புற்றுநோய் எனச் சொல்லியிருக்காங்க. தலை சுற்றல், வாந்தி, மயக்கம் காரணமாக நாங்கள் மகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். இறக்குவானையில் இருந்து கஹவத்திற்கு அனுப்பினார்கள்.

அங்கிருந்து இரத்தினபுரி அனுப்பினார்கள். அங்கிருந்து மஹரகமவிலுள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.

மஹரகமவிற்கு எதற்கு அனுப்புகின்றார்கள் என்று முதலில் எங்களுக்குத் தெரியாது. பிறகு அங்குதான் அவளுக்கு புற்றுநோய் எனச் சொன்னார்கள்.

நாங்கள் ரொம்பவே கஷ்டப்படுகின்றோம். எங்கள் குடும்பமே மிகவும் கஷ்டப்படுகின்றது," என்று டில்ஷா டில்ரூஷியின் தாய் புஷ்பலதா தெரிவித்தார்.

வாழ்வாதாரத்தை பாதித்த புற்றுநோய்

மலையகப் பகுதிகளில் வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர், தினசரி சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டே தங்களது வாழ்வைக் கொண்டு செல்கின்றனர்.

தேயிலை தோட்டம், ரப்பர் தோட்டம், மரக்கறி செய்கை, கூலித் தொழில் போன்ற தினசரி சம்பளத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்களில்தான் இந்த மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

புஷ்பலதாவும் அவரது கணவரும்கூட இத்தகைய நாளாந்த சம்பளம் அடிப்படையிலான கூலித் தொழிலையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர்.

இருந்தும், தற்போது தனது மகள் நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து, கணவர் முழு நேரமும் மகளுடன் இருந்து அவரை கவனித்துக் கொள்வதாக புஷ்பலதா தெரிவிக்கிறார்.

மேலும், இருவரில் ஒருவரது தினசரி வருமானம் இதன்மூலம் நின்றுபோனதால், வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

''எங்களுக்கு இரண்டு பிள்ளைகள். எங்கள் குடும்பத்தில் நாங்கள் நான்கு பேரும் நண்பர்களாகவே இருந்தோம். அப்பா, பிள்ளைகள் என்று இருந்ததில்லை. பிள்ளைகள் மீது அவ்வளவு பாசமாக இருந்தோம்.

கடவுள் இவ்வளவு பெரிய ஒரு சோதனையைக் கொடுத்துவிட்டார். நாங்கள் யாருக்கும் கடுகளவேனும் கெட்டது நினைத்தது இல்லை. இதிலிருந்து எப்போது மீண்டு வருவோம் எனத் தெரியவில்லை," என வருந்துகிறார் புஷ்பலதா.

கூலித் தொழில் செய்துவரும் இருவருக்கும் ஒரு நாள் சம்பளமாக 1000 ரூபா முதல் 1,200 ரூபா வரை கிடைக்கும். இருவருக்குமாக சேர்த்து 2000 முதல் 2,400 ரூபா வரை கிடைக்கும்.

"மாதத்தில் 25 நாட்கள் வேலை இருக்கும். ஆனால், இப்போது நான் மட்டும் தான் வேலை செய்கின்றேன். அவர் மகளுடன் இருக்கின்றார். மகளை பார்த்துக் கொள்கின்றார்.

மகள் குணமடையும் வரை வேலைக்குச் செல்ல மாட்டேன். மகளை பார்த்துக் கொள்வேன் எனக் கூறிவிட்டார். நான் மட்டும்தான் வேலைக்குச் செல்கிறேன்.

நான்கு மாதம் வரை நாங்கள் இரண்டு பேரும் வேலைக்குச் செல்லவில்லை. பிள்ளையை பார்த்துக்கொண்டோம்," என்று கூறும் புஷ்பலதா ஒருவராவது வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதாலேயே தான் வேலைக்குச் செல்வதாகக் கூறுகிறார்.

மருந்துக்கடைகளில் கிடைக்காத மருந்துகள்

இலங்கையில் தற்போதுள்ள மருந்து தட்டுப்பாடு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் டில்ஷா டில்ரூக்ஷியையும் நேரடியாகவே பாதித்துள்ளது.

''மருத்துவர்கள் மருந்து எழுதிக் கொடுப்பார்கள். ஆனால், அந்த மருந்து மருத்துவமனையில் இருக்காது. அதில் பாதி மருந்துகளை வெளியே மருந்துக் கடைகளில் காசு கொடுத்துத்தான் வாங்குகிறோம்.

சில நேரங்களில் அங்கும் மருந்து இருக்காது. இந்த முறை மகளுக்கு மருந்துக்கடையில் மருந்து கிடைக்கவில்லை. கடைகளிலும் மருந்து இல்லை என்று சொல்கின்றார்கள்.

இந்த மருந்துகளை காசுக் கொடுத்து வாங்கும் அளவுக்கு நாங்கள் வருமானம் பெரும் குடும்பமும் இல்லை. இந்த மருந்துகளை வாங்குவதற்கு அரசாங்கம் உதவி செய்தால் அது பேருதவியாக இருக்கும்," என்று தமது தற்போதைய நிலைமையைக் கூறினார் புஷ்பலதா.

பதினைந்து வயதான டில்ஷா டில்ரூஷி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டும் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சூழ்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு சிறுமியான நிரோஷா அண்மையில் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.

மருந்து தட்டுப்பாடே கார்த்திகேயன் நிரோஷாவின் உயிரிழப்பதற்கான காரணம் என அவரது சகோதரியான கார்த்திகேயன் கனகபிரியா தெரிவிக்கிறார்.

இறக்குவானை பரியோவான் தமிழ் தேசிய கல்லூரியில் உயர்நிலை கல்வி பயின்று வந்த மாணவியே கார்த்திகேயன் நிரோஷா.

அவருக்கு 7 வயதாக இருந்தபோது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடும் சிகிச்சைகளுக்குப் பிறகு குணமடைந்து, மீண்டும் வழமையான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளார்.

எனினும், அவ்வப்போது மருத்துவ ஆலோசனைகளைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொண்டுள்ளார் கார்த்திகேயன் நிரோஷா.

இந்நிலையில், கொரோனா தாக்கத்தின்போது மருத்துவர்களிடம் உரிய வகையில் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருத்துவ சோதனைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையைத் தனது சகோதரி எதிர்நோக்கியதாக கனகபிரியா கூறுகின்றார்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மருத்துவர்கள் வருகை தந்து பரிசோதனைகளை நடத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

நோயை தீவிரமாக்கிய கொரோனா காலம்

இதையடுத்து, தனது சகோதரி மீண்டும் புற்று நோய் தாக்கத்திற்கு இலக்காகியதாக அவர் தெரிவிக்கின்றார்.

பொருளாதார நெருக்கடி காரணமாகத் தனது சகோதரியின் சிகிச்சைகளுக்குத் தேவையான மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவியமையால், அவற்றைக் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை தமக்கு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

"ஏழு வயதில் தங்கைக்கு புற்றுநோய் ஏற்பட்டது. ஐந்து, மருத்துவ சிகிச்சைகளுக்கு பின்னர் அவர் குணமடைந்திருந்தார். ஐந்து, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது.

கொரோனா காலப்பகுதி என்பதால், மருத்துவர்கள் அதிகமான சிகிச்சைகளை வழங்காததால், நோய் உடம்பு முழுவதும் பரவியது. அந்த காலகட்டத்தில் மருந்துக்கும் தட்டுப்பாடு இருந்தது. அந்த நேரத்தில் பொருளாதாரத்திலும் பாதிக்கப்பட்ட நிலைமைதான் காணப்பட்டது.

அரசு மருத்துவமனைகளிலும் மருந்துகள் இருக்கவில்லை. கடைகளில் வாங்கச் சொல்வார்கள். ஆனால், கடன்களை வாங்கிக்கொண்டு போனாலும்கூட, அங்கும் மருந்து இருக்காது. அந்தச் சந்தர்ப்பத்தில் கிடைத்த மருந்துகள் தரமற்றதாகவும் காணப்பட்டன.

"வாரத்திற்கு 60 ஆயிரம் வரை செலுவு செய்தோம்"

இதனாலேயே எங்களுடைய தங்கையை நாங்கள் இழந்துவிட்டோம். இந்த நிலைமை இனியும் வரக்கூடாது. எங்களுடைய தங்கையை இழந்து, நாங்கள் படும் கஷ்டத்தை வேறு யாரும் படக்கூடாது," என கார்த்திகேயன் கனகபிரியா தெரிவிக்கின்றார்.

புற்றுநோய் பாதிப்புகளை எதிர்நோக்கிய தனது தங்கைக்கு வழங்கிய மருந்து வகைகளுக்கான விலைகள் குறித்தும் கார்த்திகேயன் கனகபிரியா பிபிசி தமிழுக்கு தெளிவூட்டினார்.

''சிறிய குப்பிகளில் ஐந்து மில்லி லிட்டர் மருந்துகளைத் தான் வழங்கினார்கள். அந்த மருந்துகள்கூட 1050 ரூபா 1060 ரூபா வரை போகும். மருந்துகளை வாங்கும்போது 30000 வரை ஒரு மருந்துக்கு செலவிடப்படும்.

புற்றுநோயை பொருத்தவரை இரண்டு மருந்துகள் கொடுத்தார்கள். இந்த இரண்டு மருந்துகளை ஒரு வாரத்திற்கு வாங்குவதற்கு மாத்திரம் 60000 ரூபா வரை செலவு செய்ய வேண்டும்," என்கிறார் கனகபிரியா.

அது மட்டும் இல்லாமல் "போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட அனைத்தையும் பார்க்கும்போது செலவு இன்னும் அதிகமாகும். பொருளாதார பின்னடைவுக்கு மத்தியிலும் பணத்தைப் புரட்டிக்கொண்டு மருந்துக் கடைக்குப் போனாலும், அங்கு மருந்துகள் இல்லாத நிலைமை காணப்பட்டது.

புற்றுநோய்க்காகத் தயாரிக்கப்பட்ட மருந்துகள் அந்த சந்தர்ப்பத்தில் இல்லாமல் இருந்ததால், தனது தங்கையைப் போல் மருந்துகள் இல்லாமல் நிறைய பேர் உயிரிழந்த சந்தர்ப்பங்களும் இருக்கின்றன," என்று கார்த்திகேயன் கனகபிரியா தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: