நிர்வாணமாகப் போராடும் பல்கலைக்கழகப் பேராசிரியர் - என்ன காரணம்?

பட மூலாதாரம், Dr Victoria Bateman
- எழுதியவர், சுவாமிநாதன் நட்ராஜன்
- பதவி, பிபிசி உலக சேவை
விக்டோரியா பேட்மேன், உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக உள்ளார்.
ஆனால் அவ்வப்போது அரசியல் போராட்டங்களையும் நடத்தி வருகிறார். அதுவும் ஆடையில்லாமல்.
“சிலர் என்னை பார்த்து நான் ஒரு முட்டாள் என்று நினைப்பார்கள். ஆனால் நான் என்னுடைய கொள்கையில் உறுதியாக இருக்கிறேன் என்று அவர்களிடம் சொல்ல தோன்றும்.” என்கிறார் விக்டோரியா.
அரசியலில் இது புதியது
ஆடையில்லாமல் போராட்டம் செய்வது சர்ச்சையான ஒன்று. ஆனால் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பொதுவெளியில் நிர்வாணமாக இருப்பது குற்றமல்ல. ஆனால் ஒருவர் பிறரை துன்புறுத்த தனது ஆடைகளை களைந்தால் அது குற்றமாகும்.
ஆனால் தனது போராட்டங்கள் அமைதியானவை என்கிறார் விக்டோரியா.
“எனது எண்ணம் இயல்புநிலைக்கு இடையூறு விளைவிப்பது இல்லை. கவனத்தை ஈர்ப்பதே ஆகும். அது பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு மறுக்கப்படுவது, பெண்கள் மீது பிரெக்ஸிட்டின் விளைவு, அல்லது பெண்கள் மேல் நடத்தப்படும் தாக்குதல்கள் போன்று எந்த விஷயமாக இருந்தாலும் சரி. நான் போராடுவேன்.” என்கிறா விக்டோரியா.
அதேபோல ஆடையில்லாமல் போராட்டம் செய்வதை மக்கள் விமர்சித்தாலும் தனது போராட்டத்திற்கான காரணங்கள் குறித்து நன்கு விவாத்க்கப்படுகிறது என்கிறார் அவர்.
விலங்குகள் நல ஆர்வலர்கள் விலங்குகளின் தோலை பயன்படுத்துவதை எதிர்த்து ஆடையில்லாமல் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். அதேபோல பருவநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இவ்வாறு போராடியுள்ளனர். ஆனால் அரசியலில் இவ்வாறு ஆடையில்லாமல் போடுவது புதியது.
பெண்களுக்கான வரையறை என்பது ஒடுக்குமுறையின் மற்றொரு பெயர்
விக்டோரியா பேட்மேன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். தனது படிப்பால் உயர்ந்து முன்னுக்கு வந்தவர். முதலில் அனைத்து பெண்களையும் போல அவரும் “மரியாதை, மானம்” என்றெல்லாம் யோசித்துள்ளார்.
அதன்பின் “பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என ஏதோ ஒரு ஆண் சொல்வதற்கேற்றாற்போல நான் ஏன் நடந்து கொள்ள வேண்டும். அதனை காட்டிலும் கவலைப் பட பல விஷயங்கள் உள்ளனவே” என அவருக்கு தோன்றியது.
பேட்மேன் இவ்வாறு ஆடையில்லாமல் போராட்டங்களை மேற்கொள்வதற்கு கொள்கை ரீதியாக அவர் எடுத்த முடிவும் ஒரு காரணம்.
“’பெண்களுக்கான வரைமுறை’ என இவர்கள் சொல்வது பெண்களை ஒடுக்கி வைப்பதற்காகதான். அது ஆண்களுக்கு பெண்கள் மீது அதிகாரத்தை கொடுக்கிறது. பெண்ணின் மானம் என்பதை கொண்டு அவளை தீர்மானிக்க எத்தனிப்பது அவளை அவமரியாதை செய்வதாகும். இவர்களின் பார்வையில் மானம் என்ற வரையறைக்குள் வராத பெண்களை ஏதோ இறைச்சி துண்டுகளை போலதான் நடத்துகிறார்கள்.” என விக்டோரியா பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த எண்ணம் பல ஒடுக்குமுறைகளுக்கு வழிவகுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“இதுவே சர்வதேச அளவில் பெண்களின் சுதந்திரத்தை பாதிக்கும் கொள்கைளை வகுக்க வழி செய்கிறது. இதுவே ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளிக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவது, கட்டாய ஹிஜாப், கன்னித்தன்மை பரிசோதனை, கெளவரத்திற்காக கொலை செய்தல், பழிவாங்குதலுக்காக காணொளிகளை பதிவேற்றுதல் போன்றவற்றுக்கும் வழி வகை செய்கிறது.” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Dr Victoria Bateman
மாடலாக தொடங்கிய பயணம்
10 வருடங்களுக்கு முன்னதாக விக்டோரியா, ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க தனது நிலையை பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தார். பெண் ஓவியக் கலைஞர்கள் முன் ஆடைகளை களைந்து நின்று ஓவியங்கள், சிலைகளை தீட்ட உதவினார்.
அதன்பின் சிறிது தன்னம்பிக்கை வந்ததும் ஆண் கலைஞர்களுடன் பணியாற்றினார்.
அந்த ஓவியங்களும் சிலைகளும் விரைவில் பொதுவெளிகளில் காட்சிக்கு வைக்கப்படும்.
அதன்பின் ஒரு கட்டத்தில் அரசியல் காரணங்களுக்காக போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தார்.
ஒரு பொருளாதார பேராசிரியராக தனது துறையில் ஆண்களின் ஆதிக்கத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். எடுத்துகாட்டாக சொல்ல வேண்டும் என்றால் வெறும் இரண்டு பெண்கள் மட்டுமே பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
பொருளாதார துறையில் ஆண்களே அதிகம் இருப்பதால், ஆண்களின் பார்வையில் மட்டுமே கொள்கைகள் வகுக்கப்படுகின்றன என்பதை உணர்ந்தார்.
2018ஆம் ஆண்டின்போது பிரிட்டனில் மிகப்பெரிய பொருளாதார நிபுணர்கள் மாநாடு நடந்தபோது இந்த விவகாரத்தை வெளியில் கொண்டுவர நினைத்தார் விக்டோரியா. நிபுணர்கள் நிறைந்திருந்த அறையில் ஆடைகள் ஏதுமின்றி அவர் நடந்து வந்தார்.
“நான் உயரம் குறைவானவள். வலுவானவலும் இல்லை. நான் யாருக்கும் எந்த அச்சுறுத்தலையும் வழங்கவில்லை. ஆனால் நீங்கள் ஒரு அறையில் ஆடையில்லாமல் நடந்து சென்றால் உங்களை மக்கள் அச்சுறுத்தலாகதான் பார்ப்பார்கள்.” என்கிறார் அவர்.
அந்த நிகழ்வின்போது அவர் தனது உடம்பில் ‘மரியாதை’ என்று மார்கரால் எழுதியிருந்தார். அவரின் போராட்டத்தின் பயனாக அங்கு வந்த முக்கியமானவர்களுடன் உரையாடுவதற்கு அவருக்கு வாய்ப்பும் கிடைத்தது.

பட மூலாதாரம், Dr Victoria Bateman
பெண்களுக்கான சுதந்திரம்
அதேபோல ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று கூறும் பிரெக்சிட் பிரசாரத்தின்போதும் ஆடையின்றி போராட்டம் நடத்தினார் விக்டோரியா.
அப்போது அவரை படம் பிடித்து பலர் சமூக ஊடகத்தில் பதிவேற்றினர். அந்த படங்களுக்கு பல்வேறு விதமான மோசமான பின்னூட்டங்கள் வந்தன. அவரது உடல் உறுப்புகள் குறித்து தவறாக பேசினர். அவரின் வெற்றிகள் தவறான வழியில் கிடைத்திருக்க கூடும் எனவும் சிலர் மோசமான பேசினர்.
அதனால் அவருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
ஆனால் மிக மோசமான பின்னூட்டங்கள் பெண்களிடமிருந்தும் வந்தன என்றும், தான் பெண்ணியத்தை பின்னோக்கி எடுத்து செல்வதாக பெண்கள் பேசினர் என்றும் விக்டோரியா தெரிவிக்கிறார்.
சிலருக்கு தனது நோக்கம் குறித்து புரிய வைக்கவும் முயற்சி செய்ததாகவும் கூறுகிறார் அவர்.
தனது புதிய புத்தகம் நேக்கட் ஃபெமினிசம் – ப்ரேகிங் தி கல்ட் ஆஃப் ஃபீமேல் மாடஸ்டி-ல் இம்மாதிரியான பல எதிர்மறை கருத்துக்கள் குறித்தும் பேட்ஸ்மேன் பேசியுள்ளார்.
“எந்த வரையறையும் இல்லாமல் அனைத்து பெண்களும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம்” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Dr Victoria Bateman
“நாம் நமது சிந்தனையை மாற்றிக் கொள்ள இன்னும் நீண்டகாலம் பிடிக்கும்” என்கிறார் விக்டோரியா.
“சமையல் செய்வது, சுத்தம் செய்வது, குழந்தைகள் மற்றும் முதியவர்களை பராமரிப்பது என பெண்கள் ஊதியம் பெறாத பல பணிகளை செய்கின்றனர். இவற்றுக்கெல்லாம் குறைந்த ஊதியம் என்று வழங்கினாலும் அது 10 ட்ரில்லியன் டாலர்களை தாண்டும் என்கிறது பிரிட்டனின் தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபார்ம். ஆனால் இதுபற்றி யாரும் பெரிதாக பேசுவதும் இல்லை.”
அதிகாரம் மிக்க ஆண்கள் மற்றும் அவர்களது கொள்கைகளை எதிர்த்து ஆடையின்றி போராடும் ஒவ்வொரு தருணத்தையும் தான் விரும்புவதாக தெரிவிக்கும் விக்டோரியா பேட்மேன், இலக்கிய நிகழ்ச்சிகளில் ஆடையில்லாமல் உரையாற்றுவது, கலந்து கொள்வது போன்ற முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அதேபோல தனது போராட்டங்கள் தனது வகுப்புகளை பாதிக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
“முன்பைக் காட்டிலும் தற்போது எனது மாணவர்கள் அதிகமாக பெண்ணியம் குறித்தும் இந்த உலகம் குறித்தும் பொருளாதாரம் குறித்தும் என்னிடம் கேள்வி கேட்கின்றனர்” என்கிறார் அவர்.
“எனது எண்ணம் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்த உலகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் தனது உடலை கொண்டும் புத்தியை கொண்டும் தாங்கள் என்ன செய்ய நினைக்கிறார்களோ அதை செய்ய சுதந்திரம் இருக்க வேண்டும். ஹிஜாப்புக்கு தடைவிதிப்பதையும் நான் எதிர்க்கிறேன், கட்டாயம் ஹிஜாப் என்ற விதியையும் நான் எதிர்க்கிறேன். அரசும் சமூகமும் பெண்கள் தங்களின் உடலை வைத்து என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல வேண்டியதில்லை”என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












