புயல்களை எதிர்கொண்டு இந்தியாவுக்கு வந்த வாஸ்கோடகாமா கண்டது என்ன?

இந்தியாவைத்தேடி புறப்பட்ட கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்தபோது, போர்ச்சுகல் மன்னர் ஜான் இந்தியாவை அடைய கடல் வழியைக் கண்டுபிடிக்க முன்முயற்சி எடுத்தார். இந்த நோக்கத்திற்காக மூன்று பெரிய கப்பல்களை உருவாக்க மன்னர் உத்தரவிட்டார். ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டார்.

இந்தியாவுக்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறும் முன்பே அவர் காலமானார். ஆனால் அவரது வாரிசு இம்மானுவேலிடமும் இந்தியாவை அடைவதற்கான உற்சாகம் அதே அளவுக்கு இருந்தது. இந்தப்பணியை மேற்கொள்ள அவர் வாஸ்கோடகாமாவை கமாண்டராக தேர்ந்தெடுத்தார்.

வாஸ்கோ தன்னுடன் வந்த இரண்டு கப்பல்களுக்கு தனது சகோதரர் பாவ்லோ மற்றும் நண்பர் நிக்கோலஸ் கோயல்ஹோ ஆகியோரை கமாண்டர்களாகத் தேர்ந்தெடுத்தார். 1497 மார்ச் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, லிஸ்பனின் தெருக்களில் மக்கள் கூட்டம் திரண்டது. அன்று ஏதோ பெரிய, அசாதாரணமான ஒன்று நடக்கவிருந்தது.

ஒரு சந்தைப்பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் தங்கள் மந்திரிகள் புடைசூழ போர்ச்சுகலின் ராஜாவும் ராணியும் அமர்ந்திருந்தனர்.அவர்களுக்கு முன்னால் ஒரு திரை இருந்தது. கதீட்ரலின் பிஷப் வாஸ்கோடகாமாவின் பயணத்திற்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

பிரார்த்தனை முடிந்தவுடன் போர்ச்சுகல் மன்னர் இம்மானுவேல் திரையை விட்டு வெளியே வந்தார். மூன்று கப்பல்களின் கமாண்டர்களும் மண்டியிட்டு அவரை வணங்கினர்.

பயங்கரமான புயலை எதிர்கொண்டார்

மன்னரின் கையை முத்தமிட்ட பிறகு வாஸ்கோடகாமா ஒரு அரேபிய குதிரையில் அமர்ந்து ஊர்வலத்தின் முன் நடக்கத் தொடங்கினார். அவருடைய சகோதரர் பாவ்லோவும் நண்பன் நிக்கோலஸும் வேறு குதிரைகளில் அவருடன் சென்றனர்.அவர்களுக்குப் பின்னால் பிரகாசமான சீருடை அணிந்த கப்பலின் மாலுமிகள் நடந்து கொண்டிருந்தனர்.

வாஸ்கோவின் ஊர்வலம் துறைமுகத்தை வந்தடைந்தவுடன் பீரங்கி குண்டுகளை வெடித்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. வாஸ்கோ தனது குதிரையிலிருந்து இறங்கி 'சாவ் ரஃபேல்' என்ற தனது கப்பலில் ஏறினார். அவரது கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேறியபோது அங்கிருந்த மக்கள் கைகளை அசைத்து வாஸ்கோவை வழியனுப்பி வைத்தனர்.

பதிலுக்கு வாஸ்கோவும் அவரது தோழர்களும் டெக்கில் நின்று கைகளை அசைத்தனர். முதல் நாள் பலத்த எதிர் காற்று வீசியதால், வாஸ்கோவின் கப்பல்கள் லிஸ்பனில் இருந்து சிறிது தொலைவில் உள்ள பெலேம் என்ற இடத்தை மட்டுமே அடைய முடிந்தது. மூன்றாவது நாளில் காற்று தன் போக்கை மாற்றியது. காமாவின் குழு விரைவாக தன் இலக்கை நோக்கிப்புறப்பட்டது.

"மூன்று கப்பல்களும் அருகருகே ஓடிக்கொண்டிருந்தன. அவற்றின் கமாண்டர்கள் மேல் தளத்தில் நின்று ஒருவருக்கொருவர் பேசக்கூடிய அளவிற்கு அவை மிகவும் நெருக்கமாக இருந்தன. விரைவில் அவர்கள் கேனரி தீவுகளைக் கடந்தனர். அப்போது ஒரு பெரிய புயலை அவர்கள் எதிர்கொண்டனர்,” என்று ஜார்ஜ் எம். டோலி தனது ' தி வோயேஜஸ் அண்ட் அட்வென்சர்ஸ் ஆஃப் வாஸ்கோடகாமா,’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.

"அலைகள் அமைதியடைந்தபோது, வாஸ்கோவின் கப்பல் 'சாவ் ரஃபேல்' இன் எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் பாவ்லோவும் கோயல்ஹோவும் கேப் வெர்டேவை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் கேப் வெர்டேவை அடைந்தபோது வாஸ்கோவின் கப்பல் அங்கே நிற்பதைக் கண்டார்கள். அப்போதுதான் அவர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது. விசில் ஊதி, பீரங்கி குண்டுகளை வெடித்து அவர்கள் இந்த மறு சந்திப்பை வரவேற்றனர்.”

"பல மாதங்கள் பயணம் செய்த பிறகு வாஸ்கோவின் குழு, செயின்ட் ஹெலினா விரிகுடாவை அடைந்தது. அங்கு வசிக்கும் சிலர் வாஸ்கோவின் குழுவைத்தாக்கினர். வாஸ்கோ அம்புகளால் காயமடைந்தார், ஆனால் யாரும் இறக்கவில்லை."

கப்பலில் கிளர்ச்சி

வாஸ்கோ முன்னோக்கி நகர்ந்தபோது திடீரென்று ஒரு நாள் இன்னொரு பெரிய புயல் வந்தது. கப்பலின் மேல்தளத்தில் வெள்ளம் நிரம்பும் அளவுக்கு புயல் வீசியது. காற்று மிக பலமாக வீசியதால் தாங்கள் பறந்துவிடுமோ என்ற பயத்தில் வாஸ்கோவின் மாலுமிகள் தங்களை கயிறுகளால் கட்டிக்கொண்டனர். கப்பல்கள் எந்த நேரத்திலும் துண்டு துண்டாக உடைந்து விடலாம் என்று தோன்றும் அளவுக்கு சத்தம் எழுப்பியது. மாலுமிகள் மிகவும் பயந்தனர், அவர்கள் போர்ச்சுகலுக்குத் திரும்பும்படி வாஸ்கோவிடம் முறையிட்டனர்.

ஆனால் வாஸ்கோ அவர்கள் பேச்சைக் கேட்க மறுத்துவிட்டார். இந்தியாவுக்குப் போவோம், இல்லையேல் இங்கேயே இறப்போம்’ என்று அவர் சொல்லி விட்டார்.

சஞ்சய் சுப்ரமணியம் தனது 'தி கேரியர் அண்ட் லெஜண்ட் ஆஃப் வாஸ்கோடகாமா' என்ற புத்தகத்தில்,"புயல் சிறிது தணிந்ததும், மூன்று கப்பல்களும் ஒன்றாக நகர ஆரம்பித்தன. 'சாவ் ரஃபேல்' மாலுமிகள், 'சாவ் கேப்ரியல்' மற்றும் 'சாவ் மிகுவல்' மாலுமிகளிடம் தங்கள் தளபதிகளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் என்று அவர்களைத் தூண்டத் தொடங்கினர்,” என்று எழுதியுள்ளார்.

"இந்தக் கிளர்ச்சியை நசுக்க எல்லா கிளர்ச்சியாளர்களையும் வாஸ்கோ சிறைபிடித்தார். மேலும் அவர்கள் போர்ச்சுகலுக்குத் திரும்பும் வரை அவர்களை சங்கிலிகளால் கட்டிவைக்கவும் உத்தரவிட்டார். வாஸ்கோவின் இந்த நடவடிக்கை கிளர்ச்சியை முற்றிலும் நசுக்கியது."

மெலிந்தாவின் மன்னர் வாஸ்கோவை வரவேற்கிறார்

இந்த புயலால் மூன்று கப்பல்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. அவற்றில் பல இடங்களில் ஓட்டைகள் ஏற்பட்டன. கப்பலில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியதால் சமையல்காரர்கள் சமையலுக்கு கடல் நீரையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

பத்து நாட்களுக்குப் பிறகு, வாஸ்கோவின் அணி ஒரு ஆற்றின் முகத்துவாரத்தை அடைந்தது. வாஸ்கோ இங்கே நங்கூரமிட முடிவு செய்தார்.

மூன்று கப்பல்களும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. 'சாவ் மிகுவல்' இனி முன்னே செல்லும் நிலையில் இல்லை என்று கண்டறியப்பட்டது.அதை அங்கேயே விட்டுவிட்டு அதன் மாலுமிகள் மற்ற இரண்டு கப்பல்களுக்கு மாற்றப்பட்டனர்.

மார்ச் மாத இறுதியில் வாஸ்கோ மொசாம்பிக் துறைமுகத்தில் நங்கூரமிட்டார். ஆனால் அங்குள்ள ஷேக்கின் விரோதப் போக்கைக் கண்டு வாஸ்கோ அங்கிருந்து முன்னே செல்ல முடிவு செய்தார். கடற்கரையோரமாக பயணம் செய்து வாஸ்கோ மெலிந்தாவை அடைந்தார். அங்கு மன்னரும் மக்களும் அவரை அன்புடன் வரவேற்றனர்.

அங்குள்ள அரசர் வாஸ்கோவின் கப்பலில் அவரைச் சந்திக்க வந்தார். வாஸ்கோ அவருக்கு முன்னால் ஒரு நாற்காலியை போட்டு மன்னரை அதில் அமரச்சொன்னார். அங்கு இருந்த ஒரு ஆப்பிரிக்க அடிமை இருவருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டார்.

வாஸ்கோ முன்னோக்கி செல்ல அனுமதி கேட்டபோது, அடுத்த மூன்று மாதங்கள் இங்கு காத்திருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் சாதகமான கடல் காற்று வீசும், மேலும் இந்தியாவை நோக்கிச்செல்ல முடியும் என்றும் மன்னர் கூறினார்.

வாஸ்கோ தனது கப்பல்களை பழுதுபார்ப்பதற்கு இந்த நேரத்தை பயன்படுத்தினார். கப்பலில் குடிநீர் நிரப்பப்பட்டது. கப்பல்களில் இறைச்சி, காய்கறிகள் மற்றும் பழங்கள் நிரப்பப்பட்டன.

இந்தியாவின் கடற்கரையைப் பார்த்த வாஸ்கோடகாமா உணர்ச்சிவசப்பட்டார்

ஆகஸ்ட் 6 ஆம் தேதி வாஸ்கோடகாமா முன்னோக்கி பயணத்தைத் தொடங்கினார். இதுவரை அவர்கள் நிலத்தின் விளிம்புக்கு அருகிலிருந்து கடலில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது அவர்கள் முதல் முறையாக திறந்த கடலுக்கு செல்ல வேண்டியிருந்தது. இதற்கிடையில், மெலிந்தாவிலிருந்து அழைத்து வரப்பட்ட சில கருப்பினத்தவர்களிடம் மொழி பெயர்ப்பாளர் மூலம் பேசி இந்தியா மற்றும் அதன் மக்களைப் பற்றிய தகவல்களை வாஸ்கோ சேகரித்து வந்தார்.

பத்தொன்பது நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் காலையில் மெந்தாவில் இருந்து உடன் வந்த ஒரு மாலுமி வாஸ்கோவிடம் வந்து, "கேப்டன், நாம் இந்தியாவின் கடற்கரைக்கு மிக அருகில் இருப்பதாக நினைக்கிறேன். நாளை காலை நாம் நிலத்தைப் பார்க்க முடியும்,” என்றார். அன்று இரவு வாஸ்கோவுக்குத் தூக்கம் வரவில்லை.

"அதிகாலையில் அவர் தனது தோழர்களுடன் கப்பலின் மேல்தளத்திற்கு வந்தார். நிலத்தின் முதல் காட்சியை பார்ப்பதற்காக அவரின் கண்கள் கிழக்கில் நிலைகுத்தி நின்றன. பின்னர் சத்தம் கேட்டது. அங்கிருந்தவர்கள் நிலம், நிலம், நிலம், என்று கூச்சலிட்டனர். ஒரு கணம் கழித்து, கப்பலின் மாலுமி வாஸ்கோவின் முன் குனிந்து, தனது நடுங்கும் விரல்களால் கிழக்குப் பகுதியைக் காட்டி, "கேப்டன், அதோ தெரிவது இந்திய நிலம் " என்று கூறினார். அங்கிருந்த மாலுமிகளின் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வந்தது. வாஸ்கோ மண்டியிட்டு கடவுளுக்கு நன்றி கூறினார். அவரது தோழர்களும் அதையே செய்தனர்,"என்று ஜார்ஜ் எம்.டோலி எழுதுகிறார்.

கப்பல் உள்ளூர் படகுகளால் சூழப்பட்டது

கப்பல்கள் நங்கூரமிட்டிருப்பதைக் கண்டதும் சில மீனவர்கள் படகுகளில் அவர்களிடம் வந்தனர். கோழிக்கோடு அங்கிருந்து தெற்கே 12 மைல் தொலைவில் உள்ளது என்று அவர்கள் கூறினார்கள். வாஸ்கோவால் கோழிக்கோட்டின் குவிமாடங்களையும் கோபுரங்களையும் தூரத்தில் இருந்தே பார்க்க முடிந்தது.

மறுநாள் சூரியன் உதித்தபோது வாஸ்கோவின் இரண்டு கப்பல்களையும் பல படகுகள் சூழ்ந்தன. அவர்களில் கருப்பு நிற தோலுடைய இந்திய வீரர்கள் இருந்தனர். அவர்களின் உடல்கள் வெறுமையாக இருந்தன. ஆனால் அவர்கள் உடலின் கீழ் பகுதியை வெவ்வேறு வண்ண ஆடைகளால் மூடியிருந்தனர். வந்திருப்பது யார், அவர்கள் இங்கு வந்ததன் நோக்கம் என்ன என்பதை அறிய அவர்கள் மிகவும் ஆவலாக இருந்தனர்.

அதில் சில படகுகள் மீனவர்களுடையது. வாஸ்கோ அவர்களுடைய மீன்களை வாங்க முன்வந்தார். சில அந்நியர்கள் கோழிக்கோடு வந்தடைந்த செய்தி அங்கிருந்த ஜாமோரின் அரசரை எட்டியது.

அத்திப்பழங்கள், தேங்காய்கள் மற்றும் கோழிகளுடன் அந்தக் கப்பல்களுக்கு மீண்டும் திரும்பிச் செல்லுமாறும், வந்திருப்பவர்களைப்பற்றி முடிந்தவரை அறிய முயற்சிக்குமாறும் அவர் மீனவர்களுக்கு உத்தரவிட்டார்.

வாஸ்கோ, மன்னர் ஜாமோரினுக்கு அன்பளிப்புகளை வழங்கினார்

பல நாள் ஆலோசனைக்குப் பிறகு, கோழிக்கோடு மன்னர் ஜாமோரினை சந்திக்க வாஸ்கோ செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. சிவப்பு துணி, பட்டு, மஞ்சள் சாடின் துணி, 50 தொப்பிகள், யானை தந்தத்தின் பிடி கொண்ட 50 கத்திகள் மற்றும் விலையுயர்ந்த துணியால் மூடப்பட்ட நாற்காலி ஆகியவற்றை அன்பளிப்பாக கொண்டு சென்றார்.

"வாஸ்கோ நீல நிற சாடின் ஆடையை அணிந்திருந்தார். இடுப்பில் கட்டப்பட்டிருந்த பெல்ட்டில் தங்கக் கைப்பிடிகொண்ட குத்துவாள் தொங்கியது. தலையில் வெள்ளை இறகு செருகப்பட்டிருந்த நீல வெல்வெட் தொப்பி இருந்தது. அவர் காலில் வெள்ளை காலணிகள் அணிந்திருந்தார்,” என்று சஞ்சய் சுப்ரமணியம் எழுதுகிறார்.

அவருக்கு முன்னால் 12 காவலர்கள் நடந்து சென்றனர். அவர்களின் கைகளில் அரசருக்குப் பலவிதமான பரிசுப் பொருட்கள் இருந்தன. இந்த ஊர்வலத்தின் முன் போர்த்துகீசியர்கள் சிலர் ஊதுகொம்பை வாசித்தபடி அணிவகுத்துச் சென்றனர்."

சுற்றிலும் மக்கள் கூட்டம் இருந்தது. மிகவும் சிரமப்பட்டு வாஸ்கோவை நசுங்காமல் காப்பாற்ற வேண்டியிருந்தது. இந்தியாவில் தனக்கு எப்படி மதிப்பளிக்கப்படுகிறது என்பதை போர்ச்சுகல் மக்கள் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று வாஸ்கோ அப்போது நினைத்தார்.

ஜாமோரினுடன் வாஸ்கோவின் சந்திப்பு

வாஸ்கோ ஜாமோரின் முன் வந்தபோது, அவருக்கு முன் மூன்று முறை தலையை குனிந்து வணங்கினார். ஜாமோரின் தனக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியைக் காட்டி, வாஸ்கோவை அதில் உட்காரச் சொன்னார். அப்போது சாப்பிடுவதற்காக அத்திப்பழம், வாழைப்பழம், பலாப்பழம் போன்றவை கொண்டுவரப்பட்டன. பழங்களை சாப்பிட்டதும் போர்த்துகீசியர்களுக்கு தாகம் ஏற்பட்டது.

"கோப்பையை உதடுகளில் வைக்காமல் தண்ணீரைக் குடிக்குமாறு அவர்களிடம் கூறப்பட்டது. தண்ணீர் அவர்களின் உள்ளங்கைகளில் ஊற்றப்பட்டது. அவர்கள் அதைக் குடித்தார்கள். போர்த்துகீசியர்கள் இதைச் செய்தபோது சிலருக்கு தண்ணீர் தொண்டையில் சிக்கியது. தண்ணீரை அவர்கள் தங்கள் உடைகளில் கொட்டிக்கொண்டனர். இந்தக் காட்சியைக் கண்டு ஜமோரினால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஜமோரினுக்காக தான் கொண்டு வந்திருந்த நாற்காலியில் உட்காருமாறு வாஸ்கோ ஒரு மொழி பெயர்ப்பாளர் மூலம் அவரிடம் சொன்னார்,” என்று ஜார்ஜ் எம். டோலி எழுதுகிறார்.

"வாஸ்கோ ஜமோரினைப் பார்த்து, "நீங்கள் பெரியவர், மிகவும் சக்திவாய்ந்த மன்னர்களில் ஒருவர். எல்லாம் உங்கள் காலடியில் உள்ளது. போர்ச்சுகல் மன்னர் உங்கள் மகிமையின் கதைகளைக் கேட்டுள்ளார். உங்கள் நட்பை பெறுவதற்காக என் மூலம் செய்தி அனுப்பியுள்ளார். நீங்கள் விரும்பினால் எங்களின் பல கப்பல்கள் இங்கு வந்து, இங்கிருந்து உங்களின் பெருமைகளை எங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்லும். மக்களுக்கு இடையேயான தொடர்பு காரணமாக கோழிக்கோட்டின் வர்த்தகம் வளரும்." என்றார்.

அதற்குப் பதிலளித்த ஜாமோரின், ”நீங்கள் எதற்காக இங்கு வந்துள்ளீர்களோ அந்த எல்லா பொருட்களையும் இங்கிருந்து எடுத்துச் செல்ல உங்களுக்கு அனுமதி உண்டு. நீங்கள் நகரத்தின் நடுப்பகுதிக்குச் சென்று உல்லாசமாக இருக்கலாம். உங்களை யாரும் துன்புறுத்தப்பட மாட்டார்கள்,” என்றார்.

சில மாதங்கள் தங்கியிருந்த பிறகு போர்ச்சுகல் திரும்பினார்

இதற்குப் பிறகு ஜாமோரின் வாஸ்கோவிடம் போர்ச்சுகல் இங்கிருந்து எவ்வளவு தூரம்? அவர்களின் நாடு எவ்வளவு பெரியது? அங்கு என்ன உற்பத்தி செய்யப்படுகிறது? அவர்களிடம் எத்தனை கப்பல்கள் உள்ளன? அவர்களின் ராணுவம் எவ்வளவு பெரியது?போன்ற கேள்விகளைக்கேட்டார்.

வாஸ்கோ எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தார். வாஸ்கோ அரசரின் அரண்மனையை விட்டு வெளியே வீதிக்கு வந்தபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அவரது தோழர்கள் எப்படியோ ஒரு குதிரைக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் குதிரையின் மேல் சேணம் இருக்கவில்லை. எனவே வாஸ்கோ அதன் மீது உட்காராமல் நனைந்தபடி நடந்து சென்றார்.

கோழிக்கட்டில் சில மாதங்கள் தங்கியிருந்த வாஸ்கோ 1498 நவம்பரில் போர்ச்சுகலுக்கு தனது பயணத்தை தொடங்கினார். வாஸ்கோ போர்ச்சுகலை விட்டுச்சென்று 19 மாதங்கள் கடந்துவிட்டன. வாஸ்கோ கோழிக்கோட்டில் இருந்து கோவா சென்றார். அங்கு இரவில் வாஸ்கோவின் கப்பல்களைத் தாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது, ஆனால் வாஸ்கோவின் தோழர்கள் அந்த முயற்சியை முறியடித்தனர்.

போர்ச்சுகலுக்குத் திரும்பும் வழியில் வாஸ்கோ மீண்டும் மெலிந்தாவில் நங்கூரமிட்டார். அங்கு மன்னர் அவரை மீண்டும் அன்புடன் வரவேற்றார். அங்கு 12 நாட்கள் தங்கிய பிறகு வாஸ்கோடகாமா போர்ச்சுகல் நோக்கிச் சென்றார். அவர்களின் கப்பல் கேப் வெர்டேயை அடைந்தபோது, வாஸ்கோவின் சகோதரர் பாவ்லோ நோய்வாய்ப்பட்டார். மறுநாள் அவர் அங்கேயே காலமாகிவிட்டார். துக்கத்தில் திளைத்த வாஸ்கோ அவரின் இறுதி சடங்குகளை அங்கேயே செய்தார்.

லிஸ்பனில் வரலாறு காணாத வரவேற்பு

வாஸ்கோ போர்ச்சுகலை அடைவதற்கு முன்பே, அவரது வெற்றிகரமான பயணம் பற்றிய செய்தி அங்கு வந்துவிட்டது. வாஸ்கோ லிஸ்பனை அடைந்ததும் முழு நகரமும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அங்கு நின்றது. தூரத்தில் இருந்தே அவருக்கு பீரங்கி குண்டுகளின் சத்தம் கேட்டது. அவரது கப்பல் அருகே வந்தவுடன் துறைமுகத்தில் இருந்து பீரங்கிகள் சுடப்பட்டு, அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

வாஸ்கோ கப்பலில் இருந்து இறங்கியதும், அவரது தாடி வளர்ந்திருப்பதையும், முகம் சோகமாக இருப்பதையும் மக்கள் பார்த்தனர். அவர் அரண்மனையை அடைந்ததும், அரசர் இம்மானுவேல் நாற்காலியில் இருந்து எழுந்து அவரை வரவேற்றார்.

வாஸ்கோ மண்டியிட்டு மன்னரின் கையை முத்தமிட்டார். ஆனால் இம்மானுவேல் அவரைத் தூக்கி நிறுத்தி மார்புடன் அணைத்துக் கொண்டார். வாஸ்கோவின் பயணம் 1497 மார்ச் 25 முதல் 1499 செப்டம்பர் 18 வரை அதாவது சுமார் இரண்டரை ஆண்டுகள் நீடித்தது. அவர் தனது பயணத்தைத் தொடங்கியபோது, அவரது அணியில் 100 உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால் அவர் திரும்பியபோது அவருடன் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களே இருந்தனர்.

அவர் தனது பயணத்தைத் தொடங்கியபோது அவரது கப்பல் புத்தம் புதியதாக இருந்தது. ஆனால் அவர் திரும்பி வந்தபோது அது மிகவும் பழையதாகவும், இத்தகைய பயணங்களுக்கு தகுதியற்றதாகவும் இருந்தது.

வாஸ்கோ மேலும் இரண்டு முறை இந்தியா வந்தார்

வாஸ்கோவின் குழு உறுப்பினர்களுக்கு நிறைய பணம் வெகுமதியாக வழங்கப்பட்டது. கூடவே அவர்களின் மனைவிகளுக்கு ஐந்து கிலோ மசாலா வழங்கப்பட்டது. இறந்த மாலுமிகளின் குடும்பங்களுக்கு அவர்களின் முழு ஊதியமும் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பொருட்களில் ஒரு பங்கும் கிடைத்தது. வாஸ்கோவிற்கு இம்மானுவேல் அரசரால் டான் பட்டம் வழங்கப்பட்டது மற்றும் அவரது ஓய்வூதியம் அங்கீகரிக்கப்பட்டது.

அவர் சைனிஸ் கிராமத்தின் தலைவராக ஆக்கப்பட்டார். வாஸ்கோடகாமா இந்த கிராமத்தில்தான் பிறந்தார். படிப்படியாக அவரது புகழ் ஐரோப்பா முழுவதும் பரவியது. அவர் கொலம்பஸின் போட்டியாளராகக் கருதப்பட்டார். அவர் நாட்டின் பெருமையாகவும், முன்னுதாரணமாகவும் ஆனார்.

1502 இல் அவர் மீண்டும் கோழிக்கோடு சென்றார். 1524 இல் அவர் வைஸ்ராய் பதவியுடன் கோழிக்கோடு அனுப்பப்பட்டார். அதே ஆண்டில் அவர் கொச்சியில் காலமானார்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உடல் அவரது சொந்த நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு அரசு மரியாதைகளுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: