1000 ஏக்கர் நிலம், 200 குடியிருப்புகள் - பலகோடி மோசடி வழக்கில் 9 ஆண்டு பதுங்கி இருந்தவர் - சிக்கியது எப்படி?

நீரஜ் அரோரா, பஞ்சாப், மோசடி, காவல்துறை

பட மூலாதாரம், PUNJAB POLICE

படக்குறிப்பு, நீரஜ் அரோரா
    • எழுதியவர், ககன்தீப் சிங் ஜசோவால்
    • பதவி, பிபிசி பஞ்சாபி

சமீபத்தில், பஞ்சாப் மாநிலத்தில் பலகோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான நீரஜ் அரோராவை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவரது கைதுக்குப் பிறகு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேச்சர் ஹைட்ஸ் இன்ஃப்ரா நிறுவனத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மோசடியில் நீரஜ் அரோரா முக்கிய குற்றவாளி. உத்தரகாண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகரைச் சேர்ந்த இவரை கடந்த 9 ஆண்டுகளாக போலீசார் தேடிவந்தனர்.

தங்களிடமிருந்து தப்பிக்க நீரஜ் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள திட்டமிட்டு இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

உத்தராகண்ட் மாநிலத்தின் பௌரி மாவட்டத்தின் ஃபரித்கோட் மற்றும் ஃபசில்கா போலீசார் நீரஜை கைது செய்திருக்கின்றனர்.

பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, நீரஜ் அரோரா பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 1,200 ஏக்கர் நிலம் மற்றும் 200 குடியிருப்பு வளாகங்களை வைத்திருக்கிறார்.

நீரஜ் அரோரா, பஞ்சாப், மோசடி, காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ.100 கோடிக்கு...

பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, நீரஜ் அரோராவின் தந்தை உளவுத்துறையில் இன்ஸ்பெக்டராக பணிசெய்தவர். அவரது தாயார் ஒரு ஆசிரியை.

எம்.பி.ஏ படித்திருக்கும் நீரஜ் அரோரா தனது நண்பர் பிரமோத் நாக்பாலுடன் சேர்ந்து சோப்பு, தேநீர் மற்றும் அன்றாட உபயோகப் பொருட்களை விற்கும் சிறு தொழிலைத் தொடங்கினார்.

போலீசாரின் தகவலின்படி, “நீரஜ் அரோரா ஒரு தனியார் நெட்வொர்க்கிங் நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு அவர் நெட்வொர்க்கிங் வணிகத்தின் அடிப்படைகளை கற்றுக்கொண்டார். 2002-ஆம் ஆண்டு, நீரஜ் அரோரா மூன்று சக ஊழியர்களுடன் சேர்ந்து ஏழு லட்சம் ரூபாய் முதலீட்டில் நேச்சர்வே நெட்வொர்க்கிங் நிறுவனம் என்ற நிறுவனத்தைத் துவங்கினார். ஒரு தசாப்தத்திற்குள், நீரஜின் நிறுவனம் ரூ.100 கோடி வருமானம் ஈட்டத்துவங்கியது."

"2003-ஆம் ஆண்டு வாக்கில், அவர் தனது மளிகை வணிகத்தை ராஜஸ்தானிலும் துவங்கினார். 2011-ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் 12 மாநிலங்களில் நேச்சர்ஸ் வே தயாரிப்புகளை விற்க சுமார் 400 கடைகள் இருந்தன."

“பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள நேச்சர்வே நிறுவனத்திற்கு முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைத் திரட்ட உருவாக்க நீரஜ் 1.6 லட்சம் கிலோமீட்டர்களுக்கு மேல் பயணம் செய்து மிகப்பெரிய நெட்வொர்க்கை உருவாக்கினார்,” என்று ஃபரித்கோட் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"இந்த நெட்வொர்க்கிங் பணியில், ஒவ்வொரு முகவருக்கும் முடிந்தவரை அதிகமான வாடிக்கையாளர்களை இணைக்கும் பணி ஒதுக்கப்பட்டது. இதன் காரணமாக நிறுவனத்திற்கு அதிக கமிஷன் கிடைத்தது,” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்."

இது குறித்து அந்த போலீஸ் அதிகாரி மேலும் கூறுகையில், "நேச்சர்ஸ் வே நிறுவனம் 500 மளிகை பொருட்கள் மற்றும் பிற பொருட்களை விற்றது. அந்த நிறுவனம் 2012 வரை சிறப்பாக செயல்பட்டது. சுவாரஸ்யமாக, நீரஜ் அரோரா 2013 ஆம் ஆண்டில் ‘சிறந்த வரி செலுத்துபவர்’ விருதைப் பெற்றிருந்தார்," என்றார்.

நீரஜ் அரோரா, பஞ்சாப், மோசடி, காவல்துறை

பட மூலாதாரம், PUNJAB POLICE

படக்குறிப்பு, இக்பால் சிங் சந்து, டி.எஸ்.பி, ஃபரித்கோட் போலீஸ்

மளிகை வியாபாரத்திலிருந்து கட்டடத் தொழிலுக்கு

பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, நேச்சர்வே நிறுவனத்தின் வெற்றிக்குப் பிறகு, நீரஜ் அமித் குக்கட் மற்றும் பிரமோத் நாக்பால் உள்ளிட்ட மற்ற கூட்டாளிகளுடன் ரியல் எஸ்டேட் தொழிலைத் தொடங்கினார்.

கடந்த 2012-ஆம் ஆண்டின் மத்தியில் அவர் நேச்சர் ஹைட்ஸ் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நிறுவினார்.

ஃபரித்கோட் காவல்துறையின் கூற்றுப்படி, "நேச்சர்வே நிறுவனத்தின் வெற்றி காரணமாக, நீரஜ் மக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் நற்பெயரைப் பெற்றிருந்தார். மேலும் மக்கள் குறைந்த நேரத்தில் அதிக பணம் தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட அவரது தொழிலில் முதலீடு செய்யத் தொடங்கினர்."

போலீசார் கூறுகையில், "2013 முதல் 2015 வரை நீரஜ் பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்களில் சொத்துக்களை வாங்கியுள்ளார். ஆனால், முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுக்க முடியாமல் போனதால், மக்கள் போலீசை அணுகி அவர் மீது புகார் அளித்தனர். அவர் மீது புகார்கள் குழிந்தன.”

ஃபரித்கோட் போலீசாரின் விசாரணையில், நீரஜ் முன்கூட்டியே திட்டமிட்ட முறையில் முதலீட்டாளர்களிடம் தனிப்பட்ட லாபத்திற்காக பணத்தை ஏமாற்ற முயன்றது தெரியவந்தது. அவரது நிறுவனம் முக்கியமான இடங்களில் மலிவான வீட்டுமனைகளை வழங்கி வந்தது. ஆனால் அவற்றில் பெரும்பாலான இடங்களில் நிலம் கூட இல்லை என்பது பின்னர் தெரியவந்தது.

இதுகுறித்து அந்நிறுவனத்தில் முதலீடு செய்தவரான நீதிபதி சிங் கூறுகையில், “ஹோஷியார்பூரில் நாங்கள் பெற வேண்டிய நான்கு ஏக்கர் நிலத்திற்கான ஒப்பந்தம் வேறு நான்கு பேருக்கும் கொடுக்கப்பட்டதை பின்னர் கண்டுபிடித்தோம்,” என்றார்.

"இந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு மனைகளை ஒதுக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. நிறுவனம் வழங்கிய காசோலைகள் பவுன்ஸ் ஆயின. இந்நிறுவனம் பஞ்சாப் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து பலகோடி ரூபாயை வசூலித்ததாகக் கூறப்படுகிறது," என்றார் அந்த காவல் அதிகாரி.

பஞ்சாம் மாநிலத்தின் ஃபாசில்கா எஸ்.எஸ்.பி பிரக்யா ஜெயின் கூறுகையில், “ஒப்பந்த விலையை விட குறைவான விலையில் மனை வாங்கத் தயாராக இல்லாததால், வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதை நிறுத்தினர். ஒப்பந்தத்தின் மீதமுள்ள தவணையைத் திரும்பக் கேட்டுள்ளனர். ஆனால் பணத்தைத் திருப்பித் தராமல், நேச்சர் ஹைட்ஸ் நிறுவனம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துக்கொள்ளும்படி வாடிக்கையாளர்களிடம் கூறியது,” என்றார் அவர்.

ஃபரித்கோட் மாவட்ட டி.எஸ்.பி இக்பால் சிங் கூறுகையில், "நீரஜ் அரோரா, தான் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் பாஸ்போர்ட் உட்பட பல போலி அடையாள அட்டைகளை தயார் செய்துள்ளார். நீரஜ் தலைமறைவாக இருந்தபோது சண்டிகர், டேராடூன் மற்றும் மும்பையில் வசித்து வந்தார். போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி தாய்லாந்து மற்றும் கம்போடியா உள்ளது,” என்றார்.

இக்பால் சிங் கூறுகையில், "பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் தொடர்பான மருத்துவ பதிவுகளை நீரஜிடம் இருந்து போலீசார் மீட்டுள்ளனர். விசாரணையில் நீரஜ் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது தோற்றத்தை மாற்றத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் அதற்குத் தேவையான பணம் அவரது கையில் இல்லாததால் அவரால் அதைச்செய்ய முடியவில்லை,” என்றார்.

நீரஜ் அரோரா, பஞ்சாப், மோசடி, காவல்துறை

பட மூலாதாரம், PUNJAB POLICE

படக்குறிப்பு, போலீஸ் காவலில் நீரஜ் அரோரா

நீரஜ் சிக்கியது எப்படி?

ஃபரித்கோட் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் நீரஜ் அரோராவின் மைத்துனி மேனகா துலியை நாங்கள் கைது செய்தோம். அதன்பிறகு நீரஜ் அரோரா உத்தரகாண்டில் ஒரு தனியார் வீட்டில் வசித்து வந்ததைக் கண்டுபிடித்தோம்," என்றார்.

கைது பயம் காரணமாக, நீரஜ் தொலைபேசியைப் பயன்படுத்தவில்லை என்றும், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

பிபிசியிடம் பேசிய ஃபரித்கோட் எஸ்.எஸ்.பி ஹர்ஜீத் சிங், “கடந்த ஒரு மாதமாக இந்த வழக்கை விசாரிக்கச் சிறப்புக் குழுவை அமைத்தோம். ஃபாசில்கா எஸ்.எஸ்.பி பிரக்யா ஜெயினிடம் இருந்து எங்களுக்கு முக்கியமான தகவல் கிடைத்தது, இதன் விளைவாக மிகவும் தேடப்பட்ட நீரஜ் அரோரா கைது செய்யப்பட்டார்,” என்றார்.

நீரஜ் அரோரா, பஞ்சாப், மோசடி, காவல்துறை

பட மூலாதாரம், PUNJAB POLICE

படக்குறிப்பு, நீரஜ் அரோரா

நீரஜ் மீது 108 வழக்குகள்

ஃபரித்கோட் டி.எஸ்.பி இக்பால் சிங் சந்து கூறுகையில், பஞ்சாபின் 21 மாவட்டங்களில் நீரஜ் மீது 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை மக்களிடம் பணம் அல்லது வீட்டுமனையை ஏமாற்றிய வழக்குகள், என்றார்.

நீரஜ் அரோரா பிப்ரவரி 2016-இல் ஃபசில்கா போலீசாரால் கைது செய்யப்பட்டார், ஆனால் அவர் ஜாமீன் கிடைத்தவுடன் தலைமறைவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீரஜ் மற்றும் பிற கூட்டாளிகளின் சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது.

நீரஜ் மற்றும் அவரது நிறுவனத்தின் சுமார் ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

இந்த வழக்கை அமலாக்கத்துறை 2017-இல் விசாரிக்கத் தொடங்கியது. அதேவேளை, முதலீட்டாளர்களிடமிருந்து அவ்வமைப்புக்கு நீரஜ் மீது மேலும் 491 புகார்கள் கிடைக்கப்பெற்றன.

'எங்கள் வாழ்நாள் சம்பாத்தியம் தொலைந்துபோனது’

ஃபரித்கோட் மாவட்ட நீதிபதி நீதிபதி சிங்-இடம், நீரஜ் அரோரா, நேச்சர் ஹைட்ஸ் இன்ஃப்ரா லிமிடெட் நிறுவனத்தில் ரூ.91 லட்சத்தை முதலீடு செய்திருந்தார்.

அவர் பிபிசி உடனான தொலைபேசி உரையாடலில், "நான் நீரஜ் அரோராவை 2012-இல் தொடர்பு கொண்டேன். எங்களிடம் கொஞ்சம் பணம் இருந்தது, அதை நாங்கள் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தோம்," என்றார்.

மேலும் பேசிய அவர், "கடந்த 2017-இல் தோட்டம் அமைக்க எங்களுக்கு நான்கு ஏக்கர் நிலம் தருவதாக நீரஜ் ஒப்புக்கொண்டார். அதுவரை ஒவ்வொரு மாதமும் ரூ.50,000 கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். ஆரம்ப நாட்களில் காசோலைகளை கொடுத்து வந்தார். அதன்பிறகு அவருடைய காசோலைகள் வங்கியில் பவுன்ஸ் ஆக ஆரம்பித்தன,” என்றார்.

மேலும் பேசிய நீதிபதி சிங், "எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள் சம்பாதித்தோம். ஆனால் எங்கள் பணம் ரூ.91 லட்சம் தொலைந்து போய்விட்டது. இந்த மோசடியால் நாங்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளோம். அவமானம் காரணமாக உறவினர்களிடம் கூட சொல்ல முடியவில்லை," என்றார்.

“அந்நிறுவனத்திடம் அனைத்து உரிமங்களும் அனுமதிகளும் இருந்ததால்தான் நாங்கள் அதில் முதலீடு செய்தோம். முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் கடமை," என்றார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)