திட்வா புயல்: '200 ஆண்டு பின்னோக்கி' சென்ற மலையகத் தமிழர்களின் வாழ்க்கை

திட்வா புயல் - மலையக தமிழர்கள்
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் 200 ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாற்றை கொண்ட இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் வாழ்க்கையை, திட்வா புயல் முற்றாக மாற்றியமைத்துள்ளது.

எந்தவித வசதிகளும் இல்லாத லைன் அறைகளில் (Line Rooms) வாழ்ந்து வந்த மலையக தமிழர்கள் கடந்த சில வருடங்களாகவே படிப்படியாக தனி வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்திருந்தனர்.

இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் என்ற அடிப்படையில் இவர்களின் வாழ்க்கை, சுமார் 200 ஆண்டுகளின் பின்னர் படிப்படியாக மாற ஆரம்பித்திருந்தது.

பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தனி வீடுகளுக்கு சென்ற மலையக தமிழர்களில் பலர் இன்று மீண்டும் லைன் அறைகளில் வாழ்க்கைக்கு திரும்பியுள்ளமை கவலையளிக்கின்றது.

இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் ஆகியவற்றில் ஏற்பட்ட அபாயகர நிலைமையே இதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது.

இந்த வீட்டுத் திட்டங்களை அமைப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இரண்டு விதமான ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தது.

வீட்டுத் திட்டம் அமையப் பெறும் முழு காணிக்கான ஆய்வு அறிக்கை மற்றும் தனி வீடுகளை அமைக்கும் காணிகளுக்கான ஆய்வு அறிக்கை என இரண்டு விதமான அறிக்கைகளை சமர்ப்பித்ததன் பின்னரே இந்த வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட்டன.

எனினும், அபாயகரமற்ற, அதிவுயர் பாதுகாப்பு பகுதிகளையும் திட்வா புயல் அபாயகரமான பகுதிகளாக இப்போது மாற்றியுள்ளது.

லைன் அறைகளுக்கு மீண்டும் சென்ற மலையக மக்கள்

திட்வா புயல் - மலையக தமிழர்கள்

வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய திட்வா

மாத்தளை - ஹூன்னஸ்கிரிய பகுதியில் வாழ்ந்து வருபவர்கள் எலிஸ்டன் மற்றும் ஜூலியட் தம்பதியின் குடும்பம். மூன்று பிள்ளைகளின் பெற்றோராகிய இவர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்தமையினால், இந்த குடும்பத்திற்கு வீட்டுத் திட்டம் கிடைத்துள்ளது.

தலைமுறையின் 200 வருட லைன் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, தனி வீட்டு வாழ்க்கைக்கு சென்ற அவர்கள், தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு வகையிலும் சிந்தித்ததாக கூறுகின்றனர்.

தனது கையில் முறிவு ஏற்பட்டதை அடுத்து தோட்ட தொழிலுக்கு செல்வதை தான் தவிர்த்ததாக ஜூலியட் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜூலியட்டின் கணவர் எலிஸ்டன், கூலித் தொழிலை செய்வதற்காக தோட்டத்திலிருந்து வெளியில் சென்றுள்ளார். எலிஸ்டனின் தொழில் முன்னேற்றம் காரணமாக வாழ்க்கை படிப்படியாக முன்னேறிய வந்த நிலையில், திட்வா புயல் தாக்கியது.

பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் லைன் வீட்டிலிருந்து தனி வீட்டுக்கு சென்ற தம்மை, திட்வா புயல் மீண்டும் லைன் வாழ்க்கைக்கே திரும்பியனுப்பியதாக எலிஸ்டன், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

திட்வா புயல் - மலையக தமிழர்கள்
படக்குறிப்பு, 200 வருட வாழ்க்கையை விட்டு போக வேண்டும் என்று சொல்லி தான் கொஞ்சம் முன்னோக்கி போனோம். கடைசியில் மீண்டும் கீழே வீழ்ந்து விட்டோம் என்கிறார் எலிஸ்டன்

''நாங்கள் சாப்பிட போகும் போது பின்நேரம் 4.30 (மாலை) இருக்கும். எங்களுடைய வீட்டின் பின்னால் இருந்த சுவர் இடிந்து வீழ்ந்து விட்டது. சாப்பாடு கூட சாப்பிடாமல் அப்படியே எல்லாவற்றையும் போட்டு விட்டு மாமா விட்டுக்கு வந்து விட்டோம். 200 வருட வாழ்க்கைக்கு திரும்பவும் வந்து விட்டோம். எங்களுடைய பிள்ளைகளுக்கு ஆசையை காட்டி மோசம் பண்ணி விட்டோம். திரும்புவும் அந்த வீட்டில் இருக்க முடியாது.

திரும்பவும் ஒரு அனர்த்தம் வந்தால் எங்களுடைய பிள்ளைகளை நாங்களே குழியில் தள்ளுற மாதிரி தான். லைன் வாழ்க்கையை தொடரக்கூடாது என்பதே எமது ஆசை. இதையும் விட்டு வெளியில் போக வேண்டும். 200 வருட வாழ்க்கையை விட்டு போக வேண்டும் என்று சொல்லி தான் கொஞ்சம் முன்னோக்கி போனோம். கடைசியில் மீண்டும் கீழே வீழ்ந்து விட்டோம்.'' என எலிஸ்டன் குறிப்பிடுகின்றார்.

மீண்டும் லைன் வாழ்க்கைக்கு திரும்பியது தமக்கு கவலை அளிப்பதாக எலிஸ்டனின் மனைவியான ஜூலியட் தெரிவிக்கின்றார்.

''கதைக்க இயலாது. சரியான கவலையாக இருக்கு. அப்பாவுடைய வீடு இருந்ததால் அங்கு வந்திருக்கிறோம். நான் தோட்டத்தில் வேலை செய்தேன். விழுந்து கையில் மூட்டு ஒன்று விலகியதனால் தோட்டத்தில் வேலை இல்லை. கணவர் மட்டும் தான் வேலை பார்க்கிறார். 3 பிள்ளைகள் படிக்கின்றார்கள். லைன் வீட்டை விட்டுவிட்டு தான் நாங்கள் அங்கே போனோம். பிள்ளைகள் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்றே நாங்கள் புதிய காணிக்கு போனோம். மறுபடியும் இந்த நிலைமைக்கு வந்தது கவலை தான்.'' என ஜூலியட் தெரிவிக்கின்றார்.

இந்த திட்வா புயல் எலிஸ்டன், ஜூலியட்டை மாத்திரம் 200 வருடங்களை நோக்கி பின்தள்ளவில்லை. அதே இடத்தில் வாழ்ந்த பலரையும் மீண்டும் லைன் வாழ்க்கைக்கு அனுப்பியுள்ளது.

திட்வா புயல் - மலையக தமிழர்கள்
படக்குறிப்பு, மீண்டும் லைன் வாழ்க்கைக்கு திரும்பியது தமக்கு கவலை அளிப்பதாக எலிஸ்டனின் மனைவியான ஜூலியட் தெரிவிக்கின்றார்.

ஹூன்னஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த நடராஜாவும் இதே பாதிப்பை எதிர்நோக்கியுள்ளார்.

''எங்களுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் வீடு கட்டிக் கொடுத்தார்கள். நாங்கள் அந்த வீட்டிற்கு போய் இரண்டு வருடங்கள் இருக்கும். எங்களுடைய பிள்ளைகள் நல்லா வாழ வேண்டும் என்றே அந்த காணியை நாங்கள் வாங்கினோம். இப்போது அந்த காணிகளில் வாழ இயலாமல் இருக்கு. எங்களுடைய வீட்டிற்கு 20 அடி கீழே மண் சரிவு போயிருக்கு. அன்றைக்கே தோட்ட நிர்வாகம் சொல்லி விட்டார்கள். இங்கே இருக்க வேண்டாம். லயின் அறைக்கே போகுமாறு சொல்லிவிட்டார்கள். இந்த வீட்டில் இருக்க எங்களுடைய பிள்ளைகள் விருப்பம் இல்லை.'' என அவர் கூறுகின்றார்.

இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டங்கள் மாத்திரமன்றி, இந்திய வீட்டுத் திட்டங்களிலும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய வீடுகளைச் சுற்றி சேதங்கள் இருப்பதால், அச்சமடைந்து மக்கள் வெளியேறியுள்ளனர்
படக்குறிப்பு, புதிய வீடுகளைச் சுற்றி சேதங்கள் இருப்பதால், அச்சமடைந்து மக்கள் வெளியேறியுள்ளனர்

இந்தியாவிலிருந்து வருகைத் தந்த தமது முன்னோர், இலங்கையில் தமது வாழ்க்கையை ஆரம்பித்த அதே லைன் அறைகளில் மீண்டும் தற்போதைய தலைமுறையும் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

ஹூன்னஸ்கிரிய பகுதியிலுள்ள 16 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டத்தின் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு விதமான பாதிப்புக்களை சந்தித்துள்ளன.

ஒரு சில வீடுகளின் மீது மண்மேடுகள் சரிந்துள்ளதுடன், சில வீடுகளுக்குள் வெள்ள நீர் பிரவேசித்துள்ளன. அத்துடன், பெரும்பாலான வீடுகளில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இந்த வீடுகளுக்கு கீழ் சில இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளமையினால், தமது வீடுகள் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளமை, வீடுகள் தாழிறங்கியுள்ளமை, மண்மேடுகள் சரிந்து வீடுகளின் மீது வீழ்ந்துள்ளமை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக வைத்து, அதிகாரிகள் தம்மை மீண்டும் லைன் அறைகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதாக அந்த பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆபத்தற்ற பகுதி என கருதப்பட்ட பகுதிகளும் திட்வா புயலுக்குப் பின் அபாயகரமானதாக மாறியுள்ளன
படக்குறிப்பு, ஆபத்தற்றது என கருதப்பட்ட பகுதிகளும் திட்வா புயலுக்குப் பின் அபாயகரமானதாக மாறியுள்ளன

எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை

மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டத்துடன் நெருங்கி செயற்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபத் தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் முன்னாள் தலைவருமான பாரத் அருள்சாமியிடம் பிபிசி தமிழ் இந்த விடயம் தொடர்பில் வினவியது.

''எந்த வீட்டுத் திட்டமாக இருந்தாலும், தனியான காணியை தேர்வு செய்து வீடுகளை கட்டுவதாக இருந்தாலும் அதற்கான சரியாக திட்டம், கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையோடு தான் இதை செய்வார்கள். இந்த நடைமுறை இந்திய வீட்டுத் திட்டத்திலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை இருந்தால் மாத்திரமே அந்த இடத்தில் வீடுகளை கட்ட முடியும். அது இல்லாமல் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை முழுமையாக காணிகளுக்கும் பெற்று, அதே போன்று வீடுகளை நிர்மாணிக்கும் இடத்திற்கும் எடுத்திருந்தோம்.

ஏனென்றால், கட்டப்படும் பெரும்பாலான வீடுகள் மலைப்பாங்கான இடங்களில் இருப்பதனால், அந்த முறையை கொண்டு வந்தோம். இப்போது ஏற்பட்டிருக்கின்ற இயற்கை அனர்த்தம் யாருமே எதிர்பார்க்காத இடங்களிலும் ஏற்பட்டிருக்கின்றது. பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு ஏனைய மக்களைப் போன்றே உதவிகள் வழங்கப்பட வேண்டும். நாங்கள் இந்த நாட்டு பிரஜைகளே. ஏனைய பிரஜைகளுக்கு வழங்கப்படும் உரிமைகள், எமக்கும் உரித்தாகும். அந்த நிவாரண திட்டங்கள் எங்கள் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.'' என பாரத் அருள்சாமி கோரிக்கை விடுக்கின்றார்.

''இவர்கள் இந்த இடத்திலிருந்து மீண்டும் லைன் அறைகளுக்குப் போவது என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். இவர்கள் தனிவீட்டிற்கு போய் விட்டார்கள். அப்படியென்றால் கிராம வாழ்க்கைக்கு போய்விட்டார்கள். அப்படியென்றால், அரசாங்கம் அறிவித்த அந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.'' எனவும் பாரத் அருள்சாமி குறிப்பிடுகின்றார்.

திட்வா புயல் - மலையக தமிழர்கள்
படக்குறிப்பு, திட்வா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள்

அரசாங்கத்தின் பதில்

லைன் அறைகளிலிருந்து தனிவீட்டிற்கு சென்று திட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பின்னணியில், மீண்டும் லைன் வீடுகளுக்கு சென்றவர்கள் குறித்து பெருந்தோட்ட, உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபனிடம் பிபிசி தமிழ் வினவியது.

''தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகளின் பிரகாரம், தனி வீட்டுத் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு மீண்டும் அதே வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என பிபிசி தமிழிடம் அவர் உறுதியளித்தார்.

பெருந்தோட்ட பகுதிகளில் லைன் அறைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகளை வழங்க தாம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு