You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
- எழுதியவர், மார்ஷியல் எஸ்குடேரோ
- பதவி, 'The Conversation' ஆய்வுத்தொகுப்பில் இருந்து
அறிவியலின் இரண்டு கண்டுபிடிப்புகளால் மனிதனின் மனம் வெகுவாக பாதிக்கபட்டதாக கூறுகிறார் சிக்மண்ட் பிராய்ட்.
பூமி என்ற கிரகம் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருந்தாலும், மனிதன் மிக குறுகிய காலமாகவே இங்கு இருக்கிறான். அவன் இல்லாமலேயே இங்கு எல்லாம் இருந்தன. மேலும் மனித இனம் முற்றிலும் சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்ல இயலாது. மனித உடலமைப்பில் இயற்கையின் பிழைகள் உள்ளன என்கிறார் அவர்.
ஆண் இனப்பெருக்க அமைப்பு
மனிதனின் உடல் எவ்வளவு மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஆணின் இனப்பெருக்க அமைப்பே சிறந்த உதாரணம். அத்தகைய உணர்வு திறன்மிக்க ஓர் உறுப்பு இவ்வளவு வெளிப்படையாக இருப்பது உகந்ததாக தெரியவில்லை. இதயம், நுரையீரல் போன்று ஆணுறுப்பும் நன்கு பாதுகாக்கப்பட்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.
மனிதனின் உடல் வெப்பநிலையில் ( (36.5ºC) விந்தணுக்கள் சரியாக உருவாவதில்லை என்பதுதான் பிரச்னை. இருப்பினும், உடல் வெப்பநிலையை குறைப்பதற்கான வழிமுறைகளை அறிந்து வைத்துள்ளோம் என்பது சற்று ஆறுதலான விஷயம்.
ஆனால், தவளைகள் போன்ற சூடான ரத்தம் இல்லாத உயிரினங்கள் நன்கு பாதுகாக்கப்பட்ட ஆண் இனப்பெருக்க அமைப்பை பெற்றுள்ளன.
இதேபோன்று யானைகள் போன்ற சூடான ரத்தத்தை கொண்டுள்ள விலங்கினங்களும், ரத்தத்தின் சூட்டால் விந்தணுக்களுக்கு தீங்கு விளையாத தகவமைப்பை இயற்கையாக பெற்றுள்ளன.
முதுகு வலி
மனித உடல் மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதற்கு முதுகெலும்பு மற்றொரு உதாரணம். தங்களது வாழ்நாளில் முதுகு வலியை சந்திக்காத நபர்கள் யாரேனும் இருக்க முடியுமா?
மனிதனை தவிர, நான்கு கால்களில் நடக்கும் பிற பாலுட்டிகளில் முதுகெம்பு கிடைமட்டமாக அமைந்துள்ளது. இது, உடலின் பிற கட்டமைப்புகளை திறம்பட ஆதரிக்க உதவியாக உள்ளது.
ஆனால், இரு கால்களில் நடக்கும் மனிதனின் உடலமைப்பானது அவனின் முதுகெலும்பு செங்குத்தாக கட்டமைக்கப்பட்டுள்ளதையே குறிக்கிறது.
இதன் விளைவாக முதுகெலும்பின் கீழ் பகுதி அதிக எடையை தாங்க வேண்டியுள்ளது. இதனால் இடுப்பு வலி, முதுகு வலி போன்றவை ஏற்படுவது மனிதனுக்கு விதியாக அமைந்துள்ளது.
கண்களில் குருட்டுப் புள்ளி
மனித கண்களின் அமைப்பும் பரிணாம வளர்ச்சியின் குளறுபடிக்கு மற்றொரு உதாரணமாக கூறப்படுகிறது.
மனிதனின் விழித்திரையானது ஒளி ஏற்பிகளால் (photoreceptors ) மூடப்பட்டிருக்கும். ஒளி தகவல்கள் இவற்றின் மூலம் பார்வை நரம்புகளுக்கு கடத்தப்பட்டு, பின்னர் அவற்றின் மூலம் மூளைக்கு அனுப்பப்படுகின்றன.
இதில் குளறுபடி என்னவென்றால், பார்வை நரம்பு விழித்திரையை கடக்கும் இடத்தில் ஒளி ஏற்பிகள் இல்லை. அதாவது ஒவ்வொரு மனிதனின் கண்ணிலும் ஒரு குருட்டுப் புள்ளி இருக்கிறது.
ஆனால், மனிதனை போலவே கண்களை பெற்றுள்ள ஆக்டோபஸ் போன்ற உயிரினங்களில் இந்த பிரச்னை இல்லை. ஆக்டோசின் விழித்திரை நரம்புகள் அவற்றின் விழித்திரைக்கு பின்னால் அமைந்துள்ளன. எனவே அவை எந்த நேரத்திலும் மூளைக்குச் செல்லும் வழியில் விழித்திரையை கடக்க வேண்டியதில்லை. இதனால் இதுபோன்ற உயிரினங்களின் கண்களில் குருட்டுப் புள்ளி இல்லை.
தொண்டை மற்றும் மூச்சுத் திணறல்
தொண்டை அமைப்பு மனிதனின் மோசமான உடல் வடிவமைப்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆரோக்கியமான மனிதர்களுக்கு ஏற்படும் இயற்கைக்கு முரணான மரணங்களுக்கான காரணங்களில் மூச்சுத் திணறல் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஸ்பெயினில் கார் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட, மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணித்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகம்.
உணவுக் குழாய் மற்றும் மூச்சுக் குழாய் உடலின் சில பகுதியில் ஆபத்தான முறையில் சந்திக்கின்றன. அதில் குரல்வளை முக்கிய இடமாக திகழ்கிறது.
பொதுவாக உணவும், தண்ணீரும் உணவுக் குழாய் வழியாகவும், காற்று மூச்சுக் குழாய் வழியாகவும் உடம்புக்குள் செல்கின்றன. ஆனால் சில நேரம் ஏதோ தவறு ஏற்பட்டு, உணவு மூச்சுக் குழாய்க்கு சென்று, காற்றோட்டத்தை தடுத்து விடுகிறது. இதனால் மூச்சுத் திணறல் உண்டாகி மனிதன் இறக்கவும் நேரிடுகிறது.
சுருங்க சொன்னால், திராட்சையை கூட அதிவேகமாக உட்கொள்ளும் அளவுக்கு மனித உடல் வடிவமைக்கப்படவில்லை.
விட்டமின் சி குறைபாடு
500 ஆண்டுகளுக்கு முன் மெகெல்லன் மற்றும் எல்கானோவுடன் சுமார் 250 மாலுமிகள் பூமியை சுற்றி வர புறப்பட்டனர். ஆனால் அவர்களில் 18 பேர் மட்டுமே பூமியை வெற்றிகரமாக சுற்றி முடித்தனர்.
இந்த பயணத்தில் அவர்கள் சந்தித்த பெரிய பிரச்னைகளில் ஸ்கர்வி என்று நோயும் ஒன்று. நெடுநாட்களுக்கு புத்தம் புதிய உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது.
விட்டமின் சி வகை உணவுகளை உட்கொள்ள முடியாமல் போகும்போது உடம்பில் அதன் அளவு குறைகிறது. இதனால் மனிதனின் திசுக்களை பராமரிப்பதிலும், அவற்றை மீள் உருவாக்கம் செய்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் கொலஜன் எனும் புரதத்தை மனித உடலால் ஒருங்கிணைக்க முடியாமல் போய் விடுகிறது.
மனித உடலானது விட்டமின் சி பெறுவதற்கான தொகுப்பு வழியை பெற்றுள்ளது. ஆனால் அந்த வழி முழுமையடையாதபடி அமைந்துள்ளது. இதன் விளைவாக, விட்டமின் சியை மனித உடல் இயற்கையாக உற்பத்தி செய்ய முடியாமல், அதனை புத்தம் புது உணவு வகைகளில் இருந்தே பெற வேண்டி உள்ளது.
ஆனால், தங்களது உடம்பில் விட்டமின் சி இயற்கையாகவே உற்பத்தியாகும் திறனை பூனைகள் பெற்றுள்ளன. எனவே அவை ஸ்கர்வி நோய்க்கு ஒருபோதும் ஆளாவதில்லை.
இயற்கையின் பிழை
மனிதனின் உடல் வடிவமைப்பில் இயற்கை செய்த பிழைகளில் சில உதாரணங்கள் மட்டுமே இங்கு சொல்லப்பட்டுள்ளன. மனித ரத்தம் உறைதல் நுட்பம், வளைந்து கொடுக்காத அவனின் கால் எலும்புகள், மனித மரபணு என இந்த பட்டியல் நீளும்.
அறிவார்ந்த வடிவமைப்பில் இருந்து வெகுதொலைவில் உள்ள பரிணாம செயல்முறைகளில் விளைவாக, மனித இனத்தை நன்றாக விளக்க முடியும். அதே நேரம், மனிதன் அல்லாத பிற ஹோமோ சேபியன்களில் கலப்பினமாக்கல், மரபணு நகர்வு உள்ளிட்ட காரணிகள் நன்றாக செயல்படுகின்றன.
பரிணாம செயல்பாட்டில் மனிதனுக்கு பொருத்தமான பங்கு இல்லை. மாறாக, மற்ற பல உயிரினங்களைப் போல அவனும் வாய்ப்பின் விளைவாக இங்கு இருக்கிறான் என்கிறது அறிவியல்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்