தனியார் பள்ளிகளில் 25% இடங்களை கட்டணமின்றி ஏழைக் குழந்தைகளுக்கு வழங்குவதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டுக்கு இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை திங்கட்கிழமை (ஏப்ரல் 22) தொடங்கியுள்ளது. மே 20-ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஏற்கெனவே லட்சக்கணக்கான மாணவர்கள் தமிழ்நாட்டில் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு எப்படி விண்ணப்பிப்பது? மாணவர்களுக்கு அட்மிஷன் கிடைப்பதில் உள்ள சவால்கள் என்ன? உள்ளிட்ட தகவல்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
கல்வி உரிமை சட்டம் 2009 என்ன சொல்கிறது?
இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் 2009-இன் கீழ், தனியார் பள்ளிகளில் நலிவடைந்த மற்றும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு என 25% இடங்களை ஒதுக்க வேண்டும். இத்திட்டத்தில் எல்.கே.ஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் குழந்தைகள், 8-ஆம் வகுப்பு வரை கல்விக் கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், பெற்றோர்கள் விண்ணப்பிக்கும் பள்ளியானது தாங்கள் வசிக்கும் இருப்பிடத்திலிருந்து 1கி.மீ. தொலைவுக்குள் இருக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் இருக்கின்றன. இத்திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 8,000 பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
எத்தனை மாணவர்கள் பயன் பெறுகிறார்கள்?
இந்தியா முழுவதும் அமலில் உள்ள கல்வி உரிமை சட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த 2023-2024 கல்வியாண்டில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர 1.85 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்ததாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்குநரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், விண்ணப்பித்தவர்களில் 70,553 மாணவர்களுக்கு மட்டுமே இடம்கிடைத்துள்ளது.
இதற்கு முந்தைய 2022-2023 கல்வியாண்டில் 95,946 மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை மட்டும் தமிழ்நாடு அரசு செலுத்தும். இதர புத்தகம், சீருடை உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் மாணவர்களே செலுத்த வேண்டும்.
2024 - 2025 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள்
ஆண்டுதோறும் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன் அறிவிக்கப்படும் விண்ணப்பங்கள் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் 22 தொடங்கி, மே மாதம் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
rteadmission.tnschools.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கு தேவையான ஆவணங்கள் என்ன என்பதையும் அரசு தனது இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்:
- புகைப்படம்
- பிறப்புச் சான்றிதழ்
- ஆதார் கார்டு அல்லது ரேஷன் அட்டை
- வருமானச் சான்றிதழ்
- சாதிச் சான்றிதழ்
- சிறப்புப் பிரிவுக்கான சான்றிதழ் (இருப்பின்)

பட மூலாதாரம், Getty Images
பெற்றோர்களின் புகார் என்ன?
இந்தச் சட்டத்தின் கீழ் இணையம் மூலமாகவோ அல்லது அருகிலிருக்கும் இ-சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம். ஆனால், சில சந்தேகங்களுக்காக தனியார் பள்ளிக்கு சென்று தகவல்களை கேட்டால் கூட சரியான தகவல்களை பள்ளி நிர்வாகம் தருவதில்லை என பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.
சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்ற தினக்கூலி பணியாளர் ஒருவர், தன் மகளை அருகிலிருக்கும் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி-யில் சேர்ப்பதற்கு எப்போது விண்ணப்பங்கள் பெறப்படும் என்பதை தெரிந்துகொள்வதற்காக விசாரிக்க சென்றபோது கூட சரிவர பதிலளிக்கவில்லை என தெரிவித்தார்.
“நான் 8-ஆம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன். ஆனால், என் குழந்தையை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், ஆர்.டி.இ சட்டத்தின்கீழ் எப்படி சேர்ப்பது என்பதை விசாரிக்க சென்றால் கூட சரியாக பதில் சொல்வதில்லை,” என தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி, தங்கள் பள்ளிகளில் எத்தனை இடங்கள் இச்சட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பள்ளியின் அறிவிப்புப் பலகையிலும், பள்ளி நுழைவுவாயிலில் பிளக்ஸ் போர்டிலும் வெளியிடப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் அவ்வாறு செய்வதில்லை என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசும் கூட சரியான விளம்பரம் செய்யாமல் இருப்பதே மக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததற்கு காரணம் என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.
அதிலும் தனியார் பள்ளிகளும் தங்கள் பள்ளிகளில் எந்த விதமான விளம்பரங்களையும், அறிவிப்புகளையும் செய்யாதது இந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயன்பெற முடியாமல் போவதற்கான ஒரு காரணம் என்று கூறுகிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
எல்லா தனியார் பள்ளிகளிலும் சேர்க்க முடியாது
எல்லா தனியார் பள்ளிகளிலும் இச்சட்டத்தின் கீழ் குழந்தைகளை சேர்க்க முடியாது. எந்தெந்த பள்ளிகளில் சேர்க்க முடியும் என்பதை அரசின் இணையதளத்தில் சென்று பார்க்கலாம். ஆனால், தாங்கள் வசிக்கும் இடத்தில் உள்ள தனியார் பள்ளிகள் இச்சட்டத்தின் கீழ் பட்டியலிடப்படவில்லை என்றால் என்ன செய்வது என பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
முக்கியமாக ஒரு மாணவர் இருக்கும் பகுதியில் இருந்து 1கி.மீ. தூரத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இடம் அளிக்கும் தனியார் பள்ளி இருந்தாலும் கூட, அதற்கு இடையில் ஒரு அரசுப் பள்ளி இருந்தால் அந்த மாணவருக்கு அந்த தனியார் பள்ளியில் இடம் கிடையாது என்று சட்டம் கூறுகிறது.
ஆனாலும், இது இந்தியாவின் இதர மாநிலங்களில் கடைபிடிக்கப் படுகிறதே தவிர, தமிழ்நாட்டு அரசு கொள்கைகளின்படி இந்த விதி அமலில் இல்லை.
இதனால், தனியார் பள்ளிகள் வளருமே தவிர, அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர முன்வர மாட்டார்கள் என்று பல அமைப்புகளும் இந்த விதியை அமல்படுத்தக் கோரி போராடி வருகின்றன.
கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கமே, 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி கிடைக்க வேண்டும் என்பதே தவிர, தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிப்பது அல்ல என்று இந்த அமைப்புகள் வாதிடுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
"12-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்த வேண்டும்"
மேலும், இச்சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான கல்விக்கட்டணத்தை அரசு நிதியாக வழங்குவதற்கு தாமதப்படுத்துவதால், தங்களையே கல்விக்கட்டணத்தை செலுத்துமாறும் அரசு நிதியை விடுவித்த பின்னர் அதை திருப்பித்தருவதாகவும் பள்ளிகள் கூறுவதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ரமேஷ் எலெக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார். அவருடைய மகன் இச்சட்டத்தின் கீழ் 7-ஆம் வகுப்பு படித்துவருகிறார்.
“கல்விக்கட்டணத்தை அரசு செலுத்தும். ஆனால், புத்தகங்களுக்கான கட்டணம், சீருடைக்கான கட்டணம் என வருடந்தோறும் ரூ.7,000-க்கும் மேல் நான் செலுத்துகிறேன். வறுமை நிலையில் இருக்கும் எங்களுக்கு இது மிகுந்த சிரமமாக இருக்கிறது. எனக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் இச்சட்டத்தின் கீழ் படிக்கவில்லை."
"அவளுக்கு வழக்கமான பள்ளிக் கட்டணத்தை செலுத்த வேண்டும். தவிர, என் மகனுக்கும் 8-ஆம் வகுப்பு வரைதான் நான் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 9-ஆம் வகுப்பு கட்டணம் செலுத்த வேண்டும். அதனால், இந்த சட்டத்தில், 12-ஆம் வகுப்பு வரையில் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் வகையில் திருத்தம் கொண்டு வரவேண்டும்," என்று கோரிக்கை விடுக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
"நிதியை காலதாமதமின்றி விடுவிக்க வேண்டும்"
பெற்றோர்களின் இத்தகைய புகார்கள் குறித்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் மார்ட்டின் பிபிசி-யிடம் கூறுகையில்,
“பெற்றோர்கள் முழுக்க முழுக்க இதில் இணையத்தில்தான் விண்ணப்பிக்கின்றனர். குறிப்பிட்ட இடங்களை ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்காமல் இருப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. பள்ளிகளில் 25% இடங்களைத் தாண்டி பெற்றோர்கள் விண்ணப்பித்தால், மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். அதில், சில குழந்தைகளுக்கு இடம் கிடைக்காமல் போகலாம். மற்றபடி, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு இதில் இடம் கிடைக்கவோ, அல்லது பணம் வாங்கிக்கொண்டு இடம் கொடுக்கவோ முடியாது,” என்றார்.
மேலும், இதற்கான நிதியை அரசு காலம் தாழ்த்தாமல் தனியார் பள்ளிகளுக்கு விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “2022-23-ஆம் ஆண்டுக்கான நிதியாகச் சுமார் ரூ.380 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2023-24-ஆம் ஆண்டுக்கான நிதியை வழங்கவில்லை,” என்றார்.
இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறையின் பெயர் தெரிவிக்க விரும்பாத சென்னையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சில பள்ளிகள் இச்சட்டத்தின்கீழ் பட்டியலிடப்படாது. அதற்கென சில வரம்புகள் இருக்கும். ஒரு பள்ளியில் குலுக்கல் முறையில் சேர்க்கை நடக்கிறது என்றால், கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில்தான் குலுக்கல் நடைபெறும்," என்றார்.
“எல்.கே.ஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை அரசு அவர்களுக்கென கல்விக்கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இதுதவிர மற்ற செலவுகள் என்றால், பெற்றோர்கள்தான் அதனைச் செலுத்த வேண்டும். அரசு நிதி விடுவிப்பதற்கு முன்பு, பெற்றோரே கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தினால் அதனை பெற்றோர்கள் பள்ளிக் கல்வித்துறையில் புகார் அளிக்கலாம்," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
பள்ளிகளுக்கு கல்வி கட்டணத்தைச் சரியான நேரத்தில் கொடுப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரனிடம் கேட்டோம்.
அதற்கு பதிலளித்த அவர், "பெரும்பாலும் இந்தப் பள்ளிகளுக்கு அந்தந்த நிதியாண்டின் இறுதியிலேயே பணம் கொடுக்கப்படுகிறது. ஆனால், அதற்குள் கல்வியாண்டு முடிந்து விடுகிறது. குறிப்பாக ஒரு குழந்தை கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்ந்திருந்தால் அதை உறுதிப்படுத்த ஆய்வுக்குச் செல்ல வேண்டும்," என்றார்.
"உறுதியான பிறகு, பள்ளிக்கல்வித் துறையிலிருந்து அடுத்தடுத்த துறைகளுக்குச் சென்று ஒப்புதல் பெற்று, பின் நிதித்துறைக்கு சென்று அங்கு ஒப்புதலாகி அதற்கு பிறகே பணம் பள்ளிகளுக்குச் செல்கிறது. இது ஒரு பெரிய செயல்பாடு என்றாலும், முறையாக வழங்கப்பட்டு விடுகிறது" என்கிறார் அவர்.
தனியார் பள்ளிகள் கண்காணிக்கப்படுகின்றனவா?
கல்வி உரிமை சட்டம் 2009-இன் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதற்கான செயல்முறைகள் மாற்றம் அடைந்து வந்துள்ளது.
அதன்படி, தற்போது எளிமையாக ஆன்லைன் வாயிலாக ஒருவர் இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க முடியும் என்ற வசதியை அரசு கொண்டுள்ளது.
ஆனால், இந்த இடஒதுக்கீட்டின் கீழ் நியாயமாக மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்கப்படுகிறதா? முழுமையாக இதற்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் பயன்படுத்தப் படுகின்றனவா என்ற கேள்வி உள்ளது.
இதுகுறித்து குமரகுருபரனிடம் கேட்கையில், "மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகமே இதற்கு பொறுப்பாகச் செயல்படுகிறது. தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் எவ்வளவு இடங்கள் உள்ளன, அதில் எத்தனை இடங்கள் நிரப்பப்படுகின்றன, பள்ளிகள் எப்படி செயல்படுகின்றன உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் அதுவே தொடர்ந்து கண்காணித்து வருகிறது," என்றார்.
மேலும், "ஒரு தனியார் பள்ளி முறையாக அரசின் நெறிமுறைகளை பின்பற்றி அட்மிஷன் செயல்பாட்டை நடத்தவில்லை என்றால் அந்தப் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கவும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகத்திற்கு அதிகாரம் உண்டு," என்கிறார் அவர்.
தமிழ்நாட்டில் எந்தெந்த தனியார் பள்ளிகளில் எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்த விவரம் வெளிப்படையாகத் தெரியவில்லை. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தில், குறிப்பிட்ட மாவட்டத்தில் எந்தெந்த பள்ளிகளில் சேரலாம் என்பது இருந்தாலும், அங்கே எத்தனை இடங்கள் நிரப்பப்படும் என்பது குறித்த தகவல் இல்லை. ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எத்தனை இடங்கள் நிரப்பப்படும் என்பது குறித்த விவரத்தை வெளிப்படையாக அறிவிப்பு பலகையில் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்ற விதியை அவை சரிவர கடைபிடிப்பதில்லை, என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பும் பெற்றோருக்கு அதுகுறித்த முழுமையான விவரங்களை தெரிந்து கொள்வதில் சிக்கல் உள்ளது. ஆகவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
"அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும்"
கல்வி உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்துவதில் பெற்றோர்கள், தனியார் பள்ளிகள் இருதரப்புக்கும் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும் என்கிறார், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
“இச்சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றால், இதில் முழுக்க முழுக்க அரசே ஈடுபட்டு செயல்படுத்த வேண்டும். இச்சட்டத்தை செயல்படுத்துவதில் சில பள்ளிகள் நியாயமாக நடக்கின்றன. சில பள்ளிகள் அப்படி இருப்பதில்லை. அந்த பட்டியலுக்குள் தங்கள் பள்ளிகள் இருக்கக்கூடாது என்பதற்காக சில வேலைகளை செய்கின்றன," என்றார்.
"பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன்கீழ் விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும். பெற்றோர்களிடையே, இச்சட்டத்தின் கீழ் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்தாலும் மறைமுகமாக ஏதேனும் கட்டணம் வசூலிப்பார்களா என்கிற பயம் இருக்கிறது. அதனை அரசு களைய வேண்டும்,” என்றார்.
இவை அனைத்திற்கும் இடையே, 'தனியார் பள்ளிகள் தான் சிறப்பானவை' என்ற எண்ணம் பெற்றோரிடையே வேரூன்றி இருப்பதாகக் கூறும் கல்வியாளர்கள், அதனை அகற்ற அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி, தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை ஏற்படுத்தி தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். அதுதான் நீடித்த கல்வி வளர்ச்சிக்கான தீர்வாக இருக்கும் என்பது ஜெயப்பிரகாஷ் காந்தி போன்றோரின் வாதமாக இருக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












